பலகாலம் தவமிருந்து, ஸ்ரீ ரங்க விமானத்தைப் பெற்றுவிட்ட நிறைவு விபீஷணனுக்கு ஏற்பட்டது. அயோத்தியிலிருந்து ஸ்ரீரங்க விமானத்தைத் தலையில் வைத்துக் கொண்டு, இலங்கையை நோக்கி பயணத்தைத் தொடர்ந்தான். நண்பகல் நேரத்தில் காவிரி ஆற்றங் கரையிலுள்ள சந்திர புஷ்கரணியை அடைந்த விபீஷணன், தன் நண்பகல் நேர அனுஷ்டானங்களை மேற்கொள்வதற்காக, உயரமான இடத்தில் ஸ்ரீரங்க விமானத்தை வைத்தான். சந்திர புஷ்கரணியில் நீராடினான். நித்திய கடன்களை முடித்தான். ரங்க விமானத் தில் அலங்கரிக்கும் திருமாலுக்கு உச்சிகால பூசை செய்தான்.
அப்போது அங்கிருந்த முனிவர்கள், பக்தர்கள் என பலரும் ஸ்ரீரங்க விமானத்தில் ஸ்ரீ ரங்கநாதன் எழுந்தருளி இருப்பதைக் கண் குளிர கண்டார்கள். விமானத்தைக் காண காரணமான விபீஷணனை வாயார வாழ்த்தினார்கள். நல்ல வேளையில் ஸ்ரீ ரங்கநாதப் பெருமானை எல்லோரும் வலம் வந்து வணங்கினர்.
இச்செய்தி சோழ நாட்டை ஆண்டுவந்த மன்னன் தர்மவர்ம சோழனுக்கு எட்டியது. அரங்கநாதனை தன் அந்தரங்க தெய்வமாக, கண்ட நாள்முதல் காதல் கொண்ட அம்மன்னன்,
சந்திர புஷ்கரணியை நோக்கி விரைந்தான். ஸ்ரீ ரங்க விமானத்தைக் கண்டான். தன் கைகளால் அரங்கனுக்குப் பூசை செய்தான்.
வாய் நிறைய துதிப் பாடல்களைப் பாடினான். தன் பிறவிப் பயனை அடைந்துவிட்டதாகக் கருதினான்.
தன் நாட்டு மக்கள் அனைவரையும் அழைத்துவந்து வணங்கச் செய்தான். சில நாட்கள் காவிரிக் கரையில் தங்குமாறு விபீஷணனை வேண்டினான். விபீஷணன், யோசிக்கத் தொடங்கினான். ஸ்ரீ ரங்க விமானத்தை இலங்கையில் பிரதிஷ்டை செய்திடவேண்டும். அதன்பின் பிரம்மோற்சவ விழா கொண்டாடி, பிரம்மன், ஸ்ரீ ரங்கநாதனை வழிபட ஏற்பாடு செய்யவேண்டும். எனவே இனியும் காலம் தாமதிக்காமல் விடை பெற்றுக்கொண்டு புறப்படுவது சரி என முடிவுக்கு வந்தான்.
விபீஷணனின் கருத்தை அறிந்த தர்மவர்ம சோழன், "பிரம்மோற்சவம் நிகழும் காலம் நெருங்கிவருகிறது. அதற்காக இலங்கைவரை செல்ல வேண்டிய தேவையில்லை. இங்கேயே, இப்போதே, பிரம்மதேவன் வழிபடுவதற்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் நான் செய்து தருகிறேன். இங்கேயே பிரம்மோற்சவம் நடைபெறட்டும்'' என்று கூறினான்.
விபீஷணனும் இசைந்தான். பிரம்மோற்சவத்திற்கான ஏற்பாடுகள் வெகுவிமரிசையாக நடைபெற்றன. ஸ்ரீரங்கநாதனுக்கு நிகழும் பிரம்மோற்சவம் என்பதால் மக்கள் அனைவரும் அலை அலையாக அங்கு திரண்டனர். சொன்னபடி பிரம்மதேவனும் வந்து பூசை செய்தான். நிறைவாக விபீஷணன், எல்லோரிடமும் விடை பெற்றுக்கொண்டு ஸ்ரீ ரங்க விமானத்தை நிலத்திலிருந்து பெயர்த்து தலையில் வைக்க முயன்றான். ஆனால் ஸ்ரீ ரங்க விமானம் எள்ளளவும் அசையவில்லை. தன் வலிமைகள் அனைத்தையும் கூட்டி மீண்டும் விபீஷணன் முயற்சிசெய்தான். எனினும் அவ்விமானத்தை நகர்த்த இயலவில்லை. ஆச்சரியத்துடன் ஸ்ரீ ரங்கநாதனை வேண்டினான்.
கண்ணிழந்தவன், கண்ணைப் பெற்று, மீண்டும் இழந்ததைப்போல வருந்தினான். செய்வது அறியாத திகைத்தான். அரங்கனின் வான் குரல் அசரீரி ஒலித்தது. தர்மவர்ம சோழன் என்பவன், வடக்கே தசரதன் நிகழ்த்திய யாகத்திற்கு வந்திருந்தான்.
அப்பொழுது ஸ்ரீ ரங்க விமானத்தைக் கண்டவன், என்னை காவிரிக் கரைக்குக்கொண்டு வருவதற்காக கடுமையாக தவம் செய்தான்.
அதன் பலனாக, நான் இங்கு எழுந்தருளினேன். எனவே நான் இங்கேயே இருந்து, என் பார்வையின் மூலமாக இலங்கைக்கு அருள் பாலிக்கிறேன்'' என்றார். இதைக் கேட்டு வேறுவழியின்றி அக்கருத்தை ஒப்புக்கொண்ட விபீஷணன் மீண்டும் ரங்க விமானத்தை வலம்வந்தான். இலங்கையை நோக்கிப் புறப்பட்டான்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/04/amuthu-2025-11-04-18-02-49.jpg)