"சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்.'
-திருவள்ளுவர்
உள்ளத்தில் கோணுதல் இல்லாத தன்மையை உறுதியாகப் பெற்றால் அவரது சொல்லில் அநீதி பிறக்காது; நீதியும் நியாயமும் இருக்கும். அதுவே நீதியாகும் என்பதாம்.
பாண்டவர்கள் காட்டில் இருந்தபோது ஒருமுறை, கண்ணனை விருந்துண்ண, தங்கள் குடிசைக்கு அழைக்க விரும்பினர்.
கண்ணனை அழைக்கச் சென்றான் நகுலன்.
தனக்கு அன்று அவசியப் பணி இருப்பதால் வர இயலாது என்றார் கண்ணன். ஏமாற்றத் துடன் திரும்பினான் நகுலன். "கண்ணன் அவருடைய பிரியமான பக்தன் அழைத்தால் தான் வருவார். அவர் என்னிடம் பேரன்பு உடையவர். நான் சென்று கண்ணனை அழைத்துவருகிறேன்' என கர்வத்துடன் கூறிச் சென்றான் அர்ஜுனன். அவனிடமும் தன்னால் வரமுடியாது எனக் கூறினார் கண்ணன். இதைக் கேள்வியுற்ற பாண்டவர்கள் செய்வதறியாது திகைத்தனர்.
பின்னர், தான் சென்று அழைத்து வருவதாகச் சொன்னான் பீமன். அனைவரும் அதைக்கேட்டு சிரித்தனர். பீமனைத் தவிர மற்ற அனைவரும் கண்ணனை ஒவ்வொரு நாளும் அதிகாலையில் எழுந்ததும் வணங்கு பவர்கள். ஆனால் பீமன் ஒருநாளும் பிரார்த்த னையில் பங்கேற்றதில்லை. "நம்மில் நீதான் கண்ணனிடம் குறைந்த பக்தியுள்ளவன். உன்னால் அவரை கண்டிப்பாக அழைத்துவர முடியாது' என்றனர் அனைவரும்.
"கவலைப்படாதீர்கள். நான் அழைத்துவருகிறேன்' என்றான் பீமன். திரௌபதியிடம் "நீ விருந்துக்கு ஏற்பாடு செய், நான் கண்ணனுடன் வருகிறேன்' என்றான் பீமன்.
கண்ணனிடம் சென்று "கண்ணா! நீ விருந்துக்கு வராவிட்டால் எங்களுக்கும் இன்று உணவில்லை. திரௌபதி ஏற்கெனவே சமைக்கத் துவங்கிவிட்டாள். ஆகையால் நீ என்னுடன் கட்டாயம் விருந்துக்கு வர வேண்டும்' என்றான் பீமன்.
அதன்பின் பீமன் தன் கதையைக் கையில் எடுத்து, கண்ணனிடம், "நீ வராவிட்டாள் இந்தக் கதையால் என் தலையை மோதிக் கொண்டு உயிர் விடுவேன்' என்றான். "எனக்காக உயிரையும் துறக்க நினைத்த, நீதான் உண்மையான பக்தன்' எனக்கூறி பீமனுடன் விருந்துக்கு வந்தான் கண்ணன்.
கண்ணன்மீது தீவிரமான பக்தியுடையவன் பீமன். ஆனால் மற்றவர்களைப்போல் ஒருநாளும் வெளிப்படுத்தியதில்லை.
அத்தகைய உண்மையான பக்திக்காகத்தான் பீமன் அழைத்ததும் விருந்துக்கு வர சம்மதித்தார் கண்ணன்.
கடவுளிடம் நாம் மேற்கொள்ளும் பக்தியானது வெளிப்பகட்டுக்காக இல்லாமல் தூய்மையான மனதுடன் ஆத்மார்த்தமாக இருத்தல் வேண்டும்.
மகேந்திரபுரி நாட்டை ஆண்ட மன்னன் மணிவர்மன், மக்களுக்கு புதுமையான போட்டி ஒன்றை நடத்த எண்ணினான்.
