Advertisment

அஞ்சலி கட்டுரை : கல்வியின் கலங்கரை விளக்கம் வசந்திதேவி! - மு.முருகேஷ்

vasanthdevi

 

ல்லாக் குழந்தைகளுக்கும் சமமான - தரமான கல்வி கிடைக்கவேண்டும் என்கிற உரத்த சிந்தனையோடு கல்விப்புலத்தில் நின்று, தன் வாழ்வின் கடைசிமூச்சு வரை குரலெழுப் பிய களப்போராளியான முனைவர் வே.வசந்திதேவி, தனது 87-ஆவது வயதில் கடந்த 2025 ஆகஸ்ட் 1 அன்று இம்மண்ணுலக வாழ்விலிருந்து விடைபெற்றார்.

Advertisment

   ஒவ்வொரு தனி மனிதரின் இழப்பும் அந்தக் குடும்பத்தினருக்கு எதனாலும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பே. என்றாலும் ஒரு குடும்பத்திற்கான இழப்பு என்பதை விடவும், ஒரு சமுதாயத்தின் கல்வி வளர்ச்சிக்கான செயல்பாடுகளை எவ்வித பிரதிபலனும் பாராமல் கடந்த அரைநூற்றாண்டிற்கும் மேலாக முன்னெடுத்துப் போராடிய ஓர் ஆளுமையை இழப்பதென்பது, பெருந்துயரத்தையும் ஆற்றாமையையும் அனைவரின் உள்ளத்திலும் உண்டாக்கக்கூடியது என்பதை முனைவர் வசந்திதேவியின் இறப்பு, மீண்டும் ஒருமுறை இந்த உலகுக்கு உரக்கச் சொல்லிச் சென்றிருக்கிறது.

   கல்லூரி மாணவர்கள் மத்தியில் பேராசிரியராக, பேராசிரியர்கள் மத்தியில் கல்லூரி முதல்வராக, கல்லூரிகளுக்கிடையே பல்கலைக்கழகத் துணைவேந்தராக, கல்வித்துறையினரிடையே கல்வியாளராக, மாதர் சங்கங்களுக்கிடையே பெண்ணுரி மைக்கு குரல் கொடுத்த மகளிர் ஆணையத் தலைவராக, மனித உரிமைக் குழுக்களிடையே ஒரு அங்கத்தினராக, எவ்வித பேதமுமில்லாமல் எல்லோரிடமும் அன்பு பாராட்டும் சக மனுஷியாக என பன்முகப்பட்ட - பண்பட்ட சமூக ஆளுமையாளராக வலம்வந்தவர் முனைவர் வே.வசந்திதேவி. 

நம் சமூகப் பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வு கல்வியிலிருந்துதான் பிறக்கமுடியும் என்று உறுதியாக நம்பிய முனைவர் வசந்தி தேவியை 1998-ஆம் ஆண்டில் திருநெல்வேலியில் நடைபெற்ற ஒரு விழாவில்தான் முதன்முதலாக நான் சந்தித்தேன். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றி, ஓய்வுபெற்றமைக்காக வசந்திதேவிக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவது. அதில் பேராசிரியர்கள், கல்வியாளர்கள் மட்டுமின்றி எழுத்தாளர்கள், சமூகச் சிந்தனையாளர்கள், மாணவர்கள், பெண்கள் என பலதரப்பினரும் கலந்துகொண்டது என்னை வியப்பிலாழ்த்தியது. ‘ஆகா பல்கலைக்கழகத்தில் இப்படியொரு துணைவேந்தர் இருந்திருக்கிறாரே..! என்பதை நினைத்து பெருமிதப்பட்ட அதே நாளில் தான், யாரிந்த வசந்திதேவி? எனும் எனது தேடலும் தொடங்கிவிட்டது.

