"துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு'.
-என்பது வள்ளுவர் வாக்கு

Advertisment

மழையில்லாது உலகம் எப்படித் துன்பப்படுமோ, அவ்வாறே அருளில்லாத அரசனால் அவனது நாட்டில் வாழும் மக்கள் துன்பப்படுவார் என்கிறார் 

Advertisment

வள்ளுவர். எஸ்.ஐ.ஆர். தீவிரத் திருத்தம் என்ற பெயரில் இந்தியாவையே படுத்தியெடுப்பவர்கள் இதனை யோசித்துப் பார்க்கவேண்டும்.

சரி, வாக்காளர் பட்டியல் தீவிரத் திருத்தம் என்றால் என்ன?

குறிப்பிட்ட வருட இடைவெளிகளில் தேர்தல் ஆணையம், ஒவ்வொரு மாநிலத்தின் வாக்காளர் பட்டியலையும் பரிசோதித்து இறந்துபோன, ஒரு பகுதியிலிருந்து வேறு இடத்துக்கு மாறிய, இரு இடங்களில் வாக்கை வைத்திருப்பவர் களைப் பரிசோதித்து நீக்கும். இது வழக்கமான நடைமுறைதான். ஆனால் அதற்கெதிராக இந்திய அளவில் ஏன் குரல் எழுகிறது?

Advertisment

அதற்கு நாம் முதலில் பீகார் மாநிலத் துக்குச் செல்லவேண்டும். நடந்துமுடிந்த 2025 பீகார் தேர்தலுக்கு முன்பாக அம்மாநிலத் தில்தான் தற்போது எஸ்.ஐ.ஆர். முதன்முதலாக நடைபெற்றது. தேர்தல் ஆணையம் பணியில் ஈடுபட்டிருக்கும்போதே எதிர்க்கட்சிகளின் கூக்குரல்கள் எழுந்தன. சிறுபான்மையினர் கொத்துக்கொத்தாக விடுபடுவதாகவும், வேலை நிமித்தமாக வெளிமாநிலங்களிலுள்ள நபர்கள் எஸ்.ஐ.ஆர். படிவம் திருத்தித் தர அவகாசம் வழங்கப் படவில்லையெனவும், ஒருவரை வாக்காளராக ஏற்க ஆதார், ரேஷன் கார்டு போன்ற அடிப்படையான ஆவணங்கள் எதையுமே தேர்தல் ஆணையம் ஏற்கமறுக்கிறது என குற்றச்சாட்டு எழுந்தது.

அதற்கு எதிராக பீகாரில் ஆளும் கட்சி யாக இருக்கும் ஒருங்கி ணைந்த ஜனதா தளமும், பா.ஜ.க.வும் பீகாரில் திருட்டுத்தனமாக குடியேறியிருக்கும் வங்க மக்களை அடையாளம் கண்டு வெளியேற்று வதை காங்கிரஸும் ஆர்.ஜே.டியும் விரும்பவில்லை என்ற பெரிய குற்றச்சாட்டை முன்வைத்தது.

இதையடுத்து தேர்தல் ஆணையம் வரைவு வாக்காளர் பட்டியலைச் சமர்ப்பித்தபோது, மாநிலமே அதிர்ச்சியில் மூழ்கியது. கிட்டத்தட்ட 67 லட்சம் வாக்காளர்கள் பீகாரின் வரைவு வாக்காளர்கள் பட்டியலில் விடுபட்டிருந்தனர். 7.42 கோடி வாக்காளர்களில் 67 லட்சம் என்பது கிட்டத்தட்ட 9% அதாவது மொத்த வாக்காளர்களில் 9% பேர் வாக்களிக்கமுடியாமல் தேர்தல் ஆணையம் தகுதிநீக்கம் செய்திருந்தது. 

பல தேர்தல்களில் போட்டியிட்ட இரு கட்சிகளுக்கிடையே அரை சதவிகிதம், ஒரு சதவிகித வாக்கு வித்தியாசம் யார் ஆட்சியில் அமர்வது என்பதை முடிவுசெய்திருக்கிறது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். தவிரவும், தேர்தல் ஆணையத்தின் எஸ்.ஐ.ஆர். நடவடிக்கை பீகாரில் வங்கத்திலிருந்து குடியேறியவர்கள் எனக் கண்டறிந்தது 500லிக்கும் குறைவான நபர்களைத்தான். முஸ்லிம்கள் பெரும்பான்மையாகக் காணப்படும் 13 மாவட்டங்களில் இருந்து மட்டும் 3 லட்சத்துக்கும் அதிகமான முஸ்லிம்கள் நீக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்த அநீதிக்கு எதிராக காங்கிரஸும் ஆர்.ஜே.டி.யும் இன்னும் பலரும் உச்சநீதிமன்றப் படிக்கட்டு ஏறினர். வாக்காளர் பட்டியலில் இறந்துபோனவர்கள் எனக் குறிப்பிட்டவர்கள் பலர் உயிருடன் இருப்பதைக் கண்டறிந்து அவர்களை உச்சநீதிமன்றம் வரை கொண்டுபோய் நிறுத்தி நிரூபிக்கவும் செய்தனர். எஸ்.ஐ.ஆர். கேட்கும் ஆவணங்களில் இருக்கும் சிக்கல்களை முறையிட்டனர்.

