சாத்தான்குளம் காவல் துறையின் அராஜகத்தால் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில், தாமாகவே முன்வந்து வழக்கை எடுத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை விசாரணை அதிகாரியாக கோவில்பட்டி ஜே.எம்.1 மாஜிஸ்திரேட் பாரதிதாசனை நியமித்தது. இவரது விசாரணையில் ரேவதியின் சாட்சியம் கொண்டாடப்பட்ட வேளையில், மருத்துவர் விண்ணிலா மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி வேல்முருகனின் சாட்சியமும் வழக்கில் முக்கியவத்துவம் பெற்றுள்ளது.

ss

""சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவின்படி ஜூன் 28 அன்று விசாரணையை துவக்கிய கோவில்பட்டி ஜே.எம்.1 மாஜிஸ்திரேட் பாரதிதாசன் முதல் நாளில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சிசிடிவி பதிவுகள், ரத்தக்கறை டேபிள், லத்திகள் உள்ளிட்ட தடயங்களை சேகரித்தும், எழுத்தர் பியூலா செல்வகுமாரி, ரேவதி, மகராஜன் ஆகியோரிடம் விசாரணை நடத்தியும், மறுநாள் திருச்செந்தூர் அரசு விருந்தினர் மாளிகையில் விசாரணையைத் தொடங்க, கொலையுண்ட ஜெயராஜின் மனைவி செல்வராணி, மகள் பெர்சி ஆகியோரையும் விசாரணை செய்து குறிப்பு பதிவு செய்யப்பட்டது. அதற்கடுத்த நாளில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் விசாரணை துவக்கப்பட்டு, தலைமைக்காவலர் ரேவதி, எழுத்தர் பியூலா செல்வகுமாரி ஆகியோரை தனித்தனியாக விசாரித்து முடித்தவுடன் சாத்தான் குளம் அரசு மருத்துவமனைக்கு சென்று அங்குள்ள சிசிடிவி பதிவு கள் மற்றும் வெளி நோயாளிகளின் வருகைப் பதிவேடும் குறிப்பெடுக் கப்பட்டது.

ஒன்றாம் தேதியன்று அரசு விருந்தினர் மாளிகையில் நடைப்பெற்ற விசாரணைக்கு தலைமைக் காவலர் ரேவதி, எழுத்தர் பியூலா செல்வகுமாரி மற்றும் சாத்தான் குளம் அரசு மருத்துவர் விண்ணிலா வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். இதில் ரேவதி முன்பு என்ன கூறினாரோ... அதனை மாற்றாமல் மூன்றாம் முறையாக ஒப்புவித்தார். அடுத்த நாளான ஜூலை 2 அன்று, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த சிசிடிவி புட்டேஜ் பொறுப்பு காவலர் தாமஸ் பிரான்சிஸ், வாகன ஓட்டுனர் ஜெயசேகர், காவலர் அழகுமாரிச் செல்வம் மற்றும் தற்காலிக தூய்மைப் பணியாளர் வேல்முருகன் ஆகியோர் ஆஜராகினார்.

Advertisment

மாற்றுத்திறனாளியான வேல்முருகனுக்கு துணையாக அவரது மனைவி இசக்கியம்மாளும் கலந்து கொண்ட நிலையில் வேல்முருகனின் சாட்சியமும் இதில் முக்கியமானது.

aa

திருச்செந்தூர் அரசு விருந்தினர் மாளிகையில் வைத்து நடைபெற்ற விசாரணையில் மாற்று திறனாளி வேல்முருகன் அவருடைய மனைவி இசக்கியம்மாள் இருவரும் சென்று நீதிபதி பாரதிதாசன் முன்னிலையில் காவல் நிலையத்தில் நடந்தவற்றை வேல்முருகன் கையசைவு மூலம் செய்து காட்ட, அதனை அவருடைய மனைவி இசக்கியம்மாள் வாய்மொழியாக கூறியுள்ளார். இதில் மேஜை, லத்தி மற்றும் இரும்பு கம்பி ஆகியவற்றிலான இரத்த கறைகள் தொடர்பாக விரிவாக நடத்தப்பட்ட விசாரணையில் முக்கிய நிகழ்வுகளையும், இரத்த தடய சாட்சி யங்கள் ஆகியவை அழிக்கப்பட்டது தொடர்பாக விரிவான தகவல் அளித்துள்ளதாக தெரிகிறது. சாத்தான்குளம் அருகே உள்ள புதுகுளம் கிராமத்தில் வசித்துவரும் வேல்முருகனுக்கு இசக்கியம்மாள் என்கின்ற மனைவியும், இளையராசா மற்றும் பொன் இசக்கி முத்து என்கின்ற இரு குழந்தைகளும் உள்ளனர். மாமனாருடன் வசித்து வரும் வேல்முருகனுக்கு மாத சம்பளம் ரூ3000 மட்டுமே.!

மாஜிஸ்திரேட் பாரதிதாசனின் முன்பு மனைவியின் துணையுடன் ""காலாங்காத்தாலேயே ஸ்டேசனிலிருந்து கூப்பிட்டு விட்டாங்க. என்ன ஏதுன்னு அவசரமாக போனால் வழக்கம்போல்தான் ஸ்டேஷன் அலங்கோலமாக இருந்துச்சு. அங்கிருந்த டேபிளும், சேரும் இடம் மாறிக் கிடந்தன. எல்லாவற்றையும் ஒதுங்க வைச்சுட்டு பார்த்தால் இரண்டு மேஜையில் இரத்தம் இருந்துச்சு. அதுபோக 2 லத்தி, இரண்டு இரும்புக் குழாயிலேயும் இருந்துச்சு. அத்தனையும் கழுவி துடைப்பதற்கே மணி 12 ஆயிட்டு. ஸடேசனெங்கும் ஒரே ரத்த கவிச்சி. கறுப்பு பினாயிலை வாங்கி சுத்தம் பண்ணி கவுச்சு போக வைச்சேன்'' என்றிருக்கின்றாராம் அவர்.

இதுக்குறித்து வேல்முருகனிடம் பேச முயன்றோம். ""எட்டாவது வரைக்கும் படிச்சிருக்கேன். அவ்வப்போது தையல் வேலையும் செய்வேன். அது பெரிய அளவில் வருமானம் இல்லாததால் சமீபத்தில்தான் காவல் நிலையத்தில் துப்புரவு பணியாளரா வேலை செஞ்சிட்டு இருக்கேன். காவல் நிலையத்தில் இரண்டு பேர் இறந்தது தொடர்பாக விசாரணைக்கு போனோம். எனக்கு வாய் பேசமுடியாதவர் என்பதால் நான் கூறிய செய்கைக்கு வாய்மொழியாக அவள் வாக்குமூலம் கொடுத்தாள். எங்களை யாரும் கண்டுக்கமாட்டங்கனு நெனச்சோம். ஆனால் வெளியில் தெரிந்து விட்டதால் வெளி தெருவுக்கு போகக்கூட பயமா இருக்கு'' என்கிறார் வேல்முருகனின் சைகை மொழியை மொழிபெயர்த்த இசக்கியம்மாள்.

அதற்கு அடுத்த மூன்றாம் தேதியன்று கார்த்திகேயன் மற்றும் அரசு செவிலியர் கிருபை ஆகியோர் விசாரிக்கப் பட்டனர். எனினும் ""தலைமைக்காவலர் ரேவதி, மருத்துவர் விண்ணிலா மற்றும் வேல்முருகன் ஆகியோரது சாட்சியங்கள் இவ்வழக்கிற்கு வலு சேர்க்கும்'' என்கிறார் விசாரணையின் போது உடனிருக்கும் நீதிமன்ற ஊழியர் ஒருவர்.

- நாகேந்திரன்