ஆன்மா உடல்.
ஆன்மா...! ஆன்மிகம் சார்ந்தது.
ஆன்மா இல்லையெனில் உடல் இல்லை.
ஆன்மாவை ஆள்வது பரமாத்மா..!
உடல்.... பஞ்ச பூதங்களிலானது.
பஞ்சபூத கிரகங்கள் கூட்டு தத்துவங்களைச் சார்ந்தது. இந்த கிரகங்களே... ஐம்புலன்கள் மற்றும் பொறிகளாக இந்த ஆன்மா சார்ந்த ஜட உடலை இயக்குகிறது.
பஞ்சபூதங்கள் என்பது... ஐந்து மூலப் பொருட்கள் ஆகும். ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், நிலம் ஐந்து மூலப் பொருட்களின் முதலாவதான ஆகாயம் பொய் அகங்காரத்தின் இருளிலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது.
பொய் அகங்காரம் என்பது... இருளின் வெவ்வேறு குணங்களாகும். மஹத்லிதத்வத்தின் அதாவது- மாயையின் மொத்த உருவாக இருக்கும். பொய் அகங்காரம் பரமாத்ம சக்தியிலிருந்தே உற்பத்தி செய்யப்படுகிறது என்பதாகும்.
அதாவது- ஒரு மனிதன் இந்த மாய ஜட உலகிலுள்ள அனைத்து பொருட்களையும் அடையவேண்டும். அனைவரையும் அதிகாரம் செய்யவேண்டும்.
உலகை அடக்கி ஆளவேண்டும் எனும் இந்த பொய் அகங்காரத்தின் காரணத்தால், ஜீவராசியின் போலியான சுகத்துக்காக பஞ்சபூதங்களிலான கூட்டுப் பொருட்கள் உண்டாக்கப்படுகின்றன. அனைத்திற்கும் பிண்ணனியாக பரமாத்மாவே இருக்கிறார். இருப்பினும் ஜீவராசியே..
ஜடப் பொருட்களை ஆட்சி செலுத்துபவனாக இருக்கிறான். ஜீவராசி அனுபவிக்க ஆசைப்படும் அனைத்திற்கும் பொய் அகங்காரமே பிறப்பிடமாகும்.
ஜீவராசி ஒவ்வொன்றையும் விரும்பும் பொழுது நிழலைப் போன்றுள்ள பொருட் களனைத்தும் பரமாத்மாவின் விருப்பத்தால் படைக்கப்பட்டு இவற்றின் பின்னால் ஓட ஜீவராசி அனுமதிக்கப்படுகிறான்.
இந்த ஜீவராசிகளுக்கு வேதங்கள்மூலமாக தர்ம சாஸ்திரம் என்ன கூறுகிறது.
10 உபநிஷத்துக்கள் 18 புராணங்கள் மூலமாக ஆன்மிகம் என்ன கூறுகிறது. வானவியல் ஜோதிட சாஸ்திரம் பலன்கள் மூலமாக என்ன கூறுகிறது.
இன்றைய நவீன விஞ்ஞான ஆய்வாளர்கள் விஞ்ஞானத்தின் மூலமாக என்ன கூறுகிறார்கள். இவற்றை தொடர்ந்து காண்போம்.
கட உபநிடதம்
ஆன்மிகம் பற்றி தெளிவாக நாம் புரிந்துகொள்ள வேண்டுமானால் கட உபநிடதம் கூறும் சில பகுதிகளை அறிந்து கொள்ள வேண்டும்.
அதில் நம்மைப் பற்றிய "ஆன்மா' எனும் அடிப்படை தகவல்களை நசிகேதன் மற்றும் எமதர்மன் உரையாடல்களின் மூலமாக எளிதாக அறிந்துகொள்ள முடிகிறது.
கேள்வி: நசிகேதன்... ஸ்தூல உடம்பு சூட்சும உடம்பு மிக வலிமை பெற்றது எது..? இதில் எதை வைத்து ஆன்மாவை அடைவது..?
பதில்: யமதர்மன்...! ஸ்தூல புலன்களை விட பொறிகளால் கவரப்படும் உலகியல் பொருட்கள் மகிமை வாய்ந்தவை. பொருட் களைவிட சூட்சும மனம் வலிமை வாய்ந்தவை. மனதை விட அகங்கார புத்தி வலிமை வாய்ந்தது.
ஆன்மா, புத்தியை விட அதிக வலிமை வாய்ந்தது ஆன்மாவை விட பரமாத்மா வலிமை வாய்ந்தவன். பரமாத்மாவைவிட வலிமை வாய்ந்தது ஏதுமில்லை. அவரே அறுதிப்பொருள்.
அவரே கடைசிச் சரணாலயம்.
ஆகவே.... நாம் எதை வசப்படுத்த நினைக்கிறோமோ அதனைவிட மேலான ஒன்றை, நாம் முதலில் வசப்படுத்த வேண்டும்.
அதாவது- பாம்பை வசப்படுத்த கீரியை நாட வேண்டியதைப்போல்..! ஏனெனில் பாம்பின்முன் பலம்வாய்ந்த தந்திரமான எதிரி கீரிதான். எதையும் அடக்க முயற்சிப்பது, வீண்வேலை, புத்தி விழிப்புணர்வு பெற்று திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பதைப்போல் அதாவது- புலன்களை அடக்கமுடியாது. ஆனால் திருத்த (திருப்ப) முடியும்.
மனதையும் அல்லது அவற்றுக்கு மேலானதைப் பற்றி கொண்டால் அவை அடங்கலாம். புலன்களோ, மனமோ, எப்பொழுதும் தன்னிச்சையாக செயல்படுவதில்லை. எல்லாவற்றிற்கும் பொறி களிலான புறத்தூண்டுதலே காரணம். அதனால்தான் புலன்களைவிட உலகியல் பொருள்கள் வலுவானவை என்கிறோம்.
புலன்கள் பொறிகளுடன் மனமும் சேர்ந்து ஒத்துழைக்கும்போது நாம் எதையும் செய்வதற்கில்லை. இளமை துடிப்பான வாலிபன் தனிமையில் அழகுவாய்ந்த பெண்ணை சந்திக்கிறான். அதுசமயம் அவன் மனம், ஸ்தூல உடம்பால் புலன்களுடன் காட்சிப் பொறியான அழகால் அவளுடன் கூடுவதற்கு ஏங்குகிறது. இது போன்றதாக பல உதாரணங்களில் ஒரு புதிய அழகான வீடு, அழகான கார், மண், பெண், பொன், பொருளில் லயித்திருக்கிறது. அப்பொழுது புலன்கள் மனதை மறந்துவிடுகின்றன. இங்கே பொறிகளால் (காட்சிகளால்)கவரப்பட்ட புலன்கள் மனதை மறந்துவிடுகின்றன. இங்கே மனம் தோல்வியடைந்து. புலன்கள் வலிமை வாய்ந்ததாகிறது. ஆனால் மனம் அந்தப் பரம்பொருளான (ஆன்மா) பரமாத்மாவில் லயித்திருக்கும்போது நம்மை கடந்து செல்லும் எதையும் நாம் பார்ப்பதில்லை.
இங்கே மனதை புத்தியில் அடக்கவேண்டும். புத்தியை கண்காணிக்க வேண்டும்.
மனம் ஒத்துழைக்காதபொழுது புலன்கள் வேலை செய்வதில்லை. எனவே வெளிப் பொருட்களைவிட மனமே வலிமை வாய்ந்தது. இப்பொழுது புத்தியின் வேலை வருகிறது. அது விழிப்புறாத நிலையில், மனம் புலன்கள் மற்றவற்றை பணி செவ்வனே நடைபெறுவதில்லை.
புத்தி விழிப்புணர்வு இல்லாத ஒருவனை அவற்றை தவறான வழியில் அழைத்துச் சென்றுவிடுகின்றன. ஆகவே, புத்தியை நல்வழியில் எப்போதும். நாம் பாதுகாக்கவேண்டும். புத்தியைவிட ஆன்மா வலிமை வாய்ந்தது. அது அவ்யக்தம் (மஹத்லிதத்வம்) அதாவது- இறைவனின் ஆற்றல் அது இந்த உலகையே இயக்கிக் கொண்டிருக்கிறது.
ஆனால், அந்த தளம் இல்லாமல், எதையும் இயக்க முடியாது. எனவே, அவ்யக்தத்தைவிட, இறைவனே மேலானவன். எங்கு சென்றால் திரும்புவதில்லையோ, அது என்னுடைய உயர்ந்த இடம், ஒரு ஆன்மாவுக்குரியவன், எந்த இஷ்ட தெய்வ உலகிற்கு, வேண்டுமானாலும் செல்லும் சுதந்திரத்தை பரமாத்மா அளித்துள்ளார்.
அவன் பரமாத்மாவின் ஆன்மிக உலகிற்கு சென்றால் மீண்டும் திரும்புவதில்லை. முக்தி பெறுகிறான்.
ஆனால் வேறு எந்த உலகத்திற்கு சென்றா லும் அதன் குறிப்பிட்ட காலம் முடிந்த நிலையில் அங்கு அழிவுபெற்று மீண்டும் ஜடத் திற்கு மஹத்லிதத்வத்தில் நுழைகிறான், பேசுவதை குறைத்து குருவை நாடு...
கேள்வி: நசிகேதன் கேட்கிறார்.இந்த ஆத்மா எல்லா உயிரினங்களிலும் மறைவாக உள்ளது. வெளிப்படையாக தெரிவதில்லை. ஆனால் ஒருமுகப்படுத்தப்பட்ட நுட்பமான புத்தியால் மகான்கள் மட்டும் எப்படி ஆன்மாவைக் காண்கிறார்கள்...?
பதில்: யமதர்மன் சொல்கிறார்..
மனத்தை உள்நோக்கி ஆன்மத்தரிசனம் செய்ய நினைப்பவர் முதலில் பேச்சை அடக்கவேண்டும்.
(ஆன்ம யோகத்தின் முதல் வாசலே பேச்சு குறைப்புதான் என்று ஆதிசங்கரர் கூறியிருக்கிறார்.)
பிறகு மனத்தை விழிப்பு நிலையிலுள்ள புத்தியில் நிறுத்த வேண்டும். பிறகு புத்தியை மகிமைவாய்ந்த ஆன்மாவில் அடக்க வேண்டும். பின் ஆன்மாவை அமைதி நிறைந்த, அதன் இருப்பிடமான பரமாத்மாவில் சேர்க்க வேண்டும். அல்லது இஷ்ட இறைவனிடம் சேர்க்க வேண்டும். பேச்சை குறைப்பதுதான் சாதனை.
இதுதான் முதல்படி ஏனெனில் உயர் வாழ்க்கைக்கு பேச்சு கட்டுப்பாடு அவசியம். "பேச்சு' உயர் வாழ்க்கைக்கும் ஏற்றதல்ல. சாதாரண வாழ்க்கைக்கும் பெரிய தடை வள வள பேச்சு மரியாதை தருவதில்லை. அதுமட்டுமின்றி அதிகம் பேசுவதால் நம் ஆற்றலின் பெரும்பகுதி போய்விடுகிறது, அந்த சக்தியை சேமித்தால் அது அக வாழ்க்கைக்கு உதவலாம், பேச்சு இரண்டு வகை. ஒன்று வெளிப்படையாக பேசுவது. இரண்டு உள்ளடங்கியே பேசுவது. (வாயால் கெட்டவர்களே பலபேர்.) எண்ணங்களின் கிளர்ச்சியால்தான் வாய் பேசுகிறது. எண்ணங்களில் வந்ததையெல்லாம் நாம் பேசக்கூடாது. மௌனமாக நாம் இருந்தாலும் எண்ணங்கள் உள்ளிருந்து மேலே. எழும் அப்பொழுதும் நாம் பேசாமலிருந்தால் எண்ணங்கள்.
அடங்கிவிடும். பேச்சை குறைப்பது என்பது சாதாரண விஷயமல்ல. அதனை தவிர்க்க பயிற்சி வேண்டும்.
எண்ணங்கள் எழுவதை எப்படி தவிர்ப்பது?
அவை எழும்பொழுது நாம் அதனை தவிர்த்து இடம், பொருள், ஏவல், தனியே நின்று கவனிக்க வேண்டும். நன்றாக பழகுபவர் என்ற நம்பிக்கையில் நம் மனதில் உள்ளதை எல்லாம் அதிகம் பேசினால் நம்மைப் பற்றிய இரகசியம் வெளிப்படும். பின்னர் ஏதோ ஒருசமயம் நம் ரகசியம் தெரிந்ததால் அவர்முன் நாம் கைகட்டி நிற்கும் நிலை ஏற்படும். பேச்சை தவிர்ப்பதைப்போல் எல்லா புலன்களையும் அடக்க பழகவேண்டும். புலன்கள் போகும் போக்கில் மனம் போவது பல சங்கடங்களுக்கு வழிவகுக்கும். ஆகவே, புலன்களை அடக்குவது பேச்சை அடக்குவது சாதனைக்கு முதல்படி. இந்தப் பயிற்சியே நமக்கு பெரிய ஆற்றலைத் தர இயலும். ஆன்மாவை அடைவது மட்டுமல்ல; வாழ்நாளை கட்டாயம் அதிகரிக்கும். "மனம்' என்ற ஒன்றை நாம் அறிந்திருப்பதால் இந்த முதற்படி பலருக்கு எளிதாக அமைகிறது.
புத்தியும், ஆன்மாவும் நமக்குப் புரியாதது. இதனை எப்படி அடைவது...?
பேட்டி (பேச்சு) அடங்குவதால் அது தானாகவே அடங்கி விடும் அல்லது புத்தியும் ஆன்மாவும் நமக்கு மெல்லப் புரியவரும். இறைநெறி கூராண கத்தியின்மேல் நடப்பதைப் போன்றதாகும். எழுங்கள், விழியுங்கள், நல்ல குருவை அடைந்து, ஞானம் பெறுங்கள். அதற்கு தகுதிவாய்ந்த குருவை அடையவேண்டும். ஆனால் அதற்குமுன் நாம் இரண்டு வகையான முயற்சிகள் செய்யவேண்டும். முதலில் எழுந்திருக்க வேண்டும். பிறகு விழிக்க வேண்டும். எழுந்து, விழித்து தகுந்த குருவை அடையும்பொழுது அவர் தன் அனுபவ நிலையை காட்டுவார். அதற்கான தாரக மந்திரம் இது-
"ஓம்..! அஸதோ மா ஸத்கமய
தமஸோமா ஜோதிர் கமய
மிருத்யோ மா அம்ருதம் கமய''
என்று பிரார்த்தனை செய்கிறது வேத மந்திரம். அகவளர்ச்சியில் நம் மனம் நாட்டம் கொள்ளும்போதுதான் குருவின் தேவையை உண்மையாக உணர்வோம். நாம் உண்மையாக உணர்ந்த தேவையுடன் தகுந்த குருவை அடைந்து அவரால் வழிகாட்டப் படும்பொழுது இறையனுபவம் நமக்கு வாய்க்கிறது.
இறைவனை நேரில் கண்ட குரு ஒருவர் மட்டுமே நம்மைச் சரியான வழியில் அழைத்துச் செல்லமுடியும். அவரே சத்குரு எனப்படுவர். இவர்களை காணவேண்டுமெனில் இமயமலை காடுகளுக்குள்தான் செல்லவேண்டும்.
ஒருசமயம் கபீர்தாஸரை அணுகி அவருடைய சீடர்களில் ஒருவர் கேட்டாராம் குருச்ரேஷ்டரே..!
உங்கள்முன் கோவிந்தனும் (பரமாத்மா)
ஒரு சத்குருவும் வருகிறார்கள். நீங்கள் யாரை முதலில் வணங்குவீர்கள். அதற்கு கபீர்தாஸரோ நான் கடவுளைப் பார்க்க மாட்டேன்.
சத்குருவைத்தான் நாடுவேன் என்றாராம்.
சீடன் ஏன் இப்படி..? என்று வினவ...
என் இனிய சீடா..!
சத்குருவின் சரணத்தை உறுதியாகப் பற்றிக்கொண்டால் அவர் நமக்கு கோவிந்தனை காட்டிக் கொடுப்பாரே..!
கோவிந்தனை நேரடியாக காண்பதைவிட குருவின் ஆசிகளோடு அடைவதில் எத்தனை கோடி இன்பம் கிடைக்கும் தெரியுமா..? என்றாராம் கபீர்தாஸர் இராமனைவிட இராம நாமத்திற்கு அதிகமான மதிப்பை தந்தவர். இவருடைய சத்குரு ராமனந்தர் ஆவார். எனவே உயர் வாழ்க்கைக்கு ஆன்மிக வாழ்க்கைக்கு முதல் தேவை தகுந்த குரு.
அவரிடமிருந்து நேரிடையான உண்மைகளைப் பெறலாம்.
பிறகு பயிற்சி..! ஆன்மா வேறு, உடம்பு வேறு, என்ற பயிற்சி. இந்த உடம்பு என்பது நம் ஆன்மாவை போர்த்தும் ஒரு சாதனமே..!
உண்மையான "நாம்' என்பது இந்த உடம்பினுள் ஒளிர்கின்ற ஆன்மா என்பதை மனதிற்கு புரியவைக்கவேண்டும்.
-தொடர்ந்து பார்ப்போம்!
செல்: 96599 69723
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/12/joth-2025-12-12-17-39-04.jpg)