அரசாங்கத்துக்கு ஒவ்வொரு துறையிலும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து வாங்கப்படும் பொருட்கள், கமிஷன் இல்லாமல் வாங்கப் படுவதில்லை. சமீபத்தில் திருச்சியில் கல்வித் துறையில் எழுதுபொருள் உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு செய்ததாக முன்னாள் திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உள்ளிட்ட 9 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது.
பொதுமக்கள் செலுத்தும் வரிப்பணத்திலிருந்து சம்பளம் வாங்கும் அரசு அதிகாரிகள், பணத்தின் மீதான பேராசை காரணமாக எல்லாவற்றிலும் கமிஷன் எதிர்பார்க்கிறார்கள். இப்படி கமிஷன் பெறுவது, எல்லா துறைகளிலும் இன்று வழக்கமான நடைமுறையாக மாறிவிட்டது. அதில் ஒரு சில மட்டும் வெளியே தெரிந்துவிடுகிறது. அப்படி சமீபத்தில் பெரிய முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் தூய்மை பாரத இயக்கத்தில், குப்பைகளை அள்ளிச் செல்வதற்கு வாங்கப் பட்ட மின்கல வாகனக் கொள்முதலில் பெரிய அளவில் ஊழல் நடந்திருப்பதாக ஒரு தகவல் வெளியானது .
இதுதொடர்பாக நாம் விசாரித்தபோது, "தூய்மை பாரத இயக்கத்தின்கீழ் தமிழ் நாட்டில் 40 மாவட்டங்களிலுள்ள கிராம பஞ்சாயத்துகளில் உள்ள குப்பைகளை அகற்ற பேட்டரி மூலம் இயங்கும் மின்கல வண்டிகள் ஆண்டுதோறும் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் கொள்முதல் செய்யப்படு கின்றன.
இந்த கொள்முதலுக்கு மத்திய அரசு நிதி 70 சதவீதமும், அந்தந்த கிராம பஞ்சாயத்துக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதிக்குழு ஒதுக்கீட்டின்கீழ் 30 சதவீதமும் பெறப்படுகிறது. கடந்த 2022-2023ஆம் ஆண்டு, துறையின் செயலாளராக இருந்த அமுதா மற்றும் இயக்குநராக இருந்த தாரேஷ் அஹமது ஆகியோர், மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் வழிகாட்டு நெறிமுறைகளின் படி கிராம பஞ்சாயத்துக்கு தேவையான உபகரணங்களையும், மத்திய அரசின் ஜெம் என்ற இணையதள சேவை மூலமாக இந்தியா முழுவதுமுள்ள உற்பத்தியாளர்கள், விற்பனை யாளர்களிடமிருந்து, தங்களின் தேவை களுக்கு ஒரு மின்கல வண்டியின் விலை 2 லட்சத்து பத்தாயிரம் முதல் அதிகபட்சமாக 2 லட்சத்து ஐம்பதாயிரம் வரை கொள்முதல் செய்தனர்.
தமிழ்நாடு அரசின்கீழ் செயல்படும் பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் அதே மத்திய அரசின் ஜெம் இணையதளத்தின் டெண்டரில் நடப்பு ஆண்டில் ஒரு மின்கல வண்டியின் சந்தை மதிப்பு 1 லட்சத்து எண்பதாயிரம் மட்டும் தான். ஆனால் தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறையில் மட்டும் ஒரு மின்கல வண்டி 3 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் பத்தாயிரம் வண்டிகள் வாங்கப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு 145 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளது.
இந்த 140 கோடி ரூபாயும் உயர் அதிகாரிகள் முதல் கீழ்நிலை வரையுள்ள அரசு ஊழியர்களுக்கு சென்றடையத் திட்டமிட்டு ஜெம் இணையதளத்திலுள்ள சட்டதிட்டங்களும் மாற்றப்பட்டுள்ளது. கடந்த 13ஆம் தேதி வாகனக் கொள்முதலில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சித்துறை வேலூர் திட்ட இயக்குநர், உயர்நீதிமன்றத்தில் இப்பிரச்சனை தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும்போது டெண்டர் திறந்து 24 மணி நேரத்திற்குள் சட்டவிரோதமாக ஆர்.டி.எஸ். எனும் நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை இறுதிசெய்து, 10 நிறுவனங்களை தகுதியிழப்பும் செய்துள்ளார்.
அதேசமயம் 17ஆம் தேதி கள்ளக் குறிச்சி மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குநர், வேலூரில் தகுதி யிழப்பு செய்யப்பட்ட நிறுவனங்களான ஈராய்ஸ் மற்றும் ஆர்.கே.மெட்டல் ஆகிய நிறுவனங் களை தகுதிபெற்ற நிறுவனங்களாக அறிவித்துள் ளார். இப்படியாக விதி முறைகள் எதுவும் சரியாகக் கையாளப்படாமல் 5 கோடி ரூபாய்க்கு மேல் முறை கேட்டில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப் படுகிறது.
தற்போது 2023- 2024ஆம் ஆண்டில் துறை யின் இயக்குநராக பொறுப்பேற்றவர், திண்டுக் கல்லை சேர்ந்த இஞ்சினி யரிங் நிறுவனத்துடன் கைகோர்த்து கடந்த வருடம் கொள்முதல் செய்யப்பட்ட மின்கல வண்டியில் ஹைட் ராலிக் ஜேக்கை நீக்கி, 48 வோல்ட் 100 ஏ.எச். மின்கல திறன் பேட்டரியின் திறனைக் குறைத்து, 2 லட்சத்து இருபத்தைந்தாயிரம் மதிப்புள்ள மின்கல வண்டியை 3 லட்சத்து இருபத்தைந்தாயிரத்திற்கு நிர்ணயம் செய்து, ஒரு வண்டிக்கு 1 லட்சம் வீதம் தமிழ்நாட்டிற்கு வாங்கப்பட்ட பத்தாயிரம் வண்டிகளில் மோசடி செய்து, அரசுக்கு பெருத்த நிதியிழப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அந்த ஜெம் இணையதளத்தில் 500க்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்கள் இருந்தும் 4 நிறுவனங்கள் மட்டுமே ஒப்பந்தத்தில் பங்குபெறும் வகையில் நிபந்தனைகளைத் திருத்தியுள்ளனர்.
மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் அவசரஅவசரமாக ஒப்பந்தப்பணிகளை முடிக்கத் திட்டமிட்டுள்ளனர். எனவே இத்துறையின் அமைச்சர் ஐ.பெரியசாமி, இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி, 100 கோடி ரூபாய் அளவிலான நிதியிழப்பைத் தடுக்க, ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டுமென்று கோரிக்கை எழுந்துள் ளது.