ஆனால், உச்சநீதிமன்றம் ஆதார், ரேஷன் கார்டுகளை ஆவணமாக ஏற்கவேண்டும், குளறுபடிகளை தவிர்க்கவேண்டுமென்று சில எளிய பரிகாரங்களைச் சொன்னதே தவிர, 67 லட்சம் வாக்காளர்களை நீக்கிய தேர்தல் ஆணையத்தை பெரிதாகக் கண்டிக்கவில்லை. கடைசியில் அந்த நீக்கப்பட்ட 67 லட்சம் வாக்காளர்களுக்கு ஒரு தீர்வு எட்டப்படாமலேதான் பீகாரில் தேர்தல் நடந்தது.

கூடவே, தேர்தல் விதிமுறைகள் அமலில் இருக்கும்போதே, பீகாரின் அரைக் கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு 10,000 ரூபாய் தொழில் தொடங்க கடன் என்ற பெயரில் வாக்குக்கு பணமும் வழங்கப்பட, ஆட்சிக்கு எதிரான மனநிலை நிலவிய தேர்தலில், தே.ஜ.க. கூட்டணி மீண்டும் ஒருமுறை ஆட்சிக்கு வந்திருக்கிறது.

eci1

இந்த நிலையில் விரைவில் தேர்தல் வரவிருக்கும் தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் எஸ்.ஐ.ஆர். பணிகளை முடுக்கிவிட்டிருக்கிறது மத்திய தேர்தல் ஆணையம்.

எஸ்.ஐ.ஆர். படிவத்தை நிரப்புவது மிகச் சிக்கலான ஒன்றாக இருக்கும்போது அதனை தேர்தலுக்கு நெருக்கமாக அத்தியாவசிய மாக்குவது ஏன்? தேர்தலுக்கு ஓராண்டு முன்பாகவோ, தேர்தல் முடிந்த பின்போ ரிலாக்ஸாக இந்தப் பணிகளை மேற்கொண்டால் அரசியல் கட்சிகளுக்கும், பொதுமக்களுக்கும் வசதியாக இருக்கும். அதை ஏன் செய்வதில்லை?

எஸ்.ஐ.ஆர். படிவத்தில் கேட்கப்படும் இருபது வருடங்களுக்கு முன்பு நாம் வாக்களித்த சட்டமன்றத் தொகுதி, சட்டமன்ற எண், பாக எண், வரிசை எண், வாக்காளர் அடையாள அட்டை எண், நமது தந்தை- தாய், அல்லது வாழ்க்கைத் துணைவருக்கும் இதேபோன்று பூத், பாக எண், வாக்குச்சாவடி எண் போன்றவற்றைக் கேட்கின்றனர். இவற்றை இருபது வருடங்களுக்குப் பின் பாமர மக்கள் நினைவில் வைத்திருப்பது கடினம். 

இவற்றில் உதவ பூத் லெவல் ஆபிசர், பூத் லெவல் ஏஜெண்டுகள் இருந்தாலும், அவர்களுக்கே பல விஷயங்களில் தெளிவு இருப்பதில்லை என்பதும், அவர்களுக்கு சரியான பயிற்சி அளிக்கப்படவில்லை என்பதும் தெளிவானது. பல அலுவலர்கள் இந்த வேலையின் நெருக்குதல் தாளாமல் புலம்புவதும், தமிழகத்தில் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் செய்ததையும் கண்டோம்.

தவிரவும், கேரளம், மேற்கு வங்கத்தில் எஸ்.ஆர். பணிகளின் அழுத்தம் தாளாமல் சில அரசுப் பணியாளர்கள் தற்கொலை செய்து கொண்ட அவலமும் நிகழ்ந்தது. கேரளத்தில் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனீஸ் ஜார்ஜ், மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தைச் சேர்ந்த ரிங்கு தராஃப்தார், ஜார்கிராம் பகுதி, ரங்காமதி பஞ்சாயத் தைச் சேர்ந்த சாந்தி ஆகியோர் இதுவரை உயிரிழந் துள்ளனர்.  தமிழகத்திலும் இளையான்குடி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்த இளநிலை உதவியாளர் பகவதி ராஜா  மன அழுத்தம் தாளாமல் கத்தியால் தன் கைகளைக் கிழித்துக்கொண்டார்.

எஸ்.ஐ.ஆர். படிவத்தின் கேள்விகள், வாக்காளர் என்பதை உறுதிசெய்வதையும் தாண்டி, அவர் இந்தியக் குடிமகனா என்பதைச் சோதிப்பதுபோல் இருக்கிறது என தமிழக காங்கிரஸ் எம்.பி.யான ஜோதிமணி சந்தேகம் எழுப்பியிருந்தார். அதாவது ஒன்றிய அரசு, ஒவ்வொரு வாக்காளரும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கான சோதனையை தேர்தல் ஆணையத்தின் துணைகொண்டு ரகசியமாக நடத்துகி றதோ என்ற சந்தேகத்தை பலரும் எழுப்பியுள்ளனர்.

அதேசமயம், எஸ்.ஐ.ஆர். கணக்கீடு படிவத்தை முன்வைத்து ஒரு சந்தேகமெழுந்துள்ளது. படிவத்தோடு சமர்ப்பிக்கவேண்டிய ஆவணங்களின் பட்டியல் என்று 13 வித ஆவணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் 13-வது ஆவணமாக, 01-07-2025 அன்று பீகாரிலுள்ள தீவிர திருத்தப் பட்டியலில் இடம்பெற்ற ஆவணத்தின் பிரதியை இணைக்கச் சொல்லியிருக்கிறது. தமிழ்நாட்டு தேர்தலுக்கும் பீகாருக்கும் என்ன சம்பந்தம்? 

அதேசமயம் தமிழக தேர்தல் ஆணையரான அர்ச்சனா பட்நாயக், வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் 869 பேர்  தமிழகத்தில் வாக்களிக்க விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளனர் என நவம்பர் 25-ஆம் தேதி கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. இந்த எண்ணிக்கை லட்சங்களாக மாறலாம். யார் தடுக்கப் போகிறார்கள்? 

அப்படியே கூறினாலும் யார் கேட்கப் போகிறார்கள்?

இத்தகைய பின்னணிகளைப் புரிந்துகொண்டதால்தான், ஒன்றிய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமனின் கணவர் பரக்கலா பிரபாகர், எஸ்.ஐ.ஆர். எனப்படும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கை, ரத்தமில்லாத அரசியல் படுகொலை என விவரிக்கிறார். அதன் நோக்கத்தையும் அத்துமீறலையும் உணர்ந்தே அவர் விமர்சித்திருக்கவேண்டும். தேர்தல் ஆணையத்தின் பணிகள் முடிந்து வரைவு வாக்காளர் பட்டியல் வந்தால்தான், தேர்தல் ஆணையம் தமிழகம், கேரளா, மேற்கு வங்கத்தில் எத்தனை வாக்காளர்களை விட்டிருக்கிறது, பீகாரைப் போலவே இங்கும் நடந்துகொண்டதா? இல்லையா என்பது தெளிவாகும். 

ஒரு மாநிலத்தில் ஆளும் கட்சிக் கூட்டணிக்கும் எதிர்க்கட்சிக் கூட்டணிக்குமான வாக்கு வித்தியாசம் தோராயமாக 5% இருப்பதாக வைத்துக்கொள்வோம். ஒட்டுமொத்தமாக ஒரு 3 சதவிகித வாக்காளர்கள் நீக்கப்படுவதாக வைத்துக் கொள்வோம்.  அதில் ஆளும் கட்சிக்காக வாக்களிக் கும் சிறுபான்மையினர் அதிகளவில் இருக்கும்படி பார்த்துக்கொண்டால், அதிலேயே ஆளும்கட்சியின் வாக்கு முன்னணியைத் தவிர்த்துவிடமுடியும். பிறகு மாநிலம் முழுவதுமிருக்கும் வெளிமாநில வாக்காளர்கள், இரண்டரை சதவிகிதம் பேரை சேர்த்துவிட முடியுமெனில், வெற்றிபெறும் கூட்டணியைத் தோற்கடித்துவிட முடியும். அல்லது அவர்களது வெற்றிபெறும் தொகுதிகளையும், வாக்கு வித்தியாசத்தையும் குறைத்துவிட முடியும். 

அதற்கான சாதனமாகவே எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைகள் பயன்படுத்தப்படுகின்றன என ஜனநாயக ஆர்வலர்கள் சந்தேகப்படுகின்றனர். இதே நிலை நீடித்தால் எதிர்காலத்தில் இந்தியாவில் பா.ஜ.க.வை எதிர்த்து எந்தக் கட்சியும், கூட்டணியும் வெற்றிபெற முடியாத நிலை உருவானால்கூட ஆச்சரியமில்லை.

ஜனநாயகத்தின் பலமென்பது, தங்களை யார் ஆளவேண்டும் என்பதை மக்களே தீர்மானிப்பது தான். அடிப்படையான அந்த அம்சத்தையே கேள்விக்குள்ளாக்கும் எஸ்.ஐ.ஆர். மீதான சந்தேகங்களைப் போக்கவும், வெளிப்படையாக மாற்றவும் ஒன்றிய அரசும், நீதிமன்றங்களும் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

எதிர்பார்ப்புடன்

நக்கீரன்கோபால்