"சஷ்டியை நோக்க சரவண பவனார்
சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்'
எனத் தொடங்கும் கந்த சஷ்டி கவசத்தைக் கேட்காத தமிழர்களே இல்லை எனச் சொல்லலாம். இந்த கவசம் ஒலிக் காத வீடுகளே இல்லை. 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தேவராய சுவாமிகளால் முருகனைப் போற்றி பாடப்பட்டது. மாதம்தோறும் வரும் சஷ்டியில் விரதமிருந்து முருகனை கவசம் பாடி வழிபடுவது தமிழர்களின் மரபு.
ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியில், திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா சிறப்பாக நடைபெறுவதுண்டு. அன்றுதான் சூரபத்மன் என்ற அசுரனை வதம் செய்த "சூரசம்ஹாரம்' நாள் என சொல்லப்படுகிறது. இச்சம்பவம் நடைபெற்ற இடம்தான் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிர மணிய சுவாமியின் திருக்கோவில் கடற்கரை. அன்றைய தினம் கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து ஜெயந்திரநாதரை (முருகன்) வழிபடுவார்கள். மறுநாள் தெய்வானை- முருகன் திருக்கல்யாணம் நடைபெறும்.
தமிழ்க் கடவுள் முருகன் என்பதால், பண்டைய சங்க இலக்கியத்தில் முருகனைப் பற்றியும், திருச்செந்தூர் தலத்தைப் பற்றியும் பாடப்பட்டுள்ளது. அதில் அகநானூறு (266 பாடல்), புறநூனூறு (55 பாடல்) ஆகியவற்றில் திருச்செந்தூர் பற்றிய வரிகள் வருகின்றன. முற்காலத்தில் கபாடபுரம் என்றும் அழைக்கப்பட்ட இந்த இடத்தைப் பற்றி வால்மீகி, கிஷ்கிந்தா காண்டத்தில் குறிப்பிட்டுள்ளார். அதன்பின்னர் இத்தலத்தை அலைவாய், திருச்சீரலைவாய் எனவும் தமிழ்ப் புலவர்கள் அழைத்தனர்.
சங்கப்புலவர் நக்கீரனார் எழுதிய "திருமுருகாற்றுப்படை' நூலில் திருச்செந்தூர் பற்றி சொல்லும்போது,
"உலகம் புகழ்ந்த ஓங்கு உயர் விழுச் சீர்
அலைவாய்ச் சேறலும் நிலை இய பண்பே'
எனப் பாடியுள்ளார். இவர் அலைவாய் என்றே அழைத்தார். பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் "திருவலங்கல் திரட்டு' எனும் நூலில்-
"கிளர்சிவக் கொழுந்தே சுவர்மனக் கரும்பே
கெழுவருண் மாமணிக் குலமே
வளர்நலக் கிழியே யகவிளக் கொளியே
மனமய றீர்க்குமெம் பரனே
களிமனத் துமையா ளருள்ரசக் களியே
கயநிலைச் சீரலை வாயா
தளைமணிச் சரணா வுனைமறக் கிறுநா
காற்றிடுஞ் சரவண பவவே''
எனப் பாடியுள்ளார். இவரும் அலைவாய் என்றே அழைத்துள்ளார். முடிவில் "சரவணபவ' என முடித்துள்ளார். முருகனின் திருமந்திரத்தின் பெயர்தான் சரவணபவ. (ஆறு எழுத்து), மூன்று பதத்தின் சேர்க்கை.
செந்தில் ஆண்டவனை பகலின் முதல் யாமத்தில் பிரம்மதேவரும், இரண்டாம் யாமத்தில் முனிவர்களும் (சப்தரிஷிகள்), மூன்றாம் யாமத்தில் கந்தர்வர்களும், சித்தர்களும், நான்காம் யாமத்தில் திசைபரிவாலர் களும், இரவு ஐந்தாம் யாமத்தில் லட்சுமி தேவியும், ஆறாவது யாமத்தில் ஆதிசேஷ னுடன் அவுணர்களும், ஏழாவது யாமத்தில் வள்ளி, தெய்வானையும், எட்டாம் யாமத்தில் கங்கை உட்பட சப்த நதிகளும் இப்படி ஒவ்வொருவரும் தினமும் இங்கு வந்து வழிபடுவதாக ஐதீகம். தெய்வீக அருள் நிறைந்த இத்தலத்தின் இயற்கை எழில் மிகுந்த கடற்கரையில் புனித நீராடினால் கிடைக்கும் பலனைப் பற்றி திருச்செந்தூர் தலபுராணத்தில், "தழைத்த கங்கையில் வாழ்திரி வேணிசங் கமத்தின்உழைத்த நல்வினை செயந்திநன் னகரென வொருகால்குழைத்த வன்பினற் கூறுமக் கறிக்கெதிர் கூறிஅழைக்க வேபதி னாறிலொன் றில்லாகா ணன்றே.'
கங்கை, யமுனை, சரஸ்வதி என மூன்று நதிகளும் கூடும் இடத்தில் நீராடுவது போன்றது திருச்செந்தூர் கடற்கரை என்கிற பொருளில் வென்றிமாலைக் கவிராயர் பாடியுள்ளார்.
இத்தலத்தில் எப்படி தெய்வீக அருள்மிகுந்ததோ, அதேபோன்று கோவிலில் பிரசாதமாகத் தரப்படும் பன்னீர் இலை வீபூதியும் தெய்வம்சம் மிகுந்தது. பொதுவாக பன்னீர் மரத்தின் இலையில் 12 நரம்புகள் உண்டு. ஆறுமுகப் பெருமானுக்கு பன்னிரண்டு கைகள் என்பதால் பன்னீர் இலைக்கு ஒரு சிறப்பு. இவ்விலையில் வைத்து தரப்படும் முருகனின் வீபூதியானது மருந்து என்றே கூறலாம். ஸ்ரீ ஆதிசங்கரர் இயற்றிய "சுப்பிரமணிய புஜங்க' ஸ்தோத்தி ரத்தில் 25 பாடலில் பன்னீர் வீபூதியின் மகிமையைப் போற்றியுள்ளார்.
"அபஸ்மார குஷ்ட க்ஷயார்ச் பரமேஹ
ஜ்வரோன்மாத குல்மாதிரோஹான் மஹாந்த
பிசாசாஸ்ச ஸர்வே பவத் பத்ர பூதிம்
விலோக்ய க்ஷணாத் தார காரே த்ரவந்தே.'
இதேபோன்று குமரகுருபரர், "இலை யமில் குமரவேள் முன் வணங்குவார்க்கு என்றும் துன்பம் இலை' எனத் தொடங்கும் பாடலைப் பாடியுள்ளார்.
கும்பாபிஷேகம்
"ஆறு திருப்பதியில் விளங்கு பெருமானே' என திருப்புகழில் அருண கிரிநாதர் ஆறுபடை வீட்டைப்பற்றி பாடியுள்ளார். இதில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் புனித தலத்திற்கு கும்பாபிஷேகம் அண்மையில் ஜூலை 7-ஆம் தேதி சீரும், சிறப்புமாக நடைபெற்றது. "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா' எனும் கோஷம் விண்ணைமுட்டும் அளவுக்கு பக்தர்கள் மெய்மறந்து பக்தியுடன் கோஷமிட்டனர். கும்பாபிஷேகம் நடைபெற்றதை முன்னிட்டு, கோவில் வளாகத்தில் திருப்பணிக்காக ரூ. 200 கோடி மதிப்பில் உபயமாக வாமசுந்தரி இன்வெஸ்ட்மென்ட்ஸ் பி.லிட் கம்பெனியின் நிறுவனத் தலைவர் ஷிவ் நாடார் அளித்தார்.
ஜூன் 30-ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் திருப்பணிகள் தொடங்கின. ஜூலை 1-ஆம் தேதியன்று முதல்கால வேள்வி சடங்குகள் யாகசாலையில் நடைபெற்றது. 2- ஆம் தேதி இரண்டாம் கால, மூன்றாம் கால வேள்வி சடங்குகளும், 3-ஆம் தேதி நான்காம் ஐந்தாம் கால வேள்வி சடங்குகளும், 4-ஆம் தேதி ஆறாம், ஏழாம் கால வேள்வி சடங்குகளும், 5-ஆம் தேதி எட்டு, ஒன்பது கால வேள்வி சடங்குகளும், 7-ஆம் தேதி அதிகாலையில் பன்னிரண்டாம் கால வேள்வி சடங்குகளும் நடைபெற்றன.
அதைத் தொடர்ந்து காலை 6.15 மணிமுதல் 6.50 மணிக்குள் மகா கும்பாபிஷேகம், வைதீக முறைப்படி சிருங்கேரி மடத்தின் இளைய சங்கராச்சார்ய ஸ்ரீ விதுசேகர பாரதி சுவாமிகள் முன்னிலையிலும், தமிழ் ஆகம முறைப்படி தருமபுரம் ஆதீன மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த குருமகாசந்நிதானம் சுவாமிகள் மற்றும் பல ஆன்றோர் முன்னிலையில் நடந்தது. முன்னதாக கும்பாபிஷேகத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பெரிய பச்சைநிற கொடியை அசைத்து துவக்கி வைத்தார்.
கும்பாபிஷேகத்திற்காக வேத பாராயணமும் 64 ஓதுவார் மூர்த்திகளைக்கொண்டு பன்னிரு திருமுறை, திருப்புகழ், கந்தசஷ்டி கவசம் உள்ளிட்ட தமிழ் பதிகங்களும் பாடப் பட்டன.