தீவிரமாக சிந்தித்து, "அரண்மனை கோட்டையின் கதவை, கைகளால் தள்ளித் திறப்பவருக்கு நாட்டின் ஒரு பகுதி வழங்கப்படும். போட்டியில் தோற்றால் கைகள் வெட்டப்படும் என அறிவிப்பை வெளியிட்டான் மன்னன்.
மக்கள் பலவாறாக இதுபற்றி பேசிக்கொண்டனர். பயத்தால் பங்கேற்பதை அனைவரும் தவிர்த்தனர். அந்த நாட்டைச் சேர்ந்த இளைஞன் அகிலன் மட்டும் துணிந்தான். போட்டியில் பங்கேற்று முயற்சி செய்ய முன்வந்தான். அதற்காக கோட்டை வாசலுக்கு வந்தவனை பலரும் எச்சரித்தனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/03/perumal1-2026-01-03-17-43-29.jpg)
"தோற்றால் உன் கைகள் வெட்டப்படும். பின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.' ஊர்மக்கள் பேச்சுக்கேட்டு, "ஐயா... போட்டியில் வெற்றிபெற்றால் ஒரு நாடு கிடைக்கும். நானும் ஒரு அரசனாக ஆவேன்; தோல்வியடைந்தால் கைகள்தானே போகும். உயிரை இழக்கமாட்டேன் அல்லவா' என கூறியபடி கோட்டைக் கதவை கைகளால் தள்ளினான்.
அது சட்டென திறந்துகொண்டது. கதவு தாழிடப்பட்டிருக்கவில்லை. உட்புறமாகத் திறந்துதான் இருந்தது. அகிலனின் துணிச்சலை வரவேற்று, "தோற்றுவிடுவோமோ... எதையாவது இழந்து விடுவோமோ என எண்ணி எதற்கும் முயற்சிக் காமல் மக்கள் பல சந்தர்ப்பங்களை விட்டுவிடுகின்றனர். தன்னம்பிக்கையுடன் முயற்சிப்போர் வெற்றி பெறுகின்றனர்' என கூறி மன்னன், பரிசு வழங்கி கௌரவித்தான்.
பீமனைப்போல் நேர்மையும், அகிலனைப்போல் நெஞ்சுறுதியும் கொண்டு தன்னம்பிக்கை, இறை நம்பிக்கையுடன் முயற்சித்தால் எங்கும் எதிலும் வெற்றி மேல் வெற்றிகிட்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் விளங்குகின்றதொரு திருத்தலம்தான் குடவாசல் வட்டத்தில் திருக்கண்ண மங்கையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பக்த வத்சலப் பெருமாள் திருக்கோவில்.
இறைவன்: ஸ்ரீ பக்தவத்சலப் பெருமாள், பத்தராவிப் பெருமாள்.
இறைவி: அருள்மிகு கண்ணமங்கை நாயகி (அபிஷேகவல்லி).
உற்சவர்: பெரும் புறக்கடல் பெருமாள்.
ஊர்: திருமருகல்.
கோலம்: நின்ற கோலம், ஸ்ரீ தேவி பூமி தேவி தாயார்கள் மற்றும் ஆண்டாள்.
புராணப் பெயர்: லட்சுமி வனம்.
ஊர்: திருக்கண்ணமங்கை,
மாவட்டம்: திருவாரூர் மாவட்டம்..
தலவிருட்சம்: மகிழ மரம்.
தீர்த்தம்: தர்ஷண புஷ்கரணி தீர்த்தம்.
சுமார் 1,200 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமைவாய்ந்த இவ்வாலயம் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்குவது குறிப்பிடத் தக்கது. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற திருத்தலங்கள் 108 திவ்யதேசங்கள். அதில் 18-ஆவது திவ்ய தேச மாகவும், சோழநாட்டுத் திருப்பதிகளில் 16-ஆவது திருத்தலமாகவும் போற்றப் படுவதோடு இன்னும் பல்வேறு சிறப் புக்களை பெற்றதொரு திருத்தலம்தான் திருக்கண்ணமங்கை திவ்யதேசம்.
"புண்ணியம் ஏழு புவியில் பெற்ற தலமே!
மண்ணிலே மங்கையை மணந்த தலமே!
