முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,
சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாத சாரம்:
சூரியன்: திருவாதிரை- 2.
செவ்வாய்: மகம்- 4.
புதன்: பூசம்- 2.
குரு : திருவாதிரை- 2.
சுக்கிரன்: கிருத்திகை- 1.
சனி: உத்திரட்டாதி- 2.
ராகு : பூரட்டாதி- 3.
கேது: உத்திரம்- 1.
கிரக மாற்றம்:
29-6-2025 ரிஷப சுக்கிரன் பகல் 2.10 மணிக்கு
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்: கடகம்
29-6-2025 காலை 6.34 மணிக்கு சிம்மம்.
1-7-2025 பகல் 3.24 மணிக்கு கன்னி.
4-7-2025 அதிகாலை 3.19 மணிக்கு துலாம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 3-ல் சூரியன், 4-ல் புதன், 11-ல் ராகு சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். நல்லவாய்ப்புகள் உங்களைத்தேடி வரும். பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கமுடியும். தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலனை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலையாட்களை அனுசரித்து செல்வதன்மூலமாக ஒருசில ஆதாயத்தை அடையக்கூடிய யோகங்கள் உங்களுக்கு உண்டு. அரசாங்கவழியில் நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய உதவிகள் தற்போது கிடைக்கும். வெளியூர் தொடர்புகள்மூலமாக ஒருசில ஆதாயத்தை அடையக் கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு இருக்கிறது. உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருந்தால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உத்தி யோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கக்கூடிய நேரம் என்றாலும் உடன் வேலை செய்பவர்களால் சிறு சிறு நெருக்கடிகள் இருக்கும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் கவனம் செலுத்தினால் நல்ல மதிப்பெண்களை எடுக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. சக மாணவ- மாணவியர்களால் தேவையற்ற இடையூறுகளை சந்திக்க நேரிடும் என்பதால் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற முருக வழிபாடு மேற்கொள்வது, அம்மன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 2, 3, 4, 5.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 11-ல் சனி சஞ்சரிப்பது மிகவும் அற்புதமான அமைப்பு என்பதால் பணவரவுகள் மிகவும் சிறப்பாக இருந்து உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றக்கூடிய பலம் உண்டாகும். இது நாள் வரை 12-ல் சஞ்சரித்த சுக்கிரன் இனி ஜென்ம ராசியில் சஞ்சரிக்க இருப்பதால் நவீனகரமான பொருட்களை வாங்கக் கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிகப்படியான லாபத்தை ஈட்டக்கூடிய நேரம் ஆகும். உங்களுடைய எண்ணங்கள் நிறைவேறி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், 4-ல் செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க சிறு சிறு இடையூறுகள் இருந்தாலும் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உங்களுக்கு உண்டு. உத்தி யோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கக்கூடிய நேரம் ஆகும். நீங்கள் விரும்பிய இடம் மாற்றங்கள் கிடைத்து மனமகிழ்ச்சி ஏற்படும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது மட்டுமில்லாமல் போட்டித் தேர்வுகளில் பங்கு பெற்று பரிசுகளை வெல்லக்கூடிய நேரம் ஆகும். வரும் நாட்களில் வளமான பலன்களைப் பெற சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது, அஷ்டலட்சுமி வழிபாடு செய்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 4, 5.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 2-ல் புதன், 3-ல் செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். நீங்கள் மேற்கொள்ளக்கூடிய ஒவ்வொரு செயலுக்கும் உடன் இருப்பவர்கள் ஆதரவு மிகச்சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை திருப்திகரமாக இருக்கக்கூடிய நேரம் ஆகும். பூர்வீக சொத்து வகையில் ஒருசில ஆதாயங்கள் கிடைக்கும். தடைப்பட்ட சுப காரியங்கள் கைகூடக்கூடிய நேரமாகும். தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டால் விரைவில் ஒருநல்ல முன்னேற்றத்தை அடையக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். அதிக முதலீடுகள்கொண்ட செயல் களில் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் வேலைப்பளு காரணமாக ஓய்வு நேரம் குறைந்தாலும் உங்கள் உழைப்புக்கான பலனை அடையக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உண்டு. மேல் அதிகாரியிடம் பேசுகின்றபொழுது பேச்சில் பொறுமையோடு இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் கல்வியில் சிறந்து விளங்கி பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் பாராட்டுதலை பெறக்கூடிய நேரமாகும். பெண்கள்வகையில் தேவையில்லாத செலவுகள் உண்டாகும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு தீப மேற்றுவது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 29, 30, 1.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
