பூனைகள் இறந்து விழுந்துகொண்டிருக்கின்றன... ஒவ்வொன்றாக.
குட்டிகளையும் சேர்த்து ஒன்பது பூனைகள் இருந்தன. சேரெஸ்யன் ஜீனாவிற்கு நாராயணன் குட்டி பரிசாக அளித்த ஸயாமீஸ் ஜோடிகளிலிருந்து பிறந்த பிள்ளைகள்... ஸுல்லியும் ஸுட்டுவும்...
முதல் பிரசவத்தில் பிறந்த உண்ணியும் காளியும்... சந்தானலட்சுமி, நீலகண்டன், ஓஷா, பராக்மாற்றி, சுவர்ணா.
கெட்ட காலத்தின் மோசமான அறிகுறிகள் தெரியத்தொடங்கி இருக்கின்றன.
புதிதாக கட்டப்பட்ட ஓடு இட்ட வீட்டைச் சுற்றி வரிசையாக நின்றிருந்த, நன்றாக காய்த்துக் கொண்டிருந்த தென்னை மரங்களை ஒவ்வொன்றாக வெட்டி அகற்ற வேண்டிய நிலை உண்டானது. காய்ந்த பட்டைகளும் தேங்காய்களும் இளநீரும் விழுந்து வீட்டின் மேற்குப் பக்கத்திலிருந்த இரண்டு வரிசை ஓடுகளும் முழுமையாக உடைந்து தகர்ந்துவிட்டன. மூலையிலிருந்த ஓடும் தன் இடத்திலிருந்து விலகி நின்றுகொண்டிருக்கிறது.
பொன் விளையக்கூடிய மரமாக இருந்தாலும், வீட்டிற்கு மேலே அது இருந்தால், வெட்டி நீக்கிவிட வேண்டும் என்பது நியதி.
சிறிய... சிறிய இழப்புகள்...
அனைத்துமே சாதாரணமாக தள்ளி நீக்கப்பட வேண்டியவைதாம்.
ஆனால், அவருடைய மனநிலை அப்படி இல்லை.
அனைத்துமே ஒரு பெரிய கெட்ட காலத்தின் தொடக்கம் என்று அவர் நம்ப ஆரம்பித்தார்.
மாதங்களுக்கு முன்பு உண்டான வீழ்ச்சி... தலைபிளந்து சிதறியிருக்க வேண்டும். அதிர்ஷ்டம் என்றுதான் கூற வேண்டும்... இடது முழங்காலிலும் வலது முதுகெலும்பிலும் காயம் உண்டாகி, தப்பித்துக்கொண்டார்.
முழங்காலுக்கு மேலே இருக்கும் தோல் முழுவதும் உதிர்ந்துவிட்டது. காங்க்ரீட் ஸ்லாபின் மீது கால்களை வைத்தபோது, தடுமாறி விழுந்து விட்டார். யாரோ ஒரு எதிரி மனதிற்குள் சபித்திருக்கிறான்.
மது அருந்தி சுய உணர்வு இல்லாத நிலையில் கதாநாயகர் வாய்க்காலில் விழுந்திருக்கிறார் என்று பார்த்துக்கொண்டு நின்றிருந்தவர்கள் நினைக்கிறார்கள்.
முழங்காலின் எலும்பு உடைந்துவிட்டது. வலதுபக்க தோள் பகுதியும் தோள் எலும்பும் சிதிலமடைந்துவிட்டன.
இனி நிமிர்ந்து நடக்க முடியாது.
அந்த தலையை உயர்த்தி நடக்கும் விதம் இருக்கிறதே... அதை இனிமேல் பார்க்க முடியாது.
இறந்துவிட்டார். இனி தப்பிப்பதற்கான வாய்ப்பில்லை.
ஊர் முழுக்க அந்தச் செய்தி பரவியது.
இப்போது சிகிச்சையில் இருக்கிறார்.
எழுதுவதற்கு அமரும்போது, முதுகெலும்பில் வேதனை... உள்ளங்கையிலும் ஒவ்வொரு விரலிலும் வலி...
வலதுபக்கம் சுய உணர்வில்லாமல் இருக்கிறது.
