Advertisment

கிளிண்டனின் வெற்றியால் இந்தியாவுக்கு என்ன கிடைக்கும்? அலசிய அரசியல் கட்டுரை! 

Implications for India over Clinton victory

உலகின் ஏகாதிபத்திய நாடுகளில் முதன்மையானது அமெரிக்கா. 19ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்து தற்போது வரை அமெரிக்காவின் அரசியல் உலகின் பல நாடுகளிலும் பாதிக்கவே செய்கிறது. அணிசேரா நாடுகளிலும் அமெரிக்க அரசியல் பிரதிபலிக்காமல் இல்லை. 1992 ல் நடைபெற்ற அமெரிக்கத் தேர்தலில் பலம்பெற்ற வேட்பாளரான புஷ்-ஐ தோற்கடித்து வெற்றிபெற்றார் கிளின்டன். உலக அரங்கில் தாக்கத்தை ஏற்படுத்திய கிளின்டனின் வெற்றி இந்தியாவில் வழங்கப்போகும் சாதக பாதகங்களை ஆராய்ந்த சுவாரசியமான கட்டுரை 19-11-92 தேதியிட்ட நக்கீரனில் வெளியானது. 90-களில் உலக அரசியலோடு இந்தியாவின் தொடர்பைப் புரிந்துகொள்ள உதவக்கூடிய கட்டுரை இது.

Advertisment

Implications for India over Clinton victory

இந்தியாவில் தொடரும் தொல்லை:-

வாஷிங்டனில் இடி இடித்தால் வந்தவாசியில் மழை பெய்யுமா? கிளிண்டன் அமெரிக்க ஜனாதிபதியாகி விட்டதால் நமக்கு எதைக்கிழித்து தரப் போகிறார்கள்? கேள்விகள்...கேள்விகள். முதலில் புஷ் ஏன் தோற்றார்.? அந்தத் தோல்விக்கு என்ன பொருள் என்பதிலிருந்து ஆரம்பித்தால் கொஞ்சம் சரியாக இருக்கும். அமெரிக்கத் தேர்தலில் மூன்று நபர்கள் போட்டியிட்டார்கள். குடியரசுக் கட்சியின் சார்பில் நான்கு வருடம் ஜனாதிபதியாகப் பணிபுரிந்தவர் புஷ். அவர் தோற்றார்.

Advertisment

பனிரெண்டு வருடங்களாக எதிர்க்கட்சியாகவே செயல்பட்டுக் கொண்டிருந்த ஜனநாயக கட்சியின் வேட்பாளர் பில் கிளிண்டன் ஜெயித்தார். ராஸ்பெரோ! ஆங்கிலத்தில் பெரோட் என்று எழுதுவார்கள். கட்சி சார்பற்றகோடீஸ்வர வேட்பாளர். ‘‘தோற்றார்’’!. நான்கு வருடங்கள் ஜனாதிபதியாக இருந்தவர் புஷ் என்பதை மட்டும் ஞாபகத்தில் வைத்துக் கொள்வது தவறு. எட்டு வருடங்கள் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக இருந்தார். அதற்கு முன்பு அமெரிக்காவின் பெயர்போன உளவு ஸ்தாபனமான சி.ஐ.ஏ.என்ற மைய உளவு Central Intelligence ஏஜென்சியின் தலைவராகவும் பணிபுரிந்தார்.

அதாவது அமெரிக்காவை உலகின் மிக பலசாலியான ஒரே நாடு என்ற நிலைக்கு கொண்டுவந்து விட்ட புஷ் தேர்தலில் தோற்கிறார். அவரை ஜெயித்தவர் ஜனநாயகக்கட்சி வேட்பாளர். 1976 முதல் இன்றுவரை இக்கட்சியின் அந்நாள் வேட்பாளரான ஜனாதிபதி கார்ட்டர் ஆட்சிக்காலத்தில் உலகில் ‘‘சொடக்கு முதல் ஒழக்கு’’ நாடுகள் வரை அமெரிக்காவின் கண்களில் விரலை விட்டு ஆட்டின. உதாரணம். ஈரானில் அமெரிக்க தூதரகம் கைப்பற்றப்பட்டது. தூதர்களும் தூதரக ஊழியர்களும் பணயக் கைதிகளாகினர். ஜிம்மி கார்ட்டர் பலமுறை தோல்விகண்டு படாதபாடுபட்டு பணயக் கைதிகளை விடுவிக்க முயலும் நேரத்தில் தேர்தல் வந்தது. உலக அளவில் அமெரிக்காவின் இமேஜை நிலை நாட்டுகிறேன்; கௌரவப் படுத்துகிறேன்’’ என்று சொல்லிக் கொண்டு ரீகன் வந்தார். ஜெயித்தார் எட்டு ஆண்டுகள் ஆண்டார். அதன்பிறகு அவர் வாரிசாக புஷ் நான்கு வருடங்கள் ஆண்டார். இந்த பன்னிரெண்டு வருடங்களில் உலகும் கிட்டத்தட்ட தலைகீழாக மாறிவிட்டது.

அமெரிக்காவின் முகத்தில் கரி பூசிய ஈரானுக்கு பாடம் கற்பிக்க ஈராக்குக்கு கப்பல் கப்பலாக ஆயுதங்கள் வழங்கப்பட்டன. அப்படி வழங்குமாறு ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பது முதல் பரிந்துரைத்த, உத்தரவிட்ட முக்கியஸ்தர் களில் ஒருவரான புஷ் அதே ஈராக்மீது உலக அளவில் போர் தொடுக்கும்படியும் உத்தரவிட்டார்.

‘சோவியத் யூனியன் என்ற பூதத்தை அடக்கியே தீருவேன்’ என்று கங்கணம் கட்டிக்கொண்ட குடியரசுக்கட்சியின் ரீகனும், தங்களது சபதம் ஒருவாறு நிறைவேறக் கண்டார்கள். சோவியத் யூனியன் நெல்லிக்காய் மூட்டைபோலஇன்று சிதறிவிட்டது. சிதறிக் கொண்டிருக்கிறது. இப்படி வெற்றி மீது வெற்றி குவித்த புஷ் ஏன் தோற்றார்?

அதுதான் ஜனநாயகம்.

இரண்டாம் உலகப்போரில் வெற்றியின் சிற்பியாகக் கருதப்படும் சர்ச்சில் இங்கிலாந்தில் போருக்குப்பிறகு நடந்த தேர்தலில் படு தோல்வி அடைந்தார். அன்று கூறப்பட்ட காரணம்... ஐரோப்பிய நாடுகள் உலகமுழுவதும் ஏற்படுத்தி இருந்த காலனிகள், கால்களுக்கே ஆணிகளாகி விட்டதாகக் கூறப்பட்டது. உலகப்போரில் இங்கிலாந்தை இழுத்து விட்டது தவறு....இழுத்து விட்டவர் சர்ச்சில் என்றும் குற்றம் சாட்டப்பட்டது.

புஷ் விசயமும் அப்படித்தான். ‘‘உலகில் வெற்றிகளைக் குவித்தோம் என்ற கூற்றைக் கேட்டு உவகைகொண்டு பசியையும் பட்டினியையும் வேலையில்லாத் திண்டாட்டத்தையும், வேலை கொடுக்கும் கம்பெனிகள் இடைவிடாது வெத்து வேட்டுகளாகிப் போவதையும் அமெரிக்கர்கள் பொறுத்துக் கொள்ளவில்லை.

ஆம்!

உலகில் ஈட்டிய வெற்றிகளுக்கு அமெரிக்கா கொடுத்த விலை. அமெரிக்காவின் பொருளாதாரச் சிதைவு. இன்று ஜப்பான் நினைத்தால் அமெரிக்க நாட்டையே விலைபேச முடியும். உலக நாடுகளுக்கு அமெரிக்கா இன்று கிட்டத்தட்ட ஆறு மில்லியன் டாலர்கள் கொடுக்க வேண்டியுள்ளது. 1992இல் இந்தியமதிப்புக்கு ஒருடாலர் என்பது முப்பது ரூபாய். ஒரு மில்லியன் என்றால் பத்து லட்சம். ஆயிரம் மில்லியன் அதாவது நூறு கோடி என்பது ஒரு பில்லியன். ஆயிரம் பில்லியன்- ஒரு டிரில்லியன். அதாவது லட்சம் கோடி- ஒரு டிரில்லியன். ஆக ஆறு லட்சம் கோடி டாலர் அமெரிக்கா தற்போது தர வேண்டியுள்ளது. ஆறுலட்சம் கோடி டாலர் என்றால் ‘‘நூற்றி எண்பது லட்சம் கோடி’’ ரூபாய். இதற்கு எத்தனை சைபர்கள் என்று பொழுதுபோகாத வாசகர்கள் பார்த்துக் கொள்ளலாம்.

புரியும்படி சொல்லுங்கள். நமக்குத் தெரிந்த அளவுகோல்படி மேற்கோள் காட்டுங்கள் என்று பலர் கேட்கக்கூடும். ஐயா இந்திய அரசின் ஒட்டுமொத்த ஒரு வருட வரவு-செலவு கணக்கு இன்னும் ஒரு லட்சம் கோடியைத் தாண்டவில்லை. அமெரிக்கா எப்படி இவ்வளவு பெரிய கடனாளி ஆயிற்று? இந்த அளவு பணத்தை யாருக்கெல்லாம் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் கேட்கத் தோன்றும். மேற்படி கடன் தொகையில் மிகப்பெரிய பங்கு ஜப்பானுக்கு சேர வேண்டும். அப்புறம் மேற்கு ஐரோப்பா.

இப்படிப்பட்ட சீர்கேடான நிலையை மூடி மறைக்கத்தான் ரீகன் புஷ் போன்றவர்கள் உலக அளவில் அரசியல் மற்றும் போர் வெற்றிகளை அடைந்தோம் என்று ‘படம்’ காண்பித்தார்கள்.அமெரிக்க மக்கள் படத்தைக் கண்டு மயங்கிவிடவில்லை.சரி. இதில் நமக்கென்ன ஆதாயம்?

உள்நாட்டுப் பொருளாதாரப் பிரச்னைகளை சமாளிக்க வேவ்ண்டிய நிர்ப்பந்தம் கிளிண்டனுக்கு உண்டு. ஆகையால் நமது விசயங்களில், காலிஸ்தான், காஷ்மீர் பிரச்னைகளில் தலையிடுவதை கொஞ்சம் தவிர்ப்பார். இதே கொள்கைதான் உலக அளவிலும் அமையும் என எதிர்பார்க்கலாம். எல்லைத் தொல்லைகள் இல்லாவிட்டால் கொல்லைப்புறத்தை தோட்டமாக்க முடியும். ஜப்பான் போன்ற கிழக்காசிய நாடுகளும் இந்தியாவின் புதியபொருளாதாரக் கொள்கையின் அடிப்படையில் இங்கு பணமுதலீடு செய்ய முன்வந்துள்ளனர்.

தன்னிடம் சம்பாதித்த லாபத்தைக் கொண்டு மூன்றாம் உலக நாடுகளில் ஜப்பான் மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் ஆதாயம் அடையக்கூடாது என்ற கொள்கையில் அமெரிக்கா குறியாக உள்ளது. அதற்குத் தகுந்தாற்போல் வெளியுறவு பொருளாதாரக்கொள்கைகள் அமெரிக்காவில் வகுக்கப்பட்டுள்ளன. அக்கொள்கை தொடரும் என்று கிளிண்டனும் கூறியிருக்கிறார். இது ‘‘கவிழ்ந்தடித்து வீழ்ந்தோம், மீசையில் மண் ஒட்டவில்லை’’ என்பது போன்ற மழுப்பல்தான். இந்த மழுப்பலுக்கு வலு சேர்ப்பது போல பன்னாட்டு பணமுதலீடு சங்கம்(IMF), உலகவங்கி போன்ற தனது கைத்தடி அமைப்புகளை வைத்து, இந்தியா போன்ற நாடுகளின் பொருளாதாரக் கொள்கைகளை வகுக்க அமெரிக்கா முயற்சிக்கிறது....முயற்சிக்கும்.

ஆனால், நமக்குத் தற்போது ஜப்பான் மற்றும் மேற்கு ஐரோப்பா போன்ற நாடுகளின் உதவிதான் தேவைப்படுகிறது. அதுதான் நமக்கு ஒத்துப் போகக் கூடிய விஷயம். கிளிண்டன் ஜெயித்தால் நமக்கு ஜப்பானில் இருந்து பணம் கிடைக்கலாம். கூடுதலாகக் கிடைக்கலாம். வாஷ்ங்டனில் இடி இடித்தால் வந்தவாசியில் மழை பெய்யும். என்ன... ஒரு ‘‘சிறிய செயற்கை மழை’’ ஜப்பான் வழியாக வரும். அல்லது ஜெர்மனி வழியாக வரும், ஆனால் மழை வரும்’’ என்பது மட்டும் நிச்சயம்.

இதையெல்லாம் வைத்துப் பார்த்தால் நமது மத்திய அரசின் புதிய பொருளாதாரக் கொள்கை மிகவும் சரியானது என்று பரிந்துரைப்பதாக யாரும் நினைத்துவிட வேண்டாம். அரச மரத்தடியில் பணத்தை தொலைத்து விட்டுஆலமரத்தடியில் தேடினால் கிடைக்காது. போண்டியாகி விட்டதை மறைக்க ‘‘பந்தா அடித்து’’ நம்மைப் பந்தாட நினைப்பவர்களிடம் பிச்சை கேட்பதைவிட, ‘‘சேட்டாக இல்லாவிட்டாலும் செழுமையாக இருக்கும் செட்டியார்களிடம்’’ உதவி கேட்கலாம். தற்போதைய மத்தியஅரசு பந்தா அடிப்பவர்களால் பந்தாடப்பட்டுக் கொண்டிருக்கிறது போண்டிகளிடம்தான் பிச்சை கிடைக்கிறது என்றே வைத்துக் கொள்வோம். இருந்தாலும், கிளிண்டன் அரசு மனித உரிமை மீறல்களைப் பார்த்துக் கொண்டு, ஒத்துக்கொண்டு கடன் கொடுக்காது. இதன் மூலமாகவாவது மனித உரிமைகளுக்கு இந்நாட்டில் மரியாதை கிடைக்கிறதா?! என்று பார்ப்போம்.

America bill clinten App exclusive
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe