விடுதலை என்பது வெறும் சொல்லல்ல; அதுவொரு சுதந்திர வெளி. சிறகுகள் படபடக்க வானில் தன் விருப்பம்போல் பறக்கின்ற ஒரு பறவையின் பேரானந்தத்தைத் தரவல்லது. இந்த மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு உயிருக்குமான உரிமையது. ஆனாலும் தங்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராகவும், தங்களுக்கான உரிமையைப் பெறும் உத்வேகத்தோடும், களத்தில் நின்று, ஒவ்வொரு உயிரும் தனக்கான உரிமைக்குரலை உரத்து எழுப்பியாக வேண்டிய தேவையும் அவசியமும் இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது.
இந்த 21-ஆம் நூற்றாண்டிலும் பிற நாடுகளிலுள்ள செல்வங்களையும், இயற்கை வளங்களையும் கொள்ளையடிக்கும் பேராசையில் வல்லரசு எனும் முகமூடி மாட்டிக்கொண்ட ஏகாதிபத்திய அரசுகள், சிறிய நாடுகளின் மீது தங்களது ஏகபோக ஆதிக்கத்தைச் செலுத்திவருகின்றன. அன்பு, அமைதி, சகோதரத்துவம், சமாதான பேச்சுவார்த்தை என்பதையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு, போர் எனும் கொடுங்கரத்தை நீட்டி யுத்தக்களத்திற்கு வம்படியாய் பிற நாடுகளை இழுத்துவருகின்றன.
சமீபநாட்களில் நடைபெற்ற ரஷ்யா - உக்ரைன் மற்றும் இஸ்ரேல் - ஈரான், காசா ஆகிய நாடுகளுக்கிடையேயான போர், தற்போது நிறுத்தப்பட்டுள்ளதே தவிர, போருக்கான கருமேகங்கள் பசியெடுத்த வல்லூறென இன்னமும் வானை வட்டமிட்ட வண்ணமிருக்கின்றன என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.
உலகில் எங்கெல்லாம் போர்கள் நடைபெறுகிறதோ அங்கெல்லாம் போருக்கு எதிரான சமாதானக் குரல்களும் எழுந்துகொண்டே இருக்கின்றன.
2022-ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் செப்டம்பர் 1 வரை 32 நாடுகளில் போர் நடைபெற்றதாகவும், இந்தப் போர்களினால் இதுவரை சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மனித உயிர்கள் பலியாகியிருப்பதாகவும் ஆய்வறிக்கையொன்று (போர்கள் ஒரு பார்வை - 2024) தெரிவிக்கிறது. ஆப்கானிஸ்தான், துருக்கி, எத்தியோப்பியா, ஈராக், ஏமன், சிரியா, சோமாலியா, நைஜீரியா, லிபியா, மியான்மர் உள்ளிட்ட நாடுகள் உள்நாட்டுப் போர்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்தப் போர்களுக்குப் பின்னால் கோரப்பற்களை நீட்டி மனித இரத்தம் ருசிக்க துடித்துக்கொண்டிருப்பவை வல்லரசு நாடுகளே என்பதை உலக நாடுகளெல்லாம் உணர்ந்துகொள்ள வேண்டிய நேரமிது.
பல்லாயிரமாண்டுகால நீண்டநெடிய வரலாற்றின் மரபுத்தொடர்ச்சியைத் தன்னகத்தே கொண்ட தமிழ் நிலத்தில், ‘போர் வேண்டாம்; சமாதானம் வேண்டும்’ எனும் போருக்கு எதிரான அமைதியை விரும்பும் கவிக்குரல், சங்க இலக்கிய காலந்தொட்டு இன்றுவரை எதிரொலித்து வருவதைக் கேட்க முடிகிறது.
உலகப் பொதுமறை எனப் போற்றப்படுகிற அற நூலான திருக்குறளில் 77-ஆவது அதிகாரமான படைமாட்சி’யில் படைகளின் சிறப்பையும், போர்த்திறனையும் குறிப்பிடும் திருவள்ளுவரே, கீழ்க்கண்ட குறளையும் எழுதியுள்ளார்.
‘பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லது நாடு.’
(அதிகாரம்: நாடு - குறள்: 735)
‘பல குழுக்களாகப் பிரிந்து பாழ்படுத்தும் உட்பகையும், அரசில் ஆதிக்கம் செலுத்தும் கொலைகாரர்களால் விளையும் பொல்லாங்கும் இல்லாததே சிறந்த நாடாகும்’ என்று இக்குறளுக்கு உரையெழுதியுள்ளார் முத்தமிழறிஞர் மு.கருணாநிதி.
