Advertisment

பல உயிர்களைப் பறித்த புனித நீராடல்! மகாமக கோர சம்பத்தின் பின்னணி..

kumbakonam mahamaham 1992 incident

1992 ஆம் ஆண்டு கும்பகோணம் மகாமக பெருவிழாவில் நடந்த கோர சம்பவத்தை யாரும் மறந்திருக்க முடியாது. மகாமக குளத்தில் ஜெயலலிதாவும், சசிகலாவும் குளிக்கச் சென்றதால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பல நூறு ஆண்டுகளாக எந்த விபத்துமின்றி நடந்துவந்த மகாமகப் பெருவிழா ஜெயலலிதாவின் சுயநலம் மற்றும் அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் தமிழகத்துக்குத் துக்க தினமாக மாறியது. பலரின் உயிரைக் காவு வாங்கிய ‘ஜெ’ மற்றும் சசியின் மகாமக குளியல் குறித்தும், மகாமக விழா ஏற்பாடுகளில் நடைபெற்ற பல்வேறு குளறுபடிகள் குறித்தும் 1992 பிப்ரவரி 22 மற்றும் 29 தேதிகளில் பிரசுரமான நக்கீரன் கட்டுரைகள் வெளிச்சம்போட்டுக் காட்டின.

Advertisment

kumbakonam mahamaham 1992 incident

குடந்தைக்கு குளிக்க வரும் ஜெயலலிதா!

இந்திய அளவில் மக்களால் போற்றப்படும் மகாமக விழா ஜெ ஆட்சியில் மிகவும் விசித்திரமாக ஏற்பாடு ஆகி வருகிறது. அரைகுறையாக சாலைகளை செப்பனிட்டும் ஆக்கிரமிப்புகளை இடித்ததும் மட்டுமே நடந்துள்ளது. பல கோடி ரூபாய் அபேஸ் செய்யப்பட்டுள்ளது. கழிவறைகள் கட்டப்பட்டு மோட்டார் கனெக்சன் கொடுக்கப்படாமலேயே நகராட்சியில் காண்ட்ராக்டர்கள் சிலருக்கு பில் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. நகரில் உள்ள லாட்ஜ் உரிமையாளர்களை ரெவின்யூ அதிகாரிகள் மிரட்டி ஒரு மாதம் முன்பே ரூம்களை தங்கள் பெயருக்கு புக் செய்து கொண்டு விட்டனர். இதனால் பொதுமக்கள் தங்க எங்கும் இடம் காலிஇல்லை. லாட்ஜ் உரிமையாளர்கள் வயிறு எரிந்து கொண்டிருக்கிறார்கள்.

Advertisment

இங்குள்ள சாரங்கபாணி கோவிலுக்கு ஜெ தன் பராமரிப்பு நிதியில் இருந்து கணிசமாக நிதி ஒதுக்கிக் கொடுத்தார். அனைத்தும் அபேஸ் செய்யப்பட்டு கோவில் வேலைகள் அரைகுறையாக நிற்கிறது. ஆளும்கட்சி காண்ட்ராக்டர்களைத் தட்டிக் கேட்ட சாரங்கபாணி கோவில் இ.ஓ.பன்னீர் செல்வத்துக்கு டிரான்ஸ்பர் ஆர்டர் தயாராகிறது. ரோடு போடுவதில் நடந்துள்ள ஊழல்களில் மட்டும் நகராட்சி அதிகாரி களுக்கும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கும் பல லட்சம் அன்பளிப்பு கிடைத்துள்ளது. பொருட்காட்சி அரசு சார்பில் திடீரென முடிவெடுக்கப்பட்டு தொடங்கப்பட்டது. இதில் கடைகளை நடத்த அனுமதிப்பதில் பயங்கரமான ஊழல் கும்பகோணம் நகரையே நாறடிக்கிறது. கணிசமான கவனிப்பால் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது. இதனால் பாட்டாளி மக்கள் கட்சி பெருமாள் என்பவர் கலெக்டர் உட்பட அனைவரின் மீதும் வழக்கு போட உள்ளார். இவருடைய கட்டிடத்தை இடிக்காமல் இருக்க பெரும் தொகை பேரம் பேசப்பட்டு பேரம் படியாமல் போகவே இடித்துத் தள்ளப்பட்டது.

