ல்லைத் தகராறைத் தீர்த்துக்கொள்வதற்கான இந்திய-சீன அமைச்சகங்கள் மற்றும் ராணுவ அதிகாரிகளிடையிலான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் தெரிந்த நிலையில், இந்தியாவின் கால்வான் ஏரிப் பகுதியில் ஜூன் 15, 16- ஆம் தேதிகளில் இந்திய- சீன வீரர்களுக்கு இடையே நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் இறந்திருப்பது இந்தியாவை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

border

ஜூன் 16 மதியம் இரண்டு ராணுவ வீரர்களும் ஒரு கர்னலும் ராணுவ மோதலில் இறந்ததாகத்தான் முதலில் தகவல் வந்தது. ஜார்கண்டைச் சேர்ந்த கே.கே. ஒஜா, தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனி, தெலங்கானாவைச் சேர்ந்த கர்னல் சந்தோஷ்பாபு ஆகியோரே அந்த மூவர். இரு நாட்டுத் தரப்பிலும் துப்பாக்கிகள் எதுவும் தூக்கப்படவில்லை. கம்புகள், இரும்புத் தடிகளைக் கொண்டு தாக்கியும், தள்ளுமுள்ளாகவும் நடந்த சண்டையில் இருதரப்பிலும் உயிர்ப்பலிகள் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

Advertisment

இரு ராணுவத்தைச் சேர்ந்த ராணுவ மேஜர் ஜெனரல்களும், நிலைமை மேலும் சீரழிவதைத் தடுக்க பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல சீனாவிலுள்ள இந்தியத் தூதர் விக்ரம் மிஸ்ரியை, சீனாவின் வெளியுறவுத் துணையமைச்சர் லூவோ ஜவோ ஹூய் பெய்ஜிங்கில் சந்தித்துப் பேசியதாக தகவல்கள் வெளியாகின.

bb

Advertisment

இந்தியத் தரப்பில், சீன ராணுவம் அத்துமீறித் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அதேபோல சீன பத்திரிகையான கோல்டன் ஹவர்ஸ், இந்திய ராணுவத் தரப்பில் அத்துமீறித் தாக்குதல் நடந்ததாக அந்நாட்டு ராணுவ அதிகாரியின் மேற்கோளை சுட்டிக் காட்டுகிறது.

இந்திய ராணுவத்தின்மீது கணிசமான சீன ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாகவும், தாக்குதல் நடந்த இடம் மிக உயர்ந்த- அதிக குளிர் நிறைந்த மலைப்பகுதி என்பதாலும் இரு தரப்பிலும் வீரர்கள் கால்நழுவி அபாயகரமான இடங்களில் விழுந்ததாகத் தெரியவரு கிறது. இந்த தள்ளுமுள்ளின் போது சீனர்கள் இந்திய வீரர்களை வேண்டுமென்றே சரிவைநோக்கித் தள்ளினார்களா… அல்லது தற்செயலாக நடந்ததா என்பது தெரியவரவில்லை. இப்படி கால்நழுவி விழுந்து படு காயமடைந்த 17 இந்திய வீரர்கள் ஜீரோ டிகிரிக்கும் குறைவான சீதோஷ்ணம் நிலவும் பகுதியில் விழுந்ததால் அவர்களை மீட்டு உடனடி சிகிச்சையளிக்க முடியாத காரணத்தால், இந்தியத் தரப்பில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது.

bb

சீனத் தரப்பில் அதிகாரப்பூர்வமாக பலியான நபர்களின் எண்ணிக்கை பற்றி குறிப்பிடாதபோதிலும் சீனாவின் குளோபல் டைம்ஸ் பத்திரிகை 5 வீரர்கள் பலியானதாகவும் 11 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளது. ஆனால் வேறுசில தகவல்களோ, சீனத் தரப்பில் 43 பேர் பலியாகியுள்ளதாகக் கூறுகிறது. அதே போல் மேலும் சில உறுதிப் படுத்தப்படாத தகவல்கள், இந்தியத் தரப்பின் பலி எண் ணிக்கை 20-க்கும் அதிகமாக இருக்கும் என்ற அச்சம் நிலவுகிறது. எந்த நாடும் தங்களது தரப்பின் பலி எண்ணிக்கையைக் குறைத்தும், எதிரித் தரப்பின் பலி எண்ணிக்கையை அதிகரித்தும் கூறவே முற்படும். அதனால் இரு தரப்பின் சரியான பலி எண்ணிக்கை, காயமானவர்கள் எண்ணிக்கை துல்லியமாகத் தெரியவரவில்லை என்கின்றது.

இந்தியத் தரப்பில் சில வீரர்களை, சீன ராணுவம் பணையக் கைதிகளாகப் பிடித்துச் சென்றதாகச் சொல்லப்படுகிறது. இதை இந்திய ராணுவம் மறுக்கிறது. அதேபோல, பலியான சீன ராணுவ வீரர்களின் எண்ணிக்கையும் கணிசமாக இருக்கும். அதனால்தான் சீன ராணுவ வீரர்களை மீட்க சாப்பர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டன என்கிறார்கள் இந்திய ராணுவத் தரப்பில்.

1975-க்குப் பின் இந்திய- சீன ராணுவத் தரப்பிலான உரசல்கள் பெரும்பாலும் உயிர்ப்பலி அளவுக்கு வளர்ந்ததில்லை. ஆனால் மே-5 முதல் கால்வான் ஏரிப்பகுதி, சிக்கிமின் நாகு லா பகுதியில் சீன ராணுவ ஆக்கிரமிப்பு நிகழ்ந்ததிலிலிருந்து இரு தரப்பும் சீரியஸாகவே காணப்பட்டன. ஜூன் 15, 16 மோதல் இத்துடன் முடியுமா என்பது உறுதியாகத் தெரியவில்லை.

இந்த நிகழ்வுக்குப் பின் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத், முப்படைத் தளபதிகள், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். பின் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மூத்த அமைச்சர்களுடனும் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார்.

ஜூன் 16ந் தேதி நள்ளிரவுக்குப்பின் இந்திய ராணுவத்தினர் 20 பேர் பலி என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டபோதும், அன்று காலை வரை பிரதமர் மோடியிடமிருந்து சீனாவின் நடவடிக்கைக்கு எதிரான கண்டன அறிக்கை வராதது ஆச்சரியத்தை தந்தது.

லடாக் பகுதியில் சீனா அதிக உரிமை கொண்டாடுவதும், இந்தியா தன் உரிமையை நிலைநாட்டப் போராடுவதும் 60 ஆண்டுகளுக்கும் மேலான தகராறின் வரலாறு. பாகிஸ்தான் தனது எல்லை தாண்டி வாலாட்டும் போதெல்லாம், துல்லியத் தாக்குதல் வரை பதிலடி கொடுக்கும் இந்தியப் படைகளும், இந்திய ஆட்சியாளர்களும் சீனா விவகாரத்தில் சற்று கவனமாகவே அடியெடுத்து வைப்பது வழக்கம்.

பனி படர்ந்த எல்லைப் பகுதியில் என்ன நடக்கிறது எனத் தெரியாபடி, ரகசியப் புகை படிந்திருப்பதால், எப்போது இந்தப் பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்படும் என்பது இனி வரும் நாட்களில் தெரியும்.

- க.சுப்பிரமணியன்

___________________

எல்லைச்சாமியான வீரத்தமிழன்!

bb

காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் மோதல் என்றாலும், பாகிஸ்தான் எல்லையில் சண்டை என்றாலும் இந்திய ராணுவத்தின் அர்ப்பணிப்பு வீரர்களில் கட்டாயம் தமிழர்கள் இருப்பார்கள். 45 ஆண்டுகளுக்குப் பிறகு, சீன எல்லையில் அந்நாட்டு ராணுவத்தால் ஏற்பட்டுள்ள உயிர்ப்பலியிலும் தமிழக வீரர் தன் இன்னுயிர் தந்து தியாகியாகி யிருக்கிறார்.

