தி.மு.க.வின் வடக்கு மண்டத்திலுள்ள 29 கழக மாவட்டங்களின் 91 சட்ட மன்றத் தொகுதிகளிலிருந்து இளைஞரணி நிர்வாகிகள் 1,30,329 பேர் கலந்துகொண்ட பிரமாண்ட சந்திப்பு நிகழ்ச்சி, டிசம்பர் 14, ஞாயிறன்று, திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட வாணியந்தாங்கல் கிராமத்தில், அமைச்சர் எ.வ.வேலு தரப்புக்கு சொந்தமான 136 ஏக்கர் பரப்பளவுள்ள இடத்தில் நடந்தது. பிரமாண்ட மான இந்நிகழ்ச்சி ஏற்பாடுகள், எதிர்க்கட்சிகளின் பார்வையை திருப்பியுள்ளது.
இதுகுறித்து இளைஞரணி மாநில நிர்வாகி களிடம் பேசியபோது, "1980-ல் தொடங்கப்பட்ட இளைஞரணியின் முதல் செயலாளராக முதலமைச் சர் மு.க.ஸ்டாலினும், அதன்பின் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதனும் இருந்தனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உதயநிதி செயலாள ரானார். இளைஞரணியை வலிமையாக்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கினார். கட்சியின் சார்பு அணிகளில் மாவட்டம், மாநகரம், நகரம், ஒன்றிய அளவில் தான் பதவிகள் இருக்கும். இவர் வந்தபின்பு, வார்டு வாரியாக இளைஞரணி கிளைகள் உருவாக்கப்பட்டு, பொறுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. அப்படி வடக்கு மண்டலத்தில் புதிதாக பொறுப்புக்கு வந்துள்ள இளைஞரணியினரை சந்திக்கும் நிகழ்ச்சி தான் இந்த வடக்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம். இந்தக் கூட்டத்தை நான் நடத்துகிறேன் எனச்சொல்லி திருவண்ணாமலை யில் நடத்த முன்வந்தார் அமைச்சர் எ.வ.வேலு. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆய்வுசெய்ய வந்திருந்த உதயநிதி, இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் நிர்வாகிகளின் எண்ணிக்கை 1.5 லட்சத்தை தாண்டும். அதற்கு தகுந்தாற்போல் சாலை வசதி, பாதுகாப்பு வசதி, மருத்துவ வசதி, உணவு வசதி இருக்கவேண்டுமென்று சொல்லியிருந்தார். அதன்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டு பிரமாண்ட மான இக்கூட்டம் வெற்றி பெற்றுள்ளது'' என்றார்கள்.
டிசம்பர் 14ஆம் தேதி, கூட்டத்துக்கு வந்தவர்களுக்கு பிரியாணி பார்சல் தவிர, தண்ணீர் பாட்டில், பர்பி, முந்திரி பருப்பு, குளுக்கோஸ், நோட் எனப் பத்து பொருட்கள் அடங்கிய கிட் தரப்பட்டது. கூட்டம் நடந்த இடத்தில் இளைஞரணியின் 45 ஆண்டுகால வரலாற்றை விளக்கும் புகைப்படக் கண்காட்சி மற்றும் தி.மு.க.வின் வரலாற்றை ஒலி -ஒளி படமாக ஒளிபரப்பி, இளைஞரணியினரை உற்சாகப்படுத்தினர். மாலை 5.30 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சியில் வரவேற்புரையாற்றிய அமைச்சர் எ.வ.வேலு, ஐந்தாம் தலைமுறை திராவிடத் தலைவர் இளம்பெரியார் என உதயநிதிக்கு பட்டம் வழங்கிப் பாராட்டினார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/15/uday1-2025-12-15-16-12-02.jpg)
