(72) வெலிக்கடை சிறையும்  மதுரை சிறையும்

"நான் பயின்ற பல்கலைக்கழகம்' என்ற நூல், ரஷியப் புரட்சியின் இலக்கிய நாயகன். மார்க்சிம் கார்க்கி எழுதியது. பல்கலைக்கழகம் என்பது எந்த வளாகத்தின் அறிவு மேதமைகளிலும் இல்லை. எளிய மக்கள் வாழும் வாழ்க்கையின் உயர் பண்புகளில்தான் இருக்கிறது என்ற சிந்தனையை தொடங்கிவைத்தவர் கார்க்கி. அதன் பின்னர்தான் உழைக்கும் மக்களை மையப்படுத்திய சிந்தனைகள் வளரத்தொடங்கின. 

இதைப் போலவே, சிறைச்சாலையை ஒரு பல்கலைக்கழகம் என்று உணர்ந்துகொண்டவர் தோழர் நல்லகண்ணு. தனது போராட்ட வாழ்க்கை யில் கிடைத்த அனுபவம், என்னும் கை விளக்கை ஏந்தி, சிறைச்சாலையின் அத்தனை தகவல்களையும் இவர் திரட்டி வைத்துக்கொண்டார். ஒருக்கால், அவர் அதை எழுதியிருந்தால் கார்க்கியைப் போலவே இவரும் சிறைச்சாலையைப் பற்றி, ஒரு நூலை எழுதியிருக்க முடியும். கட்டாயம் அந்த நூலின் பெயரும் ‘"நான் பயின்ற பல்கலைக் கழகம்'’என்று இருந்திருக்கும். 

Advertisment

மதுரை சிறைச்சாலை அனுபவங்களில், அவர் கூடுதலாக அறிந்துகொண்டது ராமநாதபுர மாவட்டத்தைப் பற்றி. தோழர் நல்லகண்ணுவிடம் இராமநாதபுர மாவட்டத் தைப் பற்றிய தகவல்கள் பலவற்றை என்னால் தெரிந்துகொள்ள முடிந் தது. ஒருமுறை அவரோடு சிறைச்சாலை அனுபவங் களை பேசிக் கொண்டி ருந்தபோது, ஒரு சொல் எனக்குக் கிடைத்தது. அவ்வாறான அந்தச் சொல்லை, அதற்குமுன்னர் நான் எங்குமே கேட்டதில்லை. அது நிலப் பிரபுத்துவம் உருவாக்கி வைத்திருந்த சொல். 

நிலவுடமைச் சமூகம், உழைப்புச் சுரண்டலுக் காக எத்தனையோ முறைகளை வளர்த்து வைத்திருந்தது. எண்ணிலடங்காத சுரண்டல் முறை. இதில் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு சுரண்டல் முறை இருந்தது. காவிரி வடிநிலத்தில் அமைந்த சுரண்டல் முறைக்கும், தாமிரபரணி வடிநிலத்தில் அமைந்த சுரண்டல் முறைக்கும் பெருத்த வேறுபாடு இருந்தது. சிறைச்சாலையில் இவற்றில் ஒன்றோடு மற்றொன்றைப் பொருத்திப் பார்க்கும் பரிசோத னையில் தோழர் நல்லகண்ணு ஈடுபட்டிருந்தார். இதை வாழ்நாள் புரிதலாகவும், வாழ்நாள் வழிகாட்டுதலாகவும் இவர் ஏற்றுக் கொண்டதை என்னால் உணர்ந்துகொள்ள முடிகிறது. 

