1, 2, 7, 8-ஆம் அதிபதிகள் ராகு- கேது நட்சத்திரத் தில் நின்றால் விவாகரத்து வழக்கு வரும்.
லக்னத்திற்கு அல்லது லக்னாதிபதிக்கு 6, 8, 12-ஆம் அதிபதிகள் சம்பந் தம் பெற்று தசை புக்தி நடக்கும் காலங்களிலும் தம்பதிகளுக்குள் வழக்கு கள் பஞ்சாயத்துகள் விதி வரைவந்து அவமானப் படுத்தும்.
கிரகச் சேர்க்கையும் திருமண பிரிவினையும்ஒருவரின் திருமண வாழ்க்கையில் பிரிவினை ஏற்படுத்துவதில் கிரகச் சேர்க்கைக்கு அதிக பங்கு உள்ளது. சில கிரகங்களின் சேர்க்கை சாஸ்திரங்களில் யோகம் என்று கூறப்பட்டாலும் இரு ஆதிபத்தியரீதியான கிரகங்கள் ஒரு ஆதிபத்தியரீதியாக சுப பலன்களை வழங்கினாலும் மற்றொரு ஆதிபத்தியரீதியாக ஜாதகருக்கு அசுபத்தை வழங்கியே தீரும். இது பிரபஞ்ச நியதி. சுக்கிரன்+சனி, செவ்வாய் +சனி, சனி+சந்திரன் சேர்க்கை எந்த இடத்தில் இருந்தாலும் பொருளாதாரத்தில் ஏற்றம் உண்டு. ஆனால் பொருத்தமற்ற வாழ்க்கைத்துணை, வாழ்க்கைத்துணையால் அவமானம், மனக்கசப்பு, மறு விவாகம் உண்டாகும். பல வருடங்களுக்குப்பிறகு விவாகரத்து நடப்பது, கௌரவத்திற்காக பல வருடம் வாழ்ந்து பார்ப்பது, தம்பதிகள் ஒற்றுமை இருப்பதுபோல் நடிப்பது, தம்பதிகள் தங்களது சொந்த விருப்பத்திற்காக சுதந்திரமான ஒரு நட்பு ஏற்படுத்திக்கொள்வது போன்ற பலன்கள் நடக்கும். இது போன்ற சம்பவங்கள் அந்த கிரகச் சேர்க்கையை பலப்படுத்தக்கூடிய தசா புக்திகளில் மட்டுமே நடக்கும்.
12 லக்னத்திற்கும் பிரிவினையை வழங்கும் கிரகச் சேர்க்கைகள்.
லக்னம்: கிரகச் சேர்க்கைகள்
மேஷம்: புதன் + சுக்கிரன்
ரிஷபம்: செவ்வாய் + குரு
மிதுனம்: செவ்வாய் + குரு, குரு + சனி
கடகம்: குரு + சனி
சிம்மம்: சனி + குரு
கன்னி: சனி + குரு, குரு + செவ்வாய்
துலாம்: குரு + செவ்வாய்
விருச்சிகம்: சுக்கிரன் + புதன்
தனுசு: புதன் + சுக்கிரன், புதன் + சந்திரன்
மகரம்: புதன் + சந்திரன், சந்திரன் + சூரியன்
கும்பம்: சூரியன் + சந்திரன், சூரியன் + புதன்
மீனம்: சூரியன் + புதன், புதன் + சுக்கிரன்
மேலே நான் குறிப்பிட்டுள்ள அந்த கிரகச் சேர்க்கையை யோகம் என்று ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. அதை நான் மறுக்கவில்லை. எந்த கிரகங்கள் யோகம் என்று கூறுகின்றோமோ அந்த கிரகம் அவயோகத்தையும் தருகிறது. எனது நீண்ட நாள் ஆய்வினில் நான் கண்டு பிடித்த உண்மை. இதை வெளியில் சொல்ல வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால் நாளுக்கு நாள் பிரிவினை, விவாகரத்து வழக்கு அதிகமாகிக்கொண்டே வருகிறது.
ஒரு கூட்டம் திருமணம் நடக்கவில்லை என்று அலைகிறது. மறுபுறம் விவாகரத்திற்கு கோர்ட் நோக்கி செல்கிறார்கள். சூரியன், புதன், சுக்கிரன் இவை மூன்றும் முக்கூட்டு கிரகங்கள். பெரும்பான்மையாக சேர்ந்தே பயணிப்பார்கள். இதில் சூரியன், புதன் சேர்க்கை புத ஆதித்ய யோகம் என்று சிறப்பித்து சொல்லப்படுகிறது. சிலருக்கு கல்வியில் நிபுணத்துவத்தை கொடுக்கும். ஆனால் திருமண வாழ்க்கையில் விரக்தியையும் வேதனையையும் வஞ்சனை இன்றி வழங்குகிறது.
இந்த மூன்று கிரகங்களும் அதிகப்படி யாக முன்பின் ராசிகளில் மட்டுமே இருப்பார்கள். ஒரு பாவகத்தின் ஆரம்ப முனையில் இருக்கும் கிரகம் முந்தைய பாவகத்தின் கடைசியில் இருக்கும் கிரகத்துடன் சம்பந்தம் வெற்று கிரக இணைவாக வேலை செய்யும். அதே போல் ஒரு பாவகத்தின் இறுதியில் நிற்கும் கிரகத்திற்கும் அடுத்த பாவகத்தின் ஆரம்பத்தில் நிற்கும் கிரகமும் இணைந்து கிரகச் சேர்க்கையாக செயல்படும். ஜோதிடத்தில் பல நுணுக்கமான- நுட்பமான விஷயங்கள் உள்ளது. சுமார் இரண்டு மாதத்திற்கு முன்பு ஒரு தம்பதிகள் தனது மகள் மற்றும் மருமகனின் ஜாதகத்தை கொண்டுவந்து கொடுத்தார்கள். இருவரின் ஜாதகத்திலும் 7-ஆம் அதிபதி 11-ல் இருந்தார். அவர்கள் என்னிடம் இதற்கு பொருத்தம் பார்க்க வேண்டும் என்று கொடுத்தார்கள். நான் இந்த ஜாதகத்தை பார்த்தவுடன் இவை இரண்டும் பொருந்தாது. இரண்டு ஜாதகத்திற்கும் வலுவான தார தோஷம் உள்ளது என்று கூறினேன்.
அதற்கு அந்த பெற்றோர்கள் இவர்களுக்கு திருமணம் முடிந்து மூன்று மாதம் ஆகிறது. ஆனால் நீங்கள் இவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது என்று ஏன் கூறவில்லை என்று கேட்டார்கள். தம்பதிகள் இன்னும் கணவன்- மனைவியாக வாழ துவங்கவில்லை. கணவன்- மனைவியாக அவர்கள் வாழ்ந்து இருந்தால் அதில் சில குறிப்புகள் உணர்த்தியிருக்கும். அவர்கள் சேர்ந்து வாழ்வதற்காக எந்த ஒரு குறிப்பு இதில் இல்லையென்று கூறிவிட்டேன். ஆம் இவர்களுக்கு எந்த உறவும் இல்லை. கல்யாணமான 15-ஆவது நாளில் மருமகன், மகளைக் கொண்டுவந்து விட்டு ஒரு இரண்டு நாட்களில் வந்து அழைத்துச் செல்கிறேன் என்று சென்றார். இதுவரை திரும்ப வரவில்லை. நாங்கள் பலமுறை நேரில்சென்று அவமானப்பட்டு திரும்பி வந்துவிட்டோம். இதுவரை பத்திற்கு மேற்பட்ட ஜோதிடரை சந்தித்துவிட்டோம். அதில் பலரும் மூன்று மாதம் நான்கு மாதத்தில் சரியாகிவிடும் என்றுதான் கூறினார்கள். ஆனால் தாங்கள் மட்டும்தான் இரண்டு ஜாதகத்திலும் தார தோஷம் உள்ளது என்று கூறியுள்ளீர்கள். சில கிரகங்களில் சேர்க்கை சில பாவகங்களில் சம்பந்தம் தம்பதிகளாக வாழவிடாது.
திருமணப் பொருத்தத்தில் மிக முக்கியமே கிரக சேர்க்கையே. ஒரு ஜாதகத்திற்கு எளிமையாக பலன் கூறிவிடலாம்.
ஆனால் ஒரு திருமணப் பொருத்தம் மிகக்கடினம். ஒருவரின் வாழ்க்கையை நிர்ணயிப்பது திருமணப் பொருத்தம். இதில் சிறிய பிழைக்கூட வரக்கூடாது. நட்சத்திரப் பொருத்தம் பார்ப்பதைவிட கிரக இணைவிற்கும் கட்டப் பொருத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது எனது அனுபவபூர்வமான கருத்தாகும்.
திருமணப் பொருத்தம் பார்க்கும்போது ரஜ்ஜு, யோனி பொருத்தம் இல்லாத ஜாதகம் தம்பதியினர் பிரிந்துவிடுவார்கள்.
11-ஆம் பாவகத்திற்கு திரிகோணதிபதிகள் சம்பந்தம் பெறும் போது சட்டப்படியான மறுமணமாகவும், அசுப மற்றும் லக்ன பாவிகள் சம்பந்தம் பெறும்போது சட்டத்திற்கு புறம்பான உறவும் ஏற்படும்.
11-ல் இரண்டுக்கு மேற்பட்ட கிரகங்கள் அமர்தல், 1, 11-ஆம் அதிபதிகள் பரிவர்தனை பெறும்போது இரு தாரம் ஏற்படும்.
7-ஆம் அதிபதிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பெண் கிரகம் சம்பந்தம் பெறுவது இரண்டுக்கும் மேற்பட்ட திருமணத்தைகூட தரும்.
பகை கிரகங்களின் தசை புக்திகள் அல்லது காலப்பகை தசாபுக்திகள் நிச்சயம் பிரிவினையைத் தருகிறது. குறுகிய கால தசாபுக்தி என்றால் சிறிது காலம் பிரிந்து வாழ்கிறார்கள். நீண்டகால தசாபுக்தி என்றால் விவாகரத்து வழக்கை சந்திக்கிறார்கள்.
அதாவது தம்பதிகளில் ஒருவருக்கு நடக்கும் தசாபுக்தி மற்றவரின் தசாபுக்திக்கு பகை கிரகமாக இருந்தால் நிச்சயமாக பிரிவினை உண்டு. இதை அடுத்த வாரம் விரிவாகப் பார்க்கலாம்.