றுதியான கட்டுமானத்திற்கு உத்திர வாதமளிக்கும் சிமெண்டுக் கம்பெனிகள் சிமெண்ட் விலையில் மட்டும் உறுதியாக இருப்பதில்லை. ஏழை, நடுத்தர மக்களின் கைகளுக்கு எட்டாத் தொலைவுக்கு சிமெண்டின் விலையை ஏற்றி விடுகிறார்கள். மக்கள்தொகை பெருக்கத்தோடு சேர்ந்து, குடியிருப்பதற்கான வீடுகள், அடுக்கு மாடிகள், வணிக வளாகங்களும் பெருகிவரும் சூழலில், இத்தொழிலை நம்பியிருக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

""விலையேற்றத்துக்கு எந்த காரணமும் தெரியவில்லை. சிமெண்டுக்கு மாற்றுப் பொருளும் இல்லை. கட்டடம் கட்ட ஆர்டினரி போர்ட் லேண்ட் சிமெண்ட், போர்ட்லேண்ட் போஸ் சோலானா சிமெண்ட் என இரண்டுவகை சிமெண்டுகளையே பயன்படுத்துகிறோம். இந்த சிமெண்டுகளுக்கான மூலப்பொருட்களின் விலை உயரவில்லை. ஆனால், சிமெண்ட் விலையை உயர்த்திவிட்டார்கள்'' என்கிறார் பொறியாளரும் சிறிய அளவில் கட்டுமானப் பணிகள் செய்துவருபவருமான ரெட்ஹாட் பார்த்திபன்.

construction

Advertisment

சிமெண்ட் சில்லறை வியாபாரம் செய்யும் வெள்ளக்கூட்டைச் சேர்ந்த சுரேஷோ, “""அறிவிக்காமலே இந்த விலை உயர்வைச் செய்திருக்கிறார்கள். இதனால் சிறு சிறு கட்டட வேலைகள்கூட நின்றுவிட்டன''’என்கிறார்.

தேசிய கட்டுமான சங்க முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன், “""இந்த விலையேற்றத்துக்கு காரணம் சிமெண்ட் உற்பத்தியாளர்கள்தான். கடந்த இருபது வருடங்களாக சிண்டி கேட் அமைத்து விலை யேற்றம் செய்கின்றனர். தற்போது சென்னையில் மட்டும் 30-க்கு மேற்பட்ட கான்கிரீட் ரெடிமிக்ஸ் கம்பெனி கள் உள்ளன. இவர்கள் யாரிடமும் நாங்கள் சிமெண்ட் வாங்குவதில்லை. வேறு நிறுவனங் களிடமிருந்தே வாங்குகிறோம். பத்துநாட்கள் முன்புவரை பல்க் ஆர்டர் டீலர்களுக்கு ஓ.பி.சி. சிமெண்ட் ஒரு டன் ரூ.4,800-க்கு சப்ளை செய்தார்கள். தற்போது அது 7,000 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல பி.பி.சி. சிமெண்ட் 4600 ரூபாயிலிருந்து 6,800 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதாவது மொத்த வியாபாரியிடம் 260 ரூபாய்க்குக் கிடைத்த ஒரு மூட்டை சிமெண்ட் 410 ஆகவும், சில்லறை வியாபாரியிடம் 430 ரூபாயாகவும் விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அறிவிக்கப்படாத இந்த விலையேற்றத்தின் சதவிகிதம் 37%. இவர்கள் சொந்தமாக சிமெண்ட் உற்பத்தி செய்வதோடு, சொந்தமாக கான்கிரீட் ரெடிமிக்ஸ் வைத்துக்கொண்டு எங்களுக்கு சப்ளை செய்யப்படும் சிமெண்டு களையும் விலையேற்றுவதால் எங்கள் அனைவருக்குமே பாதிப்பு.

