த்துநாள் விடுமுறைக்குப் பின் சென்னை உயர்நீதிமன்றம் திறக்கப்பட்டிருக்கும் நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கில் மூன்றாவது நீதிபதியின் தீர்ப்பு இந்த வாரத்தில் வெளியாகும் என்கிற எதிர்பார்ப்பு வழக்கறிஞர்கள் மத்தியில் பலமாக எதிரொலிக்கின்றது.

இந்த நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார் தினகரன். அ.ம.மு.கழகத்தின் தலைமையகத்தில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன், பழனியப்பன், செந்தில்பாலாஜி, கதிர்காமு, முத்தையா, பார்த்திபன், ஜெயந்தி, உமாமகேஸ்வரி, மாரியப்பன், கென்னடி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். தவிர தினகரன் ஆதரவு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான பிரபு, ரத்தினசபாபதி, கலைச்செல்வன் மூவரும் கலந்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இவர்கள் மூவர் மீதும் கட்சித்தாவல் தடைச்சட்டத்தின்படி தகுதி நீக்கம் செய்ய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் வலியுறுத்தியுள்ளனர் அ.தி.மு.க.வின் சீனியர்கள்.

ttv-eps

Advertisment

அப்போது, ""சபாநாயகர் தனபாலிடம் விவாதித்து முடிவெடுப்போம்'' என்று சீனியர்களுக்கு பதிலளித்திருக்கிறார் எடப்பாடி.

இந்த நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுடன் தினகரன் நடத்திய ஆலோசனையில் பல்வேறு விவாதங்கள் எதிரொலித்திருக்கின்றன.

Advertisment

ஆலோசனையில் கலந்து கொண்ட எம்.எல்.ஏ.க்கள் சிலரிடம் நாம் பேசியபோது, ""எடுத்த எடுப்பிலேயே, தகுதி நீக்க வழக்கில் இந்த வாரம் தீர்ப்பு வந்திடும்னு எனக்கு தகவல் கிடைச்சிருக்கு என்றார் தினகரன். அப்படிச் சொன்ன அவர், "வெளிநாடு சென்றுள்ள நீதிபதி திங்கட்கிழமை வந்துடுவாரு. 24 அல்லது 25-ந்தேதி வழக்கின் தீர்ப்பு தேதியை பட்டியலில் இணைப்பார்' என்று சொன்னார்.

வழக்கின் தீர்ப்பு எப்படி இருக்கும்னு தகுதி நீக்கம் செய்யப்பட்ட பெண் எம்.எல்.ஏ.க்கள் கேட்க, "நம்பிக்கையா இருங்க. நாமதான் ஜெயிப்போம். நமக்கு சாதகமாகத்தான் தீர்ப்பு வரும். ஆனா, அதுக்குப் பிறகுதான் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தீர்ப்பு நமக்கு சாதகமாக வரும்பட்சத்தில், எடப்பாடி சும்மா இருக்கமாட்டார். நிச்சயம் உங்களை அவர் பக்கம் இழுக்க முயற்சிப்பார். அந்த சந்தர்ப்பத்தை அவருக்கு கொடுக்கக்கூடாது. அதனால், தீர்ப்பு நமக்கு சாதகமானால், நீங்கள் தனித்தனியாக இருப்பதைவிட, எல்லோரும் ஒரே இடத்தில் சென்னையைத் தவிர்த்து வேறு ஒரு இடத்தில் இருந்தால் நல்லாருக்கும். சில நாட்கள்தான். பிறகு இங்கே வந்துடலாம். ஏன்னா, உங்களைச் சேரவிடாமல் தனித்தனியாக கடத்தி தன் கஸ்டடியில் வைத்துக்கொள்ள எடப்பாடி திட்டமிட்டுள்ளார்'' என்று சொல்ல, எம்.எல்.ஏ.க்கள் பலருக்கும் இதில் உடன்பாடில்லை.

