வ்வளவு பெரிய சிலையை செய்கிறோமே, அதை எப்படி எடுத்துச் செல்வது என்றுகூட திட்டமிடாமல், ஒரு பெருமாள் சிலையை 108 அடி உயரத்தில் செய்துவிட்டு, இப்போது, கடைகளையும் வீடுகளையும் காவு வாங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

சிலையைக் கொண்டு செல்வதற்காக கடைகளும் வீடுகளும் இடிக்கப்பட்டு பெருமாள் சிலையை சுமந்த கண்டெய்னர் வந்தவாசி பைபாஸ் சாலையில் நுழைந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களைப் பார்த்தோம்.

கர்நாடகா மாநிலம் பெங்களூருக்கு அருகே கோதண்டசாமி கோயில் இருக்கிறது. தனியார் அறக்கட்டளைக்கு சொந்தமான இந்தக் கோயிலுக்காக 108 அடி உயரத்தில் மகாவிஷ்ணு விஸ்வரூப தரிசனம் என்ற பிரமாண்டமான சிலையை செய்ய திட்டமிட்டார்கள். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகேயுள்ள கொரக்கோட்டை கிராமத்தில் உள்ள கற்கள்தான் சரியானது என்று சிலைசெய்ய தேர்வு செய்தனர்.

statue

Advertisment

2017-ஆம் ஆண்டிலேயே சிலையை செய்து முடித்து 160 டயர்கள் கொண்ட ஸ்பெஷல் கண்டெய்னரில் ஏற்றியபோது, அது 100 அடி தூரம்கூட நகர முடியவில்லை. மீண்டும் 2018- ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி மறுபடியும் 240 டயர்கள் பொருத்தப்பட்ட கார்கோ கண்டெய்னரில் பெருமாள் சிலையின் ஒரு பகுதி மட்டும் ஏற்றப்பட்டது. ஆனால், திண்டிவனம் வெள்ளிமேடு பேட்டை என்ற கிராமத்திற்குள் நுழைய முடியவில்லை. வாகனம் செல்ல 30 அடி பாதை தேவை. இருந்ததோ 23 அடிதான். 7 முதல் 10 அடிவரை சாலையோர வீடுகளையும் கடைகளையும் இடிக்க வேண்டிய நிலை. இதற்காக சில இடைத்தரகர்கள் மூலம் அறக்கட்டளை நிர்வாகி சதானந்த கவுடா முயற்சித்தார். ஆனால், அவர்கள் கமிஷன் அடிப்படையில் பிரச்சினையைக் குழப்பினார்கள். இதையடுத்து மக்கள் போராட்டத்தால், நேரடியாக இழப்புத் தொகையை அளிக்க வகை செய்யப்பட்டது.

"கடவுள் விவகாரம் என்பதால் இந்த பகுதியில் உள்ள கடைகள், வீடுகள் என 50 கட்டிடங்களை 5 அடிமுதல் 10 அடி வரை இடிக்க ஒப்புக்கொண்டோம்' என்கிறார் உரக்கடையின் முகப்பை இடித்துக்கொண்டிருந்த பிரபு. சதானந்த கவுடாவை தொடர்புகொண்டபோது, சிலையை கொண்டுவருவதில் உள்ள சிக்கலை தீர்த்த பிறகு பேசுவதாகக் கூறினார்.

சிலையின் முதல்பகுதி கோயிலை அடைய 40 நாட்கள் ஆகுமாம். இந்த சிலையின் மொத்த திட்டமதிப்பு 50 கோடி என்கிறார்கள். சிலை நிறுவப்பட்ட சில ஆண்டுகளிலேயே இந்த தொகை வசூலாகிவிடுமாம். இப்போதே, கண்டெய்னரில் உண்டியல் பொருத்தப்பட்டு வசூலோடுதான் நகர்கிறார் பெருமாள் என்கிறார்கள்.

-து. ராஜா