புதுக்கோட்டை ஊரக வளர்ச்சித்துறை அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றியவர் முருகானந்தம். அவருடைய மனைவி முள்ளங்குறிச்சி ஊராட்சி மன்றத் தலைவராக பதவி வகித்து வருகிறார். முருகானந்தத் தின் சகோதரர்களில் ஒருவரான பழனிவேல், ஒப்பந்ததாரராக உள்ளார். மற்றொரு சகோதரர் ரவிச்சந்திரன், இளநிலை உதவியாளராக பணியாற்றிவருகிறார்.

mm

இவர்கள் மீது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு வந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில், 15 கோடியே 73 லட்சத்து 53ஆயிரத்து 381 ரூபாய் மதிப்பிலான சொத்து இருந்தது தெரியவந்தது.

கடந்த 1.1.2017 முதல் 30.6.2020 வரை முருகானந்தம் மற்றும் அவரது மனைவியின் சொத்து மதிப்பானது 1260 மடங்கு உயர்ந்துள்ளது. முருகானந்தத்தின் சொத்து மதிப்பு, கடந்த 2017 முதல் 2020 வரை, 16 கோடியே 49 லட்சத்து 84 ஆயிரத்து 158 ரூபாய் ஆகும். இந்நிலையில், முருகானந்தம் மற்றும் அவரது மனைவி காந்திமதி மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்கு பதிவு செய்து, முருகானந்தத்தின் வீட்டில் அதிரடியாகப் புகுந்து சோதனை செய்தனர்.

Advertisment

இந்த சோதனையில், சொகுசு கார்கள், சொத்து ஆவணங்கள், பணம், நகை உள்ளிட்டவை அனைத்தும் அவரது வருமானத்தையும் விட கூடுதல் மதிப்புக்கு முறைகேடாகச் சேர்த்து வைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து, இதுகுறித்து முருகானந்தத்திடம் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தொடர் விசாரணையில் ஈடுபட்டனர்.

அவரிடம் விசாரணை நடத்தியதைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு கிடைத்த சொத்து ஆவணங்களின் அடிப்படையில், திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வேங்கூர் சாலையில் அவருக்கு 30 ஏக்கரில் ஒரு பண்ணை இருப்பதாகவும், தஞ்சை டூ புதுக்கோட்டை சாலையில் அமைந்துள்ள பெருங்கலூர் என்ற இடத்தில் 110 ஏக்கர் நிலம் இருப்பதாகவும், சென்னை கோபாலபுரத்தில் ஒரு வீடும், சென்னை கோட்டூரில் ஒரு வீடும், மேலும் ஒரு மால் சென்னையில் இருப்பதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது. இந்த விவரங்களைக் கொண்டு தற்போது லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

சென்னையில் உள்ள மால் திறப்பு விழாவிற்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள ஏடி பஞ்சாயத்து அளவில் உள்ள அனைவரையும் அழைத்து பார்ட்டி வைத்ததாகவும், தி.மு.க. அமைச்சரான பெரிய கருப்பனின் சம்பந்தி கண்ணன் என்பவர் மூலம் தி.மு.க. அமைச்சர்களை நெருங்க தூது விடப்பட்டுள்ளதாகவும், முன்னாள் அமைச்சர் வேலுமணியின் பி.ஏ.வாக இருந்த ராதா மூலமாக இவருடைய தொடர்பு அதிகமாகியதாகவும் கூறப்படுகிறது. இங்கு நடந்த ரெய்டுக்குப் பின்னர், அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சர்களுக்கு நெருக்கமாக இருந்து சொத்து சேர்த்த அதிகாரிகள் மட்டத்தில் ஒருவித அச்சம் நிலவிவருவதாகத் தெரிகிறது.

Advertisment