மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்
நீங்கள் ஒன்றிய அரசு என அழைத்தால் நாங்கள் தி.மு.க. அரசை மனநலம் குன்றிய அரசு என அழைப்போம் என்கிறாரே எச்.ராஜா ?
எச்.ராஜா மீதான ஒரு வழக்கு விசாரணையின்போது, அவருக்கு மன நல பரிசோதனை செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டதாக செய்தி வெளியானது நினைவுக்கு வருகிறது.
பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர் -தேனி
உள்ளாட்சி தேர்தலில் கோவையில் தி.மு.க.விற்கு ஆதரவாக பிரசாரம் செய்த ருமேனியாவை சேர்ந்த ஸ்டெஃபான் என்பவருக்கு, அந்நாட்டு எம்பசி நோட்டீஸ் அனுப்பி உள்ளது பற்றி?
சுற்றுலா விசாவில் இந்தியாவுக்கு வந்தால் சுற்றி மட்டும்தான் பார்க்க வேண்டும். அந்த நாட்டின் அரசியல் சட்டம் சார்ந்த பணிகளில் வேற்றுநாட்டு குடிமகன் ஈடுபடக்கூடாது. அதனால்தான் தி.மு.க.வுக்கு வாக்கு கேட்ட ருமேனியரான ஸ்டெஃபானுக்கு தூதரகம் விளக்க நோட்டீஸ் அனுப்பி விசாரித்தது. இது நடைமுறைதான். எல்லாரும் பின்பற்றுவார்கள். அதுவும் குறிப்பாக, உயர் பொறுப்பில் இருப்பவர்கள் கட்டாயமாகக் கடைப்பிடிப்பார்கள். இதில் வித்தியாசமானவர் பிரதமர் நரேந்திர மோடி. இந்தியப் பிரதமராக அமெரிக்காவுக்குப் பயணம் செய்து, அந்த நாட்டுத் தேர்தல் சூழலில், டிரம்புக்குப் பிரச்சாரம் செய்துவிட்டுத் திரும்பி னார். நாகரிகமும கண்ணியமும் கொண்ட தலைவர்கள் அடுத்த நாட்டின் உள்அரசியலில் தலை யிட மாட்டார்கள். மோடி பிரச்சாரம் செய்த டிரம்ப் தோற்றுப் போனார். ஸ்டெஃபான் பிரச்சாரம் செய்த அ.தி.மு.க.வின் கோட்டையான கோவையில் கால் நூற்றாண்டுக்குப் பிறகு தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது.
கல்லுக்குட்டை ஆனந்தன், பெருங்குடி
எனக்குத் தெரிந்த எத்தனையோ பிராமண நண்பர்கள் மாமிசம் சாப்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் ஆசைப்பட்டு மாமிசம் சாப்பிட்டதில் என்ன தவறு?
ஒருவர் என்ன உணவு சாப்பிட வேண்டும் என்பது அவரவர் உரிமையும் விருப்பமுமாகும். ஜெயலலிதா மாமிசம் சாப்பிட்டதும் அவர் விருப்பம்தான். அது பற்றி அவரே தன் அமைச்சர்களிடம் பெருமை யாகச் சொன்னதை வெளியிட்டதற்காக, அவருடைய தூண்டுதல் பெயரில் அவரது கட்சியினர் நக்கீரன் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தினர். தமிழ்நாடு முழுவதும் வழக்குப் போட்டனர். நக்கீரன் சொன்னதில் என்ன மேடம் தவறு என்று ஜெயலலிதாவை நோக்கி அப்போது கேட்பதற்கு யாரும் இல்லை. இப்போது ஜெயலலிதாவே இல்லை. அவர் ஏன் இல்லாமல் போனார் எனத் தொடர்ந்து நியாயம் கேட்பதும் நக்கீரன்தான்.
நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி
பீகார் அரசு கோவில் நிலங்களின் உரிமையை கடவுள் பெயரால் பதிவு செய்ய உத்திரவிட்டுள்ளதே?
இந்து மதம் சார்ந்த சட்டவிதிகளின்படி, கோவில் சொத்துகளில் கடவுளுக்கும் உரிமை உண்டு. இந்து அறநிலையச் சட்டத்தை உருவாக்கிய தமிழ்நாட்டில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, பத்தூர் நடராஜர் உள்பட பல கடவுளர் பெயரில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. வாதியாக இருந்துள்ளனர். பாரம்பரிய மீனவர்கள் வாழும் பகுதிகளில் தனிப்பட்ட சொத்து என்பது நடைமுறையில் குறைவு. நிலத்தை ஊரில் உள்ள சாமி பெயரில் எழுதிவைக்கும் வழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. தமிழ்நாடு முன்னோடி. பீகார் பின்னாடியே வருகிறது.
கே.ஆர்.ஜி.ஸ்ரீராமன், பெங்களூரு-77
சென்னை மாநகரத்தில் வாக்குப் பதிவு குறைந்து வருவது ஏன்?
இது புதுசா? நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் என எல்லாத் தேர்தல்களிலும் அப்படித் தான். வாக்காளர் பட்டியல் குளறுபடி தொடங்கி... வாக்காளரின் ஆர்வ மின்மை வரை பல காரணங்கள் இதில் அடக்கம்.
தே.மாதவராஜ், கோயமுத்தூர்-45
மத்திய அரசுப் பணியில் தமிழர்கள் புறக்கணிக்கப் படுகிறார்களே?
தமிழ்நாட்டையே தொடர்ந்து புறக்கணிக்கிறதே ஒன்றிய அரசு.
வாசுதேவன், பெங்களூரு
ஒரு காலத்தில் கூடு விட்டு கூடு பாயும் கலை இருந்ததாமே... தற்பொழுது?
அதற்குத்தான் தேர்தல் களம் என ஒன்று இருக்கிறதே, இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்குமாகப் பாய்வதற்கு.
ஜோதிடான் சஞ்சு கிருஷ்ணா, ராயப்பேட்டை
புத்தகக் கண்காட்சியால் இளம் வாசகர்கள் எண்ணிக்கை பெருகுமா?
முயற்சி திருவினை யாக்கும்.