சுமார் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், கி.மு.3-ஆம் நூற்றாண்டுக்கும் கி.மு. 1-ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டதாகச் சொல்லப்படும் திருக்குறளை எழுதிய வள்ளுவர், அக்காலச் சூழலுக்கேற்ப ஒரு நல்ல நாட்டிற்கான அடையாளங்களாக எவையெல்லாம் இருக்க வேண்டுமென்று கூறுவதைப்போலவே, எவையெல்லாம் இருக்கக் கூடாதென்றும் பட்டியலிடுகிறார்.
போட்டி, பொறா

போட்டி, பொறாமை, பேராசை, ஆதிக்கவெறி, எல்லைத் தகராறு ஆகியன அறவே இருக்கக்கூடாது. மீறி இருப்பின் நாடுகளுக்கிடையே பகைத் தீ மூளும். போர் அபாயம் சூழும். போர் என்று வந்துவிட்டாலே மனித உயிர்கள் பலியாகும். அமைதியின்மை நிலவும். நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும். மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவர். நாட்டின் முன்னேற்றமே தடைப்பட்டு நின்றுவிடும். ஆகவே, வெளிநாட்டுப் பகை மட்டுமின்றி, உள்நாட்டுப் பகையும் இல்லாததாக ஒரு நாடு விளங்கவேண்டும் என்கிற பெருவிருப்பத்தை வள்ளுவர் குறள் வழி நமக்குப் போதித்துள்ளார்.
வேட்டையாடி வாழ்ந்துவந்த மனித சமூகம், இனக்குழுக்களாகப் பிரிந்து வாழத் தலைப்பட்டபோதே பேராசையும், பகைமையும், சண்டையும் தொடங்கி விட்டதாகக் கூறுகின்றனர் வரலாற்று ஆய்வறிஞர்கள். பின்னர் சிற்றரசுகளின் ஆட்சிக் காலம், பேரரசுகளின் ஆட்சிக் காலம், இன்றைய நவீன அறிவியல் யுகத்தில் நடைபெற்றுவரும் மக்களாட்சிக் காலம் என எக்காலத்திலும் மனித சமூகத்துக்கு மிகப்பெரிய பிரச்சினையாகவும், முன்னேற்றத்திற்கான பெரும் தடையாகவும் முன்னிற்பது இந்தப் போர் எனும் பேரபாயமே.
புயல், சூறாவளி, வெள்ளம், சுனாமி போன்ற இயற்கையின் பெருஞ்சீற்றத்தினாலும், டெங்கு, காலரா, கொரோனா போன்ற நோய்த்தாக்குதலினாலும் உயிரிழந்த மனித உயிர்களை விடவும், போர்களினால் உயிரிழந்த அப்பாவி மக்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகம் என்பதே இந்தப் போரினால் விளையும் பெருந்தீமைக்குச் சான்றாகும்.
ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான இராமாயணம், 12-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த கம்பரால் எழுதப்பட்டது. 6 காண்டங்களில் 113 படலங்களும் 10,500 பாடல்களுமாக எழுதப்பட்ட கம்பராமாயணத்திலும் போர் வேண்டாம் எனும் சிந்தனையை கம்பர் விதைத்துள்ளார்.
போர் என்று வந்துவிட்டாலே களத்தில் எதிரும் புதிருமாக நிற்பவர்களுக்கு வெற்றியோ, தோல்வியோ ஏதேனுமொன்று நிச்சயம். போர் சிறியதா, பெரியதா என்றில்லை. போர் என்றதுமே அதில் இழப்புகள் இரு தரப்பிலும் நிச்சயமாக நிகழும் என்பது மட்டும் மறுக்கமுடியாத உண்மை. ஆனால், கம்பராமாயணத் தில் போர் வேண்டாம் என்பதை வேறொரு கோணத்தில் கம்பர் சொல்லியிருக்கும் விதம் வாசிப்ப வர்களை யோசிக்க வைப்பதாக அமைந்துள்ளது.
அரசனாக முடிசூட்டப்படுவதற்கு முன்னர், இராமனுக்குத் தசரதனின் அரச குருவாக விளங்கிய வசிட்டர், சில அறிவுரைகளைக் கூறுகிறார்.
யாரொடும் பகை கொள்ளலன் என்ற பின்,
போர் ஒடுங்கும்; புகழ் ஒடுங்காது; தன்
தார் ஒடுங்குல் செல்லாது; அது தந்தபின்,
வேரொடும் கெடல் வேண்டல் உண்டாகுமோ?” (பாடல்: 1419)
இதென்ன வேடிக்கையாக இருக்கிறதே..! ஓர்
அரசன் என்றால் போருக்குச் செல்ல வேண்டுமல்லவா! போருக்குச் செல்லாவிட்டால் அரசனுக்குப் புகழேது, பெருமையேது? நியாயமான கேள்விதான்; இதோ… வசிட்டர் சொல்கிறார்;
“யாரோடும் பகைகொள்ளாதே. அப்படி இருந்தால் போர் மறைந்துபோகும். ஆனால் உன் புகழ் மறையாது. போர் இல்லை என்றால் உன் படைக்குச் சேதம் இல்லை. அது அழியாது. அழியாத பெரிய படையைக் கண்டு, மற்றவர்கள் உன்மீது போர் செய்யமாட்டார்கள். அப்படி அன்பால் பகைவர்களை வென்ற பின் அவர்களை அழிக்கும் எண்ணம் தோன்றாது.”
அன்பினால் பகையாளர்களை வென்றபிறகு, போரில்லா உலகம் சமைப்பது எளிதினும் எளிதானதன்றோ..!
பகையின் பூசலும், ஆட்சியதிகார வெறியும் தலைதூக்கிய தமிழ் நிலமெங்கிலும் எண்ணற்ற போர்கள் நடந்தேறியுள்ளதை வரலாறு நெடுகிலும் காணமுடிகிறது. ஆனாலும், மனிதநேயத்தை உயர்த்திப் பிடிக்கும் முயற்சியில் போரைத் தடுத்து நிறுத்தும் செயலில் ஈடுபட்ட கருங்குழல் ஆதனார், ஔவையார், கபிலர், காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார், கோவூர் கிழார், ஆலத்தூர் கிழார், புல்லாற்றூர் எயிற்றியனார் என பல புலவர்களின் பெயர்கள் வரலாற்றில் நிலைத்து நிற்கிறது. இந்தப் புலவர்கள் அரசர்களைச் சென்று பார்த்து, போரினால் விளையும் பேரழிவுகளைப் பற்றிச் சொல்லி, எப்படியாவது போரை நிறுத்திவிடவேண்டுமென்று பெருமுயற்சி மேற்கொண்டதைச் சங்ககாலப் பாடல்களின் வழியே நம்மால் அறியமுடிகிறது.
ரஷ்யாவில் 1917-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் உழைக்கும் தொழிலாளி வர்க்கம், ஜார் மன்னனுக்கு எதிராக ஜனநாயகப் புரட்சி செய்து, பதவியிலிருந்து அவரைத் தூக்கியெறிந்தது. அதனை -
மாகாளி பராசக்தி உருசிய நாட்
டினிற் கடைக்கண் வைத்தாளங்கே
ஆகாவென் றெழுந்தது பார் யுகப்புரட்சி
கொடுங்கோலன் அலறி வீழ்ந்தான்...” - என்று ரஷ்யப் புரட்சியை வரவேற்று கவிதை பாடிய உலகின் முதல் கவிஞர் எனும் பெருமையுடைய மகாகவி பாரதியின் மனதிலும் போருக்கு எதிரான எண்ணங்களே நிறைந்திருந்தன.
பாரதியின் சீடராக வலம்வந்த புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்,
புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்
பொதுஉடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்
புனிதமோ டதைஎங்கள் உயிரென்று காப்போம்
இதயமெலாம் அன்பு நதியில் நனைப்போம்
இதுஎனது என்னுமோர் கொடுமையைத் தவிர்ப் போம்”
- என்று போரிடும் உலகிற்கு எதிரான புதிய உலகத்தைத்தான் விரும்பினார்.
பொதுவுடைமை சமுதாயம் மலருமானால், அது போரில்லாத புதிய உலகமாகவே இருக்கும். அங்கு அன்பு நிலைத்திருக்கும். குறுகிய மனப் பான்மை எவரிடத்தும் இருக்காது. அளவில்லாமல் பொருளைச் சேர்க்க வேண்டுமென்கிற பேராசைக்கு வழியிருக்காது. போட்டி இல்லை; பொறாமை இல்லை; பகை இல்லை; இவையில்லா தேசத்தில் போர் எனும் சொல்லுக்கே வேலையில்லை என்பதே புரட்சிக்கவிஞரின் பொதுமைச் சிந்தனையாகும்.
இரு நாடுகளுக்கிடையே நடைபெறும் போருக்கும் அந்த இரு நாடுகளின் பொருளாதாரத்திற்கும் மிக நெருக்கமான தொடர்புண்டு. எடுத்துக்காட்டாக, 2025-26-ஆம் ஆண்டிற்கான இந்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் நாட்டின் பாதுகாப்புத் துறைக்கு ரூ.6,81,210/- இலட்சம் கோடி ஒதுக்கப்படும் என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதே நிதிநிலை அறிக்கையில் கல்வித் துறைக்கு ஒதுக்கிய தொகை ரூ.1,28,650/- கோடி ரூபாய் மட்டுமே. நாளைய தலைமுறையை உருவாக்கும் கல்விக்கு ஒதுக்கப்பட்ட நிதியைவிட, ஆறு மடங்கு அதிக தொகை பாதுகாப்புக்கு ஒதுக்கப்படுகிறது என்பதிலிருந்தே நாட்டின் பாதுகாப்பு எனும் பெயரால் எவ்வளவு நிதியாதாரத்தைத் தின்று செரிக்கிறது இந்தப் போர்ப் பதற்றம் என்பதை நாம் உணர வேண்டும்.
மேலும், போர் எனும் சொல்லுக்குப் பின்னே பல இலட்சம் கோடி ரூபாய் போர் ஆயுதங்கள் விற்பனை எனும் வல்லரசு நாடுகளிலுள்ள பெருமுதலாளிகளுக்கான லாப வேட்டையும் உள்ளடங்கியிருக்கிறது. உலக நாடுகளில் ஆயுத ஏற்றுமதியில் முதலிடத்தில் உள்ள நாடு அமெரிக்கா. உலகிலுள்ள 96 நாடுகளுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் பணியை அமெரிக்கா செய்கிறது. இது ஒட்டுமொத்த ஆயுத ஏற்றுமதியில் 37 சதவீதமாகும்.
ஆயுத ஏற்றுமதியில் இரண்டாவது நாடாகவுள்ள ரஷ்யா, 60-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்கிறது. ஒட்டுமொத்த ஏற்றுமதியில் இதன் பங்களிப்பு 20 சதவீதம். பிரான்ஸ், ஜெர்மனி, சீனா ஆகியன மூன்றாம், நான்காம், ஐந்தாம் இடத் திலுள்ளன. சரி, நம் இந்திய நாடு ஆயுத ஏற்றுமதியில் எத்தனையாவது இடத்திலுள்ளது?
உலகளவில் ஆயுத இறக்குமதி செய்வதில்தான் இந்தியா, இரண்டாவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் உக்ரைன் உள்ளது. இந்தத் தகவலை ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் (நஒடதஒ) தரவுகள் உறுதி செய்துள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ரஷ்யா- உக்ரைன் நாடுகளுக்கிடையே போர் நடைபெற்று வந்ததால், முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது 2020-24 காலகட்டத்தில் உக்ரைன் நாட்டின் ஆயுத இறக்குமதி சுமார் 100 மடங்கு அதிகரித்துள்ளது. நாட்டின் வருவாயில் பெருமளவு ஆயுத இறக்குமதிக்கே செலவாகுமென்றால், அந்த நாட்டின் பிற துறைகளில் வளர்ச்சி என்பது எப்படிச் சாத்தியமாகும்?
1914 ஜூலை 28 தொடங்கி, 1918 நவம்பர் 11 வரை நான்காண்டுக் காலங்கள் நடைபெற்ற முதல் உலகப் போரில், ஐரோப்பா, ரஷ்யப் பேரரசு, அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் உதுமானியப் பேரரசு ஆகியவை பங்கேற்றன. இந்தப் போரில் 90 இலட்சம் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 2.3 கோடி இராணுவ வீரர்கள் காயமடைந்ததாகவும் சொல்லப்படுகிறது. மேலும், இராணுவ நடவடிக்கை, பட்டினி மற்றும் நோய் போன்றவற்றின் காரணமாக 50 இலட்சம் குடிமக்கள் இறந்துபோனதாகவும் கூறப்படுகிறது.
அடுத்ததாக, 1939 செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 1945 செடம்பர் 2-ஆம் தேதி வரை ஆறு ஆண்டுக்காலங்கள் நடைபெற்ற இரண்டாம் உலகப் போரானது, உலக நாடுகளில் பெரும்பாலான நாடுகள் பங்கேற்ற போராகும். இப்போரில் 30-க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த 10 கோடிக்கும் அதிகமான இராணுவ வீரர்கள் நேரடியாகப் பங்கேற்றனர். போர் விமானங்கள் முக்கியப் பங்காற்றிய இந்தப் போரில், அணு ஆயுதங்களை வீசுவதற்கும் விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. உலக வரலாற்றில் இதுவரை அதிக அளவிலான உயிரிழப்பினை ஏற்படுத்திய போராகப் பதிவாகியுள்ள இப்போரில், 7 முதல் 8.5 கோடிப் பேர் உயிரிழந்தனர்.
இரண்டாம் உலகப் போர் முடிவுறும் நிலையில் 1945 ஆகஸ்ட் 6, 9 தேதிகளில் ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்கள் மீது அணுக்குண்டுகளை வீசியது அமெரிக்கா. அதில், ஹிரோஷிமாவில் வாழ்ந்த 3,50,000 பேரில், 1,40,000 பேர் மரணமடைந்தார்கள். நாகசாகியில் குறைந்தது 74 ஆயிரம் பேர் மாண்டனர்.
இந்த அணுக்குண்டின் கதிர்வீச்சு காரணமாக பல்வேறு வகையான புற்றுநோய்க்கு ஆளாகி, பல ஆண்டுகளுக்குப் பின்னரும்கூட பல்லாயிரம் பேர் உயிரிழந்த சோகம் தொடர்ந்தது.
இதுநாள் வரை மூன்றாம் உலகப் போர் எனும் சொல்லாடல் வெறும் கற்பனையாக மட்டுமே உலவிவந்த நிலையில், 2022-ஆம் ஆண்டு முதல் நடந்துவரும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு <ட்ற்ற்ல்ள்://ற்ஹ.ஜ்ண்ந்ண்ல்ங்க்ண்ஹ.ர்ழ்ஞ்/ஜ்ண்ந்ண்/2022 உக்ரைன் மீதானஉருசியாவின் படையெடுப்பும், அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் <ட்ற்ற்ல்ள்://ற்ஹ.ஜ்ண்ந்ண்ல்ங்க்ண்ஹ.ர்ழ்ஞ்/ஜ்ண்ந்ண்/சீனா> இடையில் அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதட்டங்களும் எப்போது வேண்டுமானாலும் மூன்றாம் உலகப் போர் நிகழும் வாய்ப்புள்ளமைக்கான சாத்தியக் கூறுகளை உண்டாக்கியுள்ளன.
‘யுத்தம் வேண்டாம் யுத்தம் வேண்டாம்
சத்தம் போட்டுச் சொல்லுங்கள்...
யுத்த வெறிக்கு எதிராகக்
கைகளைக் கோர்த்துக் கொள்ளுங்கள்’
- எனும் கவிஞர் ஜீவியின் கவிதை வரிகளை உச்சரித்தபடி, ஹிரோஷிமா - நாகசாகி அணுகுண்டு வீச்சின் நினைவு நாளில் அறிவியல் இயக்க நண்பர்களோடு சேர்ந்து, சாலைகளில் ஊர்வலமாகச் சென்றது என் நினைவடுக்கில் என்றுமிருக்கும்.
எண்ணற்ற தமிழ்க் கவிகள் போருக்கு எதிரான தங்களது கவிக்குரலை பதிவுசெய்துகொண்டே இருக்கிறார்கள். கவிஞர் அறிவுமதி எழுதிய ‘அணுத்திமிர் அடக்கு’ எனும் கவிதை நூல், போருக்கெதிராகத் தன் கவிக்குரலை இப்படியாகப் பதிவு செய்துள்ளது.
கொடிமரம்
ஒடி!
சிறைகள்
இடி!
இராணுவம்
அழி!
அரசுகள் அற்ற
அரசினைச் செய்!’
போர் வேண்டாமென்று பல நாடுகளும் கூறிவந்தாலும், மேலாதிக்கம் கொண்ட பெரிய நாடுகள், சிறிய நாடுகளின் மீது பலவந்தமாகப் போரைத் திணிக்கின்றன. தன்வசமுள்ள அணு ஆயுதங்களின் கையிருப்பினைக் காட்டி, பிற நாடுகளை அச்சுறுத்துவதன் மூலமாக உலகக் காவலனாகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் நாடுகளின் முகத்திரையைக் கிழித்தெறிய வேண்டிய காலம் நெருங்கிவருகிறது.
இந்த நேரத்தில் கவிஞர் அ.வெண்ணிலா எழுதிய கவிதையொன்றைக் குறிப்பிட்டாக வேண்டும். தலைப் பில்லாத அக்கவிதை இப்படித் தொடங்குகிறது.
‘யுத்தம் பற்றி
எனக்குத் தெரிந்திருக்க
நியாயமில்லை தான்
ஆண்டுகளின்
புள்ளி விவரங்களாக்கப்பட்டு
பாடப் புத்தகங்களில்
யுத்தங்கள் வந்த பிறகே
பிறந்துள்ளேன் நான்
விமானம் பறப்பதை
அருகில் பார்க்கவே
25 வருடங்கள் பிடித்த எனக்கு
வெடிகுண்டு வீசும்
விமானங்கள் பற்றிக்
கற்பனை செய்ய முடியவில்லை
எட்டுக்கு எட்டடி
இருட்டறையில் வாழ்ந்து
பழகியுள்ள என்னால்
ஓரளவுக்குப்
பதுங்கு குழிகளின்
அனுபவம் உணர முடிகிறது
சிரிக்காத குழந்தைகள்
சிறகடிக்காத பறவை
சோறூட்ட நிலவைக் காட்டும்
அம்மா இருப்பார்களா
யுத்த பூமியில்
தெரியவில்லை
தெரிந்ததெல்லாம்
யுத்தம்
ரத்தம் சம்பந்தமானது என்பதும்
வெல்பவர்களையும்
தோற்பவர்களையும் விட்டு
வாழ்பவர்களையே
அழிக்கிறது என்பதும் மட்டுமே.’
ஆமாம்… வானிலிருந்து கீழ்நோக்கி இறங்கி வரும் அணுக்குண்டிற்கு தான் விழப்போவது வயல்வெளியிலா, அடுக்குமாடி கட்டடத்திலா, மருத்துவமனை யிலா, ஆண்கள் மீதா, பெண்கள் மீதா, குழந்தைகளின் மீதா என எதுவுமே தெரிந்திருக்காது. அழிக்கும் செயலை மட்டுமே செய்து முடிக்கும் அணுக்குண்டினை எந்த உயிரின் மீதும் மனித மாண்புகளுடைய ஒருவன் ஒருபோதும் வீச சம்மதிக்கவே மாட்டான்.
அமெரிக்காவைச் சேர்ந்த கவிஞரும் பேராசிரியருமான பிரையன் டர்னர் எழுதிய ‘தி ஹர்ட் லாக்கர்’ எனும் போருக்கு எதிரான கவிதையிலுள்ள சில வரிகள் தான், நம் நெஞ்சைச் சுடுவதாக உள்ளன.
‘இங்கே காயத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை;
குண்டுகளும் வலியும் தவிர வேறொன்றுமில்லை...
பார்த்தவுடன் நம்புங்கள்
பன்னிரண்டு வயது சிறுவன்
ஒரு கைக்குண்டை அறைக்குள் உருட்டும்போது அதை நம்புங்கள்’
- எனும் வரிகளை வாசிக்கையில் எதிர்காலம் குறித்த அச்சமும் கவலையும் நம்மை ஒருசேரத் தொற்றிக்கொள்கின்றன.
போர் என்று வந்துவிட்டால் அதில் அதிகமும் பாதிக்கப்படுவது குழந்தைகளும் பெண்களும்தான். சர்வதேச அளவில் இன்றைக்கு சுமார் 47 கோடியே 30 இலட்சம் குழந்தைகள் போரினால் பாதிக்கப்பட்டும், பெற்றோரை இழந்தும் வாழ்ந்துகொண்டிருப்பதாக யுனிசெஃப் புள்ளிவிவரம் கூறுகிறது. சமீபத்தில் போரால் பாதிக்கப்பட்ட குழந்தையொன்று, கையில் மண்ணையள்ளித் தின்னவா என்று பசியோடு கேட்ட காட்சியைப் புலனத்தின் வழியே பார்த்து கண்ணீரால் கரைந்ததை நம்மால் ஒருபோதும் மறக்கவே முடியாது.
தேச எல்லைகளில் கருமேகக் கூட்டங்களென சூழ்ந்திருக்கும் போர்ப் பதற்றங்களை விலக்கி, கவிதை யெனும் சிறகுகளால் வானமளப்போம்; போரற்ற புது உலகம் சமைத்திட நம் கவிதையெனும் சமாதானக் கொடிகளை அசைத்துக்கொண்டேயிருப்போம்.