பாற்கடல் பள்ளிகொண்ட பரந்தாமன் தலமே!
கார்முகில் வண்ணன் கண்ணன் மங்கள தலமே!
சந்திரன் பெற்ற சாபம் தீர்த்த தலமே!
மந்திர தீர்த்தம் மகாலட்சுமி அபிஷேகமே!
சித்ராபௌர்ணமியில் சிந்தைகவர் திருவிழாவே!
சித்தம் குளிர்ந்து சிங்காரம் பொங்குமே!
பத்திரமாய் காக்கும் பக்தரை பத்தராவியே!
பத்திரமாய் கூடாகும் பணிவான தேனீக்களே!
பண்ணிலே வந்திடும் பக்தவத்சல பெருமாளே!
கண்ணிலே கருத்திலே கலந்திடு பெருமாளே!
திருமகளை திருவாரூரில் திருமணம் செய் திருமாலே!
திருக்கண்ண திருத்தலத்தில் திகழும் திருமாலே!'
-திருமங்கை ஆழ்வார்.
தல வரலாறு
ஒருசமயத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் கடும்போர் மூண்டது. இதில் இரு தரப்பிலும் பலர் உயிரிழந்தனர். கவலையடைந்த தேவர்கள், இந்திரன் தலைமையில் நான்முகனை சந்தித்து போருக்கு தீர்வு காணுமாறு வேண்டினர். நீண்ட சிந்தனைக்குப்பின் அவர், திருமால் இப்பிரச்சனையைத் தீர்த்து வைப்பார் என்றார்.
தேவர்களும் திருப்பாற்கடலில் பள்ளிகொண்டுள்ள திருமாலை சந்தித்து இறவா நிலைமை அடைய வழிகூறும்படி வேண்டி நின்றனர். திருமாலும் திருப்பாற்கடலைக் கடைந்து அதிலிருந்து வெளிப்படும் அமிர்தத்தை அருந்தினால் இறவாநிலை ஏற்படும் என்று தெரிவித்தார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/03/perumal2-2026-01-03-17-43-49.jpg)
பாற்கடலைக் கடைவது ஒன்றும் சுலபமான செயல் இல்லை என்பதை உணர்ந்த தேவர்கள் அதற்கு வழிகூறும்படி திருமாலைக் கேட்டனர். மந்திரகிரி மலையை மத்தாக்கி வாசுகி என்ற பாம்பை கயிறாக்கி பாம்பின் தலைப்பகுதியில் அசுரர்களும், வால்பகுதியில் தேவர்களும் நின்று பாற் கடலைக் கடைந்தால் அமிர்தம் கிடைக்கும் என்று வழி கூறினார் திருமால். அதன்படி தேவர்களும் அசுரர் களும் பாற்கடலைக் கடைத்தனர்.
பாற்கடலைக் கடைந்தபோது அதிலிருந்து கற்பக விருட்சகம், காமதேனு முதலானவை தோன்றின. நிறைவில் திருமகள் வெளிப்பட்டாள். முதலில் அவள் திருமாலின் சௌந்தர்யத் தோற்றத்தைக் கண்டாள். அந்த தோற்றத்தையே மனதில் நிறுத்தி இத்தலம் வந்து பெருமாளை அடைய கடுந்தவம் இருந்தாள்.
திருமகள் தவமிருப்பது பெருமாளுக்குத் தெரியவந்தது. தனது மெய்க்காப்பாளரான விஷ்வக் சேனரிடம் இதுகுறித்து கூறி முகூர்த்தத் தேதி குறித்துத் தர கூறினார்.
பிறகு மகாலட்சுமிக்கு காட்சி கொடுத்து முப்பத்து முக்கோடி தேவர்கள் சூழ திருமால் இத்தலத்திற்கு வந்து லட்சுமியை கரம்பிடித்தார். தனது பாற்கடலைவிட்டு வெளியே வந்த திருமகளை மணம் முடித்ததால் பெருமாளுக்கு "பெரும்புறக்கடல் பெருமாள்' என்ற பெயர் நிலைத்தது. மகாலட்சுமி இத்தலத்தில் தவமிருந்ததால் இத்தலம் "லட்சுமி வனம்' என்றழைக்கப் படுகிறது. இத்தலத்திலேயே திருமணம் நடந்ததால் "கிருஷ்ண மங்கள க்ஷேத்திரம்' என்ற பெயரும் ஏற்பட்டது.
