டெல்லியில் ஆளும் பா.ஜ.க. கதவை அடைத்துவிட்டது. இந்த நேரத்தில் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு, கே.சி.பழனிச்சாமி தொடர்ந்த பொதுச் செயலாளர் பதவி தொடர்பான வழக்கு என சிக்கலுக்கு மேல் சிக்கல் வந்து தலையில் விழுகிறது என குழம்பிப் போயுள்ளார் முதல்வர் எடப்பாடி. அதற்காக திரைமறைவு பேரங்களை துவக்கியுள்ளார் என்கிறது அ.தி.மு.க. வட்டாரம்.
முதலில் 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் என்ன பிரச்சினை வரும் என கேட்டோம். ""இந்த வழக்கில் தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜியும், அவருடன் பணியாற்றிய மற்றொரு நீதிபதியான சுந்தரும் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியிருக்கிறார்கள். இரண்டு தீர்ப்புகளும் மூன்றாவது நீதிபதியான சத்யநாராயணாவின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த விசாரணையில் இருதரப்பு வாதங்களும் முடிவடைந்து விட்டன. விசாரணையில் வேகத்தை கடைப்பிடிக்கும் வழக்கத்தை கொண்டுள்ள சத்யநாராயணா எந்த நேரமும் தனது தீர்ப்பை வழங்கலாம். இதுதான் தமிழக அரசியலை கதிகலங்க செய்யும் விஷயமாக மாறியுள்ளது'' என்கிறார்கள் சென்னை உயர்நீதிமன்றத்தை சேர்ந்தவர்கள்.
பதினெட்டு எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் கட்சித் தாவல் தடுப்பு சட்டம்தான் விவாதப் பொருள். ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்கு தாவும் கட்சித் தாவல் தடுப்பு சட்டத்தை சட்டமன்றத்துக்குள் நடக்கும் வாக்கெடுப்பு போன்ற நிகழ்வுகளில் கொறடா பிறப்பித்த உத்தரவை மீறி கட்சி மாறி வாக்களிக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக பயன்படுத்த வேண்டுமா அல்லது சட்டமன்றத்துக்கு வெளியே தாங்கள் சார்ந்துள்ள கட்சிக்கு எதிராக செயல்படும் எம்.எல்.ஏ.க்களை கட்சித் தாவல் தடுப்பு சட்டப்படி தண்டிக்கலாமா? என்பதை இந்த வழக்கு விவாதத்திற்குள்ளாக்கியது.
இதில் தீர்ப்பளித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி "சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் முதல்வர் எடப்பாடிக்கு எதிராக மனு கொடுத்தார்கள். நம்பிக்கை வாக்கெடுப்பு என ஒன்று நடந்திருந்தால் அவர்கள் நிச்சயம் எடப்பாடி அரசுக்கு எதிராகத் தான் வாக்களித்திருப்பார்கள். இவர்கள் எடப்பாடியை முதல்வர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என அளித்த மனுவை கவர்னர் ஏற்றுக் கொண்டிருந்தால் அடுத்த நடவடிக்கை நம்பிக்கை கோரும் தீர்மானம்தான். எனவே 18 எம்.எல்.ஏ.க்களும் கட்சித் தாவல் தடுப்பு சட்டத்தை மீறும் வகையில் செயல்பட்டிருக்கிறார்கள். எனவே இவர்கள் மீது சபாநாயகர் எடுத்த நடவடிக்கை சரிதான்' என தீர்ப்பளித்தார்.
நீதிபதி சுந்தர் அளித்த தீர்ப்பில், "கட்சித் தாவல் தடுப்புச் சட்டம் என்பது அவையில் நடக்கும் விவகாரங்களை கட்டுப்படுத்த உருவாக்கப்பட்டது. இந்த விஷயத்தில் 18 எம்.எல்.ஏ.க்களும் சபைக்கு வெளியே முதல்வருக்கு எதிராக கவர்னரிடம் மனு கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் அனைவர் மீதும் சபாநாயகர் கட்சித் தாவல் தடுப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கவில்லை. எஸ்.டி.கே.ஜக்கையன் என்கிற எம்.எல்.ஏ. முதல்வரை எதிர்த்து கவர்னரிடம் கொடுத்த மனுவில் கையெழுத்து போட்டுவிட்டு மனம் மாறி முதல்வருக்கு ஆதரவு தெரிவித்த காரணத்தால் சபாநாயகர் நடவடிக்கை எடுக்கவில்லை. முதலில் சபையில் இந்த சம்பவம் நடக்கவில்லை. கட்சித் தாவல் தடுப்பு சட்டத்தை உபயோகப்படுத்துவதற்கு அடிப்படையான கொறடா உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. கொறடா உத்தரவை தொடர்ந்து அதை மீறி நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் எடப்பாடி அரசை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் வாக்களிக்கவில்லை. எனவே கட்சித் தாவல் தடுப்பு சட்டப்படி 18 எம்.எல்.ஏ.க்கள் மீதும் சபாநாயகர் எடுத்த நடவடிக்கை தவறு' என தீர்ப்பளித்தார்.