ராமநாதபுரம் மாவட்டம் கடுக்கலூரை சேர்ந்த பழனி. 22 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி உள்ளார். ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பணியாற்றிய அவர், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக லடாக்கில் பணியாற்றி வந்தவர் இன்னும் ஓராண்டு காலம் பணியினை நிறைவு செய்தால் ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று சொந்த வீட்டினில் மனைவி குழந் தைகளுடன் சந்தோஷமாக வசிக்க லாம் என சக்கரக்கோட்டை கிராமத் தில் நிலம் வாங்கி. அண்மையில் புது வீடு கட்டினார்.

விடுமுறைக்காக ராணுவத்திலிருந்து கிராமத்திற்கு வந்திருந்த வருக்கு, உயரதிகாரிகளிடமிருந்து அவசர அழைப்பு வந்ததால் மே மாதத்தில் பணிக்குத் திரும்பினார். ஜூன் 3-ந்தேதி நடைபெற்ற கிரகபிரவேசத்திற்கு கூட பழனி வரவில்லை.

""இன்னும் ஓராண்டில் பணியை நிறைவு செய்துவிட்டு, சொந்த ஊருக்கு வந்து குடும்பத்தோடு வசிக்க வேண்டும் என்பது அவரது திட்டம். ஆனால், அந்த எண்ணம் நிறைவேறாமல் போய்விட்டது. பழனியை போல் அவரது தம்பி இதயக்கனியும், இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். அவர் தான் அண்ணன் இறந்த தகவலை, குடும்பத் தினருக்கு தெரியப்படுத்தி இருக்கிறார். அதற்குப் பிறகுதான் மாவட்ட வருவாய்த் துறை பழனியின் குடும்பத்திற்கு சாவகாசமாக தகவலை தெரிவித்தது'' என்கிறார் பழனியின் உறவுக்காரர் ஒருவர்.

nn

இந்திய ராணுவத்தில் ஹவில்தாரராக பணிபுரியும் இவருக்கு வானதி தேவி என்ற மனைவியும் பிரசன்னா என்கின்ற 10 வயது மகனும், திவ்யா என்கின்ற 7 வயது மகளும் உள்ளனர். மகனையும் ராணுவத்திற்கு அனுப்பி வீரனாக்க வேண்டும் என்பதே பழனியின் விருப்பமாக இருந்திருக்கிறது.

வீர மரணமடைந்த பழனியின் மனைவி வானதி தேவியோ, ""கிரஹபிரவேசத்திற்கு முந்தையப் பொழுதுகளில் என்னைத் தொடர்பு கொண்டவர் மொபைல் சிக்னல் இல்லாத இடத்தில்தான் வேலைன்னும், இன்னொரு நாளில் கூப்பிடுவதாகவும் சொன்னாரு. இன்று வரை கூப்பிடவில்லை. அவரோட இறப்பு செய்திதான் எங்களை வந்தடைந்தது'' என்கிறார் கண்ணீரைத் துடைத்தபடி. பழனியின் சம்பளம் தான் அந்தக் குடும்பத்தின் ஒரே வருமானம். அதனால், பட்டதாரியும் ஆசிரியர் பயிற்சி முடித்தவருமான வானதிதேவிக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு வழங்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது..

""தேசத்திற்காக எனது மகன் உயிர்த் தியாகம் செய்தது எனக்கு பெருமை'' என கூறியிருக்கிறார் பழனியின் தாயார் மஞ்சுளா. இந்தியாவின் எல்லை காக்கும் சாமியாக தன் உயிர் ஈந்திருக்கிறார் வீரத்தமிழன்.