Advertisment

காவிரிக்காக கன்னடர்கள் ஏவிவிட்ட வன்முறையும், தமிழர்கள் சந்தித்த அடக்குமுறைகளும்...

karnataka 1991 riot over cauvery water issue

karnataka 1991 riot over cauvery water issue

மொழிவாரி மாநிலங்கள் பிரிப்புக்குப் பிறகு, தமிழகத்தின் தீர்க்க முடியாத ஒரு பிரச்சனையாக இன்றுவரை விளங்கிவருவது காவிரி நதிநீர் பங்கீடு. பல ஆண்டுகளாக பற்பல போராட்டங்கள், வழக்குகள் எனக் கடந்து வந்திருந்தாலும், இன்றுவரையிலும் இதற்கான தீர்வுகள் என்பன பெரும்பாலும் தமிழகத்துக்குச் சாதகமாக அமைந்ததில்லை. தமிழகத்தின் விவசாய தேவைக்கு மிகவும் இன்றியமையாததான இந்த காவிரி நீருக்காகத் தமிழகம் மேற்கொண்ட போராட்டங்கள் ஏராளம். அதேபோல, இப்பிரச்சனை காரணமாகக் கர்நாடகத்தில் வசிக்கும் மற்றும் கர்நாடகா செல்லும் தமிழர்கள் எதிர்கொண்ட வன்முறைகளும், அடக்குமுறைகளும் எண்ணிலடங்காதவை. இன்றளவும் கூட இந்த பிரச்சனைகள் நீடித்து வருகின்றன. கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிராக வன்முறைகள் என்பதை இன்றைய தலைமுறையினரும் கண்கூடாகப் பார்த்திருக்கிறார்கள்.

Advertisment

இப்படிப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் 90 களின் பிற்பகுதியில் அம்மாநிலத்தில் அதிகளவில் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன. காவிரி பிரச்சனையால் இன்றுவரை இப்படிப்பட்ட பல வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தாலும், அதன் தொடக்கப்புள்ளியாக அமைந்தது 1991 கலவரம் தான். காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக 1991 ஆம் ஆண்டு முதன்முறையாகக் கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிராகக் கலவரம் வெடித்தது. வாட்டாள் நாகராஜ் தூண்டுதலால் ஏற்பட்ட இக்கலவரத்தில் ஏகப்பட்ட தமிழர்கள் உயிரையும், உடைமைகளையும் இழந்து நிர்கதியாகினர். இந்த கலவரம் காரணமாக 48 மணிநேரத்தில் சுமார் 50,000 தமிழர்கள் கர்நாடகாவை விட்டு வெளியேறும் சூழலுக்குத் தள்ளப்பட்டனர். காவிரி நீர் பங்கீட்டு வரலாற்றில் முதன்மையானதும் மற்றும் மறக்கமுடியாததுமான இக்கலவரத்தைப் பற்றிய செய்திகளைக் களத்திலிருந்து நேரடியாக மக்களுக்கு எடுத்துச்சென்றது நக்கீரன் குழு. அந்தவகையில், 11.1.1992, நக்கீரன் இதழில் அக்கலவரம் தொடர்பாக வெளியான கட்டுரை.

Advertisment

தொடரும் கன்னடர் வெறியாட்டம்.

குண்டல்பேட்;

தமிழர்கள் மீது கன்னடர்கள் நடத்திய கொலைவெறித் தாக்குதல் டிசம்பர் 11ஆம்தேதி ஆரம்பித்து 14ஆம்தேதி தணிந்தது.

இது தற்காலிகமாகவே! என்ற செய்தி நம் காதுக்கு எட்டியதுமே நாம் மைசூரிலேயே தங்கி விட்டோம்.

அப்பாடா ஓய்ந்தது! என்று கர்நாடகாவிலிருந்து தப்பி ஓடி வந்து விட்ட தமிழர் போக மீதியுள்ளவர்கள் நிம்மதியாகப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்த அந்த நம்பிக்கையின் மீது இடி விழுந்தது.

‘‘தமிழ்நாட்டுல கன்னடக்காரன கண்டபடி வெட்டுறானாம்!’’ கூடலூரில் இருந்து குண்டல்பேட் வந்த கன்னடர்கள் பொய்யாகத் தகவல்கூற, புகைந்து கொண்டிருந்த நெருப்பு மீண்டும் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.

கர்நாடகப் பதிவு எண் கொண்ட பஜாஜ் ஸ்கூட்டர் ஒன்றை ஏற்பாடு செய்து கொண்ட நாம் குண்டல்பேட் நோக்கி விரைந்தோம். தோள்களில் கலர் கேமரா ஒன்று! கருப்பு வெள்ளை கேமரா ஒன்று! நெற்றியில் பொட்டு! நாக்கின் நுனியில் ஏன் குரு? என்று கன்னடர்கள் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தை.

அசல் கன்னடக்காரனாகவே மாறினாலும் போகின்ற வழியெங்கும் எரிந்து கொண்டிருக்கும் கடைகள், உடைக்கப்பட்ட லாரிகள், நொறுக்கப்பட்ட வீடுகள்! நம் கண்களில் தென்பட்ட போதெல்லாம் நெஞ்சு ‘திக் திக்’ என்று அடித்துக் கொண்டது.

இருந்த போதிலும் நம்முடைய குண்டல்பேட் பயணம் தொடர்ந்தது.

பாதிக்கு மேல் தமிழர்களைக் கொண்ட இக்கிராமத்தில் தமிழர்களே இருக்க சான்ஸ் இல்லை என்னும் அளவுக்கு எரிந்த வீடுகளில் இருந்து புகை மட்டும் வந்து கொண்டிருந்தது. போலீஸ் தடையுத்தரவு இருக்க, பேருக்கு சில கன்னட போலீஸார்கள் கன்னடர்களின் வீர சாகசங்களை அலசிக் கொண்டிருந்தார்கள்.

என்ன ஒரு அநியாயம்? என்ற எண்ணத்திலேயே நாம் சாம்ராஜ்நகர் நோக்கி ஸ்கூட்டரைச் செலுத்தினோம்.

ரோட்டைக் கிராஸ் செய்தபடி ஒரு கூட்டம் வாழைத் தோப்புக்குள் நுழைந்தது. அவர்கள் கைகளில் கடப்பாரை, கத்தி, உருட்டுக்கட்டைகள். ஏதோ நடக்கப் போகிறது என்ற எண்ணம் நம் மனதில் எழ, ஒரு பர்லாங் தூரம் தள்ளி ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு நாமும் வாழைத்தோப்புக்குள் நுழைந்தோம். நம்மையறியாமலேயே நம் கைகள் தோளில் இருந்த கேமராவை ‘ஸ்டெடி’ செய்தது.

தூரத்தில் தெரிந்த தமிழர் குடிசைகளை நோக்கி அவர்கள் குறி!

நம் கேமரா சரமாரியாக அவர்களை தன்னுள் அடக்கிக் கொண்டது.

‘‘டேய்! படம் புடிச்சுட்டான், கொல்லுங்கடா!’’ திடீரென்று நம்மைக் கவனித்து விட்ட ஒருவன் கத்த ஆரம்பிக்க ஒட்டு மொத்த கூட்டமும் நம்மை நோக்கி திரும்பியது. நிலைமையின் விபரீதம் உணர்ந்த நாம் ஓடத் தொடங்கினோம்.

ஸ்கூட்டர் நிறுத்திய இடத்தில் தயாராய் இருந்த நம் நண்பர் ரெடியாக ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்ய அவர்களிடம் இருந்து மயிரிழையில் தப்பி நம் பயணத்தை தொடர்ந்தோம்.

சாம்ராஜ் நகர்;

அடித்துத் துரத்தப்பட்ட தமிழர்கள் எல்லாம் போலீஸ் ஸ்டேஷன் முன் சோகத்தை முகத்தில் தேக்கி பாரிதாபமாக நின்று கொண்டிருக்க, அவர்களைக் கண்டு கொள்ளாமல் போலீஸார் அங்குமிங்கும் உலாவிக் கொண்டிருந்தனர். திடீரென்று அவர்களை எல்லாம் லாரியில் ஏற்றி முகாமுக்கு அனுப்பினர். இதையும் நம் கேமரா கிளிக் செய்தது. சாம்ராஜ் நகர் தாலுக்காவில் தெரங்கம்பை என்னும் இடத்தில் தமிழர் சொத்துக்கள் எல்லாம் அணுகுண்டு வீசி எரிக்கப்பட்டது போல காட்சி தந்தன. சார்...இங்க பெட்ரோல் குண்டு வீசி அழிச்சாங்க...என்றார் அகதிமுகாம் நோக்கிச் சென்று கொண்டிருந்த கணேசன். இதே சாம்ராஜ் நகரில் இரு பெண்கள் கற்பழிக்கப்பட்ட தகவலும் நமக்கு கிடைத்தது.

நஞ்சன் கூடு;

நமது அடுத்த பயணம் நஞ்சன் கூடு. கன்னடர் தாக்குதலுக்குப் பயந்து லாரி டிரைவர்கள் பதினைந்து பேர் லாரிகளை நிறுத்திவிட்டு பயந்து கொண்டே நின்றிருந்தனர். நாம் அவர்கள் அருகில் சென்றோம். கர்நாடக ரிஜிஸ்ட்ரேசன் வண்டியைக் கண்டதும் நம்மை ஆக்ரோஷமாக சூழ்ந்து கொண்டனர். நிலைமை உணர்ந்த நாம் நம்மைப்பற்றி அவர்களிடம் விளக்கிய பிறகே சகஜமாயினர். அவர்களிடம் நாம் பேசிக்கொண்டிருந்த போதுதான் வெறித் தனமாக கையில் தீப்பந்தங்களுடன் லாரிகளை நோக்கி ஓடி வந்தது ஒரு கும்பல்.

ஓடுங்க...இல்லைனா கொன்னுடுவாங்க!....சொல்லிக் கொண்டே ஓட ஆரம்பித்தனர் டிரைவர்கள். வந்த கும்பல் சாவகாசமாக டீசல் டேங்கை உடைத்து தீ வைக்க பதினைந்து லாரிகளும் பற்றிக்கொண்டு எரிய ஆரம்பித்தன.

நாம் பதைபதைத்துப் போட்டோ எடுத்துக்கொண்டு வெளியேறினோம். ஆனால், ‘‘லாரிகளில் இருந்த பஞ்சு மூட்டைகள் கன்னட ஆளுடையது என்பதால் அதைப் பாதுகாப்பாக கீழே இறக்கி விட்டுத்தான் லாரிக்கு தீ வைத்தனர்’’ என்பதுதான் இதில் கொடுமை.

இதே நஞ்சன்கூட்டில் மளிகைக்கடைகள், வீடுகள் சூறையாடப்பட்டு தீ வைக்கப்பட்டு எரிந்து கொண்டிருந்தன. வீட்டை விட்டு வெளியேறிய தமிழர்கள் அங்குள்ள கிரிஜா கல்யாண மண்டபத்தில் தங்கி தங்களது பாழாய்ப்போன வாழ்க்கையை எண்ணி நொந்து புலம்பிக் கொண்டிருந்தனர்.

நாம் மீண்டும் மைசூர் திரும்ப நினைத்து வந்த வழியிலேயே திரும்பினோம். வழியெங்கும் தீயின் கோரப்பசிக்கு ஆளான வீடுகள். மளிகைக் கடைகள். பார்த்துக் கொண்டே திரும்பி குண்டல்பேட் வந்துவிட்டோம்.

திடீரென்று நெருப்பு சுவாலை கொழுந்து விட்டு எரிந்தது. அது தமிழனுக்கு சொந்தமான கஜானனா என்ற டூரிங் தியேட்டர். நம் இரு கேமராவும் படவென்று படம் பிடிக்க ஆரம்பித்த போதுதான், வெறிபிடித்துக் கத்தியபடி வந்த ஒரு கும்பல் ஒன்று நம்மைச் சூழ்ந்து கொண்டது. நாம் ஸ்கூட்டரை ஓட்டி வந்த நண்பருக்கு சிக்னல் கொடுத்து விட்டு பின்னங்கால் பிடரியில் பட ஓட ஆரம்பித்தோம்.

நம்மைத் துரத்தியவர்களில் ஒருவன் மட்டும் நம்மை நெருங்கி தோளில் கை வைக்க நம் கலர் போட்டோ எடுத்த கேமரா அவன் கைகளில்.

'‘கேமரா போச்சே’’ என்று நினைத்துக் கொண்டு கறுப்பு வெள்ளை படத்தையாவது காப்பாற்றுவோம் என்ற எண்ணத்தில் மீண்டும் ஓட ஆரம்பித்தோம்.

நமக்கு முன்பே காத்திருந்த நண்பரின் ஸ்கூட்டரில் அமர்ந்து கொண்டு திரும்பிப் பார்த்த போதுதான் நம் கேமரா குரங்கு கையில் கிடைத்த பூ மாலையாய் சின்னாபின்னாபடுத்தப்பட்டுக் கொண்டிருந்தது.

நம் கேமராவை விட அதில் இருந்த போட்டோக்களை இழந்த சோகத்திலேயே மைசூர் திரும்பி வாணிப வைசிய ஸ்ரீ சீதா கல்யாண மனடபத்தில் நிரம்பி இருந்த தமிழர்களுடன் பேசினோம்.

தங்கவேலு என்பவர், ‘‘கன்னடர் நாங்க ஊரை விட்டு ஓட கெடு வச்சாங்க. என்னோட கடையை உடைபோம்னாங்க. நாங்க போலீஸ்ல சொன்னப்ப கொஞ்ச நாளைக்கு கடையைத் திறக்காதீங்கன்னு சொன்னாங்க. நாங்களும் திறக்கல...ஆனா கடைய ஒடைச்சுடாங்க.ரெண்டு லட்சம் ரூபாய் நஷ்டம்’’ என்று வேதனையில் புலம்ப ஆரம்பித்தார்..

கோபால், விஜயன் இருவரும் ‘‘போலீஸ் தனித்தனியா பாதுகாப்பு கொடுக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க. ஆனா கொஞ்சம் கூட பாதுகாப்பு தரல. அதனால்தான் எங்க மளிகைக் கடையும் ஆயில் ஸ்டோரும் அழிஞ்சிடுச்சு’’என்றனர்.

பெயர் சொல்ல விரும்பாத பெண் ஒருவர் ‘‘பொம்பளைன்னு கண்டாலே சேலையை உருவி தாலியைப் பிடுங்கிக்கறாங்க. வாழறதுக்கு இப்படிப் போராடுறதை விட ஒரேயடியா செத்துப் போறது தேவலை’’ என்று அழுது கொண்டே கூறினார்.

பல இடங்களில் பெரிய கம்பெனிகள் கூட தீவைத்துக் கொளுத்தப்பட்டன. பொள்ளாச்சி என்.மகாலிங்கத்தின் பண்ணாரி சுகர்ஸ் இன்னும் இயங்கவே ஆரம்பிக்கவில்லை. ஆனால் அதற்குள் தொழிற்சாலை வன்முறையாளர்களால் எரிக்கப்பட அங்கு ஆறு கோடி நஷ்டம்.

ரானே மெட்ராஸ் என்ற கம்பெனி, பயத்தால் ரானே மைசூர் என்று பெயர் மாற்றிக் கொண்டது. இன்னும் பல கம்பெனிகள் பொருட்களை இழந்து மீண்டு எழுந்து வர இன்னும் பல ஆண்டுகள் ஆகும்.

மொத்தத்தில் ஜப்பானின் நாகசாகி ஹிரோஷிமா நகரங்கள் மீது அமேரிக்கா வீசிய அனுகுண்டால் ஏற்பட்ட சோகத்தைப் போல நமக்கு தோன்றியது, கர்நாடகாவில் தமிழர் பகுதியில் கன்னடர் நடத்திய இந்த வெறியாட்டாம்.

நித்தம் நித்தம் ஊர்வலம், திண்டாடும் தமிழினம்.

முதல் கலவரம் தணிந்து இரண்டாவது கலவரம் ஆரம்பமான பிறகு மைசூரில் தினமும், மாட்டு வண்டி சங்கம், கழுதை ஓட்டி சங்கம், பீடி குடிப்போர் சங்கம் என குறைந்தபட்சம் பத்து சங்கங்களாவது ஊர்வலமாக வருகின்றன.

‘‘காவேரி கிரியா சமிதி’’ என்னும் காவேரிப் போராட்டக் குழு இவர்களை மிரட்டி ஊர்வலங்களை நடத்தச் செய்கிறதாம்.

மைசூர் தமிழ்ச் சங்கமும் இந்த மிரட்டலுக்குப் பயந்துதான் கன்னட ஆதரவு ஊர்வலம் நடத்தி இருக்கும் என மற்றொரு பகுதி தமிழ்ச் சங்கம் குற்றம் சாட்டுகிறது. எப்படியோ கர்நாடகாவில் தமிழினம் திண்டாடுகிறது.

"மரியாதையாகப் பதவி விலகுங்கள்" - காங்கிரஸ் எம்.எல்.ஏ.சிங்காரம் எச்சரிக்கை.

பங்காரப்பா தனது குண்டர்களையும் நக்சலைட்டுகளையும் அப்பாவித் தமிழர்கள் மீது ஏவி விட்டுள்ளார். இந்தியாவில் இருக்கிற எல்லா மக்களையும் நேசிக்கிற கொள்கைதான் காங்கிரஸ் கொள்கை. ஆனால், அதே கட்சியில் இருக்கும் பங்காரப்பாவும் அவரது அமைச்சரவையும், தமிழ்ப் பெண்களை மானபங்கப்படுத்தி அவர்களது சொத்துக்களை சூறையாடி வருவது வேதனைக்குரியது. இனிமேலாவது அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி பங்காரப்பா மீது நடவடிக்கை எடுத்து அவரது கொட்டத்தை அடக்க வேண்டும்.

தமிழர்கள் மீது இத்தனை கொடுமைகள் நடந்ததற்கு தார்மீகப் பொறுப்பேற்று சிதம்பரமும் அருணாச்சலமும் மரியாதையாகப் பதவி விலக வேண்டும். தமிழர்களைக் காப்பாற்ற முடியாதவர்கள் அமைச்சர் பதவிகளில் தொங்கிக் கொண்டிருப்பதற்கு அசிங்கமாக இல்லையா? என்றார் காங்கிரஸ் எம்.எல்.ஏ.சிங்காரம்.

App exclusive Cauvery dispute karnataka
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe