திருமணம் என்பது ஆணும் பெண்ணும் இணைந்து வாழ சட்டப்படி செய்து கொள்ளக்கூடிய ஒரு ஒப்பந்தமாகும். கலாசாரங்களின் அடிப்படையில் திருமணம் ஒரு முக்கிய சடங்காக நடத்தப்படுகிறது. சமீபகாலமாக காதல் திருமணங்கள் அதிகரித்து வருகின்றன. இது கலாசார மாற்றத்தையும் சாதி, மத பாகுபாடு இல்லாத சமுதாயம் உருவாக அடித்தளமாகவும் அமைகிறது. காதல் என்பது ஒரு உணர்வு. ஆதாம் ஏவாள் காலம்முதல் காதல் என்ற உணர்வு சமுதாயத்தில் நிலவிவருகிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக இலை மறைவாக இருந்த காதல் திருமணங்கள் தற்போது மிக அதிகமாகி வருகிறது. காதல் தவறு என்ற காலம் முடிந்துவிட்டது. மிகக் குறிப்பாக காதல் கலப்பு திருமணங்கள் நடக்கின்றன.

கலப்புத் திருமணம் என்பது வெவ்வேறு மதத்தைச் சேர்ந்த அல்லது வெவ்வேறு சாதியைச் சேர்ந்த இருவர் செய்துகொள்ளும் திருமணமாகும். அதாவது, ஒருவருடைய மதமோ அல்லது சாதியோ மற்றவருடைய மதத்திற்கோ அல்லது சாதிக்கோ சம்பந்தம் இல்லாமல் இருக்கும். கலப்புத் திருமணங்கள் இந்தியாவில் சட்ட பூர்வமாக அங்கீகரிக்கப்படுகிறது. மேலும் கலப்புத் திருமணம் செய்துகொள்வோருக்கு அரசு பல்வேறு சலுகைகளையும், உதவிகளையும் வழங்குகிறது. 

ஐந்தாம் பாவகமும் காதலும்

Advertisment

மனித வாழ்வின் மிக முக்கிய அங்கமான திருமணத்தை பெற்றோர் நிச்சயிக்கும் திருமணம், சுய விருப்ப விவாகம் என இரண்டாக வகைப்படுத்தலாம். ஜோதிடரீதியாக ஒருவரின் ஜாதகத்தை வைத்து பெற்றோரினால் நிச்சயிக்கப்படும்  திருமணமா அல்லது ஜாதகரின் விருப்ப திருமணமா என்பதை எளிதாக கூறமுடியும். ஒருவருக்கு காதல் திருமணம் நடைபெற பூர்வபுண்ணிய ஸ்தானம் எனப்படும் ஐந்தாமிடம் லக்னம் அல்லது லக்னாதிபதியுடன் சம்பந்தம் பெற்று இருக்கவேண்டும். இதை சஞ்சித கர்மா என்று கூறலாம். சஞ்சித கர்மா என்பது ஒருவரின் கடந்தகால செயல்களின் மொத்த விளைவுகளைக் குறிக்கும். ஒருவரின் நல்வினை மற்றும் தீவினை பதிவுகள் அனைத்தையும் உள்ளடக்கியது. இது அடுத்தடுத்த பிறவிகளில் அனுபவிக்கப்படும். ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 5-ஆமிடம் மனம், புத்தியைக் குறிக்கும். ஒருவரின் விருப்பு வெறுப்புகளைத் தெரிவிக்குமிடம். சென்ற ஜென்ம தொடர்புகளை அறியுமிடம். கடந்து வந்த ஜென்மத்துடன் தொடர்புபெற்ற மனிதர்களுடன் தீர்க்கப்படவேண்டிய சம்பவங்கள் உள்ள மனிதர்களை இந்தப் பிறவியில் சந்திப்போம். அதாவது கடந்த பிறவியில்  தொடர்புபெற்ற மனிதர்களை இந்தப் பிறவியில் நிச்சயம் சந்திப்போம். எனவே காதலிப்பவர்களுக்கு முதலில் 5-ஆமிடம் வேலை செய்யவேண்டும்.

பெரும்பான்மையாக ஐந்தாமிடத்துடன் சம்பந்தம் பெறும் கிரகங்களின் தசை புக்தி காலங்களில் அல்லது சுக்கிரன், ராகு தசை புக்தி காலங்களில் ஒருவருக்கு காதல் ஏற்படும். அதேபோல் ஒருவரின் ஜாதகத்தில் காதலுக்கான காரக கிரகம் புதன் மற்றும் 5, 7-ஆம் பாவகத்தை வைத்தே ஒருவரின் திருமண வாழ்வைப் பற்றி கூற முடியும். 2, 5, 7, 11-ஆம் பாவக தொடர்பு மற்றும் புதன், கேதுவின் சம்பந்தம் வைத்தும் ஒருவரின் திருமணம் எத்தகையது என்பதை எளிதாக கூறமுடியும். காதல் கிரகங்கள் 4-ஆம் அதிபதியோடு தொடர்பு ஏற்பட்டால் பள்ளி, கல்லூரி காலங்களிலும் ஒன்பதாம் பத்தாம் அதிபதிகளுடன் தொடர்பு ஏற்பட்டால் வேலை செய்யும் இடத்தில் அல்லது மத்திம வயதில் காதல் வரும்.

காதல் கலப்பு திருமண கிரக அமைப்புகள்

Advertisment

வெளிநாட்டவர், வெளிமாநிலத்தினர், வேற்று இனம், மதத்தைச் சேர்ந்தவர்களை திருமணம் செய்துகொள்ளுதல் கலப்பு திருமணமாகும். 

திருமணம் தொடர்பான பாவகங்கள் 1, 2, 7, 8 ஆகியனவாகும். காதல் பற்றி கூறும் பாவகம் 5. இதில் 1, 2, 7-ஆம் பாவங்களுடன் 5-ஆம் பாவகம் சம்பந்தம் பெற்றால் காதல் திருமணம் நடக்கும்.

9-ஆம் பாவகம் ஒருவரின் ஜாதி, மதம், குலம், கோத்திரம் ஆகியவற்றை கூறுமிடம்.  1, 2, 5, 7-ஆம் பாவகத்துடன் 9-ஆம் அதிபதி சம்பந்தப்பட்டால் காதல் கலப்பு திருமணம் நடைபெறும்.

மேலும் ஏழாமிடம் அல்லது ஏழாம் அதிபதிக்கு சுக்கிரன், சனி அல்லது சனி, செவ்வாய் தொடர்பு இருந்தால் ஜாதகர் கலப்பு திருமணம் செய்வதற்கான அமைப்பு உண்டாகும்.

 5, 7, 9-ஆம் அதிபதிகள் பலம் பெறுவதும் 

நீசம் அடையாமல் இருப்பதும் முக்கியம். மேலும் ஒன்பதாம் அதிபதி அல்லது ஒன்பதில் நின்ற கிரகம் நீசம் பெற்று அத்துடன்  1, 2, 5, 7-ஆம் பாவகம் சம்பந்தம் பெற்றால் தகுதி தரம் இல்லாத தனது குலத்தவரால் வெறுக்கக்கூடிய கலப்பு திருமணமாக அமைகிறது. 

9-ஆம் பாவம் அதன் அதிபதி, குரு பலம்பெற்று 1, 2, 5, 7-ஆம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் நடைபெறும் அல்லது பெற்றோரே வேறு குலத்தில் வரன் பார்த்து திருமணம் நடத்துவார்கள். 

ஏழாம் இடத்துடன் தனித்து சனி, ராகு- கேதுகள் இருந்தாலும் காதல் கலப்பு திருமணம் நடைபெறலாம்.

ராகு- கேது கிரகங்கள் பிற மதத்தினரை குறிக்கும். களத்திரகாரக கிரகங்களான சுக்கிரன் மற்றும் செவ்வாய்க்கு  ராகு- கேது சம்பந்தம் இருப்பது வேற்று மதம், இனம் மொழி பேசுபவருடன் கலப்புத் திருமணத்தை ஏற்படுத்தும். ஏழாம் அதிபதியுடன் சனி, ராகு- கேது சம்பந்தம் பெறுவதும் கலப்பு திருமணத்தை நடத்தும்.

7-ஆம் இடத்தில் சனி, ராகு- கேது நட்சத்திரம் இருந்தாலும் கலப்பு திருமணம் நடக்க வாய்ப்புள்ளது.

7, 8, 9-ஆம் பாவகம் அசுபத்தன்மையுடன் இணைந்து நடக்கும் காதல் கலப்புத் திருமணங்கள் தோல்வியை தழுவும் .

மேலே கூறிய இந்த பாவகங்கள் தசா புக்தியுடன் சம்பந்தப்படும்போது வெளியூர், வெளிநாடு வெளிமாநிலம் செல்பவர்கள் காதல் கலப்பு திருமணம் செய்து அங்கேயே தங்கி விடுகிறார்கள்.

காதல் கலப்பு திருமணம் நல்லதா?

காதல், கலப்புத் திருமணங்களுக்கு ஒருவரின் ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளே முக்கிய காரணமாகும். 

இந்தக் கிரக நிலைகள் அமைவதற்கு அவரவர் பூர்வஜென்ம கர்மவினையே காரணமாகும். சுக்கிரன், புதன், சனி, ராகு- கேது ஏழாம், ஒன்பதாம் அதிபதி ஆகியோரின் சேர்க்கை, பார்வை காதல் கலப்பு திருமணங்கள் நடக்கத் தூண்டுகின்றன. ஏழரைச்சனி, கண்டச்சனி, அஷ்டமச்சனி, அர்த்தாஷ்டமச்சனி காலங்களில் வீட்டைவிட்டு வெளியேறி ரகசிய திருமணம் நடத்துகிறார்கள்.

பெரும்பான்மையான காதல் கலப்பு திருமணங்கள் தற்போது தோல்வியிலேயே முடிகிறது. பலர் இரண்டாவது, மூன்றாவது திருமணத்தை நோக்கிச் செல்வது மனதிற்கு வேதனையைத் தரும் சம்பவமாக உள்ளது. ஒருவனுக்கு ஒருத்தி என்பதே மரபு. 

ஒவ்வொரு பெற்றோர்களும் தனது பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கனவிலேயே தங்கள் வாழ்க்கையை நடத்துகிறார்கள். தகுதி தராதரம் இல்லாத குல கௌரவத்தை குறைக்கும் காதல் ஜாதகருக்கு பாதுகாப்பு அல்ல. அவர்களின் திருமணத்திற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது. ஆயிரம் காலத்து பயிரான திருமணம் தற்போது ஆறு நாள் பயிர் ஆகிவிட்டது. காதல் கலப்புத் திருமணங்கள் சமுதாய ஒற்றுமையை அதிகரிக்கிறது  என்பது நல்ல விஷயம்தான். ஆனால் ஒருவரின் குணநலன்கள், உணவு பழக்கவழக்கங்கள், கலாசாரங்கள் அனைத்தும் அவரவரின் குல, மத மரபுப்படியே இருக்கும். புதிய கலாசாரங்கள் மரபுகளை வெகு எளிதில் யாராலும் மாற்ற முடியாது. இந்த சூழ்நிலை காதல் கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்களின் வாழ்க்கையில் விரிசலை ஏற்படுத்துகிறது. மேலும் அவர்களுக்கு குழந்தை இருந்தால் அவர்களின் எதிர்காலமும் பாதிக்கப்படுகிறது. பெற்றோர்கள், உடன்பிறந்தவர்கள் என அனைவரின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி விடுகிறது. பெற்றோர்கள் பெரியோர்கள் அனுமதியின்றி ஆசிர்வாதமின்றி செய்யப்படும் ரகசிய திருமணங்கள் ஜாதகரின் வாழ்க்கையை நிர்மூலப்படுத்துகிறது. ஒரு திருமணம் நிச்சயமாக பெற்றோர்கள், பெரியோர்கள் முன்னோர்களின் குலதெய்வத்தின் ஆசியுடனே நடக்க வேண்டும்.

தற்போதைய பெற்றோர்கள் 15 வயதிலேயே குழந்தையின் நடவடிக்கையை வைத்து அவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்க ஜோதிடரை அணுகுகிறார்கள். 

இதுபோன்ற கிரக அமைப்புள்ள குழந்தைகளிடம் பெற்றோர்கள் மிக எதார்த்தமாக, பக்குவமாக, வாழ்க்கையின் நெளிவு சுளிவுகளை உணர்த்துவது இதற்கான சிறந்த பரிகாரமாகும்.

செல்: 98652 20406