ஒரு வாரம் மட்டுமே விழாவுக்கு உள்ள நிலையில் இதுவரை உருப்படியான காரியங்கள் எதுவும் நடந்து முடியவில்லை. மகாமக குளம் தூர் எடுக்கும் பணி கூட மிகவும் தாமதமாகவே நடந்து முடிந்துள்ளது.

‘ஜெ’ வருவதாகவும் ஒரு பிரபோஷன் உள்ளது. அதற்காக குளத்தில் ‘ஜெ’ குளிக்க பாதுகாப்பு ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் நாம் எங்கே குளிக்கப் போகிறோம். அந்த அம்மா வந்தா குளத்தையே கேட் போட்டு மூடிடுவாங்களே! என புலம்ப ஆரம்பித்து விட்டனர். மணிசங்கர்அய்யர் நரசிம்மராவையும் அழைத்து வருவேன் என்று சொல்லி விட்டுப் போயுள்ளார். இவ்வளவு கேலிக் கூத்துக்களுக்கு மத்தியில் மகாமகம் நாற்பது லட்சம் மக்களையும் எப்படி திருப்திப்படுத்தப் போகிறதோ?

ஜெயலலிதாவின் புனித நீராடல். உயிர்ப்பலியான பக்தர்கள்.

கடந்த இதழில் நாம் சொல்லிய படியே மகாமக விழாவுக்கு ஜெயலலிதா வந்தார். ஜெ புனித நீராடுவதற்காக கும்பகோணம் வந்தாலும் வந்தார். அதனால் பல லட்சம் பக்தர்கள் படாதபாடுபட்டு விட்டனர். ஜெ மகாமகத்துக்கு வருவதா வேண்டாமா! என போயஸ் தோட்டத்தில் கடுமையான ‘டிஸ்கஸ்’ நடந்ததாம். பெங்களூர் ஜோசியர் வெங்கட்ராமன் என்பவர்தான் சென்னை நியூ உட்லண்ட்ஸ் ஓட்டலில் ஒரு வாரம் தங்கியிருந்து, ‘ஜெ’ அவசியம் குளத்தில் குளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அப்போதுதான் எதிர்ப்புகள் முற்றிலுமாக ஒழியும் என்றும் வற்புறுத்தினாராம்.

‘‘இங்குள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தில் கொடிமரம் சாய்ந்து விட்டது இது அபசகுணம் என்றும் ‘ஜெ’ வர வேண்டாம்’’ என்றும் அறிவுறுத்தப்பட்டது. எல்லாவற்றையும் மீறி ஜெ கும்பகோணம் வந்தார். ‘ஜெ’ வருகைக்கு பத்து நாட்களுக்கு முன்னமே பன்னிரெண்டாயிரம் போலீசார் குவிக்கப்பட்டனர். அனைத்து பள்ளிக்கூடங்களும் காவல் நிலையங்களாக மாற்றப்பட்டன.போலீசாருக்கு கையில் பணம் கொடுக்கப்படாமல் அந்தந்த பள்ளிக் கூடங்களில் ‘மெஸ்’ ஏற்பாடு செய்து அந்த மெஸ் காண்ட்ராக்டை ஆளும் கட்சிப் பிரமுகர்களும் மகாமக இன்சார்ஜ் இன்ஸ்பெக்டர் பில்லா பாலசுப்பிரமணியனின் பினாமிகள் யூனியன் குமார் போன்றவர்களுக்கு கொடுக்கப்பட்டது. உணவு தரமின்றி போடப்பட்டதால் காவல் துறையினருக்கும் காண்ட்ராக்டர் களுக்கும் பயங்கர மோதல். இதில் நியாயம் கேட்ட தஞ்சை கிழக்கு போலீஸ் கோவிந்தராஜ் என்பவருக்கு அடி உதையும் அ.தி.மு.க. கரை வேட்டிகளால்கொடுக்கப்பட்டுள்ளது. யூனியன் குமார் கொடுத்த புகாரின் பேரில் கோவிந்தராஜ் சஸ்பெண்ட் ஆனார்.