Advertisment

   இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற வெங்கல் சக்கரைச் செட்டியார், சிறந்த தொழிற்சங்கவாதியாகவும், வழக்கறிஞராகவும், சென்னை மேயராகவும், சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் இருந்தவர். அவரது மகள்வழிப் பேத்தியாகப் பிறந்தவர் வசந்திதேவி என்பதைப் பின்னரே அறிந்துகொண்டேன். திண்டுக்கல்லில் சிறந்த வழக்கறிஞராக வும், நகராட்சித் தலைவராகவும் இருந்த பி.வி.தாஸ் -  ஜானகி தம்பதியினரின் மகளாக 1938-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதியன்று பிறந்தவர் வசந்திதேவி.

வங்காளத்தில் பிறந்து, இங்கிலாந்தில் படித்து, இந்திய விடுதலைப் போராட்டத்தில் புரட்சிகர இயக்கமான அனுஷீலன் சமிதியின் துணைத்தலைவராகவும் இருந்த சித்தரஞ்சன் தாஸின் மனைவி பெயரான வசந்திதேவி எனும் பெயரையே, தன் மகளுக்குச் சூட்டினர் பி.வி.தாஸ்.

தனது எட்டு வயது வரை பள்ளிக்குச் செல்லாமல், வீட்டிலிருந்தபடி தன் தாயாரிடமே கல்வி கற்ற வசந்திதேவி, மூன்றாம் வகுப்பில் நேரடியாகச் சேர்க்கப்பட்டு, இரட்டை பிரமோஷன் பெற்று, ஐந்தாம் வகுப்புக்குச் சென்றார். பள்ளி நாட்களிலேயே வீட்டிற்கு வரும் ஆங்கிலப் புத்தகங்களை வாசிக்க

 

ல்லாக் குழந்தைகளுக்கும் சமமான - தரமான கல்வி கிடைக்கவேண்டும் என்கிற உரத்த சிந்தனையோடு கல்விப்புலத்தில் நின்று, தன் வாழ்வின் கடைசிமூச்சு வரை குரலெழுப் பிய களப்போராளியான முனைவர் வே.வசந்திதேவி, தனது 87-ஆவது வயதில் கடந்த 2025 ஆகஸ்ட் 1 அன்று இம்மண்ணுலக வாழ்விலிருந்து விடைபெற்றார்.

Advertisment

   ஒவ்வொரு தனி மனிதரின் இழப்பும் அந்தக் குடும்பத்தினருக்கு எதனாலும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பே. என்றாலும் ஒரு குடும்பத்திற்கான இழப்பு என்பதை விடவும், ஒரு சமுதாயத்தின் கல்வி வளர்ச்சிக்கான செயல்பாடுகளை எவ்வித பிரதிபலனும் பாராமல் கடந்த அரைநூற்றாண்டிற்கும் மேலாக முன்னெடுத்துப் போராடிய ஓர் ஆளுமையை இழப்பதென்பது, பெருந்துயரத்தையும் ஆற்றாமையையும் அனைவரின் உள்ளத்திலும் உண்டாக்கக்கூடியது என்பதை முனைவர் வசந்திதேவியின் இறப்பு, மீண்டும் ஒருமுறை இந்த உலகுக்கு உரக்கச் சொல்லிச் சென்றிருக்கிறது.

   கல்லூரி மாணவர்கள் மத்தியில் பேராசிரியராக, பேராசிரியர்கள் மத்தியில் கல்லூரி முதல்வராக, கல்லூரிகளுக்கிடையே பல்கலைக்கழகத் துணைவேந்தராக, கல்வித்துறையினரிடையே கல்வியாளராக, மாதர் சங்கங்களுக்கிடையே பெண்ணுரி மைக்கு குரல் கொடுத்த மகளிர் ஆணையத் தலைவராக, மனித உரிமைக் குழுக்களிடையே ஒரு அங்கத்தினராக, எவ்வித பேதமுமில்லாமல் எல்லோரிடமும் அன்பு பாராட்டும் சக மனுஷியாக என பன்முகப்பட்ட - பண்பட்ட சமூக ஆளுமையாளராக வலம்வந்தவர் முனைவர் வே.வசந்திதேவி. 

நம் சமூகப் பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வு கல்வியிலிருந்துதான் பிறக்கமுடியும் என்று உறுதியாக நம்பிய முனைவர் வசந்தி தேவியை 1998-ஆம் ஆண்டில் திருநெல்வேலியில் நடைபெற்ற ஒரு விழாவில்தான் முதன்முதலாக நான் சந்தித்தேன். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றி, ஓய்வுபெற்றமைக்காக வசந்திதேவிக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவது. அதில் பேராசிரியர்கள், கல்வியாளர்கள் மட்டுமின்றி எழுத்தாளர்கள், சமூகச் சிந்தனையாளர்கள், மாணவர்கள், பெண்கள் என பலதரப்பினரும் கலந்துகொண்டது என்னை வியப்பிலாழ்த்தியது. ‘ஆகா பல்கலைக்கழகத்தில் இப்படியொரு துணைவேந்தர் இருந்திருக்கிறாரே..! என்பதை நினைத்து பெருமிதப்பட்ட அதே நாளில் தான், யாரிந்த வசந்திதேவி? எனும் எனது தேடலும் தொடங்கிவிட்டது.

Advertisment

   இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற வெங்கல் சக்கரைச் செட்டியார், சிறந்த தொழிற்சங்கவாதியாகவும், வழக்கறிஞராகவும், சென்னை மேயராகவும், சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் இருந்தவர். அவரது மகள்வழிப் பேத்தியாகப் பிறந்தவர் வசந்திதேவி என்பதைப் பின்னரே அறிந்துகொண்டேன். திண்டுக்கல்லில் சிறந்த வழக்கறிஞராக வும், நகராட்சித் தலைவராகவும் இருந்த பி.வி.தாஸ் -  ஜானகி தம்பதியினரின் மகளாக 1938-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதியன்று பிறந்தவர் வசந்திதேவி.

வங்காளத்தில் பிறந்து, இங்கிலாந்தில் படித்து, இந்திய விடுதலைப் போராட்டத்தில் புரட்சிகர இயக்கமான அனுஷீலன் சமிதியின் துணைத்தலைவராகவும் இருந்த சித்தரஞ்சன் தாஸின் மனைவி பெயரான வசந்திதேவி எனும் பெயரையே, தன் மகளுக்குச் சூட்டினர் பி.வி.தாஸ்.

தனது எட்டு வயது வரை பள்ளிக்குச் செல்லாமல், வீட்டிலிருந்தபடி தன் தாயாரிடமே கல்வி கற்ற வசந்திதேவி, மூன்றாம் வகுப்பில் நேரடியாகச் சேர்க்கப்பட்டு, இரட்டை பிரமோஷன் பெற்று, ஐந்தாம் வகுப்புக்குச் சென்றார். பள்ளி நாட்களிலேயே வீட்டிற்கு வரும் ஆங்கிலப் புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் வசந்திதேவிக்கு இயல்பாக வாய்த்தது. ஆங்கில இலக்கியத்தைப் படித்ததோடு, ஆசிரியப் பயிற்சியும் பெற்றிருந்த அம்மாவின் அரவணைப்பும், நகராட்சித் தலைவராக இருந்த அப்பா சொன்ன இந்தியச் சுதந்திரப் போராட்டத் தலைவர்களைப் பற்றியும் கேட்டு வளர்ந்தார். 

திண்டுக்கல்லில் அறியப்பட்ட குடும்பம் வசந்திதேவியினுடையது. பள்ளி இறுதியாண்டில் மதுரை மாவட்டத்தில் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்ற வசந்திதேவி, வரலாற்றுப் பாடத்தைத் தேர்வுசெய்து படித்தார். பின்னர் சென்னை இராணிமேரி கல்லூரியில் இன்டர்மீடியட் முடித்து, மாநிலக் கல்லூரியில் இளங்கலை (ஹானர்ஸ்) படிப்பில் சேர்ந்தார். தனது பட்டப்படிப்பினை முடித்துவிட்டு, தான் படித்த இராணி மேரி கல்லூரியிலேயே பேராசிரியராகவும் பணியேற்றார்.  

