"கருட கமன தவ சரணகமலமிஹ
மநஸி லஸது மம நித்யம்
மம தாபமபாகுரு தேவ
மம பாபமபாகுரு தேவ'
எனத் தொடங்கும் இந்த இனிமையான பாடலை இசையுடன் ரசித்துக் கேட்டு பலர் மகிழ்ந்திருப்பார்கள். கருட வாகனத்தில் வரும் ஸ்ரீமகாவிஷ்ணுவை துதிக்கும்விதமாக சிருங்கேரி பீடாதிபதி ஸ்ரீ பாரதி தீர்த்த ஸ்வாமிகள் இப்பாடலை எழுதினார்.
ஸ்ரீ மகாவிஷ்ணுவின் வாகனமாகவும், வேதத்தின் வடிவமாகவும் விளங்கும் கருட பகவானை (கருடாழ்வார்) வழிபடுவதுமூலம் நம் ஜாதகத்தில் நாகதோஷம், ராகு- கேது தோஷம் போன்றவைகள் இருந்தால் அதன் விளைவுகளை சற்று தடுக்கமுடியும். அதே நேரம் நோய்களின் தாக்கத்திலிருந்து விடுபடவும் கருடபகவானின் வழிபாடு மிக சிறந்தது.
ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தில் "பெரிய திருவடி' எனப் போற்றப்படும் கருடபகவான் பிரம்மதேவரின் புதல்வரான கஷ்யப மகரிஷி, விநதை தம்பதியினருக்கு மகனாக ஆடி மாதம் வளர்பிறை சுவாதி நட்சத்திரம் (பஞ்சமி திதி) அன்று பிறந்தார் என புராணங்களின்மூலம் தெரியவருகிறது. பகவான் வேத வியாசர் உபதேசித்த ஸ்ரீமத் பாகவதத்தில் ஆதி பர்வத்தில் கருட வைபத்தில் கருட பகவானின் அவதாரம் மற்றும் அவரது பெருமைகளைப் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.
நரசிம்மருக்கு சுவாதி நட்சத்திரம் ஜென்ம நட்சத்திரமாக இருப்பது போன்றே கருடபகவானுக்கும் சுவாதி நட்சத்திரம் ஜென்ம நட்சத்திரம்.
தன் கணவரான கஷ்யப மகரிஷியிடம் விநதை சிறப்பு வரம் பெற்றதால் கருடபகவான் ஞானம், வீர்யம், ஐஸ்வரியம், தேஜஸ், சக்தி போன்ற அரிய குணங்களைப் பெற்றார்.
கருடபகவான் வழிபாடு என்பது பண்டைய பாரதத்தில் இருந்த ஒரு வழிபாடு என்றே சொல்ல லாம். மௌரியர்கள், குப்தர்களின் ஆட்சி காலத்தில் கருட வழிபாடு இருந்ததாக வரலாற்று ஆய்வுகளின்மூலம் தெரியவருகிறது.
கழுகும், பருந்தும் பறவை இனத்தில் ராசாளி வகை உயிரினம் என சொல்லப் படுவதுண்டு. பழங்காலத்தில் இந்த இனத்தை எழால், கங்கு, கூளி, கழுகு, பருந்து, பணவை என அழைத்தனர். பருத்தில் பெரும் பருந்து, செம்பருந்து, கரும் பருந்து என மூன்று வகைகள் உண்டு.
மதுரைக்காஞ்சி நூலில் "பருந்து இருந்து உலிக்கும்பல் மாண் நல் இல்' என்கிற வரி வருகிறது. அன்றைய வணிகர்களின் வீடுகள் உயரமாக கட்டுப்பட்டு இருந்தது.
அதில் பெரிய பருந்துகள் வந்து அமர்ந்து சென்றன என நாட்டின் வளமையைப் பற்றி சங்கப் புலவர் பாடியுள்ளார்.
செம்பருந்து உடலான குங்குமப்பூ குங்குமம் நிறத்தில் இருக்கும். கழுத்துப் பகுதி வெண் நிறத்தில் இருக்கும். கருட ஸ்துதி ஸ்லோகம் ஒன்றில்,குங்குமாங்கித வர்ணாய குந்தேந்து தவளாயச விஷ்ணு வாஹந நமஸ்துப்யம் க்ஷேமம் குரு ஸதா மம எனச் சொல்லப்பட்டுள்ளது. இது செம்பருந்தின் நிறத்தை குறிக்கும்வண்ணம் துதிப்பாடல் அமைந்துள்ளது. பொதுவாக கருடனை பறவைகளின் அரசன் "பட்சி ராஜா' என சொல்லுவதுண்டு.
கருடபகவான் ஸ்ரீ மகாவிஷ்ணுவுக்கு வாகனமாகவும், அவருடைய கொடியின் சின்னமாகவும் விளங்குகிறார். எனவேதான் "திருமாலும் கருடனும் ஒன்றே' என பெரியவர்கள் சொல்வார்கள்.
ஸ்ரீ மகா விஷ்ணுவிடம் பக்தியைக்கொண்ட கருடபகவானைப் போற்றும்விதமாக ஸ்ரீ வேதாந்த தேசிகர்-
நம பந்நக நத்தாய வைகுண்ட வச வர்த்திநே
சுருதி ஸிந்து ஸதோத்பாத மந்தராய கத்தமநே
எனத் தொடங்கும் "ஸ்ரீ கருட தண்டகம்' எனும் பெயரில் துதிப்பாடலை இயற்றினார். இந்த துதிப்பாடலை பக்தியுடன் துதித்தால் காரியத்தடை நீங்கும். தீராத நோய்கள் தீரும். மனதிற்கு வலிமையைத் தரும் என்பது ஐதீகம்.
எடை கூடும் அதிசய கருடன்செதுக்கிய கல் திருமேனி படிப்படி யாக எடை கூடும் அதிசயம் பற்றி கேள்விப்பட்டது உண்டா? கோவில் நகரமான கும்பகோணத்திற்கு அருகேயுள்ள நாச்சியார் கோவிலில் அருள்பாலிக்கும் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வார் இக்கோவிலை மங்களாசாசனம் செய்துள்ளார்.
ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சன்னதிக்கு இடதுபுறம் கல் கருடன் சன்னதி உள்ளது. ஒரே கல்லால் செதுக்கப்பட்ட அழகிய கம்பீரமான கருடபகவான் திருமேனி சிலை, மூலவராகவும், உற்சவராகவும் காட்சியளிக்கிறார். இவருக்கு தினமும் ஆறு வேளை பூஜைகள் நடைபெறுவதுண்டு. மார்கழி, பங்குனி மாதத்தில் உற்சவம் நடைபெறும் சமயத்தில் மூலவரான கல் கருடன் திருமேனி சிலையை கருவறையிலிருந்து வெளியே எடுத்து வரும்போது நான்கு பேர்கள் மட்டுமே தூக்கி வருவார்கள். வெளியே ஒவ்வொரு நிலைக்கு வரவர கற்சிலையின் எடை தானாகவே கூடும். அதற்கு ஏற்ப எட்டு பேர்கள், 16 பேர்கள், 22 பேர்கள் என 64 பேர்கள் எடைக்கு ஏற்ப சிலையை தூக்குவார்கள். கோவிலைவிட்டு வெளியே வந்தபிறகு நூற்றுக்கணக்கான (குறைந்து 128 பேர்கள்) பக்தர்கள் சிலையை தூக்குவார்கள். அந்தளவுக்கு எடையானது தானாகவே கூடுகிறது. சுமார் 6.00 மணி நேரம் வீதியுலா முடிந்தபின்பு உள்ளே வரும்போது அதேபோன்று படிப்படியாக கல் சிலையின் எடை குறையும். அதற்கு ஏற்ப பழையப்படி தூக்கும் பக்தர்களின் எண்ணிக்கை குறையும். கடைசியில் அதே நான்கு பேர்கள் மட்டுமே கருவறையில் கொண்டு வைப்பார்கள்.
இந்த அதிசய மகத்துவத்தை வருடம் தோறும் உற்சவத்தின்போது பக்தர்கள் கண்டு களிப்பார்கள்.
பொதுவாக கருட பகவானை வியாழக் கிழமையில் வழிபடுவது நன்று. அதிலும் அன்றையதினம் கருட காயத்ரி மந்திரத்தை ஜெபித்தால் கூடுதல் பலன் கிட்டும்.
"ஓம் தத்புருஷாய வித்மஹே
ஸூவர்ண பட்சாய தீமஹி
தன்னோ கருடஹ் ப்ரசோதயாத்.'