வசந்தா ராமமூர்த்தி என்கிற பெண் டாக்டர் தோட்டத்தில் மிகப் பெரிய சாமியானா பந்தல் போடப்பட்டு அங்கு உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு மட்டும் பிரியாணி, சிக்கன் 65 போன்ற அயிட்டங்கள் பரிமாறப்பட்டன. நகர போலீஸ் அனைவரும் போலீஸ் அதிகாரிகளுக்கு எடு பிடி வேலை செய்யப் பணிக்கப்பட்டு பயன்படுத்தப் பட்டனர். இப்படியாக காவல்துறை லோல் படுத்தப்பட்டதால் அந்தக் கடுப்பை அவர்கள் தெருவில் நடமாடும் பக்தர்கள்மீது காட்டினர். ஆடுமாடுகளை அடிப்பது போல் பக்தர்களுக்கு சரமாரியாக அடி உதைகள் விழுந்தன.

விழாவுக்கு ஒரு வாரம் முன்னதாகவே வடநாட்டில் இருந்து கொண்டு வந்த லட்சக்கணக்கான பணத்தைக் கொண்டு விஷ்வ ஹிந்து பரிஷத்காரர்கள் கலக்கினர். ‘ஜெ’ வருகிறார் என மகாமக குளக்கரை விடுதியில் தங்கியிருந்த விஷ்வ ஹிந்து அமைப்பினரை காவல்துறை அப்புறப்படுத்த முயன்றனர். இந்த விவகாரம் பெரிதாகி பெரிய மோதல் உண்டானது.கலெக்டர் தலையிட்டு சமாதானப்படுத்தினார்.

‘ஜெ’ விசிட் 13 ஆம் தேதிதான் கன்பார்ம் ஆகியது. அன்றில் இருந்தே மகாமக குளத்தை காவல்துறை தன்வசம் கைப்பற்றிக் கொண்டது. வெளியூர் மக்கள் குளக்கரையில் இறங்க முடியாமல் அடித்து விரட்டப்பட்டனர். வழக்கமாக மூன்று நாட்களுக்கு முன்பே பக்தர்கள் குளிக்க அனுமதிக்கப் படுவார்கள். ஆனால், ‘ஜெ’ குளிக்க இருந்தபகுதி உட்பட அனைத்து பகுதிகளையுமே காவல்துறை அதிகாரிகள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்தனர். இதனால் குளத்தில் இறங்க முடியாமலும் பொங்கல் படைக்க முடியாமலும் சாதாரண மக்கள் ஜெவை திட்டித் தீர்த்தார்கள். பெண்கள் கல்லூரி முதல்வர் அறை பல லட்சம் செலவில் ‘ஜெ’ வுக்காக அலங்கரிக்கப்பட்டது. நாகை மாவட்ட தொடக்க விழாவுக்கு ‘ஜெ’ வந்த போது பயன்படுத்திய அலங்காரப் பொருட்கள், கண்ணாடிகள், சோபாக்கள் மூன்று ஏ.சி.க்கள் இங்கும் பொதுப்பணித்துறையினரால் அவசர அவசரமாக அமைக்கப்பட்டது. ஹெலிகாப்டர் தளத்தில் இருந்து கார் செல்லும் ரோட்டுக்கு ஐயாயிரம் ரூபாய் பஞ்சாயத்தால் ஒதுக்கப்பட்டு அவசர ரோடு ஒன்றும் போடப்பட்டது. ராமனாதன் எம்.எல்.ஏ. மகாமக குளத்தைச் சுற்றி பெரிய பெரிய ‘ஜெ’ யின் கட் அவுட்டுகளை வைத்து கோவில் கோபுரங்களையே மறைத்து விட்டார்.

மகாமக விழாவை தேசியவிழாவாக ஆக்க வேண்டும் என விரும்பிய மணி சங்கர் அய்யர், ராஜேஷ் பைலட்டை டெல்லியிலிருந்து அழைத்து வந்தார். ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய அவரை வரவேற்க கலெக்டர் உட்பட உயர்அதிகாரிகள் யாரும் செல்லவில்லை. காரணம் அனைவரும் ‘ஜெ’ குளிக்க இருந்த குளத்தைச் சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்ததுதான். மாவட்டமந்திரி அழகு திருநாவுக்கரசு பின்னால் கலெக்டர் போகலாம், மத்திய மந்திரியை வரவேற்கப் போகக் கூடாதா? என்று காங்கிரஸார் குமுறினார்கள். இவ்வளவு கேலிக் கூத்துகளுக்கு மத்தியில் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் குடிசைகளை அகற்றி விட்டனர். இதனால் ஏழை மக்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். இதில் ஒரு பெண்ணின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டுள்ளார். ஏழை குடிசை மக்களைக் கண்டு கொள்ளாமல் அன்னதானம் ஒரு கேடா? சொந்த செலவில் சோறு போடுவதாகச் சொல்கிறாரே எங்கிருந்து வந்தது இத்தனை லட்சங்கள்? என ‘ஜெ’வைப் பார்த்து மக்கள் கதறுகின்றார்கள். மாற்றி மாற்றி சி.ஆர்.சி.விடுதியில் கூட்டம் போட்டு வெட்டிப் பேச்சு பேசியே அதிகாரிகள் பல லட்சம் பணத்தை விரயம் செய்தனர். அவர்களுக்குக் கீழே உள்ள ஊழியர்களைத் தூங்கவிடாமல் செய்ததால் நகராட்சி சுகாதார ஊழியர் ஷேக் தாவூத் என்பவர் மாரடைப்பால் காலமாகிப் போனார். தாவூதின் குடும்பம் அனாதையாக்கப்பட்டுள்ளது.