நிலப்பிரபுத்துவ அடிமை முறையில், மிகவும் மோசமாக பாதிக்கப்படுபவள் பெண்தான். அதில் ஆண் ஆதிக்கத்தால் உயர்குடி பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் வேறு. அடித்தள பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் வேறு. இவை இரண்டையும் வெவ்வேறாகப் பிரித்துப் பார்க்க வேண்டும். அடித்தள உழைக்கும் பெண்களின் துயரத்தை யாராலும் அளந்து சொல்லி விட முடியாது. பாலியல் பலாத்காரத்தின் கொடிய கரங்களில் சிக்கி எத்தனையோ பெண்கள், தங்கள் வாழ்க்கையை இழந்திருக்கிறார்கள். இவையெல் லாம் இன்றுவரை ரகசியத் தகவல்களாகவே இருக்கின்றன. 

Advertisment

kaithi1

‘தொண்டிச்சி’ என்பதுதான் அந்த சொல். அதன் அர்த்ததை என்னால் ஆரம்பத்தில் புரிந்து கொள்ள முடியவில்லை. இதைப்பற்றி தோழர் நல்லகண்ணுவிடம் தெளிவான விளக்கம் எனக்கு கிடைத்தது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இனாம்தாரர்கள் இருந்தார்கள். பல்வேறு காரணங்களை முன் வைத்து மன்னர் காலத்தில், பெரும் எண்ணிக்கையிலான நிலம், இவர்களுக்கு தானமாக வழங்கப் பட்டிருந்தது. இவர்களுக்கு கூலித் தொழிலாளர்கள் கொத்தடிமைக ளாக இருந்தனர். எளிய மக்களின் வாழ்க்கைமுறை இனாம் பண்ணை களின் சட்டதிட்டத்திற்கு உட்பட்டு இருந்தது. அந்த அடிமை முறைகளில் ஒன்றுதான் ‘தொண்டிச்சி’ முறை. 

மூத்த கம்யூனிஸ்டு தலைவர், எம்.வி.சுந்தரம், தான் எழுதிய "விடுதலைப் போராளியின் வாழ்க்கை வரலாறு' என்னும்  நூலில் தொண் டிச்சி பற்றிய போராட்டக் குறிப்பு களை எழுதியுள்ளார். இவர்கள் பண்ணையார் வீட்டு வேலைகள் செய்யும் கொத்தடிமைகள் என்று அவர் கூறுகிறார். ஆண்டுக்கு மிகவும் குறைவான நெல் இவர்களுக்கு சம்பளமாக கொடுக்கப்படும். ஒரு பண்ணையில் இருந்து மற்றொரு இடத்திற்கு வேலைக்குச் செல்ல முடியாது. பண்ணைகளுக்குச் சொந்தமாக ஆடு, மாடுகள் இருப்பதைப் போல இவர்களும், பண்ணைக்கு சொந்நதமானவர்கள் என்று நடைமுறைச் சிந்தனைகள் தான் இனாம்தாரர்களிடம் இருந்தது. இந்த அடிமை முறையில் பாலியல் வன்கொடுமை எல்லை கடந்தது. இதில் தினவெடுத்த பண்ணை குரூரர்கள், நிகழ்த்திய வன்கொடுமைகள் மனித நாகரிகத் திற்கு முற்றிலும் விரோதமானவை. 

இதைத் தவிர, இராமநாதபுர மாவட்ட தோழர்கள் கணிசமான எண்ணிக்கையில் மதுரை சிறையில் இருந்தனர். அவர்களை பற்றிய பல்வேறு கதைகள் நமக்கு கிடைத் துள்ளன. அத்தனை கதைகளும் தோழர் நல்லகண்ணுவிடம் பத்திர மாக இருந்தன. அதில் மதுரை சிறைச்சாலையில் அடித்தே கொல்லப்பட்ட தோழரின் ஒரு கதையும் இருந்தது. அவர்தான் நாச்சியாபுரம் ராமநாதன். இவருடைய பெயரில்தான் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் சிவகங்கை மாவட்டத்தின் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. 

இதையொட்டி இலங்கை வெலிக்கடை சிறைச்சாலையில், நடந்த படுகொலை ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது. 1983ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இது நிகழ்ந்ததால், இது கறுப்பு ஜூலை என்று அழைக்கப்படுகிறது. அதில் மொத்தம் 53 தமிழ் அரசியல் கைதிகள், சக சிங்களக் கைதிகளால் குத்தியும், வெட்டி யும் படுகொலை செய்யப்பட்டனர். கொழும்பின் அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் இந்தப் படுகொலைகள் நிகழ்ந்தன.  

படுகொலை இரண்டு வெவ்வேறு நாட்களில் நடை பெற்றது.. முதலாவது படுகொலை ஜூலை 25, 1983ல்  நடந்தது. 35 தமிழ்க் கைதிகள் கொல்லப்பட்டனர். இரண்டாவது நிகழ்வு இரண்டு நாட்களின் பின்னர்,  ஜூலை 28ஆம் தேதி நடை பெற்றது. 18 பேர் கொல்லப்பட்டனர். இதில் தப்பிப் பிழைத்தவர்களின் வாக்குமூலத்தின்படி சிறைச்சாலை அதிகாரிகளே சம்பந்தப்பட்ட தமிழ் தலைவர்கள் இருந்த சிறை அறையின் சாவியையும், ஆயுதங்களையும் கொடுத்து கொலை செய்யச் சொன்னதாகக் கூறினார்கள். முக்கிய தலைவர்கள் குட்டிமணி, தங்கதுரை, ஜெகன் ஆகியோரும் இதில் கொல்லப்பட்டனர். இதைப்போல மதுரை சிறையில் நல்லகண்ணு காலத்தில் நடந்த ஒன்றை நாம் அறிந்திருக்கவில்லை;

இதில் பங்கேற்றவர்களில் மறக்கமுடியாத ஒருவரின் பெயர்தான்  நாச்சியாபுரம் ராமநாதன். இவரது வீரதீர செயல்கள் சிறைச்சாலை முழுவதும் பரவியிருந்தது. இவர் நீதிமன்ற விசாரணைக்கு அழைத்துச் செல்லும் சூழலில் அங்கிருந்து தப்பிச்சென்று மீண்டும் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைக்கு வந்துசேர்ந்தவர். இத்தகையவர்கள் மீது சிறைச்சாலை நிர்வாகம் ஒரு கண் வைத்திருக்கும். 

இதைத்தவிர, நாச்சியாபுரம் ராமநாதன், கட்சித் தோழர்களுக்கு அல்லது இதர கைதிகளுக்கு ஏதாவது ஒரு அநீதி நிகழுமானால் உடன் களமிறங்கிவிடும் இயல்பைக் கொண்டவர். இதனால் சிறை நிர்வாகம் இவருக்கு பாடம் கற்பிக்க ஒரு தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தது. ஆனால் அவ்வாறான தருணம் அமையவில்லை என்பதால் அதற்கேற்றவாறு தனித் திட்டம் ஒன்றை தீட்டியிருந்தது.  தீவிரமான மோதல் ஒன்றை சிறைச்சாலையில் உருவாக்கும் சதி அது. இதற்கான உத்தரவுகளை சிறை நிர்வாகம் முன்னரே கன்விக்ட் வார்டர்களுக்கு வழங்கியிருந்தது. 

கலவரம் தொடங்கி ஒருநாளில், கன்விக்ட் வார்டர்கள் தோழர் ராமநாதனின் தலை எங்கே இருக்கிறது என்று தேடத்தொடங்கினார்கள். சிறையிலிருந்த கட்சித் தோழர்கள் இதை அறிந்திருக்கவில்லை; ஒரு கைகலப்பு ஏற்படுகிறது. ராமநாதனின் அலறல் சத்தம் கேட்கிறது. அதையொட்டி அவரது மரணமும் நிகழ்ந்துவிடுகிறது. சிறைச்சாலையில் நடந்த மிகவும் கோரமான கொலை அது. 

(தொடரும்)