மீபகாலத்தில் ஒருசில ஜோதிடர்கள் அல்லது ஜோதிடர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் அப்பாவி மனிதர்களை ஏமாற்றிப் பணம் பறிக்கும் வகையில் ஏதாகிலும் ஒரு கிரகத்தை வைத்து... உலகமே அழியப் போவதாக மக்கள் எல்லாருக்கும் அழிவுகாலம் நெருங்கி விட்டதாக உலகில் பிரளயம் உருவாகப்போவதாக ஆபத்து வரப் போவதாக ரீல் ரீல்களாக கதைகள்விட்டு மனிதர்களை பயமுறுத்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

அதன் ஒருவழியாக இப்போதும், கும்பத்தில் இருக்கும் சனியும் ராகுவும், சிம்மத்தில் இருக்கும் செவ்வாய், கேதுவைப் பார்க்கிறார்கள். அதன்வழியாக ஒட்டுமொத்த மக்களுக்கும் உலகிற்கும் பெரும் பாதிப்பு ஏற்படப் போவதாகவும் இதற்கு பரிகாரம் செய்து கொள்ளவேண்டும் என்றும் கலர் கலராய் ரீல்களை விட்டு வருகின்றனர்.

அப்பாவி மக்களுக்கு ஜோதிடத்தின் நுணுக்கமோ, கிரகங்களின் வலிமையோ தெரியாது என்ற காரணத்தினால் இவர்கள் சொல்வதையும் நம்பவேண்டிய நிலையும், நம்பி தாம் உழைத்து சம்பாதித்த பணத்தை இதுபோன்ற ஏமாற்றுப் பேர்வழிகளின் சால்ஜாப்பு வார்த்தைகளை நம்பி இழக்க வேண்டியவர்களாகவும் இருக்கின்றனர்.

Advertisment

சனி + ராகு, கும்ப ராசியில் சஞ்சரித்துக் கொண்டிருப்பதாக கூறுபவர்கள் இப்போது அங்கு சனி வக்ரமாக இருப்பதை கவனிக்கவில்லை. ராகு மட்டுமே கும்ப ராசிக்குள் இப்போது நேர்மறையாக சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார்.

ஜூலை மாதம் 6-ஆம் தேதிமுதல் மிதுன குருவின் 9-ஆம் பார்வை கும்பத்திற்கும், அங்கு சஞ்சரித்துக் கொண்டிருக்கும் ராகுவிற்கும் கிடைப்பதால் கும்ப ராகுவினால் எந்தவிதமான பாதிப்பும் யாருக்கும் ஏற்படப் போவதில்லை.

அதேநேரத்தில் சிம்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் கேதுவையும் செவ்வாயையும் கவனத்தில் கொள்ளவேண்டும்! கேது, செவ்வாய் இருவருமே பாபர்கள்!

Advertisment

இதை நாம் கவனத்தில்கொண்டு பார்க் கின்றபோது இவர்களின் சஞ்சார நிலை யாருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றால்... மகரம் என்ற ஒரே ஒரு ராசியினருக்குத்தான்.

அதற்கு காரணம் மகர ராசிக்கு சிம்மம் எட்டாமிடம். அஷ்டம ஸ்தானம். மகர ராசியின் நாதனான சனியும், சிம்ம ராசியின் நாதனான சூரியனும் இயல்பாகவே ஒருவருக்கொருவர் பகைவர்கள்.

சிம்மத்தில் செவ்வாய், கேது இப்போது இணைந்துள்ளனர். அந்த இணைவும் ஜூலை மாதம் வரைதான். அதன்பிறகு செவ்வாய், கன்னிக்கு வந்துவிடுவார் என்பதால் வீரியம் குறைந்துவிடப் போகிறது!.

இன்னும் இருக்கின்ற சில நாட்கள் மகர ராசியினருக்கு ஒரு சோதனைக் காலமாக இருக்கும்... கொஞ்சம் நெருக்கடிகள் ஏற்படும்... 

அதுவே, தசாபுக்தி சாதகமாக இருக்கிறது என்றால் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனதுபோல் துன்பமெல்லாம் பறந்தோடிவிடும்.

சரி, தசாபுக்தியும் பாதகமாக இருக்கிறது. அதனால்... அஷ்டம செவ்வாயும் கேதுவும் உயிரைப் பறித்து விடுவார்களா? அதுபற்றி பார்க்க வேண்டுமென்றால் மாரகத்துவ கிரகங்களின் நிலைகளையும்... பாதகத்துவ கிரகத்தின் நிலைகளையும் பார்த்தாக வேண்டும். அவர்கள் நிலை நம்மை நெருங்காதவரை நிச்சயமாக யாருக்கும் மரணம் வந்து விடாது!.

அதேநேரத்தில் தொடக்கத்தில் இருந்து நான் கூறிவருவது உயிர்க்காரகம், பொருள் காரகத்தின் நிலைகள்பற்றி.

ஒருவரின் பாதகமான நேரத்தில் அவருடைய உயிருக்குத்தான் பாதிப்பு. கண்டம் வரும் என்பதல்ல. அது கிடையவே கிடையாது! 

ஒருவருக்கு ஏதாகிலும் ஒருவகையில் அவமானம் ஏற்பட்டாலும் அந்த அவமானம்கூட அவருடைய உயிர் நிலையைப் பாதுகாத்துவிடும்.... நோய்நொடிகள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்!.

ஒருவருக்கு ஏற்படும் அவமானம் என்பது அவர் உயிர் போனதற்கு சமமானதாகும்!

இக்காலத்தில் மகர ராசியினருக்கு மட்டும்தான் இந்தநிலை...

மகர ராசியினருக்கு அஷ்டம ஸ்தானத் தில் செவ்வாய், கேது சஞ்சரிப்பதுபோல், கடக ராசியினருக்கு அஷ்டம ஸ்தானத்தில் சனி சஞ்சரித்துவந்த நிலையில் இப்போது அங்கே அவர் வக்ரமாகி இருக்கிறார். அங்கு ராகு சஞ்சரிக்கிறார் என்றாலும் குருபார்வை அஷ்டம ஸ்தானத்திற்கு கிடைப்பதால் கடக ராசியினருக்கு இனி பாதிப்பில்லை.

கோட்சார கிரகங்களால் பாதிப்பு ஏற்படும் நிலை வந்தாலும், அவர்களின் சுய ஜாதகத்தின் அடிப்படையிலும் தசாபுக்தியின் காரணமாகவும் அவற்றில் மாற்றம் ஏற்படும்.

இக்காலத்தில் மீன ராசிக்காரர்களுக்கு சிம்மம் ஆறாம் இடம்... சத்துரு ஜெயஸ்தானம். மிதுன ராசிக்காரர்களுக்கு தைரிய வீரிய பராக்கிரம ஸ்தானம் துலா ராசிக்காரர்களுக்கு லாப ஸ்தானம் என்பதால் இந்த இடத்தில் கேது சஞ்சரித்தாலும் சரி, செவ்வாய் சஞ்சரித்தாலும் சரி, அது அவர்களுக்கு மிகப்பெரிய யோகத்தையே ஏற்படுத்தும். இதையெல்லாம் பலன் சொல்லி பயமுறுத்துபவர்களும்... அப்பாவிகளும் புரிந்துகொள்ள வேண்டும்!

அதேபோல், மேஷ ராசியினருக்கு ராகு சஞ்சரிக்கும் இடம் லாப ஸ்தானமான 11-ஆமிடம். கன்னி ராசியினருக்கு சத்துரு ஜெய ஸ்தானமான 6-ஆமிடம். தனுசு ராசியினருக்கு தைரிய வீரிய பராக்கிரம ஸ்தானமான 3-ஆமிடம் என்பதால் இந்த மூன்று ராசியினருக்கும் சாதகமான பலன்களையே ராகு வழங்குவார்!

அதனால், மேம்போக்காக இந்த இணைவு, அந்தப் பார்வை, இத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும், உலகிற்கும் மக்களுக்கும்  அழிவை உண்டாக்கிவிடும் என்றெல்லாம் யாரும் பயப்பட வேண்டாம்!

 ஒவ்வொருவருக்கும் தனித்தனி லக்னம் இருக்கும்! ராசி இருக்கும்! சுபர்கள், பாபர்கள் வேறுபடுவார்கள்! ஒருசில லக்னத்திற்கும் ராசிக்கும் இவர்களின் சஞ்சார நிலைகள்கூட சாதகமாக இருக்கும்! அதனால் பயத்திலிருந்து வெளியில் வாருங்கள்.

ஒரு மனிதர் பிறந்தநாள்முதல் இறுதிநாள் வரை வாழவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டதுதான் நம் வாழ்க்கை! அந்த வாழ்க்கையில் இடையில் சோதனைகளும் வரலாம்! சந்தோஷமும் ஏற்படலாம்! ஒவ்வொருவரின் கர்ம வினைக்கேற்ப அது அதிகபட்சமாகவும் இருக்கும்! சிலருக்கு குறைவாகவும் இருக்கும்! அந்த சமயங்களில் அதற்குரிய கிரக ஸ்தலங்களுக்கு சென்று வழிபடுவதன் வழியாக மழைக்காலத்தில் குடையைப் பிடித்துக்கொண்டு அதிலிருந்து பாதுகாத்துக் கொள்வதுபோல் கிரகங்களால் உண்டாகும் பாதிப்பில் இருந்து நம்மை நம்மால் பாதுகாத்துக் கொள்ளமுடியும். அந்த கிரகத்திற்குரிய தலத்திற்கு சென்று மனமுருகி வழிபட்டுவருவதால் பாதிப்பில் இருந்து வெளியில் வரமுடியும்!

இந்த உண்மையை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும்!

ஜோதிடம் என்பது ஒரு அறிவியல்... ஒவ்வொருவரின் பிறப்பு ஜாதகத்தை வைத்து அவர்களின் வாழ்க்கை நிலையை அறிவது!

அதேபோல்... ஒரு ஜோதிடன் என்பவன் ஜோதிடவியலை அறிந்தவன். கிரகங்களின் சஞ்சார நிலைகளை அறிந்தும் தசாபுக்தி நாதர்களின் நிலையறிந்தும் ஜாதகத்துடன் வருபவர்களுக்கு வழிகாட்டுபவன் மட்டும் தான்!

எந்த ஜோதிடனாலும் யாருடைய தலையெழுத்தையும் மாற்றிவிட முடியாது! பரிகாரம் செய்து யாருடைய வாழ்க்கையையும் சுபிட்சமாக்கிவிட முடியாது!

ஆனால்... சிறந்த ஜோதிடர்களால்.. கிரக நிலையறிந்து எந்த ஆலயத்திற்கு செல்ல வேண்டும்! அங்கு எப்படி பரிகாரம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறி... தம்மிடம் வருபவர்களைப் பாதுகாக்க முடியும்! இதுதான் ஜாதகருக்குள்ள கிரக நிலையறிந்து வழிகாட்டுவது!

ஒரு மருத்துவன் நோயாளியின் நோயறிந்து மருந்துகளைப் பரிந்துரைப்பதுபோல்... ஒரு ஜோதிடன் ஜாதக நிலையறிந்து அந்த ஜாதகனுக்கு அவன் செல்ல வேண்டிய கிரக ஸ்தலம் பற்றி பரிந்துரை செய்வான்! அதற்குமேல் நானே உனக்காக பரிகாரம் செய்கிறேன்... 

பூஜை செய்கிறேன் என்று யார் சொன்னாலும் அவர் ஏமாற்றுப்பேர்வழியாகும்!

செல்: 94443 93717