இளைஞரணிச் செயலாளரும், துணைமுதல்வருமான உதயநிதி பேசும்போது, "இளைஞர்கள் கூடினால் அவர்களை கட்டுப்படுத்தமுடியாது எனச் சொல்வார்கள். நம் கழக இளைஞர்கள் கட்டுப்பாடானவர்கள் என்பதை இங்கே நாம் காட்டிக் கொண்டுள்ளோம். குஜராத்தில் ஒரு கூட்டத்தில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா, தமிழ்நாடுதான் அடுத்து எங்கள் இலக்கு எனச்சொல்லியுள்ளார். உங்கள் மிரட்டலை இளைஞரணி படை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறது. டெல்லி என்கிற யானையை அடக்கும் அங்குசமாக நம் தலைவர் (ஸ்டாலின்) இருக்கிறார். பா.ஜ.க., சி.பி.ஐ., ஈ.டி., தேர்தல் ஆணையம், வருமானவரித் துறையை சேர்த்துக்கொண்டு தமிழ் நாட்டில் நுழையப்பார்க்கிறார்கள், நாம் மக்களை நம்பி களத்துக்கு வந்துள் ளோம். காரில் இன்ஜின் இல்லாத கட்சியான அ.தி.மு.க.வோடு நம்மை எதிர்க்க வருகிறார்கள். தலைவருக்கு ஒரு கோரிக்கை, வரும் சட்டமன்றத் தேர்தலில் இளைஞர்களுக்கு அதிகளவில் வாய்ப்பு வழங்கவேண்டும்'' என்றவர், "வானத்தில் வானவில் தோன்றினால் மக்கள் அதைப்போய் வேடிக்கை பார்ப்பார்கள், அது நிரந்தரம் கிடையாது, எப்போதும் உதயசூரியன் மட்டுமே நிரந்தரம்'' என மறைமுகமாக நடிகர் விஜய்யை அட்டாக் செய்தார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/15/uday2-2025-12-15-16-12-17.jpg)
அதன்பின் சிறப்புரையாற்றிய தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின், "இந்த நிகழ்ச்சியைப் பார்க் கும்போது நாங்கள் இளைஞரணியைத் தொடங்கி 50 ஆண்டு காலம் தமிழ்நாட்டை வலம்வந்தது, இரவு பகல் பாராமல் கிராமங்களில் கொடியேற்றியது, நாடகம் நடத்தியதெல்லாம் எனக்கு நினைவுக்கு வருகிறது. இளைஞரணி செயலாளர் உதயநிதியின் செயல்பாடுகளைப் பார்த்து, நமது கொள்கை எதிரிகள், மோஸ்ட் டேஞ்சரஸ் உதயநிதி எனப் புலம்புகிறார்கள். தமிழ்நாட்டை மட்டுமல்ல, இந்தியாவையே காக்கும் பொறுப்பு நமக்கிருக்கிறது. பா.ஜ.க.வால் தமிழ்நாட்டை மட்டும்தான் வெற்றி கொள்ளமுடியவில்லை. பீகாருக்கு அடுத்து தமிழ்நாடுதான் என ஒன்றிய அமைச்சர் அமித்ஷா சொல்லியுள்ளார். அமித்ஷா அவர்களே, உங்கள் சங்கி படைகள் திரண்டுவந்தாலும் தமிழ்நாட்டை ஒன்றும் செய்ய முடியாது, தமிழ்நாடு கேரக்டரையே புரிஞ்சிக்கலயே! அன்போட வந்தால் அரவணைப்போம், ஆணவத்தோடு வந்தால் அடிபணியமாட்டோம்! இளைஞரணியில் நீங்கள் வரலாறு படைக்க வேண்டுமென்று பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இதுதான் உங்களுக்கான டாஸ்க். கடினமாக உழைத்தால் மட்டுமே கட்சியில், மக்களிடத்தில் நிரந்தர இடம் கிடைக்கும்'' என்றார்.
இந்தக் கூட்டம் தி.மு.க. இளைஞரணியினருக்கு கூடுதல் உற்சாகத்தை அளித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)
/nakkheeran/media/media_files/2025/12/15/uday-2025-12-15-16-11-24.jpg)