முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி, 
சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாத சாரம்:
சூரியன்: பூரட்டாதி- 1.
சந்திரன்:  சுவாதி- 3.
செவ்வாய்: சதயம்- 2. 
புதன்: பூரட்டாதி- 1  (வ).
குரு: புனர்பூசம்- 1 (வ). 
சுக்கிரன்: உத்திரட்டாதி- 2. 
சனி: உத்திரட்டாதி- 2. 
ராகு: சதயம்- 3.
கேது: பூரம்- 1.  
கிரக மாற்றம்: 
11-3-2026 குரு வக்ரநிவர்த்தி காலை 9.15 மணிக்கு.
14-3-2026 மீன சூரியன் இரவு 1.03 மணிக்கு.
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்: துலாம்
9-3-2026 காலை 9.30 மணிக்கு விருச்சிகம்.
11-3-2026 இரவு 10.00 மணிக்கு தனுசு.
14-3-2026 காலை 9.33 மணிக்கு மகரம்.
இவ்வார சுப முகூர்த்த நாட்கள்: இல்லை
மேஷம்   
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் சூரியன், ராகு, செவ்வாய், புதன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். பெரிய மனிதர்களுடைய நட்பு கிடைப்பதால் கடந்த கால பிரச்சினைகள் தற்போது விலகி ஏற்றமிகுந்த பலன்களைப் பெறுவீர்கள். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துவகையில் ஆதாயங்களை பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் போட்ட முதலை எளிதில் எடுக்கச் கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலை ஆட்களை சற்று அனுசரித்துச் செல்வது மிகவும் நல்லது. ஒருசிலருக்கு வெளியூர் தொடர்புகள் மூலமாக அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உடல் ஆரோக்கியரீதியாக இருந்த பாதிப்புகள் எல்லாம் தற்போது விலகுவதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். பிள்ளைகள்வழியில் ஒருசில மகிழ்ச்சிகரமான நிகழ்வுகள் நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எடுத்த பணியை குறித்த நேரத்தில் முடித்து நல்ல பெயர் எடுக்கக்கூடிய நேரமாகும். மாணவ- மாணவியர்கள் கல்வியில் சிறப்பாக செயல்பட்டு பெற்றோர்- ஆசிரியருடைய பாராட்டுதலை பெறக்கூடிய காலமாகும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றக்கூடிய பலம் உண்டாகும். வரும் நாட்களில் ஏற்றமிகுந்த பலன்களை அடைவதற்கு மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நன்மை தரும்.
Advertisment
வெற்றி தரும் நாட்கள்: 8, 14.
ரிஷபம்  
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
Advertisment
உங்கள் ராசிக்கு 10-ல் சூரியன், செவ்வாய், புதன் சஞ்சரிப்பதாலும், 11-ல் சனி, சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் உங்கள் வாழ்வில் மறக்க முடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். கடந்த நான்கு மாத காலமாக வக்ரகதியில் சஞ்சரித்த குருபகவான் வருகின்ற புதன்கிழமைமுதல் வக்ர நிவர்த்தியடைய இருப்பதால் பணவரவுகள் மிக மிகச் சிறப்பாக இருந்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். தடைப்பட்ட சுப காரியங்கள் எளிதில் கைகூடக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட தற்போது உங்களின் நல்ல பண்பை புரிந்துகொண்டு உங்களுடன் நட்புடன் பழகுவார்கள். தொழில், வியாபாரத்தில் மிகப்பெரிய ஒரு முன்னேற்றத்தை அடையக்கூடிய நேரமாகும். தொழில் அபிவிருத்திக்காக நீங்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு தற்போது நல்ல ஆதரவு கிடைத்து அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். சட்டரீதியாக இருந்த சிக்கல்கள் எல்லாம் தற்போது இருந்த இடம் தெரியாமல் மறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் தற்போது விடிவுகாலம் பிறந்து உங்கள் உழைப்புக்கான பலனை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. மாணவ- மாணவியர்கள் நல்ல மதிப்பெண்களை வருகின்ற தேர்வுகளில் எடுக்கக்கூடிய யோகம் இருக்கிறது. வரும் நாட்களில் அனுகூலப் பலன்களை நீங்கள் பெறுவதற்கு விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, சரபேஸ்வரர் வழிபாடு மேற்கொள்வதன் மூலம் நல்லது நடக்கும்.