இன்னொருவரின் உதவி இல்லாமல், கைகளை நுழைத்து சட்டையைக் கூட அணிய முடிய வில்லை.
கைகளை மேலே விரித்து உயர்த்தும் போது, வலது பக்க தோள் எலும்பிலும் கழுத்து எலும்பிலும் வேதனை...
நடுக்கம்...
இந்த வேதனை இல்லாமலிருக்க வேண்டுமென்றால், வாதத்திற்கு இருக்கக்கூடிய ஆயுர்வேத சிகிச்சையைச் செய்யவேண்டும்.
நிபுணத்துவம் கொண்ட மருத்துவரிடம் சென்று பரிசோதித்துப் பார்க்கவேண்டும்.
மருந்தை உறுதிப்படுத்தவேண்டும்.
தனக்கென சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்டிருந்த தனி அறையில் போய் படுத்தார்.
உடல் நலம் பாதிக்கப்பட்டு ஒரு வருடமாகி விட்டது. இரண்டு கைகளையும் தலைக்குத் தாங்குதலாக வைத்துவிட்டு, நீண்டு நிமிர்ந்து படுக்கமுடியவில்லை. வலது கையையும் இடது கையையும் சுருட்டி சேர்த்து, தலையணைகளில் மடக்கி வளைத்து வைத்து, ஒரு பக்கமாக சரிந்து படுக்கவேண்டும். வலது பகுதியைத் தலையணையில் அழுத்தும்போது முதுகில் வேதனை உண்டாகும். திரும்பியும் புரண்டும் சாய்ந்தும் சரிந்தும் சுருண்டு படுத்திருக்கிறார்.... நாயைப் போல.... பூனையைப் போல... கீரியைப் போல...
அவர் சுருண்டு சிறிதாகிக்கொண்டிருக்கிறார்.
உறுதியான கைகளின் சதைகளுக்கு பலம் போதாது.
உறுதித் தன்மை போதாது.
படுத்தும் அமர்ந்தும் வாசித்தும் நேரம் செல்கிறது.
தூக்கம் கஷ்டப்பட்டே வருகிறது.
படுத்துக் கொண்டே சிந்திப்பதற்கு மத்தியில் தான் வளர்ப்புப்பூனைகள் ஒவ்வொன்றாக இறந்து விழுந்தன.
மிகவும் அதிகமாக அன்பு வைத்தும் கொஞ்சியும் அக்கறை செலுத்தியும் வளர்க்கப்பட்ட செல்லப் பிராணிகள்....
வளர்ப்புப் பிராணிகளிடம் அவருக்கு எப்போதும் அளவற்ற பாசம்...
குறிப்பாக நாயின் மீதும் பூனையின் மீதும்..
அதிக நண்பர்கள் இல்லை.
வயதானபோதுதான் மனைவி பார்த்துக் கொள்வதற்காக அருகில் வந்திருக்கிறாள். நல்ல காலத்தில் அவருடன் சேர்ந்து வாழ்வதற்கு அவளுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
அதற்குப் பின்னால் பல காரணங்கள் இருக்கின்றன.
அவற்றையெல்லாம் மீண்டும் கூறுவதால் எந்தவொரு பயனுமில்லை.
தன்னை அழிக்கும் என்று தோன்றக்கூடிய உறவுகள் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று விரும்பாத மனிதர் அவர்.
மற்றவர்களின் கருணையில் வாழ ஆசைப்பட வில்லை. முன்னோரிடமிருந்து பாகத்தைப் பிரித்து கிடைத்த பூர்வீக அசையா சொத்தைக்கொண்டு சுகமாக வாழக்கூடிய சூழல்களை வீணாக்கி விட்டார்.
வேண்டியவர்களுக்கு செய்யவேண்டிய கடமைகளைச் சரியாகச் செய்ய முடியவில்லை.
அதற்குப் பின்னால் வந்த ஒரு வருடம் நெருப்புச் சோதனைகள் நிறைந்ததாக இருந்தது.
ப்ராக்மாற்றியைக் கழுத்தை நெரித்துக் கொன்று விட்டால் என்ன என்று கூட தோன்றியிருக்கிறது.
எதற்காக கடைசிக்குட்டியை அவர் காப்பாற்ற வேண்டும்? அவள் உடல் ஊனமுற்றவளாக ஆகிவிட்டாள்.
கண்களைக் கட்டி தூரத்தில் எங்காவது கொண்டுபோய் விடவும் முடியவில்லை.
"துயரம் நிறைந்த இந்த வீட்டில் வாழ்வதைவிட இறப்பது என்பது எவ்வளவோ மேல். மூத்திரத்தை யும் மலத்தையும் வாந்தியையும் அள்ளி போதும் போதும்னு ஆயிடுச்சு. நான் என் வீட்டிற்கு உறுதியான முடிவுடன் கிளம்பிப் போறேன்.
எனக்கும் எனக்கென சொந்தமாக இருக்கும் கூரை வீடு இருக்கிறது. நான் அங்கு படுத்துச் சாகுறேன்.''
மனைவியின் புலம்பல்களைக் கேட்டு வெறுப்பு உண்டாகிவிட்டது.
"கையையும் காலையும் கட்டிப் போட்டு ஒரு கோணிக்குள் இருக்கச் செய்து ஓடும் நீரில் எறிந்து விடுடீ.. குழியைத் தோண்டி உயிருடன் புதைச்சிடு.''
தாங்கிக் கொள்ளமுடியாத அளவிற்குக் கோபம் வந்தபோது, அவர் பதிலுக்குக் கூறினார்.
"இரக்க குணம் உள்ளவர்களாகவும் கர்மத்தில் கண்ணாக இருப்பவர்களாகவும் நேர்மையாக நடப்பவர்களாகவும் இருக்கக்கூடிய பிள்ளைகளையும் மருமகன்களையும் பெற்றிருக்கும் நான் மட்டும் ஏன் இப்படி கஷ்டப்பட வேண்டும்?''
அவர் யாரிடம் என்றில்லாமல் கோபத்தை உள்ளுக்குள் அடக்கிக்கொண்டு முணுமுணுத்தார்:
"என் ப்ராக்மாற்றி... உன்னை விட்டெறிய வேண்டும் என்று கூறிய அனைவருடனும் தனி மனிதனாகப் போராடினேன்''. அவரிடமிருந்து பெருமூச்சு வெளிவந்தது. கடந்த ஒரு வருடமாக கடமைகளிலும் துயரங்களிலும் சிக்கிக் கொண்டார்.
சகித்துக்கொள்ள முடிகிற அளவையும் தாண்டிய புறக்கணிப்பு... கவலையும் அவமானமும் வேதனையும் சேர்ந்து கலந்த நாட்கள்...
கடவுளுக்கு அவரைக் கோபப்பட வைப்பது என்பது ஒரு பொழுதுபோக்காக ஆகிவிட்டதோ?
"மெத்தையில்... கம்பளிப் போர்வைக்கு அடியில்... சரீரத்தில் வெப்பம் உண்டாக... நீ இருந்தாய். உன் தூக்கம் கெடாமல் இருப்பதற்காக கம்பளியைக் கொண்டு தலைவரை மூடிவிட்டேன்.''- அவர் முணுமுணுத்தார்.
"பூனையைக்கூட படுக்க வச்சு, கடைசியில நீங்களும் பூனை மாதிரியே ஆயிடுவீங்க''-
இவ்வாறு அவ்வப்போது மனைவி திட்டும் காரணத்தால்தான் இந்த அளவிற்கு பலமாகக் கூறுகிறார்.
பூனை, நாய் ஆகியவற்றின் சரீரத்தைத் தொடுவதன்மூலம் குணமாகாத நோய்கள் வந்துசேரும் என்பதை அவள் இப்போதும் நம்புகிறாள்.
வருடங்களுக்கு முன்பு ப்ராக்மாற்றி அழகானவளாக இருந்தாள்.
பார்த்தால்... யாரும் பார்த்துக்கொண்டே இருக்கக்கூடிய அழகு!
"கடவுள் உன் விஷயத்தில் வேண்டிய அளவிற்கு அற்புதங்களை வெளிப்படுத்தினார்.