குளத்தைச் சுற்றி காவல்துறை தடுப்பு போட்டு நான்கு நாட்களாக வாக்கி டாக்கியுடனும் நாயுடனும் அலைந்தனர். இதைப் பார்த்த விஷ்வ ஹிந்து கூட்டம் பக்தர்கள் குளிக்க வேண்டாமா? அந்த அம்மா மட்டும்தான் பாவத்தைப்

போக்கிக்கனுமா? என கேள்வி கேட்டுவிட்டு, குளத்தில் குதித்து சத்தம் போட ஆரம்பிக்க இதனால் பொது மக்கள் மகிழ்ந்து போய் அவர்களும் குளத்தில் இறங்க ஆரம்பித்தனர். காவல்துறை கலெக்டரை அழைக்க கலெக்டர், ‘‘நடவடிக்கை எதுவும் வேண்டாம்.கண்டு கொள்ளாதீர்கள்.குளித்து விட்டுப்போகட்டும்’’என்று சொல்லி விட்டார். அதன்படி பதினேழாம் தேதி மதியம் முதல்தான் பக்தர்கள் குளத்தை நெருங்க ஆரம்பித்தனர்.

‘ஜெ’ குளிப்பதற்காக குளத்தில் இறங்குவதற்கு பல மணி நேரம் முன்பே யாரையும் குளத்தருகில் நெருங்க விடவில்லை போலீசார். மகாமகத்தின் மகிமையைப் பெற வேண்டும் என்று கூட்டம் கூட்டமாக வந்த பக்தர்களை ‘ஜெ’ பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசார் தடுத்தது. ஆனாலும் லட்சம் லட்சமாக திரண்டு வந்த பக்தர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாது லத்திகளைக் கையில் எடுத்தனர் காவல் துறையினர். நாலாபுறமும் சிதறியோடத் தொடங்கின பக்தர்கள் கூட்டம்... விளைவு ஒருவருக்கொருவர் மோதி கீழே விழ விழுந்தவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் போலீசார் மேலும் விரட்ட கீழே விழுந்தவர்கள் எழுந்திருக்கவே முடியாமல் பலியாகத் தொடங்கினர்.

kumbakonam mahamaham 1992 incident

ஒருபுறம் இப்படி உயிர்ப்பலி நடந்து கொண்டிருக்க மறுபுறம் ஜாம் ஜாமென்றுஜெ’வின் குளியல் நடந்து கொண்டிருந்தது. அய்யரின் ஐடியாப்படி 21 குடங்களில் இருந்த தண்ணீரை சசிகலா ஒவ்வொன்றாக ‘ஜெ’ மீது ஊற்றினார். அதற்கடுத்து ‘ஜெ’ சசிகலாவுக்கு தண்ணீரை ஊற்றிக் குளிப்பாட்டினார். இது முடிந்ததும் அய்யரை அழைத்து அழகு.திருநாவுக்கரசு, எஸ்.டி.எஸ்., மதுசூதனன், கண்ணப்பன் மற்றும் கறுப்புப் பூனைப்படைக்கும் தண்ணீர் தெளிக்கச் சொல்ல அம்மா இட்ட கட்டளைப்படி நடந்தார் அய்யர். இதிலும் அழகு.திருநாவுக்கரசு தன் ஆதரவாளர்களை மட்டும் அழைத்து ‘ஜெ’ குளிப்பதைப் பார்க்க அனுமதித்தார்.

