தமிழக அரசியல் வரலாறு பல்வேறு முரண்களையும், எதிர்பார்க்காத நிகழ்வுகளையும் உள்ளடக்கியது. அதிலும், இப்படியும் நடந்ததா என இன்றைய தலைமுறை அதிர்ச்சியடையும் செய்திகளும் பல. அந்த வகையில் தி.மு.க.வுக்கு எதிர் அ.தி.மு.க., கலைஞருக்கு எதிர் ஜெயலலிதா எனச் சிறு குழந்தையும் பேசும் அளவுக்குத் தமிழக அரசியல் களம் அனைவருக்கும் பரிட்சியமான சூழலில் கலைஞரின் மகன் ஜெயலலிதாவின் ஆதரவாளர் என்பது தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியூட்டும் செய்தியாகவே இருந்தது. ஆம், கலைஞரின் மூத்த மகனான மு.க.முத்து ‘பூக்காரி, பிள்ளையோ பிள்ளை’ போன்ற படங்களின் மூலம் நடிகராக அறிமுகமானார். தீவிர எம்.ஜி.ஆர் ரசிகராக இருந்த அவர் காலப்போக்கில் எம்.ஜி.ஆர் அபிமானியாகவும், அவருக்குப் பிறகு ஜெயலலிதாவின் ஆதரவாளராகவும் மாறிப்போனார். தொடர்ந்து கலைஞருக்கு எதிராகவும், ஜெயலலிதாவுக்கும் ஆதரவாகவும் பேசிவந்த அவர், தனது சொந்த தேவைக்காக ஜெயலலிதாவிடம் பணம் பெற்ற செய்தி ஊடகங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. காட்டுத்தீயாய் பரவிய இந்த சர்ச்சை குறித்து மு.க.முத்துவின் மகன் அறிவுநிதியிடம் நக்கீரன் நடத்திய உரையாடல் 07.05.1992 தேதியிட்ட நக்கீரன் இதழில் வெளியானது.

Advertisment

kalaignar's son a supporter of Jayalalithaa? - Contradiction of political history!

அப்பாவை எதிர்க்கும் மகன்:

கருணாநிதியின் மூத்த மகனான மு.க.முத்து மற்றும் ஜெயராமன், ஜெயலலிதாவின் கரத்தை எவரெஸ்ட் உயரத்துக்கு உயர்த்த கச்சேரிகளை நடத்தி வருகிறார். கச்சேரியில் கருணாநிதியைக் கடுமையாக விமர்சிக்கும் மு.க.முத்துவைப் பற்றி அவரது மகனான அறிவுநிதியிடம் ஒரு பேட்டி.

Advertisment

நக்கீரன்:

நீங்கள் கலைஞரின் பேரன். மூன்றாவது தலைமுறையின் முதல் வாரிசு நீங்கள்தான், ஆனால், உங்கள் தந்தை சமீபத்தில் தன் வாழ்க்கைக்கு வழி இல்லையென்று ஜெயலலிதாவிடம் ரூபாய் ஐந்து லட்சம் வாங்கினாரே, உண்மையில் உங்கள் தந்தையின் நிலை அப்படித்தானா? சற்று விளக்கமாகக் கூறுங்கள்.

அறிவுநிதி:

இவ்வளவுக்கும் காரணம் என் தாத்தாதான். என் தந்தையை அதிகச் செல்லம் கொடுத்து வளர்த்த காரணத்தால் என் தந்தை மு.க.முத்து ‘‘தான் நினைப்பதுதான் சரி’’ என்ற தான்தோன்றித்தனமான நிலைக்கு ஆளானார். பொருளாதார வசதியிலும் சரி, கலை உலக வாழ்க்கையிலும் சரி என் தந்தைக்கு என் தாத்தா செய்த உதவிகள் அநேகம். ‘‘ஒன்றி உழைக்கும் மனப்பாங்கு’’ என் தந்தைக்கு இல்லாத காரணத்தினால் எவ்வளவு வருமானம் இருந்தும் அவருக்கு திருப்தி ஏற்படவில்லை. இன்னும் சொல்லப்போனால் என் தந்தைக்கு தாத்தா வீடு வாங்கிக் கொடுத்தார். கார் வாங்கிக் கொடுத்தார். என் தந்தை வீட்டு மேல்மாடியை வாடகைக்கு விட்டு அந்த வருமானத்தையும் அனுபவிக்க செய்வதோடு என் தந்தை செலவுக்கு பணம் கேட்கும் போதெல்லாம் பணம் கொடுத்துக் கொண்டே இருந்தார்.

Advertisment

ஆனால் என் தந்தையின் நிலையில்லா மனதைப் பயன்படுத்திக் கொண்டு எங்கள் குடும்பத்திலேயே குழப்பத்தையும் என் தாத்தாவுக்கு ஒரு அவப்பெயரையும் உண்டாக்கிய ஜெயலலிதா என் தந்தைக்கு ரூபாய் ஐந்து லட்சத்தை தன் சொந்தப் பணத்தில் கொடுத்ததாக விளம்பரப்படுத்திக் கொண்டார். பொது மக்களிடம் மனு வாங்கும் ஜெயலலிதா அவர்களின் துன்பத்தை துடைக்கும்படியான எந்தக் காரியத்தையும் உடனே நிறைவேற்றியதாக பத்திரிகைகளில் செய்தி இல்லை. ஆனால், என் தந்தைக்கு ஐந்து லட்சரூபாய் கொடுத்தது மட்டும் படத்தோடு பத்திரிகைகளில் செய்தி வரும்படி ஜெயலலிதா பார்த்துக் கொண்டார். எங்களைப் பொறுத்தவரையில் என் தங்கை திருமணத்தை தன்பிள்ளைகளின் திருமணத்தைவிட சீரும் சிறப்புமாகச் செய்து விட்டார் என் தாத்தா. என் தாத்தா இல்லாமல் இருந்தால் நான் எங்கே டாக்டராவது? எங்கேயாவது ஒரு அச்சகத்தில் பிழை திருத்தும் பணியில் உட்கார்ந்து காலம் கழித்துக் கொண்டிருப்பேன்.

நக்கீரன்:

தற்போது நீங்கள் உங்கள் தந்தையுடன் இருக்கிறீர்களா? தனியாக இருக்கிறீர்களா?

அறிவுநிதி:

என் தந்தை தனியாகத்தான் இருக்கிறார். அவரைத் திருத்த என் தாத்தா பட்ட பாடெல்லாம் விழலுக்கு இறைத்த நீராகத்தான் போய்விட்டது. இதையெல்லாம் பார்த்த நானும் என் அன்னையும் தாத்தாவின் பாதுகாப்பில் தனியாகத்தான் இருந்து வருகிறோம்.

நக்கீரன்:

நீங்கள் உங்கள் தந்தையைப் புரிந்து கொண்டா வரை உங்கள் தாத்தாவை இழிவு படுத்த வேண்டும் என்று வேறு யாராவது பத்து லட்சத்தைக் கொடுத்தால் அவர் அந்தக் கட்சிக்குப் போய் விடுவாரா?

அறிவுநிதி:

நான்தான் சொன்னேனே என் தந்தை நிலையில்லாத மனம் கொண்டவர் என்று. பத்துலட்சம் கொடுத்தால் என் தாத்தாவை மட்டும் என்ன! இன்று ஐந்து லட்சம் கொடுத்த ஜெயலலிதாவையும் சேர்த்துக் காலைவாரி விடுவார் என் தந்தை. ஆனால், நான் அறிந்துகொண்டவரை, தமிழக அரசியலில் இப்படியொரு அசிங்கமான அரசியல்நிலை எப்போதும் இருந்ததில்லை. என் தாத்தாவும் எம்.ஜி.ஆரும் எதிரும் புதிருமாக சட்ட சபையில் அமர்ந்திருந்து பணியாற்றிய

போது கூட எனது தாத்தா, ‘‘எனது நண்பர் எம்.ஜி.ஆர்.’’ என்றுதான் சொல்லுவார். எம்.ஜி.ஆர். அவர்களூம் என் தாத்தாவை கலைஞர் என்றுதான் குரிப்பிடுவாறே தவிர கருணாநிதி என்று கூட அழைத்ததில்லை. மற்ற அரசியல் விவரங்களைப் பேச எனக்கு வயதும் அனுபவமும் இல்லை.

நக்கீரன்:

உங்கள் தாத்தாவுக்கு எந்த அளவுக்கு கடமைப்பட்டுள்ளீர்கள்?

அறிவுநிதி:

என் உயிரும் அவரே, ஊனும் அவரே. அவர் இல்லாவிட்டால் எல்.கே.ஜி.யில் ஆரம்பித்து எம்.பி.பி.எஸ்.வரையில் நான் படித்திருக்க முடியுமா? என் தாத்தாவை அறிஞர் அண்ணா அவர்கள் ‘தண்டவாளத்தில் தலை வைத்துப் படு’ என்று சொன்ன போது எப்படி அதை நிறைவேற்றினாரோ, அதேபோல் என் தாத்தா என்னை ‘நெருப்பில் குதி’ என்றாலும் குதிப்பேன். போராடு என்றாலும் போராடுவேன். அவர் என்ன சொன்னாலும் செய்வேன். அந்த ஆல மரத்தின்

நிழலில் வாழ்ந்து கொண்டிருப்பவன் நான். அந்த நிழல் இல்லாவிட்டால் நாங்கள் அனைவரும் கருகி விடுவோம்.

நக்கீரன்:

உங்கள் தாத்தா உத்தரவிட்டால் உங்கள் தந்கையை எதிர்த்து நீங்கள் அரசியலில் ஈடுபடுவீர்களா?

அறிவுநிதி:

என் தாத்தா அப்படி உத்தரவிட மாட்டார். நான் டாக்டர் தொழிலில் சிறந்து விளங்கி என் தாய்க்கும் தங்கைக்கும் துணையாக இருப்பதையே என் தாத்தா விரும்புவார்.