க்கள் பணிக்கான வாய்ப்பாகக் கருதப்படும் அரசியல், இன்றைக்கு சுயநலமிகளின் களமாக மாறிவருகிறது. சதவிகிதங்கள் குறைந்துகொண்டே வந்தாலும், அரசியலில் கறைபடாத கரங்கள் இருந்துகொண்டேதான் இருக்கின்றன. அத்தகைய கறைபடாத கரங்களுக்குச் சொந்தக்காரர்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. நன்மாறன்.

nanmaran

“"கோடீஸ்வரராவதற்கு குறுக்கு வழி'’என்னும் தலைப்பில் புத்தகம் எழுதினால், அதில் அரசியலில் சேர்ந்து பணம் பண்ணுவது என்பதை பரிந்துரைக்காமல் யாராலும் இருக்கமுடியாது. இன்றைக்கு வீசிய கையுடன் கவுன்சிலராக ஜெயிப்பவர், தன் பதவிக்காலம் முடியும்போது வீடு, கார், வங்கிக்கணக்கில் கணிசமான பணம் என ஆளே மாறிவிடுகிறார். ஆனால் மதுரை கிழக்குத் தொகுதியில் இரண்டுமுறை எம்.எல்.ஏ.வாக இருந்த ஒருவர் சொந்த வீடுகூட இல்லாமல் இருக்கிறார் என்பதை நம்பமுடிகிறதா?

ராஜாக்கூர் பகுதியில் ஏழைகளுக்காக கட்டப்படும் குடிசை மாற்று வாரிய வீடுகளில் ஒன்றை தனக்கு ஒதுக்கித் தரும்படி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்திருக்கிறார் நன்மாறன். இன்றைக்கு இந்தச் செய்தி பரபரப்பாகப் பேசப்பட்டாலும், அவரது ஐம்பதாண்டு அரசியல் வாழ்க்கையில் பேசுவதற்கு நிறையவே செய்திகள் இருக்கின்றன.

Advertisment

மதுரையைச் சேர்ந்த நன்மாறன் இளம் வயதிலேயே கம்யூனிச சிந்தனையால் ஈர்க்கப்பட்டார். இவரது தந்தை பஞ்சாலைத் தொழிலாளி. தொழிலாளர்நலப் போராட்டங்கள் அவரை ஈர்த்தன. தொடக்கத்தில் காவலராக இருந்த அவர், அதை உதறிவிட்டு கட்சிக்கு வந்தார். தமிழில் முதுகலைப் பட்டப் படிப்பு முடித்த அவருக்கு ரயில்வே தொழிலாளர் சங்கத்தில் தட்டச்சராக பணி கிடைத்தது. பஞ்சாலைத் தொழிலாளர் சங்கத்திலும் தன்னை ஆர்வத்துடன் ஈடுபடுத்திக்கொண்டு தொழிலாளர்களுக்காக ஆர்வமுடன் உழைத்தார்.

nanmaran

1971-ஆம் ஆண்டு நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல் அவருக்குத் திருப்புமுனையாக அமைந்தது. நாடாளுமன்றத் தொகுதியில் தோழர் ராமமூர்த்தியும், மதுரை மேற்குத் தொகுதியில் சங்கரய்யாவும் போட்டியிட, தொடர்ச்சியாக பிரச்சார மேடை ஏறும் வாய்ப்புக் கிடைத்தது. வெடிப்புறவும் நகைச்சுவை யாகவும் அமைந்த அவரது பேச்சு மக்களை ஈர்த்தது. கூடவே மேடைக் கலைவாணர் எனும் பட்டமும் அவருக்கு வாய்த்தது.

Advertisment

வேலையில்லாத இளைஞர்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டும் என்று வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டு கைதாகி, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். கட்சியைச் சேர்ந்த இளைஞர்கள் கொல்லப்பட்டதைக் கண்டித்து கன்னியாகுமரியில் பொதுக்கூட்டம். ""பேசினால் வெடிகுண்டு வீசுவோம்'' என அந்த ஊரில் எதிர்ப்பு இருந்தது. இருந்தும் மேடையேறிப் பேசி, எதிர்த்தவர்களை தன் தைரியத்தால் வாயடைத்துப் போகச் செய்தார்.

கட்சியில் விசுவாசமும், மக்கள் நலத்தில் ஆர்வமும்கொண்டிருந்த நன்மாறனுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, 2001, 2006-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தொடர்ச்சியாக வாய்ப்பளித்தது. தனது அயராத உழைப்பாலும், மக்கள் இவர்மீது வைத்திருந்த நன்மதிப்பாலும் கட்சிக்கு இரண்டுமுறையும் வெற்றிக்கனியை பறித்துக்கொடுத்தார்.

கிட்டத்தட்ட பத்தாண்டுகள் மக்கள் பணியில் முழுமூச்சுடன் ஈடுபட்ட அவர், தன் மனைவி மக்களை நினைத்து எந்த சொத்தும் சேர்க்கவில்லை. சட்டமன்ற உறுப்பினராக இருந்ததற்கு தற்போது அரசு அளிக்கும் ஓய்வு ஊதியத்தையும் கட்சியிடம் கொடுத்துவிட்டு, கட்சி அளிக்கும் மாதாந்திரத் தொகையான ரூ 12000-ல்தான் தன் குடும்பத்தை நடத்திவருகிறார்.

f

நன்மாறனுக்கு 72 வயது. தற்போதும் கட்சியில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம், சிறுபான்மை நல குழுவில் பொறுப்பில் இருக்கிறார். மதுரை ஆரப்பாளையம் பொன்னகரம் பகுதியில் வசித்து வரும் அவருக்கு குணசேகரன், ராஜசேகரன் என இரு மகன்கள். பிள்ளைகள் இருவரும் தனித்தனியாக வசித்துவருகிறார்கள். தன் காலத்துக்குப் பின் தனது மனைவி வள்ளிக்கு வசிப்பிடம் வேண்டுமென் பதற்காகத்தான், பிப்ரவரி 15-ஆம் தேதி மனுவுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்திருக்கிறார்.

அரசின் இலவச வீடு உதவி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் நன்மாறன் மனு கொடுத்த செய்தி அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்பட்ட நிலையில், பல்வேறு நபர்கள் தனிப்பட்ட முறையில் அவரை அழைத்து உதவி செய்யத் தயாராக இருப்பதாகப் பேசியிருக்கிறார்கள்.

""ஒவ்வொரு குடிமகனுக்கும் வீடு கோருவதற்கான உரிமை உண்டு என்ற அடிப்படையில்தான் இந்த மனுவை அளித்தேன். பல்வேறு தரப்பினர் எனக்கு உதவ முன்வந்திருக்கின்றனர். நான் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக கம்யூனிஸ்ட் கட்சியில் முழுநேர ஊழியராகப் பணியாற்றி வருகிறேன். என்னையும், எனது குடும்பத்தையும் கட்சி தொடர்ந்து பாதுகாத்து வருகிறது. எனவே தனிப்பட்ட உதவிகளுக்கான அவசியம் எழவில்லை'' என அந்த உதவிகளை மென்மையாக மறுத்துள்ளார்.

இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் தேவை ஆயிரம் ஆயிரம் நன்மாறன்கள். ஆனால், கமிஷன் கொழுந்துகளும் கரப்ஷன் சிகாமணிகளும்தான் நமக்கு சட்டமன்ற உறுப்பினர்களாக வருகிறார்கள்.