Advertisment

இதேபோல் கடந்த 1998-ல் திடீர் விலையேற்றம் செய்த போது சிமெண்ட் விலை மூட்டை ரூ 165-க்கு எகிறியது. கட்டுமானக் கழகம், கட்டுமானத் தொழிலாளர்களுடன் தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. மூப்பனார் இணைந்து கொண்டு, ஆந்திராவிலிருந்து இறக்குமதி செய்து ரூ 95-க்கு சத்தியமூர்த்தி பவனில் வைத்து விற்பனைசெய்தார். பின்னர் சிமெண்ட் கம்பெனி கள் இறங்கிவந்து ரூ 115-க்கு சிமெண்ட் விற்பனை செய்தன.

cementprice

2008-ல் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறியது. விலைகுறைக்கச் சொல்லி 50000 பேர் கண்டனப் பேரணியாகச் சென்று அப்போதைய முதல்வர் கலைஞரிடம் நேரில் மனு கொடுத்தோம். அவர் உடனடியாக சிமெண்ட் உற்பத்தியாளர்களை அழைத்து, "மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். உடனடியாக விலையைக் குறைக்காவிட்டால் சிமெண்ட் உற்பத்தியை தேசியமயமாக்க நட வடிக்கை எடுக்கப்படும்'’ என தடாலடியாகப் பேசினார். விலை குறைந்தது.

2012-ல் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது திடீர் விலையேற்றம் நடந்தது. அவர் சிமெண்ட் நிறுவன அதிபர்களிடம் பேசிப்பார்த்து விட்டு, சரிப்பட்டு வராததால், ஏழைகள் பாதிக்கக் கூடாதென அம்மா சிமெண்டை அறிமுகம் செய்தார். தற்போது மீண்டும் விலையேற்றம் நிகழ்ந்திருக்கிறது. இதில் மாநில அரசு கவனம் செலுத்தவேண்டும்''’என்கிறார்.

கட்டுமான சங்கத்தின் மாநில தலைவர் ஐயநாதன், ""முன்பெல்லாம் சிமெண்ட் விலை யேறினால் தற்காலிகமாகச் சமாளிக்க, ஆந்திரா விலிருந்து இறக்குமதி செய்வோம். ஆனால் இவர்கள் கூட்டமைப்பாகச் செயல்பட்டு அவர் களையும் தடுத்துள்ளனர்''’என்கிறார் ஆதங்கத் துடன்.

கட்டுமான சங்க நிர்வாகி வெங்க டேசனோ, “""சிமெண்ட் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த ரெகுலேட் டரி அத்தாரிட்டி அமைத் துக் கண்காணிக்க வேண் டும். அதன் ஆலோசனைப் படியே விலை நிர்ணயம் அமையவேண்டும். அப் போதுதான் விலையைக் கட்டுப்படுத்த முடியும்'' என்கிறார்.

அமைப்புசாரா தொழிலாளர் சங்கத் தலைவர் பொன்.குமார், “""இந்த விலையேற்றம் கட்டுமானத் தொழிலில் இருக்கும் 29 லட்சம் ஏழைத் தொழிலாளர்களைத்தான் முதலில் பாதிக்கும். அரசு உடனடியாக தலையிட்டு விலையைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்''’’ என்கிறார்.

தமிழகத் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல் வத்தைத் தொடர்புகொண்டு, இந்த விலையேற்றம் குறித்து கருத்தறிய முயன்றோம். "சட்டமன்றம் நடந்துவருவதால் அவர் பிஸி' என தொடர்பைத் துண்டித்தார் அவரது உதவியாளர். இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசனின் தொடர்பு அதிகாரி பாலசுப்பிரமணியனை பலமுறை தொடர்பு கொண்டும் அந்த எண் தொடர்பிலேயே வரவில்லை.

சிமெண்ட் கம்பெனிகளின் கூட்டமைப்பு மக்களிடம் கொள்ளையடிக்கிறது; கொள்ளைக் கூட்டமைப்பை தமிழக அரசு பாதுகாக்கிறது.

-அரவிந்த்