ஜென்ம ராசியில் புதன், பாக்கிய ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதால் எதிர்நீச்சல் போட்டாவது அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். சுக்கிரன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பாராத அனுகூலங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய், கேது, 12-ல் சூரியன், குரு சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று பொறுமையோடு இருப்பது, பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது மிகவும் நல்லது. தொழில், வியாபாரத்தில் முனைப்புடன் செயல்பட்டால் போட்ட முதலை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. பொதுவாக முன்கோபத்தை குறைத்துக்கொண்டு நிதானத்தோடு செயல்பட்டால் அடையவேண்டிய இலக்கை அடையமுடியும். வேலைக் குச் செல்பவர்களுக்கு சின்ன சின்ன பிரச்சினைகள் இருந்தாலும் உங்களின் தனித்திறமையால் எதையும் தைரியத்தோடு எதிர்கொள்ளக்கூடிய பலம் உங்களுக்கு உண்டு. மாணவ- மாணவியர்களுக்கு கவன சிதறல் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் படிப்பில் முனைப்புடன் செயல்படவேண்டிய நேரம் ஆகும். வண்டி, வாகனங்களில் செல்கின்றபொழுது சற்று பொறுமையோடு செல்வது மிகவும் நல்லது. வரும் நாட்களில் வளமான பலன்களைப் பெற துர்க்கை அம்மனுக்கு ராகு காலத்தில் தீபம் ஏற்றுவது, தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வதன் மூலம் அனுகூலங்கள் ஏற்படும்.
வெற்றி தரும் நாட்கள்: 2, 3.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசியாதிபதி சூரியன் லாப ஸ்தானத்தில் குரு சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதும், 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்துவந்த பிரச்சினைகள் எல்லாம் தற்போது விலகி வளமான பலன்களை பெறுவீர்கள். திருமண வயதை அடைந்த ஆண்- பெண்களுக்கு நல்லவரன் கைக்கூடி வரக்கூடிய நேரம் ஆகும். பணவரவுகள் சாதகமாக இருப்பதால் பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றக்கூடிய பலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகப் படியான லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒருவருக்கொருவர் கௌரவம் பார்க்காமல் விட்டுக் கொடுத்து செல்வது மிகவும் நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்லவாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் விரும்பிய இடமாற்றங்கள் கிடைத்து மனமகிழ்ச்சி ஏற்படும். ஒரு சிலருக்கு பூர்வீகச் சொத்துவகையில் அனுகூலமான பலன்களை அடையக்கூடிய அதிர்ஷ்டமானது வரும் நாட்களில் இருக்கிறது. மாணவ- மாணவியர்கள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு நடந்துகொண்டால் சிறப்பான மதிப்பெண்களை பெறமுடியும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற அம்மன் வழிபாடு, துர்கை வழிபாடு மேற்கொள்வது, காலபைரவரை வழிபாடு செய்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 29, 30, 4, 5.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி புதன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதாலும் உங்கள் ராசிக்கு 6-ல் ராகு, 10-ல் சூரியன் சஞ்சரிப்பதாலும் நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். இருக்கக்கூடிய இடத்தில் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். கடந்த சில நாட்களாக 8-ல் சஞ்சரித்த சுக்கிரன் இனி 9-ல் சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்கு இருந்து வந்த பொருளாதாரப் பிரச்சினைகள் தற்போது விலகி வளமான பலன்களை பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். உங்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகக்கூடிய நேரமாகும். வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகவும் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் உழைப்புக்கான பலனை அடைவது மட்டுமில்லாமல் புதிய வாய்ப்பை எதிர்பார்த்தவர்களுக்கு கௌரவமான இடத்தில் இருந்து அழைப்பு வரக்கூடிய நேரமாகும். பெண்கள்வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். பிள்ளைகள் வழியில் இருந்து வந்த மனக்கவலைகள் எல்லாம் வரும் நாட்களில் முழுமையாக மறையும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக விளங்கி பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் பாராட்டுதலை பெறக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்வது, முருகனுக்கு அர்ச்சனை செய்வதன்மூலம் அனுகூலங்கள் ஏற்படும்.
வெற்றி தரும் நாட்கள்: 2, 3.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் சூரியன், குரு சஞ்சரிப்பதும், 10-ல் புதன், 11-ல் செவ்வாய், கேது சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் பல்வேறு வளமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்களுடைய எண்ணங்கள் நிறைவேறக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். மற்றவர்களுக்கு நீங்கள் தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்ற முடியும். உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட தற்போது உங்களின் நல்ல பண்பை புரிந்து கொண்டு உங்களுடன் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. பெரிய மனிதர்களுடைய நட்பு கிடைப்பதால் நீண்டநாட்களாக இருந்த பிரச்சினைக்கு எல்லாம் தற்போது ஒருநல்ல முடிவு கிடைக்கும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருப்பது மட்டுமில்லாமல் நீண்டநாட்களாக தடைபட்ட சுபகாரியங்கள் தற்போது கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். உத்தியோகரீதியாக பார்க்கின்றபொழுது ஒரு கௌரவமான நிலையினை அடையக்கூடிய நேரமாகும். மாணவ- மாணவியர்கள் எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு நல்ல பெயர் எடுக்கமுடியும். வரும் நாட்களில் வளமான பலன்களை பெற அஷ்டலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, லஷ்மி நரசிம்மரை தரிசிப்பதன் மூலம் அனுகூலங்கள் ஏற்படும்.
வெற்றி தரும் நாட்கள்: 29, 30, 4, 5.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
உங்கள் ராசியாதிபதி செவ்வாய் 10-ல் சஞ்சரிப்ப தாலும், உங்கள் ராசிக்கு 7-ல் சுக்கிரன், 9-ல் புதன் சஞ்சரிப்பதாலும் எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு ஏற்ற மிகுந்த பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. பெண்கள் மூலமாக அனுகூலமான பலன்கள் நடக்கும். மாதக்கோள் என வர்ணிக்கப்படக் கூடிய சூரியன்- குரு சேர்க்கை பெற்று அஷ்டம ஸ்தானமான 8-ல் சஞ்சரிப்பதால் பணவிஷயத்தில் சற்று கவனத்தோடு இருக்கவேண்டும். மற்றவர்களை நம்பி வாக்குறுதி கொடுப்பதை தற்கா-கமாக தள்ளி வைப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்காது என்பதால் ஒருசில விஷயங்களில் நீங்கள் நேரடியாக செயல்பட்டால் தான் அடைய வேண்டிய இலக்கை எளிதில் அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் சக ஊழியர்கள் உங்கள்மீது தேவையற்ற பழி சொற்களைச் சொல்லக்கூடிய நேரமென்பதால் எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. மாணவ- மாணவியர்கள் உடன் பழகக்கூடிய நண்பர்கள் உங்களை வேற்றுப் பாதைக்கு அழைத்து செல்லக்கூடிய நேரமென்பதால் எதிலும் கவனத்தோடு இருக்க வேண்டும். வரும் நாட்களில் வளமான பலன்களை பெற சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது, அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 29, 30, 1, 2, 3.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 7-ல் குரு சஞ்சரிப்பதால் பணவரவுகள் தாராளமாக இருந்து உங்களின் அனைத்து தேவையும் பூர்த்தியாக கூடிய நேரம் ஆகும். உங்கள் ராசிக்கு 7-ல் சூரியன், 8-ல் புதன் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கக்கூடிய நேரமென்றாலும் வேலையாட்கள் உடைய ஒத்துழைப்பானது அவ்வளவு சிறப்பாக இருக்காது. மறைமுக எதிர்ப்புகள் அதிகரிப்பதால் அடையவேண்டிய லாபத்தை அடைய தேவையில்லாத இடையூறுகள் உண்டாகும். உடன்பிறந்தவர்களிடம் தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடிய காலம் என்பதால் சூழ்நிலையை புரிந்துகொண்டு அதற்கு ஏற்றது போல் நடந்து கொள்வது நல்லது. வேலைக்கு செல்பவர்களுக்கு பணிச்சுமை காரணமாக ஓய்வு நேரம் குறையும். மேல் அதிகாரியிடம் பேசுகின்றபொழுது பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது மிகவும் நல்லது. வண்டி, வாகனங்களில் செல்கின்றபொழுது சற்று நிதானத்தோடு செல்லவேண்டும். மாணவ- மாணவியர்கள் தேவையற்ற செயல்களைத் தவிர்த்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. லஷ்மி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வதும், அஷ்டலட்சுமி வழிபாடு மேற்கொள்வதன்மூலம் வளமான பலன்களை பெற முடியும்.
வெற்றி தரும் நாட்கள்: 2, 3, 4, 5.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசியாதிபதி சனி 3-ல் சஞ்சரிப்பதும், 6-ல் சூரியன், 7-ல் புதன் சஞ்சரிப்பதும் மிகவும் அற்புதமான அமைப்பு என்பதால் உங்களுக்கு இருந்த நெருக்கடிகள் எல்லாம் குறைந்து வளமான பலன்களை பெறக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை ஈட்டுவது மட்டுமில்லாமல் உங்களுக்கு நிலவக்கூடிய மறைமுக எதிர்ப்புகள் தற்போது குறையும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருப்பது மட்டுமில்லாமல் மங்களகரமான சுப காரியங்கள் எளிதில் கைக்கூடி மனமகிழ்ச்சி ஏற்படக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இதுக்கும். குடும்பத்துக்கு தேவையான நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. ஒருசில நேரங்களில் கோபத்தை குறைத்துக்கொண்டு பொறுமையோடு செயல்படுவது மிகவும் நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. வேலைக்கு செல்பவர்களுக்கு எடுத்தப் பணியை குறித்த நேரத்தில் செய்து முடிக்கக்கூடிய பலம் உண்டாகும். மாணவ- மாணவியர்கள் எந்த ஒரு விஷயத்திலும் பொறுப்போடு செயல்பட்டு பெரியோர்களுடைய பாராட்டுதலை பெறக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களைப் பெற முருக வழிபாடு மேற்கொள்வது, குரு பகவானுக்கு அர்ச்சனை செய்வதன்மூலம்
அனுகூலங்கள் ஏற்படும்.
வெற்றி தரும் நாட்கள்: 4, 5.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரன், 5-ல் குரு சஞ்சரிப்பதால் பணவரவுகள் சற்று சாதகமாக இருந்து எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். ஜென்ம ராசிக்கு 2-ல் சனி, 7-ல் செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் நீங்கள் நல்லதாக பேசினாலும் அதனை மற்றவர்கள் தவறாக எடுத்துக் கொள்ளக்கூடிய நேரம் என்பதால் சூழ்நிலைக்கு ஏற்றவாறு சற்று கவனத்தோடு நடந்துகொள்ளவேண்டும். கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் நல்லவாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் கூட்டாளிகளை சற்று அனுசரித்து செல்வது உத்தமம். ஒரு சிலருக்கு உடனிருப்பவர்களே தேவையற்ற நெருக்கடிகளை ஏற்படுத்துவார்கள் என்பதால் எதிலும் சற்று கவனத்தோடு செயல்படுவது மிகவும் நல்லது. பூர்வீக சொத்துவழியில் உறவினரிடம் தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படும். உத்தியோகத் தில் இருப்பவர்களுக்கு பணியில் நீங்கள் சிறப்பாக செயல்படக்கூடிய ஒரு நேரமென்றாலும் உடன் வேலை செய்பவர்களுடைய வேலையும் நீங்கள் சேர்த்து செய்ய வேண்டிய ஒரு நெருக்கடியான நிலை உண்டாகும். மாணவ- மாணவியர்கள் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் ஞாபக மறதி காரணமாக படிப்பில் கவனம் செலுத்த முடியாது. வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற காலபைரவரை வழிபாடு செய்வது, அம்மன் வழிபாடு மேற்கொள்வது நற்பலனை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 29, 30.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம்,உத்திரட்டாதி, ரேவதி)
உங்கள் ராசியில் சனி, 4-ல் சூரியன், குரு சஞ்சரிப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. உடனிருப்பவரிடம் தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது உத்தமம். அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு 5-ல் புதன், 6-ல் செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் எவ்வளவு நெருக்கடிகள் இருந்தாலும் அதனை உங்களின் தனித் திறமையால் சமாளிக்கக்கூடிய பலம் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் மூலமாக ஒருசில உதவிகள் உங்களுக்கு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் ஒரு நல்ல நிலையினை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு இருக்கிறது என்றாலும் ஒரு சிலர் செய்யக்கூடிய செயல்கள் காரணமாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய ஒருநல்ல நிலைக்கூட தடைப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படுவது மட்டுமில்லாமல் அதிகாரியிடம் தேவையற்ற மனஸ்தாபங்கள் உண்டாகும். மாணவ- மாணவியர்கள் எதிலும் கவனத்தோடு இருந்தால்தான் வீண் பழிச்சொற்களை தவிர்க்கமுடியும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 29, 30, 1, 2, 3.