Advertisment

கொலையான தந்தை... தாய் எடுத்த சபதம்... காடுவெட்டி குருவின் தொடக்கப்புள்ளி...

kaduvetti guru first arrest

kaduvetti guru first arrest

பாட்டாளி மக்கள் கட்சியின் மிகமுக்கிய தலைவராகவும், அக்கட்சியை வலுப்படுத்தியவர்களில் கவனிக்கத்தக்கவராகவும் இருந்தவர் காடுவெட்டி குரு. ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி கிராமத்தில், பிப்ரவரி 01, 1961 ஆம் ஆண்டு பிறந்த குரு, தனது கல்லூரி படிப்பை முடித்த கையோடு தீவிர அரசியலில் ஈடுபடத் துவங்கினார். முதலில் திமுகவிலும், பின்னர் பாமகவிலும் இணைந்து செயலாற்றிய குரு, அரியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அசைக்கமுடியாத ஒரு அரசியல் தலைவராக விளங்கினார். இளமைக் காலத்திலிருந்து அரசியல் மீது இவருக்கு ஏற்பட்டிருந்த நாட்டத்திற்கு இவரது தந்தையையும் ஒரு காரணமாகக் கூறலாம்.

Advertisment

ராணுவத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த குருவின் தந்தை ஜெயராமன், ராணுவத்திலிருந்து வெளியேறிய பின்னர், தனது ஊரில் விவசாயப்பணிகளை மேற்கொண்டிருந்தார். கம்யூனிச கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட அவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகியாக இருந்தார். குறுகிய காலத்தில் மக்கள் செல்வாக்கைப் பெற்றதோடு, அவ்வூருக்கான முக்கிய முடிவுகளை எடுப்பவர்களில் மிகமுக்கியமானவராகவும் அவர் இருந்தார். ஆனால், இவரது அரசியல் வாழ்வில் ஏற்பட்ட பகை காரணமாகத் தனது உறவினரான ராமச்சந்திரன் என்பவராலேயே கொல்லப்பட்டார். அதன்பின்னர், தனது தாயுடன் கும்பகோணத்தில் வசித்துவந்த குரு, தனது படிப்பையும் முடித்தார். அதன்பிறகு அவர் அரசியலில் ஈடுபட்டிருந்த காலகட்டத்தில், தனது உறவினர் ராமச்சந்திரன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து, 11.1.1992 நக்கீரன் இதழில் வெளியான கட்டுரை.

Advertisment

முனியப்பன் வேலுல அவன் தலை தொங்கணும்! ஒரு தாயின் சபதம்.

1971 ஆம் ஆண்டு.

திருச்சி மாவட்டம், ஜெயங்கொண்டம், காடு வெட்டி கிராமம். ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று தனது சொந்த ஊரான காடுவெட்டி கிராமத்துக்கு திரும்பியிருக்கிறார் ஜெயராமன்.

ஜெயராமன் மாமா ராமச்சந்திரன், ஜெயராமனுக்கு நேர் விரோதம். பஞ்சாயத்து காண்ட்ராக்ட் வேலைகளை எடுத்துச் செய்து வந்தார்.

ஒருநாள். ‘‘என்னய்யா ரோடு வேலையும் சரியில்லை. வேலையாளுங்களுக்கு கூலியும் சரியா தர்றதில்லையாமே. அதனால உன் காண்ட்ராக்டை கேன்ஸல் பண்ணிட்டேன்....போ. ஜெயராமன் முடித்தார்.

‘‘சரி மாப்பிள்ளை! நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும். நான் வர்ரேன்’’ என்று சிரிப்போடு வெளியேறினார் ராமச்சந்திரன். ஆனால், அந்தச் சிரிப்புக்குப் பின்னால் ஒரு பயங்கரம் புதைந்திருப்பதை ஜெயராமன் உணரவில்லை.

அன்று இரவே தன் கைத்தடிகளோடு ஆலோசனை நடத்தினார் ராமச்சந்திரன். திட்டம் தயாரானது. ‘‘நம்ம முனியப்பன் கோவில்ல ஒரு பஞ்சாயத்து. நீங்க வந்துதான் முடிக்கணும். நீங்க தான் முடிக்கணும்னு கூப்பிடுறாங்க’’ என்று ராமச்சந்திரன் அழைப்பு விடுத்தார்.

அவரின் வார்த்தைகளில் பொதிந்திருந்த விபரீதத்தை உணராத ஜெயராமன் புறப்பட்டார்.

முனியப்பன் கோவில்.

பஞ்சாயத்துக்கான சிறு கூட்டம். கூட்டத்தினிடையே ஆயுதம் தாங்கிய ராமச்சந்திரனின் அடியாட்கள். அங்கே போடப்பட்டிருந்த சேரில் உட்கார்ந்தார் ஜெயராமன்.

அடுத்த வினாடி தனது அடியாள் ஒருவன் கையில் இருந்த வீச்சரிவாளை வாங்கி ஜெயராமனை வெட்டினார் ராமச்சந்திரன். உடனே அவரின் அடியாட்களும் சரமாரியாக ஜெயராமனை வெட்டினார்கள்.

ராமச்சந்திரனின் கண்களில் முனியப்பன் கோவில் நந்திக்கு முன்பு நட்டு வைக்கப்பட்டிருந்த சூலாயுதம் தென்படுகிறது.

சூலாயுதத்தைக் கையிலெடுத்து ஆக்ரோஷமாகக் குத்த ஜெயராமனின் உயிர் காலனிடம் சென்றது. கண்ட துண்டமாக சிதைந்து போயிருந்த ஜெயராமனின் உடலைப் பார்த்து லட்சுமி வைத்த ஒப்பாரி எட்டுத் திக்கையும் கண் கலங்க வைத்தது.

மரணத்தின் விவரம் புரியாத மழலைகள் தாய் அழுவதைக் கண்டு தாங்களும் கதறுகின்றன. தன்னோடு சேர்ந்து அழுத தன் மகன் குருவிடம், ‘‘டேய் குரு வீரருடா... உங்கப்பா! வெள்ளைச் சிரிப்போட வந்து வெட்டிப் போட்டுட்டாண்டா. ஒன் மாமங்காரன். எந்த முனியப்பன் வேலாள ஒங்கப்பார கொன்னானோ அதே வேலுல அவன் தலை தொங்கனும்டா குரு....செய்வியாடா’’ என்ற அந்த தாயின் சபதம் அந்தப் பிஞ்சு மனதில் அப்போதே விதைக்கப் படுகிறது.

காலம் வெகு வேகமாக உருள்கிறது.

ஜெயராமன் கொலைவழக்கு சாட்சியங்கள் சரி இல்லாத காரணத்தால் ராமச்சந்திரன் உட்பட ஐந்து பேரும் விடுதலையாகி ஊருக்குள் ஜாலியாக உலா வருகிறார்கள்.

கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்த குரு ஊருக்கு வருகிறார்.

தந்தையைப் போலவே தானும் ஊருக்குள் பிரபலமாகிறார். அரசியல் இழுக்க பா.ம.க.வின் திருச்சி மாவட்ட செயலாளராகிறார்.

குருவின் அபார வளர்ச்சி ராமச்சந்திரனின் கண்களை உறுத்துகிறது. இவனையும் அனுப்பிட வேண்டியதுதான் என நினைத்த ராமச்சந்திரன் தன் சகாக்களோடு ஆலோசனை நடத்துகிறார்.

விஷயம் குருவின் காதுகளுக்கு எட்டுகிறது. தனது கடைசி தங்கைக்கு உடனே திருமணத்தை நடத்தி முடிக்கிறார். தனது சிஷ்யர்கள் சின்னப்பிள்ளை, கொடுக்கன், கலியமூர்த்தி ஆகியோரிடம் ராமச்சந்திரனின் அன்றாட நடவடிக்கைகளைக் கவனிக்கச் சொல்கிறார்.

கடந்த 22.12.91.

அன்று காலை சைக்கிளில் வந்து இறங்கிய ஒரு கோஷ்டியைப் பார்த்ததும் ராமச்சந்திரன் ஓட முயற்சிக்கிறார். சின்னப் பிள்ளை, கொடுக்கன், கலியமூர்த்தி மூவரும் பாய்ந்து ராமச்சந்திரனைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டனர்.

இளம் வயதில் இருந்தே மனதில் அடக்கி வைத்திருந்த தாயின் சபதம் எரிமலையாய் வெடிக்க கையிலிருந்த அரிவாளை ஒரே வீச்சாக குரு வீச சத்தம் போடக் கூட நேரமின்றி ராமச்சந்திரனின் தலை கழுத்தை விட்டுத் தொங்குகிறது.

கழுத்தோடு ஒட்டிக் கொண்டிருந்த ராமச்சந்திரனின் தலையை தனியாக அறுத்து எடுத்தார் குரு. வலது கையில் ராமச்சந்திரன் தலையைப் பிடித்துக் கொண்டு முனியப்பன் கோவிலுக்குப் போனார் நண்பர்களுடன்.

தன் தந்தையைக் காவு வாங்கிய அதே சூலாயுதத்தில் ராமச்சந்திரன் தலையை செருகி வைக்கிறார்.

தலையைக் கையில் எடுத்துக் கொண்டு குரு சைக்கிளில் வந்தபோது பின்னாலேயே திரண்டு வந்த கூட்டத்தை ஒரு பெருமிதப் பார்வை பார்த்தார்.

‘‘அம்மா.. நீ சொன்னபடி முடிச்சுட்டேன். முனியப்பன் கோவில் வேலுல நீ சொன்ன மாதிரியே மாமன் தலையைச் சொருகிட்டேன்’’ என்ற குருவை கண்களில் கண்ணீருடன் பார்த்துக் கொண்டிருக்கிறாள் அந்தத் தாய். போலீஸை வரச் சொல்லி ஆள் அனுப்புகிறார்.

மீன்சுருட்டி போலீஸ் வந்தது. எளிதாக நால்வரையும் கைது செய்தது. போலீஸாருடன் செல்லும் அந்த மகனைப் பார்த்த தாய் கையசைக்கிறாள்.

கையசைப்பில் தொடர்ந்தது வேதனையா? வெற்றிக் களிப்பா! தெரியவில்லை.

வீண் விரோதம் இரு உயிர்களைப் பலி வாங்கியதுதான் இதில் மிச்சம்!

App exclusive Kaduvetti guru pmk
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe