"தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் 
மெய்வருத்தக் கூலி தரும்.'

ஒருவன் மேற்கொண்ட முயற்சி வினைப்பயன் காரணமாக வெற்றி பெறாமல் போனாலும் அத்தகைய முயற்சியில் ஈடுபட்ட அவனது உடம்பு பட்ட செயல்பாட்டின் (செய்த வேலை) அளவுக்கு நிச்சயமாக பயன் தரும். ஒருபோதும் பயன் தராமல் போகாது. 

மருத்துவ மேதை, வாழ்வியல் ஞானி, சூழலியல் ஆராய்ச்சியாளர் திருவள்ளுவர், முயற்சியின் சிறப்பை பின்வரும் திருக்குறள்மூலம் தெளிவுபடுத்துகிறார். 

Advertisment

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும். 

ஒருவனது விடாமுயற்சி அவனுக்கு செல்வத்தை உண்டாக்கவும், வளர்க்கவும், மிகவும் அழகான ஒரு உயரத்தையும் கொடுக்கும். அது போன்ற முயற்சி இல்லாமை ஒருவனை வறுமைக்குள் செலுத்தி துன்ப நிலைக்கு ஆளாக்கிவிடும். 

இங்கே கவனிக்க வேண்டிய ஒன்று இறைவன்மீதும் இயற்கைமீதும் ஒருவனுக்கு நம்பிக்கை இருக்கவேண்டும். அது மிக அவசியம். 

Advertisment

அதேவேளையில் அவனுக்கு பிடித்த வேலையிலோ அல்லது அவன் செய்கின்ற வேலையிலோ உள்ள விருப்பத்துடன், விடாமல்கூடிய தொடர்முயற்சியே அவனை வெற்றிக்கு சொந்தக்காரனாக மாற்றும். இறைவனின் படைப்பில் உருவாக்கப்பட்ட இயற்கையில் இருக்கும் அனைத்து உயிர்களும் சமம் என்பதே இறைக் கோட்பாடாகும். ஒரு பழைய பாடலை இங்கே நினைவுக்கூற விரும்புகிறேன். 

"உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள் 
உலகம் நமது என்று சிந்து பாடுங்கள் 
மேடு பள்ளம் இல்லாத சமுதாயம் காண 
என்ன வழி என்று எண்ணி பாருங்கள்...'' 

"பாடுபட்டுச் சேர்த்த பொருளைக் கொடுக்கும்போதும் இன்பம் 
வாடும் ஏழை மலர்ந்த முகத்தை பார்க்கும்போதும் இன்பம் 
பேராசையாலே வந்த துன்பம் சுயநலத்தின் பிள்ளை 
சுயநலமே இருக்கும் நெஞ்சில் அமைதி என்றும் இல்லை.''
இதற்குப் பிறகு வரக்கூடிய பாடல் வரிகள்தான் மிகவும் முக்கியத் துவம் வாய்ந்தது. 
"காற்றும் நீரும் வானும் நெருப்பும் பொதுவில் இருக்குது 
மனிதன் காலில் பட்ட பூமி மட்டும் பிரிந்து கிடக்குது 
பிரித்து வைத்துப் பார்ப்பதெல்லாம் மனிதர் இதயமே 
உலகில் பிரிவு மாறி ஒருமை வந்தால் 
அமைதி நிலவுமே.''

இந்த வரிகளை நாம் ஒவ்வொருவரும் மிகவும் உன்னிப்பாக கூர்ந்து கவனித்து பொருள் புரிந்து வாழ்ந்தோம் என்றால்! நாம் மிக உயர்ந்த ஆரோக்கியமான, மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கு சொந்தக்காரர்களாக மாறுவோம். இயற்கையில் என்றும் மாறாத குணத்துடன் இருக்கும் இறைசக்தியும் நமக்கு மாபெரும் பாதுகாப்பாக இருக்கும். ஒரு மனிதன் உயிர் வாழ பஞ்சபூத சக்திகள் மிகமிக அவசியமானதும்,  முக்கியத்துவம் வாய்ந்ததும் ஆகும். நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் இந்த ஐந்து கூறுகளையும் இறைவன் இலவசமாக உயிரினங்களுக்கு வாரி வாரி வழங்கி கொண்டிருக்கக்கூடிய வள்ளலாக இருக்கிறான். அண்டத்தில் உள்ளது பிண்டத்தில். இதன்பொருள் புரியவில்லை என்றால் நாம் வாழ்வதற்கு அர்த்தமே இல்லை. பஞ்சபூத சக்தி இல்லாமல் இந்த பிரபஞ்சத்தில் ஒரு பொருளும் அசைய முடியாது. ஆனால் ஆறறிவு படைத்த மனித இனம் அத்தனையும் அழித்து, ஒழித்துவிட்டு இறைவன் கண்டுபிடிக்காத ஒரு காகிதத்தில் பல்வேறுவிதமான எண்களை 10, 20, 50, 100, 200, 500 (சன்ம்க்ஷங்ழ்) எழுதி, அதை அச்சடித்து (டழ்ண்ய்ற்) கட்டு கட்டாக மாற்றி, பதுக்கிவைத்து, இயற்கையின் இயல்பை அழித்து, இறுதியில் தானும் அழிந்து போவோம் என்ற உண்மை புரியாமல் பேராசை எனும் பெரு நெருப்பின் பின் பயணித்துக்கொண்டிருக்கிறான். இதில் பக்தி என்ற பகல் வேஷம் வேறு தலை விரித்து ஆடுகிறது. 

"பகுத்துண்டு பல்லுயிர் போற்றுதல், 
அருட்பெருஞ்சோதி... 
அருட்பெருஞ்சோதி...
தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்சோதி...
ஒளியே தெய்வம், உலகே சுபிட்சம்''

எனும் உயரிய நோக்கம்கொண்ட அருட்பிரகாச இராமலிங்க வள்ளலாரின் இறைகோட்பாடு ஆகும். 

இது தெரியாமலேயே ஒரு கூட்டம் வாழ்ந்துகொண்டிருக்கிறது. தொடர்ந்து வரும் செய்தி இஸ்ரேல் காசா நாடுகளின் போர் செயலால் மதிப்புமிக்க மனித உயிர்கள் இளம் சிறார் என்றும் பாராமல் கொன்று குவித்துகொண்டிருக்கிறது. ஒருபுறம் ரஷ்யா, உக்ரைன் போர் செயல்பாட்டினால் பல உயிர்கள் மடிந்து கொண்டிருக்கின்றன. இன்னொரு புறம் காசா நகரத்தில் வயதானவர்கள் முதல் சிறு குழந்தைகள்வரை உணவில்லாமல் பசியாலும், பட்டினியாலும் பரிதவித்துக் கொண்டு சொல்லொன்னா துயரங்களோடு நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கிறார்கள். இறைவன் அருட்கொடையாக கொடுத்த மனித உயிரைவிட உயர்ந்தது எதுவும் கிடையாது. அன்பே அனைத்திற்கும் மூல காரணமாகவும், அஸ்திவார மாகவும் இருக்கிறது என்பதை ஆறறிவு படைத்த மனிதன் ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ளவேண்டும். அன்பின் முக்கியத்துவத்தை அறியாத எவனும் இறைவன்மீது பக்தி செலுத்த முடியாது. இறைவனது பார்வையும் அவன்மீது இருக்காது. 

சமீபமாக திருவண்ணாமலை அண்ணாமலையாரை தரிசனம் செய்வதற்காக வரிசையில் நின்றுகொண்டிருக்கக்கூடிய ஒரு மனித கூட்டம், தரிசனம் செய்ய முண்டியடித்துக்கொண்டு ஒருவரை ஒருவர் கண்மூடித்தனமாக தாக்கிக்கொண்ட நிகழ்வு காண்பதற்கு மிகமிக கேவலமாகவும் அருவருப்பாகவும் இருக்கிறது. இதற்கு என்ன காரணம் என்றால் சுய ஒழுக்கமும், பொறுமையும், அன்பும், கருணையும் சாமி தரிசனம் செய்யவந்த எவரிடமும் எள்ளளவும் இல்லையென்பது அதிர்ச்சியான விஷயம். 

ஒருவனது பக்தி எப்படி இருக்கவேண்டும் என்பதைப் பற்றி திருமந்திர சிற்பி திருமூலர் இயற்றிய திருமந்திரத்தைப் பார்ப்போம்- 

"ஆர்வம் உடையவர் காண்பர் அரன் தன்னை 
ஈரம் உடையவர் காண்பர் இணையடி 
பாரம் உடையவர் காண்பர் பவந்தன்னைக் 
கோர நெறிகொடு கொங்குபுக் காரே.''

சிவப்பரம் பொருளை, பிரபஞ்ச பேராற் றலை இறைவனை அடையவேண்டும் என்கின்ற பேரன்பு, ஆசை, சலிப்பில்லாத முயற்சி உடையவர்கள் அவனை நிச்சயம் காணப் பெறுவார்கள். மனதில் இரக்கம், அன்பு (ஈரம்) ஈகை எனும் நற்குணங்களைக் கொண்டவர்கள் இறைவனின் திருவடிகளை காணும் பேற்றினை பெறுவார்கள். அவர்களிடம் விரோதம், குரோதம், வெறுப்பு, பொறாமை, போட்டி இவை எதுவுமிருக்காது. இரக்கம், அன்பு இவ்விரண்டும் இல்லாதவர்கள் துன்பச் சுமையையும் துயர வினைகளையும் தொடர்ந்து சுமப்பவர்களாக இருப்பார்கள். இவர்கள் காண்பது இந்த உலகத்தில் அதில் தொடரும் பிறப்பையும் இறப்பையுமே. இவர்கள் அன்பில்லாத கொடிய துன்பவழி சென்று துயரம் எனும் காட்டில் தவிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. 

பக்தி செய்வதற்கு உனக்கு பணமோ, பொருளோ வேண்டியதில்லை. உண்மை யான அப்பழுக்கற்ற உன் மனமே சிறந்த பக்தி செய்யும் கருவியாகும். மீண்டும் இந்த இடத்தில் நினைவுகூறுகிறேன்.' "யாவர்க்குமாம் இறைவர்க்கு ஒரு பச்சிலை'' என்று இயம்பும் திருமந்திரத்தை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இறைவனை தரிசிப்பதற்கு இந்த நேரத்தில்தான் செல்லவேண்டும், அந்த நேரத்தில்தான் செல்லவேண்டும் என்ற எந்த கட்டுப்பாடுமில்லை.இறைவனைக் காண்பதற்கு அப்படி ஒரு கட்டுப்பாடு இருந்தால், அப்படியான ஒரு கட்டுப்பாட்டை உருவாக்கியவன் உண்மையான பக்திமானாக இருக்கமுடியாது. பக்தி விலைமதிப்பற்றது. உண்மையான பக்தி விலை கொடுத்து வாங்கமுடியாது.

நாம் எதையெல்லாம் (நல்லவற்றை) பெற விரும்புகிறோமோ, அவையெல்லாம் நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும், 

அனைத்து தரப்பினருக்கும் கிடைக்கவேண்டும் என்பதே மிகவும் சிறந்த உண்மையான பக்தியாகும். தன்னை மட்டும் காப்பாற்றிக்கொள்ள சுயநலமாக செய்யும் பரிகாரமும், வழிபாடுகளோ, யாகமோ எதுவும் நமக்கான வீடு பேற்றை கொடுக்காது. ஒவ்வொரு உயிரின்மீதும் அன்பும், கருணையும், இரக்கமும், பரிவும் நம் ஒவ்வொருவருக்கும் அப்பழுக்கில்லாமல் இருக்கவேண்டும். அதுவே சிறந்த பக்தி. அத்தகைய பக்தியில் நாம் இருக்கும்பொழுது அண்ட பேரண்டத்தை ஆட்சி செய்யும் அரனின் அளப்பரிய சக்தி நமக்கு கிடைக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம். பரம்பொருளின்மீது மாசற்ற பக்தி செய்வோம், மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு சொந்தக்காரர்களாக மாறுவோம்.