ஒரு தலத்துக்கு இருக்க வேண்டிய விமானம், ஆரண்யம், மண்டபம், தீர்த்தம், க்ஷேத்திரம், நதி, நகரம் என்ற ஏழு லட்சணங்களுடன் இத்தலம் அமையப் பெற்றதால் இத்தலத்திற்கு "சப்த புண்ணிய க்ஷேத்திரம் "சப்தாம்ருத க்ஷேத்திரம்' என்ற பெயர்களைப் பெற்றது. மேலும் மோட்சம் வேண்டுபவர்கள் இத்தலம் வந்து ஓர் இரவு மட்டும் இங்கு தங்கினால் போதும். பக்தர்களுக்காக ஆவிபோல் வேகமாக வந்து அருள்பாலிப்பதால் பக்தர் ஆவி- பத்தராவி என்ற பெயர்பெற்றார் பெருமாள்.
இத்தலத்தில் திருமால்லி திருமகள் திருமணம் நடைபெற்றதால் அந்நிகழ்வை எப்போதும் காண வேண்டும் என்று தேவர்கள் நினைத்தார்கள். அதனால் தேனீக்கள் வடிவம் எடுத்து இருப்பதாகக் கூறுவர். அதற்கேற்ப தாயாரின் சந்நிதியின் வடபுறத்தில் ஒரு தேன்கூடு உள்ளது. இந்த தேன்கூடு எவ்வளவு காலமாக இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது. இத்தேனீக்கள் பக்தர்கள் யாருக்கும் இன்னல்கள் விளை விப்பதில்லை. இது இத்தலத்தில் நிகழும் அற்புதம் ஆகும்.
சிறப்பம்சங்கள்
ப் இறைவனின் திருநாமம் ஸ்ரீ பக்தவத்சலப் பெருமாள்.
உற்சவர். பெரும்புறக்கடல். மூலவர் உத்பவ விமானத்தின்கீழ் அருள்பாலிக்கிறார். சிவபெருமான் நான்கு திசைகளையும் நான்கு உருவமெடுத்து காத்துவருகிறார்.
ப் இறைவியின் திருநாமம் கண்ணமங்கைநாயகி. மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்தபோது வானத்தை அளந்த காலை பிரம்மன் தன் கமண்டல நீரால் அபிஷேகம் செய்தார். அதிலிருந்து தெறித்து விழுந்த ஒரு துளி இவ்விடத்தில் விழுந்தது.
அதுவே தர்ஷண (தரிசன) புஷ்கரணி ஆனது. சந்திரன் தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்க அலைந்தபோது இந்த புஷ்கரணியை கண்டான். இதைப் பார்த்தவுடனேயே அவனது சாபம் தீர்ந்தது. எனவேதான் இதற்கு தர்ஷண புஷ்கரணி (தரிசித்த மாத்திரத்தில் பயன்தர வல்லது) என்ற பெயர் ஏற்பட்டது. இங்குள்ள தாயாரை பெருமாள் இந்த தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து பட்ட மகிஷியாக்கினார். இதனால் இந்த தாயாருக்கு அபிஷேகவல்லி என்ற பெயர் உண்டாயிற்று.
ப் நாலாயிரத் திவ்ய பிரபந் தத்தை தொகுத்தவர் நாதமுனிகள். இவருக்கு திருக்கண்ண மங்கை யாண்டான் என்ற சீடர் ஒருவர் இருந்தார். இவ்வூரில் பிறந்த இவர் பெருமாளிடம் மிகுந்த ஈடுபாடு உடையவர். கோவிலை சுத்தம் செய்து பெருமாளே அடைக்கலம் என்று இருந்தார். ஒருநாள் இவர் வேத பாராயணம் செய்துகொண்டே, நாய் வடிவம்கொண்டு மூலஸ்தானத்திற்குள் ஓடி ஜோதியாகி இறைவனுடன் கலந்தார். இன்றும் ஆனி மாதம் திருவோண நட்சத்திரம் இவரின் மகாநட்சத்திரமாகக் கொண்டாடப்படுகிறது. இவரது பெயரே (திருக்கண்ணமங்கை) இவ்வூருக்கும் நிலைத்துவிட்டது. பத்மபுராணம் 5-ஆவது காண்டத்தில் 81 முதல் 87 வரையிலான 7 அத்தி யாயங்களில் இத்தலம் பற்றி சிறப் பாகக் கூறப்படுகின்றது.