ஏசியன் டெவலப்மெண்ட் வங்கியின் மூத்த அதிகாரியாகவும், மொழிபெயர்ப்பாளராகவும் இருந்த கே.எஸ்.சுப்பிரமணியத்தை திருமணம் செய்துகொண்டு, சில ஆண்டுகள் அவர் பணியாற்றிய பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்தார். அந்த நாட்டின் பொருளாதாரம் மற்றும் அரசியல் நிலை குறித்து முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டு முடித்தார். 

 தேச வரலாறு, கர்நாடக சங்கீதம், எளிய அடித்தட்டு மக்கள் மீதான அக்கறை, வறுமையை ஒழிப்பதே அரசியலின் முதல் கடமை… ஆகிய சிந்தனைகளைக் கொண்டிருந்த தனது தந்தையாரின் தாக்கமே வசந்திதேவியின் மனதிலும் உறுதியாக வலுப்பெற்றது.

தேசப் பற்று நிறைந்தவரான பி.வி.தாஸ், ஆன்மிகத்திலும் ஈடுபாடுடையவராக இருந்தார். முருக பக்தி, கம்ப ராமாயணப் பாராயணம் என்றிருந்தபோதும் தனது அறையில் தந்தை பெரியாரின் படம் ஒன்றை மட்டும்தான் அவர் வைத்திருந்தார். தமிழார்வமும், திராவிட சிந்தனைகளின் மீது நம்பிக்கையும் கொண்டிருந்த வசந்திதேவிக்கு, தனது கல்லூரிப் பருவத்திலேயே மார்க்சிய சித்தாந்தத்தில் மிகுந்த ஈடுபாடு உண்டானது. 

மார்க்ஸியம் பற்றிய உரையாடலையும், அது சார்ந்த நூல்களையும் படித்துவிட்டு விவாதிக்கும்படியான நட்பு வட்டத்தையும் தன்னைச் சுற்றி உருவாக்கிக் கொண்டார்.

ஒன்றுபட்ட சோவியத் யூனியனின் வியத்தகு வளர்ச்சி, செஞ்சீனத்தின் எழுச்சி, கியூபா, வியட்நாம் ஆகிய நாடுகளின் முன்னேற்றத்திற்கு வழிகோலிய கம்யூனிச தத்துவங்களே வசந்திதேவியின் மனமெங்கும் இடம்பிடித்திருந்தன. 

   உலகில் தேர்தலின் வழியே ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய இ.எம்.எஸ்.நம்பூதிரிபாடின் தலைமை யிலான முதல் கம்யூனிச கேரள அரசை, 1959-ஆம் ஆண்டில் அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு கலைத்தார். அதனைக் கண்டிக்கும்வகையில் சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் எம்.பி. ஸ்ரீநிவாசன், தனது கம்பீரமான குரலில் பாடலொன்றைப் பாடினார். 

இந்தச் சம்பவம் வசந்திதேவியின் மனதில் பெரும் தாக்கத்தை உண்டாக்கியது. பிறகு எம்.பி.ஸ்ரீநிவாசன் உருவாக்கிய ‘மெட்ராஸ் யூத் கொயர்’ எனும் இளைஞர் சேர்ந்திசைக் குழுவில் சேர்ந்து, இரண்டாண்டுக் காலங்கள் அந்தப் பாடல் குழுவோடு பயணித்தார் வசந்திதேவி. 

இடதுசாரி சிந்தனையாளரும், தமிழகத்தில் இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தைத் தொடங்கிய முன்னோடிகளில் ஒருவருமான மைதிலி சிவராமன், வசந்திதேவியின் கல்லூரிக் காலத் தோழியாவார். 

அவரோடும், அவரது கணவரான கருணாகரனோடும் எப்போதும் நட்பு வட்டத்தில் நெருக்கமாகவே இருந்தார்.

“பெண் விடுதலைக் கருத்துகள் எனக்குள் உருவானதற்கு என் தந்தையின் வளர்ப்பே முக்கியக் காரணம்’ என்று சொன்ன வசந்திதேவியின் பெண்ணியச் சிந்தனைகள், கட்டற்ற போக்கினைக் கொண்டவையல்ல; மாறாக, சுயமரியாதையை, சுயமதிப்பீட்டை, அர்ப்பணிப்பை அடிப்படையாகக் கொண்டவை.  

இராணி மேரி கல்லூரி, மாநிலக் கல்லூரி ஆகியவற்றில் பேராசிரியராகப் பணியாற்றியவர், பின்னர் இராணி மேரி கல்லூரியில் துறைத் தலைவராகவும் இருந்தார். 1981-இல் திண்டுக்கல்லில் பேராசிரியராகப் பணியாற்றியபோது, கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் பல கூட்டங்களையும், போட்டிகளையும் தொடர்ந்து நடத்தினார். சமூகத்தின் பொதுத்தளத்தில் உழைக்கும் பெண்களின் பிரச்சினைகளை மாணவிகளும் புரிந்துகொள்ள வழிகாட்டியதோடு, மகளிர் சுய உதவிக் குழுக்களை உருவாக்கி, அதனையும் வழிநடத்தினார். 

ஆசிரியர் சங்கங்களின் போராட்டங்களிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவர் வசந்திதேவி. 1985-இல் பள்ளி, கல்லூரி ஆசிரியர் கூட்டமைப்பான ‘ஜாக்டி’ நடத்திய போராட்டத்தில் கலந்துகொண்ட பெண் ஆசிரியர்கள் மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர். போராட்டத்தில் கைதாகியிருந்த பேராசிரியர்களுள் ஒருவராக வசந்தி தேவியும் இருந்தார். போராட்டத்தில் பங்கேற்றமைக்காக மன்னிப்பு கேட்டால் விடுதலை ஆகலாம் என்ற நிலையில், தீபாவளி பண்டிகைக்குக்கூட போக விரும்பாமல், சுயமரியாதை இழந்து மன்னிப்புக் கேட்காமல் 10 நாள்கள் சிறையில் இருந்தவர்களுக்கு நம்பிக்கையூட்டும் போராட்டத்தலைவியாக விளங்கினார் வசந்திதேவி.     

திண்டுக்கல்லில் பணியாற்றிய காலத்தில், குழந்தைகள் வாசிப்பு மையத்தை உருவாக்குவதற்காகவே தான் குடியிருந்த சொந்த வீட்டையே தானமாக வழங்கினார். 1980-களில் மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டியில் பொதுவெளியில் பலரும் அறியாவண்ணமாகப் பெண் சிசுக்கொலை நடைபெறுவதை, தனது கள ஆய்வின் மூலமாக உலகின் கவனத்துக்கு வெளிக்கொண்டு வந்தார். அதன்பிறகே அந்தப் பிரச்சினைக்கான தீர்வு தேடிய முயற்சிகள் அரசாலும், பிற தொண்டு நிறுவனங்களாலும் முன்னெடுக்கப்பட்டன. 1988-இல் கும்பகோணம் மகளிர் கலைக்கல்லூரியின் முதல்வராகப் பொறுப்பேற்றதும், தனது செயல்பாடுகளை முன்னிலும் கூர்மையோடு செயல்படுத்த முனைந்தார்.   

திருநெல்வேலியில் 1990-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக 1992-ல் நியமிக்கப்பட்டார். மகளிர் பல்கலைக்கழகம் தவிர்த்து, வழக்கமான பல்கலைக்கழகமொன்றில் துணைவேந்தராக நியமிக்கப்பட்ட முதல் பெண் என்கிற பெருமையையும் பெற்றார் வசந்திதேவி. அறத்தை முன்வைத்தும், சமூகத்தின் மீதான அக்கறையோடும், கல்வி மனித வாழ்வை முன்னேற்றும் படிக்கட்டுகளாக இருந்திடவேண்டுமென்கிற சிந்தனையோடும் 1992 முதல் 1998 வரை ஆறு ஆண்டுக்காலங்கள் பல்கலைக்கழகங்களுக்கே முன்னோடியாக விளங்கும் மிகச் சிறப்பான பல திட்டங்களை வழிகாட்டியாக நின்று செயல்படுத்தினார்.  

பல்கலைக்கழகத்தின் கட்டுமான பணிகள், பாடத்திட்டம் உருவாக்கம் என அனைத்தையும் வெளிப்படைத்தன்மையோடும், பலரது கருத்துக்களையும் கேட்டு செயல்படுத்தி, கல்வி நிறுவனத்திற்கான வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தார். மேலும், ஒவ்வொரு துறைக்கும் தகுதிவாய்ந்த பேராசிரியர்களைத் தேடிப்பிடித்து அழைத்துவந்து, அந்தப் பொறுப்பில் அமர்த்தி சிறப்பு சேர்த்தார். எழுத்தாளர்-ஆய்வாளர் தொ.பரமசிவன், கல்வியாளர் ச.மாடசாமி, இதழியல் பேராசிரியர் சுரேஷ் பால், வரலாற்று ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி முதலானோர் அதில் குறிப்பிடத்தக்கவர்கள்.  

பொதுத்தேர்வு முடிவுகளுக்குப் பிறகு மாணவர்களுக்குச் சந்தேகம் எழும் பட்சத்தில் விடைத்தாள் நகல் கேட்பது, மதிப்பெண்ணை மறுமதிப்பீடு செய்யக் கோருதல் உள்ளிட்ட இன்றைக்கு நடைமுறையில் இருக்கும் பல சிறப்பான முன்னெடுப்புகளை முதன்முதலாக மனோன்மணியம் பல்கலைக் கழகத்தில் அறிமுகம் செய்தவர் வசந்திதேவி. கல்லூரிகளில் கட்டாய நன்கொடை வாங்கும் தடைச்சட்டம் 1990-இல் இருந்தே இருந்தபோதிலும், மீறி வாங்கும் கல்லூரிகளுக்கு வேறு எந்தப் பாடப்பிரிவையும் இரண்டு ஆண்டுகளுக்குத் தொடங்க அனுமதி மறுத்தார்.  

1992-ஆம் ஆண்டு டிசம்பர் 6 அன்று தேசத்தின் இறையாண்மையைச் சிதைக்கும் வண்ணமாக உத்தரப்பிரதேச மாநிலத்தின் அயோத்தியிலிருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, மாணவர்கள் பெருமளவில் பங்கேற்ற மதவெறி எதிர்ப்புப் போராட்டத்தை வசந்திதேவி தலைமையேற்று நடத்தியதைக் கண்டு நெல்லை மட்டுமல்ல, தமிழகமே வியந்து பார்த்தது. 

வழக்கமான கல்லூரிப் படிப்பைத் தவிர இளைஞர் நலத்துறை எனும் புதிய துறையை உருவாக்கி, மாணவர்களிடம் உள்ளடங்கிக் கிடந்த பன்முக ஆற்றலை வெளிப்படுத்தும் வாய்ப்புகளை உருவாக்கித் தந்தார்.    