அப்போது, "எடப்பாடிக்கு பயந்து நாம் எதுக்கு ஓடணும்? இவ்வளவு காலம் உங்களோடு இருந்த நாங்கள், தீர்ப்பு சாதகமானதற்குப் பிறகா எடப்பாடி வீசும் ஆசை வலைக்கு மயங்குவோம்? எடப்பாடி என்ன சொல்லி ஆசைவார்த்தை காட்டினாலும் உங்களை விட்டுப் போகப் போறதில்லை. அப்படி இருக்கையில், தமிழ்நாட்டை விட்டு ஏன் வெளியேறணும்? அப்படி ஓடிப்போனால் நமக்குத்தான் கெட்ட பெயர். பத்திரிகைகளெல்லாம் மோசமாக விமர்சிக்கும். சுதந்திரமாக இப்போது போலவே அப்போதும் இருப்போம். எதற்கு தேவையில்லாத சர்ச்சை?' என்று எம்.எல்.ஏ.க்கள் சிலர் தெரிவித்தனர்.

இதனை தினகரன் ஏற்றுக் கொண்டாலும் கூட, "உங்கள் மீது எனக்கு நம்பிக்கை இல்லாமல் இல்லை. ஆனா, நம்முடைய பாதுகாப்புக்கு நாம் எச்சரிக்கையாக இருக்கணும்னு நினைக்கிறேன். அதனால, நான் சொல்றபடி கொஞ்ச நாட்களுக்கு நான் ஏற்பாடு செய்ற இடத்துல இருங்கள். எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன். தீர்ப்பு வரட்டும். மற்றதை அப்புறம் பேசிக் கொள்ளலாம். ஆனா, தீர்ப்பு சாதகமானால், வெளியே தங்கி அரசியல் செய்வதற்கேற்ப தயார்படுத்திக் கொள்ளுங்கள்' என்றார் தினகரன். அதன்பிறகு, இதுபற்றி எம்.எல்.ஏ.க்கள் விவாதிக்கவில்லை'' என்று சுட்டிக்காட்டினர். முன்பு கூவத்தூர் முகாம் போல இம்முறை குற்றால முகாம் பற்றி ஆலோசிக்கப்பட்டுள்ளதாம்.

ttv-eps

இந்த சப்ஜெக்டுக்குப் பிறகு, 18 தொகுதிகளிலும் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது பற்றி ஆலோசித்தார் தினகரன். இதுகுறித்து பேசிய அவர், ""இந்த வாரத்துக்குள் தீர்ப்பு வரலைன்னா... தீர்ப்பை விரைந்து வழங்கக் கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தலாம்'' என்று தினகரன் சொல்ல, ""அப்படி நடத்தினால், நீதிமன்றத்தை எதிர்ப்பதுபோல ஆகும். அது நமக்கு எதிராகவே திரும்பும். நீதிமன்றத்துக்கு எந்த நெருக்கடியையும் நாம் ஏற்படுத்தக்கூடாது'' என்றனர் தங்க தமிழ்ச்செல்வன், பழனியப்பன், செந்தில்பாலாஜி ஆகியோர்.

மற்ற எம்.எல்.ஏ.க்களும் இதனை ஆமோதித்த நிலையில், அதனை ஏற்றுக் கொண்ட தினகரன், ""அப்படியானால், செந்தில்பாலாஜி கரூரில் நடத்தியது போல, எடப்பாடி அரசுக்கு எதிரான போராட்டமாக நடத்தலாம். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 தொகுதிகளிலும், எனது ஆர்.கே.நகர் தொகுதியிலும் எந்த ஒரு அடிப்படை பணிகளும் நடக்கவில்லை. எடப்பாடி அரசு வேண்டுமென்றே இந்த தொகுதிகளைப் புறக்கணிக்கிறது. அதனைக் கண்டித்து எடப்பாடிக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம். இது, அவருக்கு சிக்கலை ஏற்படுத்தும்'' என்றார்.

மேலும், ""அந்தப் போராட்டத்தில், "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்களை தகுதி நீக்கம் செய்து இந்த தொகுதி மக்களை எடப்பாடி வஞ்சிக்கிறார்' என குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசினால், மக்கள் ஆதரவு நமக்கு கிடைக்கும். ஒவ்வொருநாளும் ஒவ்வொரு தொகுதியில் போராட்டம் நடத்தி கடைசியாக எனது தொகுதியில் முடிப்போம். நிச்சயம் இந்தப் போராட்டம் எடப்பாடிக்கு சவுக்கடி கொடுத்ததுபோல இருக்கும்'' என்றார் தினகரன்.