ப் இத்தலம் வைணவ மரபின் தென்கலை மற்றும் வைகானச ஆகமத்தைப் பின்பற்றி அனுதினமும் ஆறு கால பூஜைகள் நடைபெறுகிறது.
ப் திராவிடக் கட்டடக்கலை பாணியில் கட்டப்பட்ட இத்தலம் கி.பி. 6 முதல் 9-ஆம் நூற்றாண்டு வரையிலான ஆழ்வார் துறவிகளின் ஆரம்பகால, இடைக்கால தமிழ் நியதியான நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் மகிமைப்படுத்தப்பட்டு, கி.பி. 9-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இடைக்கால சோழர்களால் தொடங்கப்பட்ட தாகவும், பின்னர் தஞ்சாவூர் நாயக்கர்களின் பல்வேறு காலங்களில் பங்களிப்புகள் செய்யப்பட்டதாகவும், சோழர்கால கல்வெட்டுக்கள் மூன்று உள்ளதாகவும் தலபுராணம் சொல்கிறது.
ப் பஞ்சகிருஷ்ண தலங்களில் ஒன்றான திருக்கண்ணமங்கையின் தல விழாக்கள் கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமை, நவராத்திரி, வைகுண்ட ஏகாதசி பரமபத வாசல் திறப்பு மற்றும் விஜயதசமி விழாக்களாக இருந்தாலும் முக்கியமான திருவிழா என்றால் சித்திரை மாத பௌர்ணமியை ஒட்டி பத்து நாட்கள் பிரம்மோற்சவம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அச்சமயத்தில் கலந்துகொண்டு வழிபடு பவர்களுக்கு எண்ணம் எளிதில் நிறைவேறும் என்கிறார் ஆலய செயல் அலுவலர், கு. ராஜ்குமார்.
ப் திருமங்கையாழ்வார் தனது 14 பாசுரங் களில் பாடியுள்ள திருக்கண்ணமங்கை திருத்தலத்தில் உறையும் ஸ்ரீ பக்தவத்சலப் பெருமாள் அருள்மிகு கண்ணமங்கை நாயகி தாயாரை முகமலர தரிசித்தால் அகம் மகிழ வைப்பார்கள் என்பது உள்ளூர்வாசிகளின் சொல்வழக்கு மற்றும் மனசஞ்சலம் நீங்கி மனமகிழ்வோடு வாழலாம் என்கிறார் கோவில் கணக்கர் க. கோபிநாதன்.
ப் மேற்கின் காவல்தெய்வமான வருணனும், ரோமச முனிவரும் மற்றும் முப்பத்து முக்கோடி தேவர்களும் திருக்கண்ணமங்கை அம்மையப்பனை தரிசித்து பலன் கண்டுள்ளனர்.
ப் முன்னொரு நாளில் மது, கைடபர் என்ற இரண்டு அசுரர்கள் பிரம்ம தேவனிடமிருந்து வேதங்களை அபகரித்துக் கொண்டு கடலில் மறைந்தனர். வேதங்களை மீட்கும் பொருட்டு, உதவிகேட்க திருமாலிடம் சென்றார் பிரம்மன். பாற்கடலிலுள்ள திருமாலுடைய கோவில் காப்பான் ஸநந்தன் என்பவன், பகவான் பாற்கடலில் இல்லை. மகாலட்சுமி தரிசன புஷ்கரணிக் கரையில் தவம் செய்வதால் அவருக்காக திருக்கண்ண மங்கையில் தரிசன புஷ்கரணியின் மேற்கு திசையில் உள்ளார் எனக் கூறினான். இதைக்கேட்ட பிரம்மன் பாற்கடலின் வடபுறத்தில் திருமாலை நினைத்து தவம் புரிந்தார். தவத்தின் பயனாக திருமால் விரைந்துவந்து அசுரர்களை வதம் செய்து வேதங்களை மீட்டுத்தந்தார். பின்னர் தன்னை வணங்கிய பிரம்மனிடம் அவர் இந்த லட்சுமிக்ஷேத்திரம் மகா புண்ணியமானது.
என் பாத தீர்த்தமே தரிசன புஷ்கரணி. பிராட்டியோடு நான் இங்கு நித்தியவாசம் செய்கிறேன். இந்த புஷ்கரணிக் கரையில் தரிசனம் கொடுத்தபடியால் இதற்கு தர்ஷண புஷ்கரணி எனப்பெயர் ஏற்படும் என்றார்.
108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும், கிருஷ்ண மங்கள க்ஷேத்திரம் என்கிற திருக்கண்ண மங்கையின் தலைமை பட்டாச்சாரி யார் கூறுவது:
தர்ஷண புஷ்கரணியை ஸ்தானு என்ற சிவன், பிரம்மன், முருகன், விநாயகர் ஆகியோர் கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு திக்குகளில் காத்துவருகின்றனர். நடுவில் க்ஷேத்திர பாலகனோடு இந்திராதி தேவர்கள் அவர்களுக்குரிய திக்குகளில் காவல் புரிவதோடு, முப்பத்து முக்கோடி தேவர்கள், வசிஷ்டர், வாமனர், ஜாபாலி, காசியபர், பராசரர், வியாசர், விஸ்வாமித்திரர், அஷ்ட வக்ரர் ஆகிய பிரம்மரிஷிகள் திசைதோறும் நின்று தீர்த்த சேவைபுரிவதாக தலபுராணம் சொல்கிறது. இத்தல மகிமைகளை என்னவென்று சொல்வது?
ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு பரிகார தலமாக விளங்குகிறதே அதைச் சொல்வதா? இத்தல பட்சிராஜன் மிகவும் பிரசித்தி பெற்றவர். இவரைப் பிரார்த்தித்தால் கைமேல் பலன்கிட்டும். எந்தக் காரியம் குறித்து வேண்டிக்கொண்டாலும் உடன் முடித்து கொடுக்கக்கூடியவர் பட்சிராஜன். இவருக்கு ஒன்பது கஜம் கட்டம் போட்ட கறுப்பு நூல் கலக்காத புடவை சாற்றுவது மரபு. நாள் தோறும் பிரார்த்தனை, திருமஞ்சனம் ஆகியவை இங்கு மட்டும் தான் என்பது கூடுதல் சிறப்பு. பக்தர்களின் வேண்டுகோளை நின்ற கோலத்தில் சங்கு, சக்கரம் தரித்தவாறு காட்சியளிக்கும் கருடாழ்வார் உடனுக்குடன் பூர்த்தி செய்வதால் கண்கண்ட தெய்வமாகத் திகழ்கிறார். திருமணமாகாதவருக்கு திரு மணப் பேறு அளிக்கிறார். ஞாயிறு, வியாழன் ஆகிய கிழமைகளிலும், சுவாதி நட்சத்திரத் தன்றும் இவருக்கு திருமஞ்சனம் செய்து அம்ருத கலசம் நிவேதனம் செய்வது வழக்கம்.
திருமாலின் வாகனமாக அமைந்தவர் கருடன். வைணவ சமயத்தின் பெருமாள் கோவிலின் மூலவரை வணங்குவதற்கு முன்னர் கருடனை வழிபடவேண்டும் என்பது வைணவ ஆகமத்தின் நியதியாகும்.
