நீட்டின் மூலம் தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவுக்கு கேட் போட்டது மத்திய அரசு. நீட்டுக்குத் தயாராக உதவிகரமாக இருக்குமென பதினொன்றாம் வகுப்பு (+1) தேர்வையும் பொதுத்தேர்வாக்கியது மாநில அரசு. மத்திய- மாநில அரசிடம் சிக்கிக்கொண்டு மாணவர்கள் படாதபாடு பட்டுவருகிறார்கள்.

+1resultமத்திய அரசு தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி நீட் தேர்வை கட்டாயமாகத் திணித்தது. நீட்டை எதிர்க்கத் துணிவில்லாத மாநில அரசு, சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்துக்கு இணையாக தமிழக பள்ளிகளின் பாடத்திட்டத்தை அவசர அவசரமாக மாற்றியமைத்ததுடன், +1-க்கு பொதுத் தேர்வையும் அறிவித்தது.

பதினொன்றாம் வகுப்பில் 600 மதிப்பெண்களுக்கும், 12-ஆம் வகுப்பில் 600 மதிப்பெண்களுக்கும் பொதுத் தேர்வு நடத்தப்பட்டு, இரண்டு மதிப்பெண்களையும் சேர்த்து 1200-க்கு கணக்கிடப்படும் என்னும் முறையை அறிமுகப்படுத்தியிருப்பதால், பல மாணவர்களின் நூற்றுக்கு நூறு இலக்கு தகர்ந்துவிட்டது.

இதற்குமுன்பு தேர்வு முடிவுகள் வந்தவுடன் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்த மாணவர்கள் என பெரிய பட்டியலே வெளியாகும். ஆனால் இந்த முறை 100 சதவிகித தேர்ச்சிபெற்ற பள்ளிகள் என்கிற பேச்சே மாறத் தொடங்கியிருக்கிறது. தவிரவும் பெரிதும் முயற்சியெடுத்துப் படித்த மாணவர்கள் சென்டம் எடுக்கமுடியாததால் விரக்தி மனநிலைக்குச் செல்கிறார்கள்.

Advertisment

திருச்சியில் 34,701 பேர் பதினொன்றாம் வகுப்பு தேர்வு எழுதினர். இதில் 32,584 பேர் தேர்வாகியிருக்கிறார்கள். இது 93 விழுக்காடு. ஆனால் இதில் இயற்பியல், வேதியியல் பாடங்களில் ஒருவரும், கணிதத்தில் இரண்டு பேரும், பொருளியல், உயிரியல் பாடங்களில் 4 பேரும், கணினி அறிவியலில் 16 பேரும், கணக்குப்பதிவியலில் 27 பேரும், வணிகவியலில் 87 பேரும் மட்டுமே நூற்றுக்கு நூறு வாங்கியிருக்கின்றனர். திருச்சியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் 244 உள்ளன. இவற்றில் நூறு சதவிகித தேர்ச்சி பெற்றது, 4 அரசுப் பள்ளிகளும் 56 தனியார் பள்ளிகளும் மட்டுமே. +1 தேர்வில் 100 மார்க் எடுக்க முடியாமல் போனதால், +2வில் என்ன படித்தாலும் சென்டம் வராது, டோட்டல் கூடாது என்ற விரக்தியும் சலிப்பும் 12-ஆம் வகுப்பின் தொடக்க நாளிலேயே மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

திருச்சியில் தனியார் பள்ளிகளால் புறக்கணிக்கப்பட்ட மாணவர்களுக்கு அடைக்கலம் தரும் அரசுப் பள்ளியான திருச்சி சையது முகமதுஷா பள்ளியின் தலைமையாசிரியர் வேலுசாமி, “""இந்த ஆண்டு எங்கள் பள்ளியில் 11-ஆம் வகுப்பில் 155 பேர் படித்தார்கள். இதில் 152 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். கணித பாடம் மட்டும் சிரமமாக இருந்ததாக மாணவர்கள் கூறினர். ஆனாலும் நிறைய பேர் நல்ல மதிப்பெண் பெற்றுள்ளனர். பொதுத் தேர்வாக மாற்றப்பட்ட முதலாண்டு எப்போதும் சிரமமாகத்தான் இருக்கும். முன்பு 150 கேள்விகள் படித்தால், 30 கேள்விகளுக்கு பதிலெழுதி மார்க் வாங்குவார்கள். தற்போது அதே 150 கேள்விகள் படித்தால் 10 கேள்விகளுக்கு மட்டுமே பதிலெழுதும் நிலை. இதை மாணவர்கள் உள்வாங்கிக்கொள்ளும்போது சிரமம் குறையும். இந்த முறை தேர்வுக்கு புளுப்ரிண்ட் கிடையாது. எந்தப் பாடத்தில், எப்படி வினா கேட்பார்கள் என்கிற குழப்பத்தால் நூற்றுக்கு நூறு வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கலாம்''’என்றார்.

""11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சியளிக்கும் ஆசிரியர்கள், நூற்றுக்கு நூறைவிட நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுவதுதான் முக்கியம் என்கிறார்கள். அகில இந்திய அளவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகளில் தமிழக மாணவர்கள் அதிகம் சாதிக்கமுடியாமல் போவதற்கு, 11-ஆம் வகுப்பு பாடங்களை பல பள்ளிகள் தவிர்த்துவிடுவதே காரணம். பல நுழைவுத் தேர்வுகளில் 11-ஆம் வகுப்பு பாடங்களிலிருந்து வினாக்கள் அதிகம் கேட்கப்படுகின்றன. நீட்டுக்கு அடுத்தபடியாக அடுத்த ஆண்டு பொறியியல் படிப்புக்கும் நுழைவுத் தேர்வு வரவிருக்கிறது. இதையெல்லாம் எதிர்கொள்ள இந்த பொதுத் தேர்வுமுறை உதவியாக இருக்கும்.

Advertisment

+1resultஆனால் இந்தப் பிரச்சினைக்கு இன்னொரு முகமும் இருக்கிறது. முதலாவது குரூப் படிக்கும் மாணவர்களுக்குத்தான் நீட், நுழைவுத் தேர்வு பிரச்சினைகள். மொத்தமாக தேர்வு எழுதும் மாணவர்களில் வெறும் 2 சதவிகிதம்தான் நீட் தேர்வு எழுதுகின்றனர். அவர்களுக்காக ஒட்டுமொத்த மாணவர்களையும் பொதுத் தேர்வு நெருக்கடி நிலைக்குத் தள்ளுவது கொடுமையான விஷயம். இது சமூக நீதிக்கே எதிரானது. இதற்குப் பதில் ""அறிவியல் குரூப் உள்ளிட்ட பிற குரூப் மாணவர்களுக்கு தனித்தனி தேர்வு முறையைக் கையாளலாம்''’என்கிறார் பயிற்சி ஆசிரியர்களில் ஒருவரான ரமேஷ்.

விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அருகேயுள்ள நல்லாவூர் கிராமத்தைச் சேர்ந்த குமார் எனும் விவசாயியின் மகளான அங்காளபரமேஸ்வரி +1 தேர்வில் மதிப்பெண் குறைந்த கவலையில் தூக்கில் தொங்கிவிட்டார்.

கல்வி வாழ்க்கையை வளப்படுத்திக்கொள்ளத்தானே தவிர அழித்துக்கொள்வதற்கு அல்ல!… மருத்துவத்துக்கு நுழைவுத்தேர்வு, பொறியியலுக்கு நுழைவுத்தேர்வு, ப்ளஸ் 1-க்கு பொதுத்தேர்வு என மாணவர்களை தேர்வு பயத்திலும் மதிப்பெண்கள் குறித்த அச்சத்திலுமே அரசு வைத்திருந்தால் இதுபோன்ற அவலங்கள்தான் நிகழும்.

-ஜெ.டி.ஆர்.