இதனை எம்.எல்.ஏ.க்கள் ஏற்க, நவம்பர் 10-ந் தேதியிலிருந்து எடப்பாடி அரசுக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டத்துக்கு தேதி குறித்தார் தினகரன்.

அவர் நடத்திய இந்த ஆலோசனைக் கூட்டத்தின் விபரங்களை உளவுத்துறை மூலம் அறிந்து கொண்ட எடப்பாடி, ""எம்.எல்.ஏ. பதவியை தக்கவைத்துக் கொள்ள 18 பேருக்கும் மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால், ஜக்கையன் மாதிரி கடிதம் கொடுக்க 12 பேர் தயாராக இருக்கிறார்கள். இது தினகரனுக்குத் தெரியும். அதனால்தான் 18 பேரையும் சுதந்திரமாக இயங்க விடாமல், ஒரே இடத்தில் அடைத்து வைக்க ஏற்பாடு செய்துள்ளார். அதனால், 18 பேரும் ஒரே இடத்தில் சேரவிடாமல் தடுக்க முடியுமா என முயற்சி செய்யுங்கள்'' என உளவுத்துறைக்கு அசைன்மெண்ட் கொடுத்துள்ளார்.

மேலும், ""எந்தச் சூழலிலும் உங்களுக்கு தினகரன் நல்லது செய்யப் போறதில்லை. அவர் உங்களை வைத்து அவரது அரசியலை செய்துகொண்டிருக்கிறார். தகுதி நீக்க வழக்கில், உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தாலும் எடப்பாடி அரசுக்கு சிக்கல் வராது. நீங்கள் நினைக்கிற மாதிரி இந்த ஆட்சி கவிழாது. 2021-வரை நீடிக்கும். அதனால் "தினகரனை நம்பி மோசம் போய்விடாதீர்கள்' என்று 18 பேரிடமும் எடுத்துச் சொல்லுங்கள்'' என தூதுவர்களுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார் எடப்பாடி.

தீர்ப்பு பரபரப்பு எதிரொலிக்கும் நிலையில் எடப்பாடி தூதுவர்கள், 18 பேரையும் வெவ்வேறு சேனல்களில் தொடர்புகொண்டு வருகிறார்கள்.

-இரா.இளையசெல்வன்

______________

செய்திக்கு மறுப்பு!

நக்கீரன் 2018, அக்டோபர் 17-19 தேதியிட்ட இதழில் வெளியான நிர்மலாதேவி விவகாரம் தொடர்பான கவர் ஸ்டோரியில் வழக்கறிஞர் தங்கப்பாண்டியன் பேட்டி இடம்பெற்றிருந்தது. அவரை சந்தித்து உரையாடியபோது, "தங்கள் பேட்டியாக இதனை வெளியிடலாமா' எனக் கேட்டதற்கு, 'ஞச்ஸ்ரீர்ன்ழ்ள்ங்' என அவர் தெரிவித்ததன் அடிப்படையிலேயே பேட்டி வெளியிடப்பட்டது. இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் வழக்கறிஞர் தங்கப்பாண்டியன், “"நக்கீரன் தலைமை நிருபர் உள்ளிட்ட 4 பேர் என்னை சந்தித்து உரையாடியபோது நான் பேட்டி தர மறுத்துவிட்டேன். என்னுடைய படமும் என் அனுமதியின்றி எடுக்கப்பட்டுள்ளது'’ என மறுப்புத் தெரிவித்துள்ளார்.

"சிறையில் நிர்மலாதேவியை மிரட்டி கையெழுத்து' என்கிற தலைப்பில் 2018, அக்டோபர் 20-23 தேதியிட்ட இதழில் வெளியான கட்டுரையில் தனது பெயரைக் குறிப்பிட்டு வெளியாகியுள்ள தகவல்கள் உண்மையல்ல என்று மதுரை காமராஜர் பல்கலைக்கழக இணைப் பேராசிரியரும் பேராசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளருமான முனைவர் கொ.சதாசிவம் மறுப்பு தெரிவிக்கிறார்.

(-ஆர்)