ராசிகளின் தொடர்ச்சி...
துலாம்
துலா ராசிக்கு சனி, 4, 5-ன் அதிபதி.
வாக்கியப்படி
சனி 5-ஆமிடத்தில் அமர்ந்திருப்பார். உங்கள் வாரிசுகளுடன் சற்று மனத் தாங்கல் இருந்துகொண்டே இருக்கும். முக்கியமாக அவர்கள் கல்வி, வேலை பற்றிய கவலை அதிகமாக இருக்கும். சிலர் குழந்தைகளின் கல்வியின் பொருட்டு, வீடு மாறி இருப்பீர்கள். அல்லது வேறு வீடு தேடிக்கொண்டிருப்பீர்கள். சிலர் பூர்வீக வீட்டை எப்படியாவது விற்றுவிட பெரும் முயற்சி எடுத்துக்கொண்டிருப்பீர்கள். உங்கள் வயிறு அல்லது முழங்கால் பிரச் சினையால் அவதிப்படுவீர்கள். சிலர் வேலை மாறுதலை எதிர்கொள்வர்.
திருக்கணிதப்படி
சனிப்பெயர்ச்சி ஆரம்பித்தவுடன், உங்கள் 6-ஆமிடத்தில் அமர்ந்த சனி வீடு, வேலை, இடம், பங்குகள் என இவற்றை முதல் வேலையாக மாற்றிவிடுவார். சினிமா கலைஞர்கள், டி.வி.யில் வேலை பார்ப்பவர்கள், தாங்கள் இதுவரையில் வேலை செய்துகொண்டிருந்த நிறுவனத்தை மாற்ற வேண்டிவரும். இந்த மாற்றங்கள் உங்கள் அலைச்சலை குறைக்கும். கடன்களை அடைக்கும். உங்கள் கடன் அடைகிறது ஏனெனில் வேலைவாய்ப்பு அதிகமாக கிடைக்கும். உங்கள் வேலையில், கைபேசியின் பங்கு அதிகமிருக்கும். உங்களில் சிலரின் வாரிசு அல்லது இளைய சகோதரன் வேலை கிடைக்கப்பெறுவர். உங்களில் சிலர் வீடு கட்டும் ஒப்பந்தம் பெறுவீர்கள். சிலர் வீடு கட்ட ஒரு காண்ட்ராக்டரை, அணுகி, வீடு கட்டும் ஒப்பந்தம் செய்துகொள்வீர்கள்.
துலா ராசிக்கு, திருக்கணிதப்படி, 6-ஆமிடம் எனும் துர்ஸ்தானத்தில், ஒரு பாவர், சனி அமர்ந்திருப்பது நன்மையே தரும். இனிப்புடன் சனீஸ்வரரை வணங்குவோம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்கு சனி 3, 4-ஆம் அதிபதி ஆவார்.
வாக்கியப்படி
வாக்கியப்படி சனி, 4-ஆமிடத்தில் உள்ளார். வீடு மாற்றம் இருக்கும். அது குழந்தைகளின் பள்ளிக்கூடம் சம்பந்தமாக அமையும். சிலர் பள்ளி வாகனத்தை மாற்றுவீர்கள். வயல் டிராக்டர் போன்ற இயந்திரத்தை மாற்றுவீர்கள். உங்கள் மருத்துவர்களை மாற்றுவீர்கள்.பங்கு வர்த்தகத்தை, லாபம் தரும் விதமாக மாற்றுவீர்கள். சினிமா கலைஞர்கள், நடிக்கும் இடத்தை மாற்றுவர். பணம் போடும் வங்கியையும் மாற்றுவீர்கள். வீடு, வாகன மாற்றம் அதிகரிக்கும்.
திருக்கணிதப்படி
விருச்சிக ராசிக்கு 5-ஆமிடத்தில் உள்ளார். இந்த 5-ஆமிட சனி உங்கள் எண்ணங்களில், யோசனைகளில் பழமையைத் தருவார்.
இதனால் முன்னாடி இருந்ததே நல்லாயிருந் தது. இப்போ மாத்தினது ஒன்னும் சரிப்பட்டு வரலை என்று புலம்புவீர்கள். பழைய டாக்டரே நல்ல மருந்து தருவார் என்பீர்கள். பழைய வங்கியே பரவாயில்லை. பழைய பள்ளிக்கூடத்தில், ஒழுக்கம் சம்பந்த விஷயம் நன்றாக இருந்ததே என வியப்பு தெரிவிப்பீர் கள். கட்சி மாறிய மந்திரிகள் பழைய கட்சியில், மரியாதையாக பேசுவார்கள். இந்த புதுக்கட்சியில் மருந்துக்கு கூட மரியாதையில்லை என எரிச்சல்படுவீர்கள். எல்லா மாறுதல்களும் நன்மை தராது எனும் பாடத்தை 5-ஆமிட திருக்கணித சனி சொல்லித் தருவார். குலதெய்வத்தையும், அருகிலுள்ள சனீஸ்வரருக்கு விளக்கேற்றியும் வணங்கவும்.
தனுசு
தனுசு ராசிக்கு சனி 2, 3-ன் அதிபதி.
வாக்கியப்படி
வாக்கியப்படி 3-ஆம் வீட்டில், தனுசு ராசியில் அமர்ந்திருப்பார். உங்களுக்கும், உங்கள் இளைய சகோதரனுக் கும், வீடு, மனை, வாகன விஷயமாக பேச்சு ஓடிக் கொண்டிருக்கும். அல்லது வங்கி பணத்தை அப்படியே டிபாசிட்டாக வைத்திருக்கவா அல்லது வீடு, மனையாக மாற்றலாமா என்றும் யோசனை நடக்கும். உங்களின் சிலரின் குடும்பத்தில், கூட்டுக்குடும்பமாக தொடர்வதா அல்லது அவரவர் தனித்தனியாக இருக்கலாமா எனும் வாக்குவாதம் நடக்கும். பணியாளர்களை மாற்றுவதும் பற்றியும், வீட்டில், தொழில் இடங்களில் பட்டிமன்றம் நடக்கும். சில பணியாளர்கள், வேறிடம் செல்வது பற்றிய சிந்தனைனயில் இருப்பர். கார் வைத்திருப்பவர்கள், சிறிய சைக்கிள் வாங்கிவிடலாம் என சிந்தனை செய்வர். வீடு குத்தகை, வயல் குத்தகை சரிப்பட்டு வருமா என மண்டை குடையும்.
திருக்கணிதப்படி
சனி, உங்கள் ராசியின் 4-ஆமிடத்திற்கு மாறிவிடுவார். வாக்கியப்படி யோசனை செய்தவை, நடைமுறைக்கு வந்துவிடும். வீடு ஒப்பந்தத்தை, வயல் குத்தகையை மாற்றிவிடுவீர்கள். பணியாளர் குறைப்பு, உங்கள் தொழில் செய்யும் இடத்தில் இருக்கும் குடும்பத்தில், அவரவரும் தனித்தனியாக வீடு பார்த்து விடுவீர்கள். வங்கி பணத்தை, வீடாக, வயலாக, தோட்டமாக, வாகனமாக மாற்றிவிடுவீர்கள். சில பணியாளர்கள், வீட்டில் வேலை செய்பவர்கள் அவர்களாகவே மாறிவிடுவர். நீங்கள் உயர்ரக வாகனம் வைத்திருந்தாலும், சிறு பயண தேவைக்கு ஒரு சைக்கிள் வாங்கி விடுவீர்கள். இது உடற்பயிற்சி ஆகவும், உங்கள் நலனை, சுகத்தை மேம்படுத்துவதாகவும் அமையும். நீங்கள் ஏதோ ஒன்றை கற்க ஆரம்பித்துவிடுவீர்கள். இவ்வாறு கல்வி பயிற்சியில் சேர்ந்தால், உங்களுக்கு திருக்கணிதப்படி சனிப்பெயர்ச்சி ஆகிவிட்டார் என அர்த்தமாகும். சனீஸ்வர அபிஷேகத்துக்கு ஆவன கேட்டுச்செய்யுங்கள்.
மகரம்
மகர ராசிக்கு சனி 1, 2-ன் அதிபதி.
வாக்கியப்படி
ஏழரைச்சனியின் பாத சனி காலம். காசு, பணம் செலவழிவதை உங்களால் கட்டுபடுத்த முடியாது. பேச்சும் அர்த்தமற்றதாக இருக்கும். சிலருக்கு பணவரவு ரொம்ப தட்டுப்பாடாக இருப்பதால், வேறு வழியின்றி சிக்கனமாக இருக்க நேரிடும். ஒன்றுக்கும் உதவாத அலைச்சல் இருக்கும். வெளியூர் போனாலும், வெளிநாட்டுக்கு போனாலும், ஏனோ திரும்பி வரவேண்டிய சூழ்நிலை வந்துவிடும். கைபேசி தகவல்களால் பணம் இழக்கும் நிலையுண்டு. உங்கள் சைக்கிள் மற்றும் இரு சக்கர வாகனம் காணாமல் போகும் நிலைவரும்.
திருக்கணிதப்படி
மகர ராசியின் 3-ஆமிடத்திற்கு சனி மாறிவிடுவார். உங்களுக்கு மனதைரியம் அதிகமாகிவிடும். எது வந்தாலும் சமாளித்துக்கொள்ளலாம். எனும் மனஉறுதி மேம்படும். எனவே பணம் சம்பந்தமானதா, பார்த்துக்கொள்ளலாம் என உறுதியான முடிவெடுப்பீர்கள். அவசர செலவுக்கு, நிரந்தர வைப்புத் தொகையை உடைத்து, சமாளித்து விடுவீர்கள். சில மனை, வீடுகளைவிற்று, அவை சம்பந்தமாக கையெழுத்து போடுவீர்கள். வீடு கட்டும் ஒப்பந்தம் செய்வீர்கள். ரியல் எஸ்டேட் தொழிலில் உள்ளோர். தொழில் சம்பந்தமான நிறைய டாக்குமெண்ட்டில் கையெழுத்து போடுவீர்கள். உங்களில் சிலர் பத்திரிகைத் துறை சம்பந்தம் பெறுவீர்கள். இதுமாதிரி நிறைய ஒப்பந்தம் ஏற்பட்டால், உங்கள் சனி திருக்கணிதப்படி வேலை பார்க்கிறார் என்று அர்த்தம். சனீஸ்வரருக்கு வஸ்திரம் சாற்றி வழிபடவும்.
கும்பம்
கும்ப ராசிக்கு சனி 12, 1-ன் அதிபதி.
வாக்கியப்படி
வாக்கியப்படி ஜென்மச் சனியாக இருப்பார். ராசியிலேயே சனி நகர்வதால், எண்ணக் குழப்பம் ஏற்படும். எந்த விஷயத்தை எவ்விதம், யாரைக்கொண்டு முடிப்பது என்பதில், முடிவெடுக்க திணறுவீர்கள். இதனால் லோபிக்கு இரட்டைச் செலவு எனும் கதையில், இரட்டிப்பு செலவை செய்துகொண்டிருப்பீர்கள். இதில் அரசியல்வாதிகளின் நிலைதான் வெகு பரிதாபமாகிவிடும். இருக்கிற கட்சியைவிட்டு விலகுவதா, புது கட்சியில் சேருவதா என்று யோசித்து, யோசித்து, எந்த முடிவும் எடுக்கமுடியாமல் திணறுவார்கள். எனவே குடும்பஸ்தர்களும், அரசியல்வாதிகளும், எந்த பக்கம் போனாலும் இடிக்குதே என்கிற மனநிலையில் நாட்கள் ஓடும்.
திருக்கணிதப்படி
கும்ப ராசிக்கு, 2-ஆமிடமான பாதச் சனியாக அமர்வார். நீங்கள் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்குமோ, இல்லையோ, ஒரு உறுதியான முடிவு எடுக்க இயலும். வீட்டில் உள்ளவர்கள், செலவு அதிகமானாலும் பரவாயில்லை என்று, சில முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றிவிடுவர். அரசியல்வாதிகளும், யார் நிறைய பணம் தருகிறார்களோ, அவர்கள் பக்கம் போய் சேர்ந்துவிடுவர். உங்களின் சில பயம், கவலைகளை அகற்றி விடுவதால் மாறுதலான விஷயங்களை முன்னெடுத்து விடுவீர்கள். சனீஸ்வரருக்கு முடிந்த காணிக்கை செலுத்துங்கள்.
மீனம்
மீன ராசிக்கு சனி 11, 12-ன் அதிபதி.
வாக்கியப்படி
12 எனும் விரயச் சனியாக ஏழரைச்சனியின் ஆரம்பக் கட்டத்தில் உள்ளார். ஒரு முடிவும் எடுக்கமுடியாமல் ஆனால் மாறுதல் அவசியம் எனும் நிலையில், அந்த மாறுதலை எப்போது தொடங்குவது என எண்ணம் அலைபாயும். தொழில் செய்பவர்கள், இடமாற்றலாமா, தொழிலை மாற்றலாமா, முதலீட்டை அதிகரிக்கலாமா, தொழிலை வெளிநாட்டு அளவிற்கு விரிவுபடுத்தலாமா என மிக யோசனை கொள்வர். அரசியல் வாதிகள், எந்த கட்சிக்கு மாறுவது, எந்த கட்சியில் நல்ல பதவி அல்லது நிறையப் பணம் கிடைக்கும் என மண்டை குழம்பி இருப்பர்.
திருக்கணிதப்படி
சனி, ஜென்மச்சனியாக ராசிக்கே வந்து அமர்ந்துவிடுவார். அதனால் உடனே தொழிலை விரிவாக்கம் செய்து, வெளிநாடு அளவில் கொண்டு செல்வீர்கள். அரசியல்வாதிகள், துண்டை போட்டு மூடி பேரம்பேசி, தோதுப்பட்ட கலர் துண்டை போட்டு, கட்சி மாறி விடுவர். எவ்வளவு அலைச்சலோ, அதற்கு ஈடான லாபம் வரும்படி பார்த்துக்கொள்வர். ஒரு முடிவு எடுத்து, அலைய ஆரம்பித்தால் திருக்கணிதப்படி, சனி வேலை செய்கிறார் என்று அர்த்தம். சனீஸ்வரருக்கு வஸ்திரம் சாற்றி வழிபடவும்.