வாழ்வியல் சார்ந்த புதிய திறப்புகளை மாணவர்களிடையே உண்டாக்கும் முயற்சியாகச் சுற்றுச்சூழல் கல்வி, மகளிர் இயல், நுகர்வோர் உரிமை என்று பல விருப்பப் பாடங்களையும் புதிதாகச் சேர்த்தார். அந்தப் பகுதியின் சிறப்புகளாக அறிமுகமாயிருந்த பத்தமடைப் பாய், மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரப் பழங்குடியினர் தயாரித்த மருந்துப் பொருள்கள் போன்றவற்றைப் போற்றவும், பரப்பவும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். கல்லூரி மாணவர்கள் ஒவ்வொருவரையும் விளையாட்டு, சஈஈ, சநந, அறிவொளி இயக்கம், கிராம வளர்ச்சி போன்ற ஏதாவதொன்றில் கட்டாயம் பங்குபெற வைத்தார். துணைவேந்தரான வசந்திதேவியின் செயல்பாடுகளை விரும்பாத சில தனியார் கல்லூரி நிர்வாகமும், பணியாளர் தேர்வு, கட்டுமானப் பணிகளில் இலாபமடைய முடியவில்லையே என்று வருந்திய ஆட்சியாளர்களின் தரப்பும் அவர்மீது சில விமர்சனங்களையும் இடையூறுகளையும் செய்யத் தொடங்கின. ஆனாலும் மனம்தளராமல் நீதிமன்றங்களுக்குச் சென்று போராடியே சில தடைகளைத் தகர்த்து அவரால் முன்னேற முடிந்தது. இதற்கெல்லாம் அவருக்கு உற்ற துணையாக இருந்து சட்ட ஆலோசனைகளை வழங்கியவர் பின்னாளில் சென்னை உயர்நீதி மன்றத்தின் நீதியரசராக உயர்ந்த வழக்கறிஞர் கே.சந்துரு என்பதை பல நேரங்களில் நன்றியோடு நினைவுகூர்ந்துள்ளார்.

கல்வியையும் மாணவர்களையும் முதன்மைப் படுத்திய துணைவேந்தராக இருந்த வசந்திதேவி, உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி அனைத்துக் கல்லூரி களிலும் மாணவர் பேரவைத் தேர்தலை நடத்திட உத்தரவிட்டார். ஆண்கள் மட்டுமே படித்துக்கொண்டி ருந்த பல கல்லூரிகளை, ஆண்-பெண் இருபாலரும் படிக்கும் கல்லூரிகளாக மாற்றினார். மாணவர்களது குறை தீர்ப்பு குழுக்களை எல்லாக் கல்லூரிகளிலும் அமைத்தார். 

    பணி ஓய்வுக்குப் பின்னும் சோர்வுறாமல், பல்வேறு கல்வி செயல்பாட்டாளர்களோடும், மனித உரிமை குழுக்களோடும் இணைந்து செயல்பட்டார்.  2000-த்தில் தொடங்கப்பட்ட இந்திய வளர்ச்சி இயக்கம் (எய்டு இந்தியா) தொண்டு நிறுவனத்தின் தலைவராக இருந்து,  2016 வரை அப்பொறுப்பிலிருந்து மிகச்சிறப்பான முறையில் மாற்றுக்கல்விக்கான ஆலோசனைகளையும் புதிய வழிகாட்டுதல்களையும் வழங்கினார்.  2002- 2005 வரை தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவராகப் பொறுப்பேற்றார். நிதி, அதிகாரம் மற்றும் எவ்வித வசதிகளுமில்லாமல் இருந்த மகளிர் ஆணையத்தின் பணிகளைச் செய்திட, தமிழக அரசோடு போராடினார். 

கல்வி உரிமைச் சட்டம் 2009-ன்படி அமைக்கப்படவேண்டிய பள்ளி மேலாண்மைக்குழு, கிராம சபைக் கூட்டம் இரண்டையும் சட்ட ரீதியிலான கருவிகளாகக் கொண்டு அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் முயற்சிகளைத் தொடர்ந்து செய்துகொண்டேயிருந்தார். அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துவது, அதில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்துவது, அடித்தட்டு மக்களின் குழந்தைகளுக்கும் தரமான கல்வி கிடைத்திட செய்தல், அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஆசிரியர்களை ஊக்கப்படுத்துதல் போன்றவற்றை எல்லா இடங்களிலும் வலியுறுத்திப் பேசியும், இந்து தமிழ் திசை, புதிய ஆசிரியன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதியும் வந்தார்.

    பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் எனும் அமைப்பினை 2017-ஆம் ஆண்டு தொடங்கி, அதன் தலைவராக இருந்து, ஒன்றிய அரசு கொண்டுவந்த தேசியக் கல்விக்கொள்கையில் இருக்கும் முரண்பாடுகளை எதிர்த்து போராடினார்.

  எழுத்தாளர் சுந்தர ராமசாமி, வசந்திதேவியுடன் நடத்திய நீண்ட உரையாடலைத் தொகுத்து,  2000-த்தில் ‘தமிழகத்தில் கல்வி’ எனும் நூலாக வெளிவந்து, பரவலான கவனத்தைப் பெற்றது. கல்வி தொடர்பாக அவர் பேசியதும், எழுதியதும் பின்னர், சக்தி பிறக்கும் கல்வி’ எனும் நூலாக காலச்சுவடு வெளியிட்டது. 

 1973-ஆம் ஆண்டு ஒன்றிய அரசு பத்ம விபூஷண் விருதையும்,  2016-ஆம் ஆண்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ‘பெரியார் ஒளி’ விருதையும், 2017-ஆம் ஆண்டு வாழ்நாள் சாதனையாளருக்கான சக்தி விருதையும், 2023-ஆம் ஆண்டிற்கான அவள் விகடனின் 'தமிழன்னை' விருதினையும், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் ‘தமிழ்திரு’ விருதினையும் வசந்திதேவிக்கு வழங்கிச் சிறப்பித்தன.

   மறைந்த கல்வியாளர் வசந்திதேவிக்கான நினைவேந்தல் நிகழ்வினை கடந்த 2025 ஆகஸ்ட் 10 அன்று 30-க்கும் மேற்பட்ட சமூக - கல்வி - மனித உரிமை அமைப்புகள் ஒருங்கிணைந்து சென்னை சைதாப்பேட்டையிலுள்ள தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக அரங்கில் நடத்தின. இதில் மேனாள் 

நீதியரசர் அரிபரந்தாமன், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் பதர் சையத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னிஅரசு, தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவர் ஏ.எஸ்.குமரி, வழக்கறிஞர்கள் அருள்மொழி, ஹென்றி திபேன் உள்ளிட்டோர் பங்கேற்று, வசந்திதேவியுடனான தங்களது நினைவலைகளையும், அவரது பன்முகச் செயல்பாடுகளைப் பற்றியும் நெகிழ்ச்சியோடு பகிர்ந்துகொண்டனர்.

   இந்நிகழ்வில் காணொலி வாயிலாகப் பங்கேற்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “கல்வி என்பது வியாபாரப் பொருளாகவோ, அதிகாரக் கோட்டைக்குள் பாதுகாக்கப்படும் ஆயுதமாகவோ அல்லாமல் எளிய மக்களுக்கும் கிடைக்க வேண்டும். கல்வி அவர்களுக்கான ஆயுதம். அதுதான் அழிக்க முடியாத செல்வம் எனும் நோக்கத்தோடு தொடர்ந்து செயலாற்றி, அதற்கான இயக்கங்களை வசந்திதேவி முன்னெடுத்தார். மாநில மகளிர் ஆணையப் பொறுப்பில் இருந்தபோது அவர் ஆற்றிய பணிகள் சிறப்பானவை” என்று புகழுரைத்தார். 

    கல்வி ஒளியினை அனைவரும் பெற வேண்டுமென்கிற சிந்தனையோடு கல்லூரிக்குள்ளிருந் தும், களத்தில் நின்றும் சளைக்காமல் போராடிய வசந்திதேவி எனும் கல்வியின் கலங்கரை விளக்கு அணைந்து போயிருக்கலாம். ஆனால், அவர் காணவிரும்பிய கல்வியில் சிறந்த உயர்ந்த சமத்துவ சமுதாயம் தமிழ் நிலத்தில் செழித்து வளர்வதற்கான ஒளிப்பரவலையும் நம்மிடையே தந்துவிட்டுச் சென்றிருக்கிறார். அதன் வழியே கல்விக்கான பயணம் என்றென்றும் தொடரும்.

 

uday010925
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe