2002ஆம் ஆண்டில், கோத்ரா ரயில் எரிப்பு சம்ப வத்தையடுத்து குஜராத்தில் நடந்த வன்முறையில் ஆயிரக் கணக்கான இஸ்லாமி யர்கள் கொல்லப் பட்டதோடு, பலர் காயமடைந்தனர். பொதுச்சொத்துக்கள் தீக்கிரையாக்கப் பட்டன. இப் படு கொலைகள் தொடர்பான வழக்குகளில் குற்றவாளிகள் அனை வரும் தொடர்ச்சியாக விடுதலையாகி வருவது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
குஜராத் கலவரத்தின் போது நரோடாகாம் பகுதியில் நடந்த வன்முறையில், இந்துத்வா தீவிரவாதிகளால் 11 இஸ்லாமியர்கள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த பா.ஜ.க. முன்னாள் அமைச்சர் மாயா கோட்னானி, பஜ்ரங்தளம் தலைவர் பாபு பஜ்ரங்கி உட்பட 69 குற்றவாளிகளை விடுதலை செய்து, ஏப்ரல் 20ஆம் தேதி அகமதாபாத் நீதிமன்றம் அளித் துள்ள தீர்ப்பு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இதில் மாயா கோட்னானிக்கு சாதகமாக பா.ஜ.க. தலைவர் அமித்ஷா ஆஜராகி சாட்சியம் அளித்திருந்தார். அவரது சாட்சியமே மாயா கோட்னானி விடுதலைக்கு வழியமைத்தது. இந்தத் தீர்ப்பு நாடு முழுக்க பலத்த அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இதே குஜராத் கலவரம் தொடர்பான இன்னொரு வழக்கில் உச்சநீதிமன்ற விசாரணையும் பேசுபொருளாகியுள்ளது. குஜராத் கலவரத்தின்போது பில்கிஸ் பானோ என்ற 21 வயது கர்ப்பிணிப்பெண்ணை இந்துத்வா வெறியர் கள் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த தோடு, அவரது 7 உற வினர்களையும் கொலை செய்த வழக் கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 குற்ற வாளிகளை, குஜராத் அரசு கடந்த சுதந்திர தினத்தன்று விடுதலை செய்து அதிர்ச்சியளித் தது! இதை எதிர்த்து பில்கிஸ் பானோ உச்ச நீதிமன்றத்தை அணுக, அங்கு நடந்த வழக்கில் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி, நீதிபதிகள் கே.எம்.ஜோசப், பி.வி. நாகரத்னா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், ஒன்றிய பா.ஜ.க. அரசையும், குஜராத் பா.ஜ.க. அரசையும் கடுமையாக விளாசினர்.
இவ்வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 11 குற்றவாளிகளில் ஒருவருக்கு 1,000 நாட்களும், இன்னொருவருக்கு 1,200 நாட்களும், மற்றொருவருக்கு 1,500 நாட்களும் பரோல் வழங்கியிருக்கிறார்கள். இதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், "ஒரு கர்ப்பிணிப் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள். இதை, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302-ன்கீழ் வரக்கூடிய கொலைகளுடன் ஒப்பிடவே முடியாது. அதேபோல, கூட்டுக்கொலை செய்த சம்பவத்தை ஒற்றைக் கொலையுடன் ஒப்பிடவும் முடியாது. இந்த வழக்கில், குற்றத்தின் தீவிரத்தை மாநில அரசு கருத்தில்கொள்ளவில்லை'' என்று குறிப்பிட்டனர்.
மேலும், "குற்றவாளிகளை எந்த அடிப் படையில் விடுவித்தார்கள்? இன்று பில்கிஸ் பானோ பாதிக்கப்பட்டுள்ளார். நாளை யாரும் பாதிக்கப்படலாம். நீங்களாகவோ அல்லது நானாகவோகூட இருக்கலாம். குற்றவாளிகள் விடுதலைக்கான காரணங்களைத் தெரிவிக்கா விட்டால், நாங்கள் சொந்த முடிவை எடுப்போம்'' என்று கறாராக மத்திய, மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை விடுத்த னர். இந்நிலையில் வழக்கு விசாரணை மே 2ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப் பட்டுள்ளது.