போலீஸ் லத்திசார்ஜ் செய்வதையும் மக்கள் கீழே விழுந்து மிதிபட்டு இறப்பதையும் தேவாரம் அழகு.திருநாவுக்கரசு மூலம் ‘ஜெ’க்கு சொல்லி அனுப்பினார். செய்தியைக் கேள்விப்பட்ட ‘ஜெ’ ஒரு நிமிடம் முகம் மாறினார். மீண்டும் உடனே தன் சகஜ நிலைக்கு வந்தவர் தன் குளியலை அவசரக் குளியலாக மாற்றி அன்னதானத்தையும் ஆரம்பித்து வைத்து விட்டு ஹெலி காப்டரில் ஏறிப் பறந்துவிட்டார். அன்னதானம் பத்து லட்சம் பேருக்கு என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொஞ்சம் பேருக்கு கொடுத்ததும் அ.தி.மு.க.வினர் அதை அள்ளிக் கொண்டு போய் விட்டனர்.

‘ஜெ’ ஹெலிகாப்டர் ஏறியதும் மக்கள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். அவ்வளவுதான்! மடை திறந்த வெள்ளம் போல குளத்தை நோக்கி ஓட ஆரம்பித்தனர் மக்கள். அதுவரை இருந்த உயிர்ப்பலி மீண்டும் அதிகமாக ஆரம்பித்தது.பிஞ்சுக்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நெரிசலில் மிதிபட்டு அலறிய ஓலம் கும்பகோணத்தையே குலுங்க வைத்தது.

அரசு மருத்துவமனை.

எங்கு பார்த்தாலும் வாயிலும் வயிற்றிலும் அடித்தபடி கதறிய மக்கள். அய்யோ நம் மகனாய் இருக்கக் கூடாதே! நம்முடன் வந்தவர்களாய் இருக்கக் கூடாதே! என்ற பதட்டத்தில் சாரை சாரையாக மருத்துவமனை நோக்கி பக்தர்கள். அங்கேயும் மடித்துக் கட்டிய வேட்டியுடன் மந்திரிமார்கள். கண்ணப்பன் அழகு.திருநாவுக்கரசு போன்றோர் அங்குமிங்கும் நடந்து கொண்டு கூட்டம் கூட்டமாய் வந்த மக்களைப் பார்த்தவுடன் போலீசுக்கு ஜாடை கட்ட மக்களை நோக்கி லத்தியை உயர்த்தினர் போலீசார். அடிகளை வாங்கிக் கொண்டே பாசத்தை மனதில் தேக்கி மருத்துவமனைக்குள் நுழைந்து பார்த்தனர் பக்தர்கள்.

அங்கே... ஒன்றின் மேல் ஒன்றாய் கிடத்தப்பட்ட உயிரிழந்த உடல்கள்! பிணங்களின் எண்ணிக்கை நாற்பத்தியேழு. நாற்பத்தியேழு மனித உடல்கள். எதிர்காலம் என்னவென்று அறியாத பிஞ்சுக் குழந்தைகளின் உடல்கள் ஐந்து.

பெரும்பாலும் இறந்தவர்கள் வெளியூர் மனிதர்கள்தான். இத்தனை உயிர்ப்பலிக்கும் முக்கியக் காரணம் ‘ஜெ’ நடத்திய குளியல்தான்! வழக்கமாக குளத்தில் குளிக்க எவ்விதத் தடையும் இருக்காது. அதனால் எவ்வளவு கூட்டம் வந்தாலும் அதே அளவில் கூட்டம் வெளியேறும்.ஆனால், ‘ஜெ’ குளியலுக்காக பக்தர்கள் குளிப்பது தடுக்கப்பட மேலும் மேலும் பக்தர்கள் வந்து குழும ஆரம்பித்து விட்டனர். ‘ஜெ’ குளித்தவுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். முண்டியடித்த கூட்டத்தில் பலர் கீழே விழ, குளத்தினுள்ளும் கூட்டம் மேலும் மேலும் இறங்க இத்தனை உயிர்ப்பலிகள் நடந்தேறி விட்டன. இதழ் அச்சேறும் வரை நமக்குக் கிடைத்த தகவலின்படி இதுவரை எண்பதுக்கும் மேற்பட்ட மனிதஉயிர்கள் அல்லது பக்தர்கள் பலியாகியுள்ளனர்.

admk jeyalalitha Kumbakonam sasikala
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe