த்திய-மாநில அரசுகளின் மக்கள்விரோதக் கொள்கைகளைத் தொடர்ந்து விமர்சித்து வருபவர் "மே 17' இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி. அதற்காகவே, காலனியாதிக்க காலத்து சட்டங்களின்கீழ் கைது செய்யப்பட்டு, தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டார். பல்வேறு இன்னல்களுக்குப் பின் சிறைமீண்ட அவரைச் சந்தித்தோம்...

உங்களை கைது செய்த பெங்களூரு விமானநிலையத்தில் என்ன நடந்தது?

ஐரோப்பாவில் ஐ.நா. மன்றத்தில் பேசிவிட்டு திரும்பியபோது குடிவரவுத்துறை அதிகாரிகள்தான் என்னைத் தடுத்து நிறுத்தி, கர்நாடக காவல்துறையிடம் ஒப்படைத்தார்கள். இரு தரப்புக்குமே என்மீதான வழக்கு விவரம் தெரியவில்லை. 124-ஏ பிரிவு பதியப்பட்டிருப்பதாக தமிழகத்தில் பரவிய செய்தி அவர்களுக்கும் தெரியவர, என்னைத் தீவிரவாதி என்று நினைத்துவிட்டனர். பின்னர் வந்த தமிழக காவல்துறையினர் லோக்கல் மாஜிஸ்திரேட்டிடம் கூட்டிச்சென்றனர். ஆனால், நாங்கள் இருவருமே சந்தித்துக் கொள்ளவில்லை. மருத்துவமனைக்குக் கூட்டிச்சென்றாலும் ஆவணங்களை முன்கூட்டியே தயார் செய்து வைத்திருந்தனர். எதுவுமே முறைப்படி நடக்கவில்லை.

ஐ.நா. மன்றத்தில் பேசியதற்காக ஒருவரைக் கைதுசெய்ய முடியுமா?

Advertisment

thirumurugangandhiஎழும்பூர் நீதிமன்ற நீதிபதியும் இதையே காவல்துறையினரிடம் கேட்டார். "ஐ.நா.வில் பேசிய வீடியோக்களை தமிழகத்தில் ஒளிபரப்பியதுதான் இங்கு கலவரம் ஏற்படக் காரணம்' என்றார்கள். "ஐ.நா.வின் இணையதளத்தில் உள்ள வெப் கேஸ்டிங்கைத்தான் நாங்கள் பகிர்ந்தோம் எனில், நீங்கள் ஐ.நா. மீதுதான் வழக்குப்பதிய வேண்டும்' என்று சொன்னபோதுதான் இதிலுள்ள அபத்தமே அவர்களுக்குப் புரிந்தது. ஐ.நா.வில் பேசியதற்காக தேசத்துரோக வழக்கு பதியப்படுவது இதுதான் முதல்முறை.

53 நாட்கள் தனிமைச் சிறை, அலைக்கழிப்பு, உணவில் மருந்து என வெளியான தகவல்களைப் பற்றிச் சொல்லுங்கள்...…

முதலில் புழல் சிறைக்கு கொண்டுசென்றவர்கள் காலை 4 மணிக்கு சிறையில் அடைத்துவிட்டு, 10 மணிக்கு வேலூர் சிறைக்கு கூட்டிச் சென்றார்கள். என் வழக்கறிஞர் உள்ளிட்ட யாரையும் சந்திக்க அனுமதிக்கவில்லை. வேலூர் சிறையில் மற்ற சிறைவாசிகள் இருக்கும் வளாகம் தவிர்த்து, நீண்டகாலமாக பயன்படுத்தப்படாத தனிச்சிறைத் தொகுப்பில் அடைத்தார்கள். சர்வசாதாரணமாக பாம்புகள் உலவக்கூடிய பகுதி. எந்தவொரு தேவைக்காகவும் அங்கிருந்து வெளியில் செல்ல முடியாது. மற்ற சிறைக்கைதிகளைப்போல் அல்லாமல், எனக்கு மட்டும் தனியாக உணவு வழங்கப்பட்டது. அதை எடுத்துக்கொண்ட நாளில் தொடங்கிய வயிற்றுப்போக்கு விடுதலையான தினம்வரை நிற்கவில்லை. நீதிமன்றம் இதுதொடர்பாக பலமுறை கவனிக்கச் சொல்லியும், சிறை நிர்வாகம் முழுவதுமாக நிராகரித்தது. செப் 21-ல் பலவீனமடைந்து மயக்கமடைந்த பிறகும்கூட முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை. இந்த செய்தி சிறைக்கைதிகளுக்கு தெரியவந்து, அது வெளியில் பரவிய பிறகுதான் சிறை நிர்வாகம் நெருக்கடிக்குள்ளானது. அப்போதுகூட என்னை வெளிமருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்க்க அனுமதிக்கவில்லை.

Advertisment

சென்ற ஆண்டு குண்டாஸ், இப்போது உபா, தேசத்துரோக வழக்கு என தொடர்ச்சியான அடக்குமுறைகளுக்கான காரணம் என்ன?

ஆகச்சிறந்த ஆட்சியைக் கொடுப்பதாகக் கூறும் பா.ஜ.க.வின் பொய் பிம்பத்தை தொடர்ச்சியாக அம்பலப்படுத்துகிறோம். குறிப்பாக ரேஷன்கடைகளை மூடுவது, தானியக் கொள்முதலை நிறுத்துவது போன்ற உலக வர்த்தக மையத்துடனான ஒப்பந்தம் குறித்து முழு விவரங்களை வெளியிட்டோம். இந்திய இறையாண்மைக்கு எதிரான அவர்களது கொள்கைகளுக்கு நாங்கள் இடையூறாக இருக்கிறோம். அதனால், தங்கள் கட்டுப்பாட்டில் இயங்கும் தமிழக ஆட்சியாளர்களின் மூலமாக அடக்குமுறையை கட்டவிழ்க்கிறார்கள். தேசப் பாதுகாப்புச் சட்டம், உபா, குண்டாஸ் போன்ற கறுப்புச் சட்டங்களின் தீவிரத்தன்மையை ஐ.நா.வில் பேசிவிட்டு வந்தேன். அதே பிரிவுகளின்கீழ் கைது செய்கிறார்கள் என்றால், எவ்வளவு மோசமான வன்மத்தில் இருக்கிறார்கள் என்பது புரியும். பா.ஜ.க. ஆட்சியில் இருக்கும்வரை இது தொடரும்.

தமிழகத்தில் அவ்வளவு செல்வாக்கு இல்லாத ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்து அமைப்புகளையும் தொடர்ந்து விமர்சிக்கிறீர்களே?

ஆர்.எஸ்.எஸ். மிகஆழமாக தமிழகத்தில் காலூன்றியிருக்கிறது. அதுவொரு தலைமறைவு இயக்கம். மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்தும் வேலையைத்தான் ஆர்.எஸ்.எஸ். வரலாறு நெடுகிலும் செய்துவந்திருக்கிறது. இதன் கிளை அமைப்புகள்தான் முற்போக்காளர்களின் கொலைப் பின்னணியில் இருக்கின்றன. ஒருவேளை ஆர்.எஸ்.எஸ்.ஸின் பின்னால் தமிழகம் சென்றால் இன்னொரு பீகாராக மாறும்.

என்ன குற்றம் செய்தாலும் எச்.ராஜா, எஸ்.வீ.சேகர் போன்றோர் கைது செய்யப்படுவதில்லையே?

சூத்திரர்களுக்கு கல்வி, நீதி, செல்வம் என்ற எல்லாவற்றையும் மனுதர்மம் மறுத்ததையே இப்போது நடைமுறைப்படுத்துகிறார்கள். அதனால்தான், விஜய்மல்லையாவுக்கும், மாணவி வளர்மதிக்கும் வெவ்வேறு சிறை வழங்கப்படுகிறது. ஒட்டுமொத்த சிஸ்டமுமே சராசரி மக்களுக்கு எதிரானதாகத்தானே இருக்கிறது.

திருமுருகன் காந்திக்கு வெளிநாட்டிலிருந்து நிதி வருவதாக குற்றம்சாட்டுகிறார்களே?

பா.ஜ.க.வினர்தான் இந்தக் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். ‘"ஜோசப் விஜய்' (நடிகர் விஜய்)’வாக்காளர் அட்டை போன்ற எந்த ஆவணத்தையும் திரட்டும் அளவுக்கான உளவுத்துறையை கைவசம் வைத்திருக்கும் அவர்கள், என்னைப் பற்றிய தகவலையும் ஆதாரமாக நிரூபிக்கவேண்டும். வேதாந்தாவிடம் நிதிவாங்கிக் கொண்டு தூத்துக்குடியில் மக்களைச் சுட்டுக் கொன்றவர்கள் இவர்கள்தானே. கவுன்சிலராகக்கூட இல்லாத இவர்களால் எப்படி காலி சேர்களை வைத்து மாபெரும் மாநாட்டை நடத்த முடிகிறது என்பதையும் சொல்லவேண்டும்.

சந்திப்பு: -சி.ஜீவாபாரதி

தொகுப்பு: -ச.ப.மதிவாணன்

படங்கள்: வினோத்