இவர்களின் மாறுபட்ட தீர்ப்பால் இந்த வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக நியமிக்கப்பட்ட சத்யநாராயணா முன்பு 18 எம்.எல்.ஏ.க்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், ""சபாநாயகர் இந்த உத்தரவை பிறப்பிக்கும்போது அ.தி.மு.க. என்ற பெயரிலேயே கட்சி இயங்கவில்லை. அ.தி.மு.க. அம்மா என்ற பெயரிலேதான் இயங்கி வந்தது. பிளவுபட்ட ஒரு கட்சியின் சபாநாயகர் எப்படி அ.தி.மு.க. சார்பில் கட்சி தாவல் தடுப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும்'' என டெக்னிக்கலாக ஒரு புது பாயிண்டை எடுத்து வைத்தார். ஆனால் நீதிபதி சத்யநாராயணா விசாரணையின் போது பல கேள்விகளை எடுத்து வைத்தார். கட்சி தாவல் தடுப்பு சட்டத்தை சட்டமன்றத்திற்கு வெளியே பயன்படுத்த முடியுமா? என்கிற தொனியில் அவர் பலமுறை கேட்ட கேள்வி எடப்பாடி அணியின் வயிற்றில் புளியை கரைக்க ஆரம்பித்துவிட்டது.
ஒருவேளை தீர்ப்பு, ஆளும் கட்சிக்கு பாதகமாக வந்து விட்டால் என்ன செய்வது என உச்சநீதிமன்றத்தில் எடப்பாடிக்காக வாதாடி வரும் அரிமா சுந்தரம் தலைமையில் ஒரு கூட்டத்தை நடத்தியுள்ளார். அதேபோல் டிடி.வி. தினகரன் கபில்சிபில், அபிஷேக் சிங்வி பங்கு பெறும் கூட்டத்தை நடத்தியுள்ளார். தீர்ப்பு எடப்பாடிக்கு எதிராக வந்தால் உடனடியாக 18 எம்.எல்.ஏ.க்களும் எம்.எல்.ஏ.க்களாக உயிர் பெறுவார்கள். என்னதான் சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி அப்பீல் செய்தாலும் ஓட்டுரிமை இல்லாத எம்.எல்.ஏ.க்களாக தினகரன் ஆதரவு எம்எல்.ஏ.க்கள் சட்டமன்றத்தில் ஒரு வழி செய்வார்கள் என சுப்ரீம் கோர்ட் சட்ட வல்லுநர்கள் எடுத்து சொன்னதை கேட்ட எடப்பாடி ஷாக் ஆனார். "ஒருவேளை தீர்ப்பு நமக்கு எதிராக வந்துவிட்டால் ஏற்கனவே பயங்கர வேகத்தோடு செயல்படும் தினகரன் மேலும் வேகம் பெறுவார். நமது கட்சியை பலமாக உடைப்பார்' என தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி வருத்தப்பட்டுள்ளார் எடப்பாடி என்கிறது அ.தி.மு.க. வட்டாரம்.
இந்த நிலைமையை சமாளிக்க பெங்களூரு சிறையில் இருக்கும் சசிக்கு ரகசியமாக தூது அனுப்பிக் கொண்டிருக்கும் எடப்பாடி, ஓ.பி.எஸ். டீமையும் கடுமையாக எதிர்க்கும் பா.ஜ.க.வையும் சமாளிக்க ஏற்பாடு செய்துள்ளார் என்கிறது அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள்.
மொத்தத்தில் 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கின் தீர்ப்பு எடப்பாடி-தினகரன் இரு தரப்பிலும் திக்... திக்... மனநிலையை உருவாக்கி தமிழக அரசியலில் ஒரு பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும் என டெல்லி பா.ஜ.க.வும் கவலையோடு பார்த்துக் கொண்டிருக்கிறது.
-தாமோதரன் பிரகாஷ்