ஆலயப் பிரதான அர்ச்சகர் கூறுவது நவநாகங்களில் ஆதிசேஷனை இடதுகால் நகத்திலும் குளிகனை கழுத்தின் பின்புறத்திலும், வாசுகியை பூணூலாகவும், தட்சகனை இடுப்பிலும், கார்க்கோடகனை கழுத்து மாலையாகவும், பதுமம் மற்றும் மகாபதுமம் எனும் நாகர்களை இரண்டு காதணிகளாகவும், சங்கசூடனை தலைமுடியிலும் அணிந்திருப்பார் கருடன். வேறு எந்த தலத்திலும் இல்லாத சிறப்பு பிரார்த்தனை என்னவென்றால்; கருடாழ்வாருக்கு ஒன்பது கஜம் கட்டம் போட்ட கறுப்புநூல் கலக்காத புடவை சாற்றி; தங்களது முறையான கோரிக்கைகளை வைத்து வழிபட்டால் காலதாமதமின்றி காரிய சித்தி ஏற்பட்டு தெளிவுபிறக்கும் என்கிறார். அத்துடன் எந்தெந்த கிழமைகளில் தரிசனம் செய்தால் எப்படிப்பட்ட பலன் என்பதையும் கூறுகிறார்.
ஞாயிறுக்கிழமை: தீராத நோய்கள் தீரும், மருத்துவச் செலவுகள் குறையும். மனக்குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும்.
திங்கட்கிழமை: குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். சொந்தங்களிடையே மனஸ்தாபங்கள் நீங்கும்.
செவ்வாய்க்கிழமை: தைரியம் பெருகும். எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வளரும்.
புதன்கிழமை: கண்ணுக்குத் தெரிந்த- தெரியாத எதிரிகள் அனைவரும் அழிவர். எதிரியற்ற நிலை உருவாகும்.
வியாழக்கிழமை: ஆயுள் அதிகரிக்கும். கண்டங்கள் விலகும்.
வெள்ளிக்கிழமை: கடன் தொல்லை நீங்கும். பணவரவு அதிகரிக்கும்.
சனிக்கிழமை: நற்கதி அடையும் பாக்கியம் கிட்டும். வழக்குகள் வெற்றியாகும்.
1. விமானம்- உத்யலாவதக விமானம்
2. மண்டபம்- வேத மண்டபம்
3. ஆரண்யம்- கிருஷ்ணாரண்யம்
4. க்ஷேத்திரம்- கிருஷ்ண மங்களக்ஷேத்திரம்
5. தீர்த்தம்- தர்ஷண புஷ்கரணி
6. ஆறு- விருத்தகாவேரி எனப்படும் வெட்டாறு
7. நகரம்- கண்ணமங்கை மாநகர்
ஆக இந்த ஏழு லட்சணங்களும் ஒருங்கே அமையப்பெற்றதால் ஸப்தாம்ருத க்ஷேத்திரம் என்று பெயர் பெற்றது.
கோவில் அமைப்பு
நீர்வளம், நிலவளம்மிக்க காவிரித் தென்கரையில் திருவாரூர் மாவட்டத்தில் கண்ணமங்கை நகரினிலே ஆலயச் சுவர்கள் நாற்புறமும் தேரோடும் பெரிய வீதிகளால் சூழப்பட்டு கிழக்கு நோக்கிய 5 நிலை 90 அடி உயரமுள்ள ராஜகோபுரத்தின் நுழைவாயிலில் நான்கு தூண்கள்கொண்ட திறந்த மண்டபம் உள்ளது. அதன் கிழக்கே இம்மாநிலத்தின் மிகப்பெரிய கோவில் குளங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்ற தர்சன புஷ்கரணி தீர்த்தக் குளம் உள்ளது.
நான்கு பிராகாரங்களைகொண்ட இத்தலத்தில் முதல் கோபுரமான மொட்டை கோபுரத்தை கடந்து உள்ளே சென்றால் பலி பீடமும் கொடிமரமும் உள்ளன. இடப்புறம் ஆழ்வார்கள் சன்னதி, வலப்புறம் ஸ்ரீ மணவாள மாமுனிகள் சன்னதி இதைத் தொடர்ந்துள்ள ராஜகோபுரத்தைக் கடந்தால் முதல் பிராகாரம் வரும் செண்பக பிராகாரம் என அழைக்கப்படும் இந்த வெளிச்சுற்றில் நந்தவனமானது கோவிலுக்கு மாலைபோல் அமைந்துள்ளது. இப்பிராகாரத்தின் வலப்புறத்தில் திருமங்கையாண்டான் திருவரசும், தலவிருட்சமாகிய மகிழமரமும் உள்ளது. பலி பீடத்தில் மேற்புறத்தில் 2-ஆவது ராஜகோபுரம் உள்ளது. அதன் உட்புறம் கருடாழ்வார் சன்னதி பெருமானை நோக்கியவண்ணம் உள்ளது. தென்கிழக்கு பகுதியில் திருமடைப்பள்ளியையும், மடைப்பள்ளி நாச்சியாரையும் காணலாம். அதையடுத்து திருவந்திகாப்பு மண்டபம் உள்ளது.
கர்ப்பகிரஹம், அர்த்தமண்டபம், மகாமண்டபம் ஆகிய அமைப்புகளுடன் தாயார் சன்னதி உள்ளது. அர்த்த மண்டபத்தில் செவ்வக வடிவிலுள்ள சாளரத்தில் தேன்கூடு உள்ளது. பெருமாள் தாயார் திருக்கல்யாணத்தை காணவந்த முப்பத்து முக்கோடி தேவர்களும் இங்கு தேனீயாக இருப்பதாக ஐதீகம்.
ஆழ்வார்கள் சன்னதி, பிராகாரத்தின் நடுப்பகுதியில தென்புறம் சொர்க்கவாசல் கோபுரத்துடன் உள்ளது. வசந்த மண்டபம், தேசிகர் சன்னதி, ஹயக்ரீவ பெருமாள் கோதண்டராமர் சன்னதி, யாகசாலை, லட்சுமி, நரசிம்மர் யாழ் மீட்டும் நங்கை உருவங்கள் உள்ளன.
விசாலமான மகாமண்டபம், அதையடுத்து அர்த்த மண்டபம், கருவறை என்ற அமைப்புடன் பெருமாள் சன்னதி விளங்குகிறது. மூலவர் பக்தவத்சலப் பெருமாள் அருள்பாலிக்கிறார். பிரம்மா நான்கு வேதங்களையும் நான்கு தூண்களாக நிறுத்தி ஸ்ரீ மண்டபமாக அமைக்கப்பட்ட இடத்தில் பெருமாள் தாயாரின் திருமண வைபவ நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பெரிய பெருமாளான மூலவர் 16 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் இருபுறமும் ஸ்ரீதேவி பூதேவி நாச்சியார்களுடன் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.
வருகிற ஆங்கில புத்தாண்டு 2026 ஜனவரி, மார்கழி மாதத்திலேயே தரிசனம் செய்து மகிழ்வுடன் வாழுங்கள் என்று திருக்கோவில் நிர்வாகிகள் வருக என அழைக்கிறார்கள்.
நடைதிறப்பு: காலை 8.00 மணிமுதல் 12.30 மணிவரையும்; மாலை 5.00 மணிமுதல் இரவு 8.30 மணிவரை ஆலயம் திறந்திருக்கும்.
ஆலயத் தொடர்புக்கு: செயல் அலுவலர் (திருக்கோவில் அலுவலகம்)
ஸ்ரீ பக்தவத்சலப் பெருமாள் திருக்கோவில், திருக்கண்ணமங்கை அஞ்சல் 108 திவ்ய தேசக்கோவில், திருவாரூர் வட்டம்- 610 104. செயல் அலுவலர் கு. ராஜ்குமார். செல்: 94897 82566. கோவில் கணக்கர், க. கோபிநாதன் செல்: 90802 88115.
பூஜை விவரங்களுக்கு: பட்சிராஜ பட்டாச்சார்யார், செல்: 99437 02989.
அமைவிடம்: திருவாரூர் மாவட்டம், திருவாரூரிலிருந்து கும்பகோணம், செல்லும் சாலையில் எட்டுக் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருக்கண்ணமங்கை. பேருந்து வசதி நிறைய உள்ளது. பிரதான சாலை யிலேயே ஆலயம் அமைந்துள்ளது.
படங்கள்: போட்டோ கருணா
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/03/perumal-2026-01-03-17-43-15.jpg)