அழகு உனக்கு ஒரு ஆசீர்வாதமாக இருந்தது.
துன்பம் ஒரு சாபமாக வந்து சேர்ந்தது.
மூத்திரத்தையும் மலத்தையும் வாந்தியையும் அள்ளிப்போட்டேன்.
கொல்வதற்கு மனம் அனுமதிக்கவில்லை.
வெளியே சென்று அனைத்தையும் நன்கு செய்தவள்தான். முதுகெலும்பு பாதிக்கப்பட்ட பிறகுதான் உன் நடவடிக்கைகளில் வெளிப்பட்ட மாறுதல்களைப் பார்த்தேன். கூச்சமற்ற நிலை... இறுதி நிமிடத்தில் நீ என்னை மட்டும்
அடையாளம் கண்டுகொண்டாய்.''
அவருடைய கண்கள் திடீரென ஈரமாயின.
எங்கு கருணை இருக்கிறதோ, அங்கு துக்கமும் இருக்கும். வேதனையும் இருக்கும். கருணை மனம் கொண்டவர்களை பல நேரங்களில் தெய்வம் சோதித்துப் பார்ப்பதற்காக தேர்ந்தெடுக்கிறது.
காலுக்கும் கைக்கும் சுய உணர்வு இல்லாமல் இழுத்துக் கொண்டும் ஊர்ந்து கொண்டும் நடக்கக்கூடிய உயிரிடம் கருணையை வெளிப்படுத்த வேண்டும் அல்லவா? அதுவும் செல்லம் கொடுத்து வளர்க்கப்பட்ட ஒன்றிடம்...
அவர் அவளைப் பல முறைகள் ஈர்க்குச்சியால் குத்தியிருக்கிறார்.
கெட்ட பழக்கங்களிலிருந்து விடுபடச் செய்வதற்காக...
கெட்ட நாற்றத்தை உண்டாக்கும் மூத்திரத்தைத் துடைத்து நீக்கும்போது, சாபமிட்டிருக்கிறார்.
"இந்த நாசமாப் போனது சாகக் கூடாதா?''
கண்ணில் கருணையின் ஊற்று வற்றிவிட்ட தெய்வம் தூங்குகிறதா?
மரணப் படுக்கையில் கிடந்து மூச்சைவிடும் ப்ராக்மாற்றி...
இறுதியாக அவளுடைய வாயைக்கரண்டியால் பிளந்து மூன்றோ நான்கோ பால் துளிகளைப் புகட்டினார்.
பால் துளிகள் தொண்டையிலேயே தங்கிவிட்டன.
அவளுடைய உதடுகள் கோணின. கண் விழிகள் திறந்தன.
ப்ராக்மாற்றி இறந்துவிட்டது.
எப்போதும் அவரை தெய்வம் ஒவ்வொரு காரணங்களின் பெயரிலும் வேதனைப்படச் செய்திருக்கிறது.
தெய்வத்திற்கு நன்றி கூற வேண்டும்.
"கருணைமயமான தெய்வமே, என்றென்றும் துக்கத்தை உண்டாக்கிக் கொண்டு உயிர்களின் மீது வைத்திருக்கக்கூடிய கருணை என்ற உணர்ச்சியை மேலும் மேலும் பரிசுத்தம் செய்து என் நல்ல மனம் விழிப்புடன் செயல்பட வேண்டுமென வேண்டிக் கொள்கிறேன்.''
தன் சொந்த கைகளைக்கொண்டு அவளை அடக்கம் செய்யவேண்டும்.
வலது கையின் வேதனையைச் சகித்துக்கொண்டு குழியைத்தோண்ட வேண்டும்.
மண்வெட்டியைக் கையில் எடுத்து குழி தோண்டுவது... அவர் வியர்வையில் நனைந்தார்.
"நாசமா போனதுக்கு மூக்கு முட்டுற அளவுக்குச் சாப்பிட கொடுத்ததால்தான் உள்ளே மலத்தைக் கழிச்சு வச்சது. அந்த கேடு கெட்ட பிறவியைப் பட்டினி போட்டு கொல்லணும். அந்த பிறவி இருக்குற வீட்டில் நாழி அரிசி இருக்காது''- மூத்த மகனின் வார்த்தைகள் மீண்டும் ஞாபகத்தில் வந்தன:
"அப்பா... நீங்க ப்ளேக்கோ எலி ஜுரமோ பாதித்து இறந்து விடுவீங்க. மிகப் பெரிய நோய்களுக்கு நீங்க இரையாகப் போகிறீங்க. நீங்களே வரவழைத்துக் கொள்ளக்கூடிய வினையால் இறந்து விடுவீங்க.. பல முறைகள் கூறியதுதான்.... நாங்கள் அந்த பூனையை எங்காவது கொண்டு போய் விட்டுவிடுகிறோம் என்று. எந்தச் சமயத்திலும் திரும்பி வராத வகையில்....'' கோபமடைந்த மூத்த மகனின் குற்றச்சாட்டுகளைப் பொருட்டாக நினைக்க வில்லை.
"அப்பா.... நீங்க படுத்திருக்கும் அறைக்குள் வந்தால், மூச்சு அடைக்குது. பாசியின் வாசனை... பூனை மூத்திரத்தின் வாடை... படுத்திருக்கும் கட்டிலுக்கு அடியில் தனிப்பட்ட முறையில் மரத்தால் செய்யப்பட்ட தட்டில், படுப்பதற்காக ரப்பர் குஷன் இடப்பட்டிருக்கிறது. அப்பா... உங்களின் இந்த கருணை குணத்தையும் கவனித்துக் கொள்ளும் தன்மையையும் பார்த்து வெறுப்பு உண்டாகிறது.
அப்பா... தயவுசெய்து நீங்களும் பூனையும் ஒன்றாக இந்த அறையை விட்டு வெளியேறினால், உதவியாக இருக்கும். இல்லாவிட்டால்... நானும் என் தம்பியும் அம்மாவும் சேர்ந்து வேறு வீட்டை வாடகைக்கு எடுக்க வேண்டியதிருக்கும்.''- இளைய மகனும் தன்னுடைய கோபம் முழுவதையும் வார்த்தைகளின் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறான்.
கடந்த ஒரு வருடமாக இந்த அறையில்தான் படுத்திருக்கிறார்.
அன்பு செலுத்தி வளர்த்த பூனைகள் ஒவ்வொன்றாக மரணத்தைத் தழுவியிருக்கின்றன.
இறுதி வாரிசு... ப்ராக்மாற்றி.
இனிமேல் ஒரு உயிரினத்தையும் வளர்ப்பதாக இல்லை. அன்பு என்பது வேதனையானது. கருணை என்பது துக்கத்தை அளிக்கக்கூடியது. பல தடவைகள் படித்தும் அறிவு வரவில்லை.
சொந்த கைகளைக்கொண்டு கொல்ல இயலாதிருந்த ப்ராக்மாற்றியை இவ்வளவு சீக்கிரம் திரும்பவும் அழைத்துக்கொண்ட தெய்வத்திற்கு நன்றி.
கையால் கொல்லவேண்டிய அவசியம் உண்டாகவில்லை.
அவர் தேற்றிக்கொள்ள முயற்சித்தார்.
இனி ஒரேயொரு வேலைதான் பாக்கியிருக்கிறது. குழியைத் தோண்டி மூடவேண்டும்.
கவிஞரின் வரிகள் நினைவில் ஓடி வந்து நின்றன.
"குழி தோண்டி
மூட வேண்டும் வேதனைகள்.
குதித்தோடும் சக்தியுடன்
நாம்.'
மனித மனம் சக்தியுடன் குதிக்கும்போது, வேதனைகளை மறக்கிறது.
அத்துடன் ப்ராக்மாற்றியைப் பற்றிய நினைவு களும் மூடப்படுகின்றன.
மண்வெட்டியை எடுத்து உயர்த்தி மண்ணில் ஓங்கி வெட்டியபோது, தோள்பட்டை எலும்பிலும் வலது உள்ளங்கையிலும் வேதனை இல்லாமற் போவதை அவர் அறியவில்லை.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/13/ss2-2025-12-13-12-49-52.jpg)