மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 10 பேரை இடமாற்றம் செய்திருக்கிறது தி.மு.க. அரசு. பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக இருந்த தமிழக கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதாவை மாநில அரசு பணிக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அவருக்கு பணியிடம் ஒதுக்காமல் இருப் பதையும், அவரை கவர்னரின் செயலாள ராக நியமிக்க டெல்லி விரும்புவதையும், ஆனால், அதனை ஏற்காத ஸ்டாலின், அவரை முக்கியத்துறையின் முதன்மைச் செயலாளராக நியமிக்கவிருப்பதையும் கடந்த இதழில் சுட்டிக்காட்டியிருந்தோம்.
நமது இதழ் வெளிவந்த அன்றைய தினம் இரவு, 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதில், ஊரக வளர்ச்சித் துறையின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார் அமுதா. இத்துறையின் முதன்மைச் செயலாளராக நல்லமுறையில் செயல்பட்டு வந்த கோபால், போக்குவரத்துத் துறையின் முதன்மை செயலாளராக்கப்பட்டிருக்கிறார்.
இந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம் குறித்து, கோட்டை வட்டாரத்தில் நாம் விசாரித்தபோது, ”நிதித்துறையின் முதன்மைச் செயலாளராக இருந்த கிருஷ்ணனும், தொழில்துறையின் முதன்மைச் செயலாளராக இருந்த முருகானந்தமும் பரஸ்பரம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள். கடந்த 15 ஆண்டுகளில் நிதித்துறையில் அனுபவமில்லாத ஒருவர் துறையின் செயலாளராக நியமிக்கப் பட்டிருப்பது இப்போதுதான்.
நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜ னுக்கும் கிருஷ்ண னுக்கும் ஒத்துப் போகவில்லை. குறிப்பாக, அனைத்து துறைகளையும் சேர்ந்த பல கோப்புகள் நிதித்துறையில் குவிந்து கிடக்கிறது. அதனை உடனுக்குடன் க்ளியர் செய்ய அமைச்சரிடம் கிருஷ் ணன் வலியுறுத்தியதில் அமைச்சர் அக்கறை காட்ட வில்லை. அதேசமயம், நீலாங்கரையிலிருந்து உத்தர விடப்படும் கோப்புகள் மட்டும் உடனடியாக க்ளீயர் செய்யப் படுகிறது என இருவருக்கும் ஏற்பட்ட முரண்பாடுகளில் கிருஷ்ணன் மாற்றப்பட்டுள்ளார்.
இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை முதன்மைச் செயலாளராக இருந்த ரமேஷ்சந்த் மீனாவை எரி சக்தித்துறையின் முதன்மைச் செயலாளராக நியமித்துள்ளனர். விளையாட்டுத்துறையில் இருந்தபோது இவரது பெர்சனல் செலவுக்காக மாதம் 75,000 ரூபாய் தரவேண்டும் என பணியாளர்கள் டார்ச்சர் செய்யப்பட்டதாகக் குற்றச்சாட்டு உண்டு. வீட்டு வேலை செய்வதற்கு என 6, 7 ஓ.ஏ.க்களை வைத்திருக்கிறார். அப்படிப்பட்டவரை எரிசக்தி என்கிற மிகப்பெரிய துறையின் முதன்மைச் செயலாளராக நியமித் திருக்கிறார்கள்.
கைத்தறித்துறையின் முதன்மைச் செய லாளாரான செல்வி அபூர்வாவை இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை முதன்மைச்செய லாளராக மாற்றியிருக்கிறார்கள். கைத்தறித் துறையில் அவருக்கான அறையில் ஜிம் கருவிகளை அமைப்பதற்காக இரண்டு மிகப்பெரிய அறைகளை ஒரே அறையாக மாற்றினார். 75 இஞ்ச் டி.வி. வேண்டும் என அடம் பிடித்து அதனை வாங்கியிருக்கிறார். இப்படி ஏகப்பட்ட நிதிச் செலவுகளை செய்திருக்கிறார் அபூர்வா. இதனை அவர் அனுபவிப்பதற்குள், அவரை மாற்றிவிட்ட னர். இப்படி... அதிகாரிகளின் மாற்றத்தில் சில பல பின்னணிகள் இருக்கின்றன” என்கிறார்கள் கோட்டை அதிகாரிகள்.