சென்னை அலு வலகத்திற்கு, நெற்றியில் திருநீறு, கழுத்தில் ருத்ராட் சம், கட்டுக்குடுமி என இந்த தோற்றதுடன் 27 வயதுடைய இளைஞர் ஒருவர் நாடியில் பலனறிய வந்திருந்தார். அவரை அமரவைத்து, "என்ன விஷயமா கப் பலனறிய வந்தீர்கள்'' என்றேன்.
"இளம்வயதில் இருந்தே கஷ்டம், சிரமத்துடன் வாழ்ந்து வருகின்றேன். தொழில், வருமானம் இல்லை. எனக்கு உதவி செய்யவும் யாரும் இல்லை.
உறவுகள் ஆதரவும் இல்லை. என் வாழ்வில் குறைகள் நீங்கி, நல்ல வாழ்க்கை அடைய, கடவுளிடம் செய்யும் பிரார்த்தனை, வேண்டுதலும் நிறைவேறவில்லை. கடவுளும் காப்பாற்றவில்லை. என் இப்பிறவி வாழ்வின் விதிதான் என்ன என்பதை அறிந்துகொள்ளவே, அகத்தியரை நாடிவந்தேன். என் வாழ்வின் குறை தீர்ந்து, நல்ல வாழ்க்கை அமைய அவர்தான் வழி காட்ட வேண்டும்'' என்றார்.
அவர் கூறிய அனைத்தையும், பொறுமையாக கேட்டுவிட்டு ஜீவநாடி ஓலையைப் படிக்கத் தொடங்கினேன். அகத்தியர் எழுத்து வடிவில் தோன்றி பலன்கூறத் தொடங்கினார்.
இந்த மகனுக்கு நான்கு வயது இருக்கும்போதே இவன் தந்தை இறந்துவிட்டான். இவன் தாய் தான் வசிக்கும் ஊரிலுள்ள தன் இனத்தாரின், வீடுகளில் வேலைசெய்து அதில் கிடைக்கும் வருமானத்தில் தாயும், மகனும் வாழ்ந்தார்கள். வறுமையின் காரணத்தால் பள்ளி சென்று படிக்க முடியாத நிலை.
இவன் சாதியைச் சேர்ந்த ஒருவன், நமது இனத்தில் பிறந்து வறுமையில் வாழ்பவர்களின் மகன்களுக்கு, வாழ்க்கையில் பிழைத்துக்கொள்வதற்கு என, நமது இனத்து முன்னோர்கள், வேத பாடசாலைகளை உருவாக்கி வைத்துள்ளார்கள். உன் மகனை நான் வேத பாடசாலையில் சேர்த்து விடுகின்றேன். அவன் அங்கேயே தங்கி படிக்கட்டும். உனக்கும் மகனைப் பற்றிய கவலையும், காப்பாற்றவேண்டிய சிரமமும் இராது என்று கூறினான். அந்த தாயும் அதற்கு சம்மதித்தாள். வேத பாடசாலையில் சேர்ந்தான்.
இந்த மகனும் பாட சாலையில் வேதம், சாஸ்திரம், ஆகமம் என அனைத்தையும், தெளிவாக கற்று வேத ஞானம் பெற்றான். இவன் அவற்றைப் படித்தானே தவிர, அதை தொழிலாகச் செய்து பணம் சம்பாதித்து பிழைக்கும், சூட்சுமம் தெரியாதவனாக இருக்கின்றான். அதற்குக் காரணம், இதுநாள்வரை இவன் வாழ்வில் அனுபவித்த முறைதான்.
இவன் பிறப்பிலேயே ஏழை. தந்தையின் பாதுகாப்பு இல்லாமல், தாயின் அரவணைப்பில் வாழ்ந்தான். பிறர் வீடுகளில் வேலைசெய்து இவன் தாய் வாழ்ந்ததால், இவன் தாயையும், இவனையும் மற்றவர்கள் கீழ்த்தரமாக நடத்தினார்கள். பாட சாலையில் படிக்கும் போதும், மற்ற மாணவர்கள் இவனை அடிமைபோல் நடத்தினார்கள். இதனால் இவனுக்கு தன்னம்பிக்கையும், தைரியமும், தன்னையறியும் அறிவும் இல்லாமல் போய்விட்டது.
தாயையும் மகனையும் பிறர் அவமானப்படுத்தும் போதெல்லாம் கடவுள் நம்மைக் காப்பாற்றுவார், கை விடமாட்டார் என்று ஆறுதலை அடிக்கடிக் கூறுவாள். தாயின் இந்த சொல் இவன் மனதில் ஆழமாகப் படிந்துவிட்டது. அதனால்தான் பிரார்த்தனை செய்தும், கஷ்டம் தீரவில்லையே, கடவுள் என்னைக் காப்பாற்றுவாரா? என்று கேட்டு என்னை நாடிவந்துள்ளான்.
மகனே இந்த பூமியில், எந்த ஒரு மனிதனையும், எந்த ஜீவ ராசியையும் கடவுள் காப்பாற்ற மாட்டார். பூமியின் இயற்கை அமைப்பினையும், அவரவர் பிறப்பின் விதி நிலையையும் தெரிந்து, புரிந்து வாழ்பவர்களுக்கே வாழ்க்கை உயர்வாக அமையும். மண்ணுலகில் உயிர்கள் பிறப்பதற்குமுன்பே, இங்கு உயிரினம் வாழ்வதற்குத் தேவையான உணவிற்கு தானியம், தாகத்திற்குத் தண்ணீர், வசிக்க இருப்பிடம், சுவாசிக்க காற்று, இன்னும் தங்கம், வெள்ளி, வைரம் என அனைத்தையும் பூமி தன்னுள் படைத்து வைத்துள்ளது.
அவற்றை அடைந்துகொள்ளும் வகையில், உடல், உயிர், அறிவு அமைந்துதான் பிறக்கின்றார்கள்.
அவரவர்க்குத் தேவையான அனைத்தையும் அறிவு, திறமை, உழைப்புமூலம்தான் தேடி அடைந்துகொள்ள வேண்டும் என்பதே இந்த பூமியில் பிறக்கும் உயிரினங்களின் வாழ்க்கை விதி கணக்கு.
கடவுளின் உண்மை நிலையையும், கடவுளின் கருணையை அடைய சரியான வழி முறைகளை அறிந்து செயல்பட்டு வாழ்பவர்களையே கடவுள் காப்பாற்றுவார் என்பதைப் புரிந்துகொள். வெறுமனே, கடவுளை வணங்கியும், பக்தியினால் பாட்டுப் பாடிக்கொண்டு இருப்பவர்களையும், கடவுள் கருணை தந்து, காப்பாற்றமாட்டார். நீ வாழ்வில் உயர்ந்திட சரியான வழிமுறைகளைக் கூறுகின்றேன். அதை நடைமுறை செயல்களில் கடைபிடித்து வாழ்ந்து வா. முதலில் உன் மனதிலுள்ள தாழ்வு மனப்பான்மையை நீக்கிவிடு. நான் மற்றவர்களைவிட அறிவு, ஞானம், திறமையுள்ளவன், எதையும் செய்து சாதிக்க முடியும், செய்யும் தொழிலை நான் சிறப்பாக, நுனுக்கமாக செய்வேன் என்ற தன்னம்பிக்கையை உன்னுள் வளர்த்துக்கொள். நீ உன்னையே உயர்ந்தவனாக எண்ணிக்கொள்.
கலிகாலத்தில், மண்ணுலகில் வாழும் மாந்தர்கள், அவரவர் விருப்பம்போல் ஏராளமான கடவுள்களை உருவாக்கி வைத்துள்ளார்கள். இந்தக் கடவுள்களைப் பற்றி பிரசங்கம், உபன்யாசம் செய்வது, பாடல்களைப் பாடுவது, கடவுள் பூஜை சம்பந்தமான பொருட்களை வியாபாரம் செய்வது, ஹோமம், யாகங்களை செய்வது என இதுபோன்று கடவுள் சம்பந்தமான செயல்களை தொழிலாகச் செய்து, பணம் சம்பாதித்து வாழ்கின்றார்கள். இதுபோன்று கடவுளை வியாபார மூலதனமாக வைத்து, தொழில் செய்பவர்களை மட்டும்தான், கடவுள் காப்பாற்றுவார் என்பதை புரிந்துகொள்.
மகனே ஒவ்வொரு தொழிலுக்கும் ஒரு படிப்பினைப் படிப்பது போல், நீ படித்த வேதம், சாஸ்திரம், ஆகமம் என நீ படித்ததும் ஒரு தொழில் கல்விதான்.
அந்தத் தொழிலுக்கென்று ஒரு மொழியை உருவாக்கி வைத்துள்ளார்கள். சமஸ்கிருதம் மொழி, உன்னைப் போன்றவர்களின் தொழிலுக்கான மொழி, மக்கள் பேசி வாழும் வாழ்க்கைக்கான மொழி அல்ல, இது கடவுளுக்கான மொழி என்று பிரித்து வைத்துள்ளார்கள்.
படித்த படிப்பு இந்த தொழில் செய்வதற்குத்தான். படித்த படிப்பிற்குத் தகுந்த தொழில் செய்து பணம் சம்பாதித்து வாழ்ந்து கொள். கடவுளைச் சொல்லி பூஜை, யாகம், ஹோமக் காரியங்களைச் செய்து பணம் சாம்பாதித்துக்கொள். இன்னும் மூன்று ஆண்டுகள் சென்றபின்பு நீ கடல் கடந்துசென்று இந்த தொழிலைச் செய்து ஏராளமாக பணம் சாம்பாதிப்பாய் என்று கூறிவிட்டு ஓலையில் இருந்து மறைந்தார்.
அகத்தியர், நான் படித்த படிப்பினை கொண்டு தொழில் செய்து வாழச் சொல்கின்றார். இதுநாள்வரை, இது கடவுள் சேவை என்று வாழ்ந்துவிட்டேன், தொழில் மேன்மையடைய என்ன வழி என்றார்.
இந்த காலத்தில் விளம்பரம் மூலம்தான் தொழிலை விருத்தி செய்துகொள்ளவேண்டும். வேதம், சாஸ்திரம், ஆகமம், பூஜை யாகம், ஹோமம், ஜோதிடம் என இவை கடவுள், கிரகங்கள் தொடர்புடையது. மக்கள் பக்தியால், தானாக கடவுளை வணங்க, கோவிலுக்கு வரமாட்டார்கள். அதேபோன்று ஹோமம், யாகம் செய்ய அவர்களாக வரமாட்டார்கள். பாவ- சாபம் தீர ஜோதிடர்கள் கூறும் பரிகாரங்களைச் செய்யத்தான் வருகின்றார்கள். நீ சில ஜோதிடர்களை தொடர்புகொண்டு, பரிகாரம், ஹோமம், யாகம் செய்ய எண்ணுபவர்களை உன்னிடம் அனுப்பி வைக்கச் சொல். அதற்கு எதாவது ஒரு தொகையை அவர்களுக்கு கொடுத்துவிடு. அவர்கள் உன் தொழிலை விருத்தி செய்துவிடுவார்கள். நீ செய்யும் தொழில்மூலம் கடவுளின் கருணையும், அருளும் செயல்படும் என்று கூறி அவரை அனுப்பி வைத்தேன்.
செல்: 99441 13267
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/08/29/agathiyar-2025-08-29-16-50-50.jpg)