பெண்களுக்குதான் குழந்தையை ஈன்றெடுக்கக்கூடிய சக்தியை இறைவன் ஏற்படுத்தியிருக்கிறார். பெண்களுக்கு ஆரோக்கியம் சிறப்பாக இருந்தால்தான் அவர்களது வாழ்க்கை ஆனது நிம்மதியாகவும் சுறுசுறுப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். ஒழுங்கான ஆரோக்கியம் இருக்க வேண்டும் என்பதற்கு மாதவிடாயானது சரியான நேரத்தில் ஏற்படுகின்றபொழுது அவர்களது ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் பிரச்சினை ஏற்படுகின்றபொழுது அதனால் ஏற்படக்கூடிய பக்க விளைவு என்பது பல்வேறு நிலையில் இருக்கிறது. மாதவிடாய் சரியாக ஏற்படாத பெண்களுக்கு உடல்நிலை பாதிப்பு, கர்ப்பப்பை பிரச்சினை, குழந்தை பெற்றெடுப்பதில் பிரச்சினை, இல்லற வாழ்க்கையில் பிரச்சினை என பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. ஒரு பெண்ணின் கர்ப்பப்பைக்கும், கர்ப்பப்பை சார்ந்த பகுதிகளுக்கும் நவகிரகங்களில் சந்திரன் ஆதிக்கம் செலுத்துகிறார். சந்திரன் ஒரு பெண்ணின் மனநிலைக்கும் உணர்ச்சிகளுக்கும் காரகனாக இருக்கிறார். அதுபோல ரத்த காரகன் செவ்வாய் ரத்த ஓட்டத்திற்கு காரகனாகிறார்.
பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய், சந்திரன் சிறப்பான நிலையில் இருந்தால் ஆரோக்கியமானது சிறப்பாக இருக்கும். சந்திரன் செவ்வாய் பலவீனம் அடைகின்றபொழுது மாதவிடாய் கோளாறு, உடல் எடை கூடுதலாகவோ- குறைவாகவோ ஆகிறது. இதன் மூலமாக பல்வேறு பிரச்சினைகளை பெண்கள் சந்திக்க நேரிடுகிறது.
நவகிரகங்களில் சந்திரன் தினக் கோளாகும். சந்திரன் ஒரு ராசி மண்டலத்தை சுற்றிவர எடுத்துக் கொள்ளக்கூடிய நாட்கள் 27 நாட்கள் ஆகும். அதுபோல சிறந்த ஆரோக்கியத்துடன் இருக்கக்கூடிய பெண்களுக்கும், 27 நாட்களுக்கு ஒருமுறை மாத விலக்கு ஏற்படுகிறது. சந்திரன் ஒரு ராசியில் இரண்டு கால் நாட்கள் சஞ்சரிப்பார். அதுபோல பெண்களுக்கு மாத விலக்கும் 2, 3 நாட்கள் நீடிக்கிறது.
பொதுவாக பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் வலுவாக ஜென்ம லக்னத்தையோ- சந்திரனையோ பார்வை செய்கின்றபொழுது பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுகிறது. ஒரு பெண்ணின் ஜாதகத்தில் சந்திரன் சனி, ராகு- கேது சேர்க்கை பெற்றிருப்பதும், செவ்வாய், சனி, ராகு- கேது சேர்க்கை பெற்றிருப்பதும் பெண்களின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
சந்திரன் பாவ கிரக சேர்க்கையோடு பலவீனமாக இருந்து அதன் தசை புக்தி நடைபெற்றாலும், அதுபோல செவ்வாய் பாவ கிரக சேர்க்கை பெற்றோ, வக்ரகதியில் அமையப்பெற்றோ இருந்து தசை புக்தி நடைபெற்றாலும் மாதவிடாய் கோளாறு, கர்ப்பப்பை பிரச்சினை, மனக் குழப்பங்கள், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
சந்திரன் பலவீனமாக இருக்கக்கூடிய பெண்களுக்கு குறிப்பாக கர்ப்பிணி பெண்களுக்கு அமாவாசை, பௌர்ணமி நாட்களில் அதிகப்படியான உடல்நிலை பாதிப்புகள் ஏற்படுகிறது. பெண்கள் ஜாதகத்தில் சந்திரன், செவ்வாய் பாவ கிரக தொடர்போடு 6, 8 ஆகிய ஸ்தானங்களில் இருக்கின்றபொழுது கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை சந்திக்கக்கூடிய அனுகூலமற்ற நிலை உண்டாகிறது.
அதுபோல நவ கிரகங்களில் குருபகவான் கர்ப்பப் பைக்கு மிக முக்கிய காரணமாக விளங்குகிறார். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் குரு பகவான் சனி, ராகு- கேது சேர்க்கை பெறுவதும், குரு வக்ரகதியில் இருப்பதும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், கர்ப்பப்பை பிரச் சினைகளை ஏற்படுத்துகிறது.
ஜாதகத்தில் சந்திரன், செவ்வாய், குரு போன்ற கிரகங்கள் சுப கிரக தொடர்போடு சுப கிரக நட்சத்திரங்களில் அமையப்பெற்றால் சிறப்பான ஆரோக்கியங்கள் உண்டாகிறது. ஒரு பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய்- கேது சேர்க்கை பெற்றாலோ, கேது நட்சத்திரத்தில் அமையப்பெற்றாலும் ஹார்மோன்ரீதியான பாதிப்புகள் ஏற்பட்டு, குறிப்பாக மாதவிடாய் பிரச்சினை, தைராய்டு பிரச்சினை உண்டாகி இதன்காரணமாக மனவாழ்க்கையில் ஈடுபாடற்ற நிலை, குழந்தை பாக்கியம் ஏற்படுவதில் பிரச்சினை உண்டாகிறது.
ஒரு பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் பலவீனமாக இருக்கக்கூடிய நிலையில் அப்பெண் எவ்வளவு இளம் வயதில் திருமணம் செய்யமுடியுமோ அவ்வளவு இளமை வயதில் திருமணம் செய்து, திருமணமாகிய சிறிது காலத்திலே குழந்தை பெற்றெடுத்துக்கொள்வது தற்காலத்திற்கு மிகவும் உகந்தது. செவ்வாய் பலவீனமாக இருக்கக்கூடிய பெண்கள் திருமணத்திற்குபிறகு காலம் தாழ்த்தாமல் குழந்தையை பெற்றெடுத்துக்கொண்டால் தேவையற்ற பிரச்சினைகளைத் தவிர்த்து தக்க நேரத்தில் வாரிசு யோகத்தை அடையமுடியும்.
பொதுவாக செவ்வாய் பலவீனமாக இருக்கக்கூடிய பெண்கள் இயற்கை உணவுகளை உட்கொள்வது, செவ்வாய்க்கு உரிய நவரத்தினமான பவழக்கல் கொண்ட அணிகலன்களை அணிந்துகொள்வது, முருக வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.