வெற்றி தரும் நாட்கள்:8, 9, 10, 11.
மிதுனம் 
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
Advertisment
உங்கள் ராசிக்கு 3-ல் கேது, 9-ல் சூரியன், செவ்வாய், புதன், 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பது அனுகூலமான அமைப்பு என்பதால் உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். பெண்கள் வழியில் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். வெளியூர் தொடர்புகள் மூலமாக ஏற்றமிகுந்த பலன்களை அடையக்கூடிய நேரமாகும். பிள்ளைகள்வழியில் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது நல்லது. தொழில்ரீதியாக வேலையாட்களை அனுசரித்துச் சென்றால் வளமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் எதிர்பார்க்கின்ற உதவிகள் கிடைப்பதில் தேவையற்ற இடையூறுகள் இருந்தாலும் எதையும் சமாளிக்ககூடிய பலம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களால் சிறுசிறு தொந்தரவுகள் இருந்தாலும் அதிகாரியுடைய ஆதரவுகள் சிறப்பாக இருப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். மாணவ- மாணவியர்கள் கடினமான விஷயங்களைகூட எளிதில் புரிந்து கொண்டு சிறப்பான மதிப்பெண்களை எடுக்கக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் ஏற்றமிகுந்த பலன்களை நீங்கள் பெறுவதற்கு தட்சிணா மூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, முருகனுக்கு அர்ச்சனை செய்வதன்மூலமாக நன்மை நடக்கும்.
வெற்றி தரும் நாட்கள்: 9, 10, 11, 12, 13. 
கடகம்  
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
உங்கள் ராசிக்கு 8-ல் சூரியன், ராகு, செவ்வாய் சஞ்சரிப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்துச் செயல்பட வேண்டிய நேரமாகும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது மிகமிக நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் ரீதியாக தேவையில்லாத நெருக்கடிகள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொண்டு சிக்கனத்தோடு இருக்கவேண்டும். தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலனை அடைய இடையூறுகள் ஏற்படும். சிலருக்கு சட்ட சிக்கல்கள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் தொழில் தொடர்பான கணக்கு வழக்குகளை சரிவர பராமரிப்பது மிகவும் சிறப்பு. அதிலும் குறிப்பாக முக்கிய விஷயங்களை பொதுவெளியில் பேசாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிசுமை காரணமாக ஓய்வுநேரம் குறைவது மட்டுமில்லாமல் குடும்பத்திலும் நிம்மதி குறைவு ஏற்படும். அதிகம் முதலீடுகள்கொண்ட செயல்களை தற்கா-கமாக தள்ளி வைப்பது நல்லது. மாணவ- மாணவியர்களுக்கு தேவையற்ற உடல் சோர்வு ஏற்படலாம் என்பதால் கல்வியில் கவனம் செலுத்துவதில் இடையூறுகள் ஏற்படும். சூழ்நிலையை புரிந்து நடந்துகொண்டால் நிலைமையை சமாளிக்கலாம். வரும் நாட்களில் அனுகூலப் பலன்களைப் பெறுவதற்கு சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது, மகாவிஷ்ணு வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 12, 13, 14. 
சிம்மம் 
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ல் புதன் சஞ்சரிப்பதும், லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கக்கூடிய குரு பகவான் வரும் புதன்கிழமை முதல் வக்ரநிவர்த்தி பெற்று சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்கு தற்போது இருக்கக்கூடிய பொருளாதாரப் பிரச்சினைகள் எல்லாம் வரும் நாட்களில் குறைந்து நிம்மதி உண்டாகும். உங்கள் ராசிக்கு 7-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதாலும், 8-ல் சனி, சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. குடும்பத்தில் உறவினர்கள்மூலமாக தேவையில்லாத நிம்மதி குறைவுகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இல்லாவிட்டாலும் உங்களின் தனித்திறமையால் எதையும் சமாளித்து வளமான பலன்களைப் பெறக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. வேலைக்கு செல்பவர்களுக்கு பனிச்சுமை இருந்தாலும் எடுத்த காரியங்களை குறித்த நேரத்தில் முடித்து அதிகாரியிடம் நல்ல பெயர் எடுக்க முடியும். வரும் நாட்களில் தேவையில்லாத பயணங்களைத் தவிர்ப்பது மிகமிக நல்லது. மாணவ- மாணவியர்கள் கல்வியில் சற்று கவனம் செலுத்தி தேவையற்ற சகவாசத்தை குறைத்தால் வளமான பலன்களைப் பெறக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் இருக்கிறது. இந்த வாரத்தில் மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்வதன்மூலமாக அனுகூலமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு.
வெற்றி தரும் நாட்கள்: 8, 14.
கன்னி 
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 6-ல் சூரியன், செவ்வாய், ராகு சஞ்சரிப்பதும், 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் உன்னதமான அமைப்பு என்பதால் உங்களது பலமும் வ-மையும் அதிகரிக்கும். இருக்கும் இடத்தில் ஒரு கௌரவமான நிலையினை அடைவீர்கள். தொழில், வியாபாரத்தில் உங்களுக்கு இருக்கக்கூடிய மறைமுக எதிர்ப்புகள் குறைந்து ஏற்றமிகுந்த பலன்களை பெறுவீர்கள். கூட்டாளிகள் மூலமாக சாதகமான பலன்களைப் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் வெற்றியைத் தரும். பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் விரும்பிய இடம் மாற்றங்கள் கிடைக்கும். பயணங்கள்மூலமாக அனுகூலமான பலன்களைப் பெறக்கூடிய நேரமாகும். குடும்பத்துக்கு தேவையான நவீனகரமான பொருட்களை வாங்கமுடியும். கணவன்- மனைவியிடையே கடந்த காலங்களில் நிலவிய தேவையற்ற கருத்து வேறுபாடுகள் எல்லாம் தற்போது படிப்படியாக குறையும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் போட்டித் தேர்வுகளில் பங்குபெற்று பரிசு பெறக்கூடிய வாய்ப்பு உண்டு. வரும் நாட்களில் ஏற்றமிகுந்த பலன்களைப் பெறுவதற்கு விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, காலபைரவரை தரிசிப்பதன் மூலமாக அனுகூலங்கள் ஏற்படும்.
வெற்றி தரும் நாட்கள்: 9, 10, 11.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 5-ல் புதன், 6-ல் சனி சஞ்சரிப்பது மிகவும் சிறப்பான அமைப்பாகும். கடந்த நான்கு மாத காலமாக வக்ரகதியில் சஞ்சரித்த குருபகவான் வரும் 11-ம் தேதி முதல் வக்ர நிவர்த்தியடைய இருப்பதால் உங்களுக்கு பண வரவுகள் மிக மிகச் சிறப்பாக இருக்கும். உங்கள் எண்ணங்கள் நிறைவேறும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றமுடியும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக தடைபட்டுவந்த சுப காரியங்கள் தற்போது கைகூடி மனமகிழ்ச்சி ஏற்படும். தொழில், வியாபாரத்தில் பிறர் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு சிறப்பான லாபத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகவும் சிறப்பாக இருக்கும்.  நீங்கள் வாங்கிய கடன்களை தற்போது பைசல் செய்யக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சுறுசுறுப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் உங்கள் உழைப்புக்கான பலனை பெறுவீர்கள். அதிகாரியின்மூலமாக நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் தற்போது கிடைக்கும். மாணவ- மாணவியர்கள் முன்புவிட தற்போது எதிலும் உற்சாகத்தோடு செயல்பட்டு கல்வியில் சிறந்து விளங்க கூடிய நேரமாகும். உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருந்தால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்ம். வரும் நாட்களில் அனுகூலப் பலன்களை நீங்கள் பெறுவதற்கு சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் பூஜை மேற்கொள்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 8, 12, 13.
விருச்சிகம் 
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
உங்கள் ராசியாதிபதி செவ்வாய்- சூரியன், ராகு சேர்க்கைப் பெற்று 4-ல் சஞ்சரிப்பதாலும் 8-ல் குரு சஞ்சரிப்பதாலும் ஆடம்பர செலவுகளை குறித்துக்கொண்டு சிக்கனத்தோடு செயல்பட வேண்டும். அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். வண்டி, வாகனங்கள்மூலமாக சுபச்செலவுகள் ஏற்படலாம். உறவினர்கள்மூலமாக மனக்கசப்புகள் ஏற்படக்கூடிய நேரமாகும். தொழில், வியாபாரத்தில் சூழ்நிலையைப் புரிந்து நடந்துகொண்டால் நிலைமையை சமாளித்து ஒருசில வளமான பலன் களைப்பெறமுடியும். எல்லா விஷயத்துக்கும் வேலையாட்களை நம்பாமல் சில நேரங்களில் நீங்கள் நேரடியாக சில காரியங்களில் ஈடுபடுவதன்மூலமாக போட்ட முதலை எடுக்க முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகப்படியான பணிச்சுமை காரணமாக மன நிம்மதி குறைவு ஏற்படும். நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உடனிருப்பவர்கள் உங்கள்மீது வீண் பழிச் சொற்களை சொல்வார்கள். மாணவ- மாணவியர்கள் உடல்ரீதியாக இருக்கக்கூடிய சிறுசிறு பிரச்சினைகள் காரணமாக கல்வியில் கவனம் செலுத்தமுடியாது. ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. வரும் நாட்களில் அனுகூலப் பலன்களை நீங்கள் பெறுவதற்கு சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது, முருக வழிபாடு மேற்கொள்வதன் மூலமாக ஏற்றமிகுந்த பலன்களைப் பெறமுடியும்.
வெற்றி தரும் நாட்கள்: 9, 10, 11, 14.
தனுசு 
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன், செவ்வாய், ராகு சஞ்சரிப்பதும், 4-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் மிகவும் சிறப்பான அமைப்பாகும். கடந்த நான்கு மாத காலமாக வக்ரகதியில் சஞ்சரித்த உங்கள் ராசியாதிபதி குரு பகவான் வரும் புதன்கிழமை முதல் வக்ர நிவர்த்தியடைய இருப்பதால் உங்களுக்கு இருக்கக்கூடிய பொருளாதாரப் பிரச்சினைகள் எல்லாம் வரும் நாட்களில் தீர்ந்து வளமான பலன்களைப் பெறுவீர்கள். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை மிகச் சிறப்பாக இருக்கும். உங்களுக்கு இருந்து வந்த தேவையற்ற இடையூறுகள் எல்லாம் தற்போது விலகி உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகரீதியாக பார்க்கின்றபொழுது உங்கள் உழைப்புக்கான ஊதியத்தை பெறுவது மட்டுமில்லாமல் நீங்கள் விரும்பிய இடம் மாற்றத்தை பெற்று மகிழ்ச்சி அடையக்கூடிய நேரமாகும். மாணவ- மாணவியர்கள் முன்பேவிட எதிலும் தற்போது முனைப்புடன் செயல்பட்டு சிறப்பான மதிப்பெண்களைப் பெறமுடியும். கணவன்- மனைவியிடையே இருந்த மனக்கசப்புகள் எல்லாம் தற்போது குறையும். வரும் நாட்களில் ஏற்ற மிகுந்த பலன்களைப்பெறுவதற்கு மகாவிஷ்ணு வழிபாடு மேற்கொள்வது, காலபைரவரை தரிசிப்பதன்மூலம் அனுகூலங்கள் கிடைக்கும்.
வெற்றி தரும் நாட்கள்: 8, 12, 13.
மகரம் 
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 2-ல் புதன், 3-ல் சனி சஞ்சரிப்பதால் பணவரவுகள் தாராளமாக இருந்து உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், செவ்வாய், ராகு சஞ்சரிப்பதால் நீங்கள் விளையாட்டுத்தனமாக பேசினாலும் அதனை உடனிருப்பவர்கள் தவறாக புரிந்து கொள்ளக்கூடிய வாய்ப்புகள் இருப்பதால் சிந்தித்து பேசுவது நல்லது. ஒருசில நேரங்களில் உங்களது முன்கோபத்தை குறைத்துக்கொள்வது மிகவும் நல்லது. தொழில், வியாபாரத்தில் சின்னசின்ன நெருக்கடிகள் இருந்தாலும் போட்ட முதலை எளிதில் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. தொழில் தொடர்பாக மேற்கொள்ளக்கூடிய பயணங்கள் வெற்றியைத் தரும். தொழில் வளர்ச்சிக்கு எதிர்பார்த்த உதவிகள் தற்போது கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சுறுசுறுப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் பிறரால் முடிக்க முடியாத காரியத்தைகூட நீங்கள் தகுந்த நேரத்தில் முடித்து அதிகாரியிடம் நல்லபெயர் எடுக்கமுடியும். மாணவ- மாணவியர்கள் சிறப்பான மதிப்பெண்கள் எடுப்பீர்கள் என்றாலும் ஒருசில நேரங்களில் வயது மூத்தவர்களிடம் தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படலாம் என்பதால் சூழ்நிலையை புரிந்து நடந்துகொள்வது நல்லது. வரும் நாட்களில் அனுகூல பலன்களைப் பெறுவதற்கு லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 8, 9, 10, 11.
கும்பம்  
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் சூரியன், செவ்வாய், ராகு, 2-ல் சனி சஞ்சரிப்பதால் எந்த விஷயத்திலும் சிந்தித்துச் செயல்பட வேண்டும். உங்களது முன்கோபத்தை குறைத்துக்கொண்டு பொறுமையோடு செயல்பட்டால்தான் வீண் பிரச்சினைகளை தவிர்க்கமுடியும். கணவன்- மனைவியிடையே ஒன்றுமே இல்லாத விஷயத்திற்குகூட தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடிய நேரமாகும். உங்கள் ராசிக்கு 5-ல் சஞ்சரிக்கக்கூடிய குருபகவான் கடந்த நான்கு மாத காலமாக வக்ரகதியில் சஞ்சரித்து வந்தது சாதகமற்ற அமைப்பாகும். வரும் புதன்கிழமைமுதல் குரு வக்ரநிவர்த்தியடைய இருப்பது உங்களுக்கு ஒரு நல்ல மாற்றத்தை தரக்கூடிய அமைப்பாகும். தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஒரு நல்ல முன்னேற்றத்தையும் சிறப்பான வளர்ச்சியையும் அடையமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் பேச்சை குறைத்துவிட்டு உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களை தவிர்த்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்தினால் மட்டுமே அனுகூலங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வரும் நாட்களில் ஏற்றமிகுந்த பலன்களை நீங்கள் பெறுவதற்கு முருக வழிபாடு மேற்கொள்வது, ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்வதன்மூலமாக உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகள் குறைந்து நற்பலன் கிடைக்கும்.
 வெற்றி தரும் நாட்கள்: 9, 10, 11, 12, 13.
மீனம் 
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
ஜென்ம ராசியில் சனி, 12-ல் சூரியன், செவ்வாய், ராகு சஞ்சரிப்பதால் தேவையில்லாத இடையூறுகளை சந்திப்பீர்கள். சுலபமாக முடியவேண்டிய காரியங்கள் தாமதமாகக்கூடிய நேரமாகும். சக்திக்கு மீறிய வீண்செலவுகள் ஏற்படும் என்பதால் ஆடம்பரத்தை சற்று குறைத்துக்கொண்டு சிக்கனத்தோடு இருக்கவேண்டும். மற்றவர்களுக்கு நீங்கள் தந்த வாக்குறுதிகளை காப்பாற்றுவதில் இடையூறு கள் ஏற்படும். வேலையாட்களை அனுசரித்துச் செல்வதன் மூலமாக வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கமுடியும். தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலனை அடைய தேவையில்லாத இடையூறுகள் ஏற்படக்கூடிய நேரமாகும். தொழில் தொடர்பான கணக்கு வழக்குகளை சரிவர பராமரிப்பது மிகவும் சிறப்பு. தேவையில்லாத பயணங்களைத் தள்ளிவைப்பது உத்தமம். வயது மூத்தவர்களிடம் பேசுகின்றபொழுது வீண் பேச்சை குறைத்துவிட்டு உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டிய காலமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு காரணமாக மன அமைதி குறைவது மட்டுமில்லாமல் வீண் பழிச்சொற்களை எதிர் கொள்ளக்கூடிய சூழ்நிலை இருக்கிறது. எதிலும் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உடனிருப்பவர்கள் வேற்று பாதைக்கு உங்களை அழைத்துச் செல்லக்கூடிய நேரமென்பதால் கவனமாக இருப்பது நல்லது. வரும் நாட்களில் அனுகூலப் பலன்களை அடைய காலபைரவரை வழிபாடு செய்வது, லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 12, 13, 14.