தைப்பூசம் 01.02.26
தைப்பூசம் முருகப் பெருமானுக்குரிய வழிபாட்டு நாள். இந்த தைப்பூச நன்னாளில்தான் தனது சக்தியான வெற்றி வேலை தாயார் பார்வதி தேவியிடமிருந்து சரவணன் பெற்றதாக கூறப்படுகிறது. அதன்காரணமாக ஓம் சரவணபவ பெருமானுக்கு இந்த விசேஷ நாளில் விரதமிருந்து வழிபட்டால் வேலனின் ஆசி நிச்சயமாக கிடைக்கும் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது.
தைப்பூச திருநாளின் சிறப்புகள்
தைப்பூசம் முருக வழிபாடு மட்டுமல்லாமல் சிவ வழிபாடு, சக்தி வழிபாடு, குரு வழிபாட்டிற்கும் மிகவும் உகந்தது. இந்த தைப்பூச நன்னாளில் எந்த தெய்வத்தை வழிபட்டாலும் அளவில்லாத பலன் கிடைக்கும்.தைப்பூச தினத்தன்று எல்லா முருகன் தலங்களிலும் முருகப் பெருமான் வீதி உலாவருவார்.பவுர்ணமி தினத்தன்று முழு நிலவு சமயத்தில் பூச நட்சத்திரம் வரும்போது சிறப்பு வழிபாடுகள் செய்வதே தைப்பூசத்தின் முக்கிய நிகழ்வாகும்.வரும் தைப்பூசத் திருநாளில் பூச நட்சத்திரம் இரவு 11.58 வரையிலும்; பௌர்ணமி திதி பின் இரவு 03.39 வரையில் அமைந்துள்ளது.
ஞானவேல்
தைப்பூசத்தன்று முருகன் நரகாசுரனை வதம்செய்த நிகழ்வு ஒரு சிறப்பு விழாவாக இன்றும் பழனியில் கொண்டாடப்படுகிறது.ஆண்டி கோலத்தில் பழனி மலைமீது நின்றிருக்கும் முருகனுக்கு, அன்னை பராசக்தி தன் சக்தி முழுவதையும் ஒன்று திரட்டி ஞான வேல் வழங்கியது இந்த தைப்பூச திருநாளில்தான். மேலும் தைப்பூச திருநாளில்தான் உலகில் முதன்முதலாக நீரும், நீரில் இருந்து பிற ஜீவராசிகளும் தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன.சரவணப் பெருமான் வள்ளி பிராட்டியை திருமணம் செய்து கொண்டது தைப்பூச நன்னாளில் தான்.
திருச்சி
ஸ்ரீரங்கத்தில் வீற்றிருக்கும் அரங்கநாதர் காவிரி கரையோரம் குடி கொண்டிருக்கும் தன் தங்கையான சமய புரம் மாரியம்மனுக்கு சீர் கொடுத்ததும் இந்த தைப்பூசத்தில்தான்.
திருநெல்வேலி
நெல்லையிலுள்ள தாமிரபரணி நதிக்கரையில் நெல்லையப்பரை நினைத்து விரதமிருந்த காந்திமதி அம்மன், தைப்பூச தினத்தில்தான் நெல்லையப்பரின் அருளைப் பெற்றார்.
காவிரி
காவிரி தாய், ஸ்ரீரங்கம் அரங்கநாதரை நினைத்து தீவிர தவத்தில் இருந்ததனால், நாராயணப் பெருமான் காவிரி தாயின் தவத்தை மெச்சி தரிசனம் வழங்கியதும் இந்த நன்னாளில்தான்.வாயு பகவானும், வருண பகவானும், அக்னி பகவானும் ஈசனின் அதீத சக்தியை உணர்ந்த நாளாகவும் இந்நாள் போற்றப்படுகிறது. அதாவது- இயற்கையை கட்டுப்படுத்தும் சக்தியாக இறைவனே இருக்கிறான் என்பது உணர்த்தப்பட்ட புண்ணிய நாள், தைப்பூச நன்னாளாகும்.
சென்னை
தைப்பூச நன்னாளில்தான் ஞானசம்பந்தர் மயிலாப்பூரில் பாம்பு கடித்து இறந்துபோன பூம்பாவை என்ற பெண்ணின் அஸ்தி கலசத்தில் இருந்து அப்பெண்ணை உயிருடன் எழுந்து வரும்படி பதிகம் பாடி, உயிர்ப்பித்தார். இதை மயிலைப் புராணம் கூறுகிறது.இச்சன்னதி மயிலை கபாலீஸ்வரர் ஆலயத்தில் கொடி மரம் அருகே உள்ளது.
சிதம்பரம்
தில்லை நடராஜர், பார்வதியுடன் நடத்திய ஆனந்த நடனத்தை தில்லை சிதம்பரத்தில், பதஞ்சலி முனிவர் (ஆதிசேஷ அம்சம்) வியாக்ர பாதர் (புலிக்கால் முனிவர், ஜைன முனிவர்) இவர்களும் தில்லைவாழ் அந்தணர் மூவாயிரவர்களும் முப்பத்து முக்கோடி தேவர்களும் இந்த தைப்பூச நன்னாளில்தான் கண்டு களித்தனராம்.
பழனிமலை
முருகப் பெருமான் தனக்கு கிடைக்க வேண்டிய ஞானப்பழம் கிடைக்காமல் கோபித்துக்கொண்டு கயிலாயத்தில் இருந்து தனது பெற்றோர்களான சிவன்- பார்வதி- விநாயகர் ஆகியோர் மீது வெறுப்புற்று பண்டார கோலத்தில் பழநி மலையில் முருகப் பெருமான் குடியேறிய நாளே தைப் பூசத் திருவிழாவாக தமிழகத்தில் பெரும்பாலான மக்களால் கடைபிடிக்கப்படுகிறது.மேலும் இவ்வழி பக்தி மார்க்கத்தை ஏற்று சிவன், முருகன் சார்ந்த சைவ திருக்கோவில் களில் கொண்டாடப்பட்டு வருகிறது.மிக பழமையான தைப்பூச திருவிழா இந்த தைப்பூசத் திருவிழா பழங்காலந் தொட்டே கொண்டாடியதாக தேவாரப் பதிகங்களில் குறிப்புகள் உள்ளன. "தைப்பூச மாடி உலகம் பொலிவெய்த' என்று திருஞானசம்பந்தர் பாடியுள்ளார். பிற்கால சோழர் ஆட்சியில் தைபூசத்தன்று கோவில்களில் கூத்துகள் நடத்தப்பட்டன. திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோவிலில் தைப்பூசத்தை ஒட்டி நான்கு நாட்கள் கூத்துகள் நடத்ததாக கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
வடலூர்
கடலூர் மாவட்டம், வடலூரில் தை மாதத்தில் தைப்பூசத்தன்று சத்தியஞான சபையில் அதிகாலை அக்னியான ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. வள்ளலார் இராமலிங்க அடிகளார் தைப் பூச நாளை ஞானத்தின் வெளிப்புற நாளாக காட்டினார்கள். காரணம் தை மாதத்தில் பூச நட்சத்திரம் வெள்ளிக்கிழமையன்று அவர் ஜோதியில் கலந்தார் என்பது மிகவும் ஒரு சிறப்புவாய்ந்த தினமாகும். ஆகவேதான்.... வடலூரில் நடைபெறும் தைப்பூச ஜோதி தரிசன விழா முதன்மையானது. ஆண்டுதோறும் தைப்பூசம் சிறப்பாகக் கொண்டா டப்படுகிறது. உலகமெங்கும் வாழும் சமரச சுத்த சன்மார்க்க பக்தர்கள் வடலூருக்கு பல லட்சக்கணக்கான பேர் வந்து தரிசனம் செய்கின்றார்கள்.
பழனி தண்டாயுதபாணி
பழனி தண்டாயுதபாணி திருக்கோவிலில் தைப்பூசம் பத்து நாட்கள் நடைபெறும் முக்கிய விழாவாகும். ஏழாம் நாள் விழாவில் தேரோட்டம் நடை பெறும். முருகன் தன் இரு துணைவியரான வள்ளி மற்றும் தெய்வயானையுடன் திருமணக்கோலத்தில் ரதவீதிகளில் தேரில் பவனிவருகிறார். பத்தாம் நாள் தெப்போற் சவம் நடைபெறுகிறது.
தைப்பூசத்தன்று மக்கள் பழனியில் குவிவது வாடிக்கை. பக்தர்கள் பல பகுதி களிலிருந்து பாத யாத்திரையாக பழனிக்கு வருகிறார்கள்.
திருச்செந்தூர்
சூரனை வதம்செய்த கடற்கரை தலமான திருச்செந்தூரிலும் தைப்பூசம் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மார்கழி மாதம் முதலே பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து பாதையாத்திரையாக செந்தூர் நோக்கி படையெடுக்கின்றனர்.
தமிழ் கடவுள்
முருகன் என்றால் அழகு என்று பொருள். முருகன் தேவ சேனாதிபதி (தேவர்களின் சேனாதிபதி) ஆகையால் தமிழ்க் கடவுளான இவர் ஒரு போர்க்கடவுள் ஆவார். தை பூசத்தன்று முருகன் தருகாசுரனை வதம் செய்த நிகழ்வு ஒரு விழாவாக பழனியில் அனுஷ்டிக்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/30/vetrivel-2026-01-30-16-35-00.jpg)