சுமார் 36 வயதுடைய ஒரு இளைஞர் நாடியில் பலன் தெரிந்து கொள்ள வந்திருந்தார்.  அவரை அமரவைத்து, "என்ன காரியமாகப் பலனறிய வந்தீர்கள்' என்றேன். 

Advertisment

"ஐயா, என் வாழ்க்கையில் இதுவரை எந்த உயர்வும், நன்மையும் இல்லை. செய்யும் தொழில், வியாபாரம், விவசாயம் என அனைத்திலும் தடை, பண விரையம்தான். என் இப்பிறவி விதி என்ன என்று எனக்குத் தெரியவில்லை. என் எதிர்கால வாழ்க்கை இருளாகத் தெரிகிறது. 

Advertisment

வருங்காலம் பற்றி அறிந்துகொள்ளவே அகத்தியரை நாடி வந்துள்ளேன். அவர்தான் வரும் வாழ்நாள் நன்மையானதாக அமைய வழிகாட்ட வேண்டும்'' என்றார்.

ஜீவநாடி ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். 

ஓலையில் அகத்தியர் எழுத்துவடிவில் தோன்றி பலன்கூறத் தொடங்கினார்.

இந்த மகன் கலியுகத்தில் வாழத் தெரியாமல், வாழ்ந்துகொண்டு விதிமீது பழி போடுகிறான்.  இவன் குடும்பச் சொத்தாக சிறிது நிலம் உள்ளது. அதில் பயிர் செய்துவரும் வருமானத்தில்தான், இவனும், இவன் தாய்வழி பாட்டியும் வாழ்ந்துவருகின்றார்கள். அந்த பயிர் தொழிலையும் இவன் பருவ காலத்தில் செய்வதில்லை.

Advertisment

இவனுக்கு நிறைய நண்பர்கள் உண்டு. அதேபோன்று அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் பழக்கமும் உண்டு. ஆனால் அவர்களாலும் எந்த நன்மையும் கிடையாது. இந்தப் பழக்கத்தின் மூலம் பிறருக்கு உதவிசெய்து, அவர்கள் காரியத்தை செய்து தருவான். அதனாலும் எந்த நன்மையும் பிரதிபலன் அடைவதில்லை.  பொதுவாக இவனுடன் பழகும் நண்பர்களும், உறவு களும் இவனால் தங்களுக்கு என்ன லாபம், நன்மை என்றுதான் பழகுகிறார்களே தவிர, இவனுக்கு நன்மை செய்ய யாருமில்லை. பொதுக் காரியங்கள், தெய்வ காரியங்கள், கோவில் பணிகளில் ஈடுபடுவான். ஆனால் இவன் வேண்டுதல்கள், பிரார்த்தனைகள் பலித்தது இல்லை. தெய்வமும் இவனுக்கு உதவி செய்ததில்லை. நாலு பேருக்கு நல்லது செய்தால், நமக்கு நன்மை கிடைக்கும் என்ற பொய்யான பழமொழியை நம்பி வாழ்ந்துகொண்டு இருக்கின்றான்.

இவன் கையில் எவ்வளவு பணம் வந்தாலும் தங்காது. செலவாகி விடும். பணத்தை சேமித்து வைத்துக்கொள்ள தெரியவில்லை.  இதுநாள்வரை இவன் உழைப்பு, செயல், பணம், பொருள் என அனைத்தும் பிறருக்குத்தான் பயன்பட்டு வருகிறது. இவன் யாருக்கெல்லாம் உதவி செய்கிறானோ, அவர்களெல்லாம் வாழ்வில் உயர்வடைந்து விடுகிறார்கள். ஆனால் இவன் வாழ்வில் உயர்வில்லை.  இவனால் உதவி பெற்றவர்கள், இவனைப் பிழைக்கத் தெரியாதவன் என்று கீழ்த்தரமாக பேசுகிறார்கள்.

இவனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. 

பெற்றவர்கள் இல்லாத இவனுக்கு திருமணம் செய்துவைக்க உறவுகள், நண்பர்கள் என யாரும் உதவவும் இல்லை. இவனும் திருமணம் செய்து, மனைவி, குழந்தைகள், குடும்பம் என்று ஆகிவிட்டால், வருமானம் இல்லாத நிலையில் அவர்களை எப்படிக் காப்பாற்றுவது என்ற பயம், மனதில் தோன்றி, திருமணம் செய்யும் விருப்பத்தை தடை செய்துவருகிறது.

சுயமாக நிறைய பணம் சம்பாதித்து, அனைத்து வசதிகளையும் அடைந்த பின்புதான், திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்ற எண்ணத்துடன் காலத்தைக் கடத்திவருகின்றான். இதுவரை இவன் நினைப்பதுபோல் தொழில், பணம், வசதி வாய்ப்பு, அமையவில்லை திருமணமும் நடக்கவில்லை.

இவனின் இப்பிறவி விதிப்படி, இவன் திருமணம் செய்து, மனைவி, குடும்பம் என அமைந்தபின்புதான் இவன் வாழ்க்கையில் உயர்வை அடையமுடியும். இல்லையேல், இவன் வாழ்க்கை இறுதிவரை வறுமையானதாகவே இருக்கும். இந்த பிறவியில், இவன் சம்பாதிக்கும் பணம், சொத்துகளை, உறவுகளோ, மற்றவர்களோ, பெற்றோர்களோ அனுபவிக்கக்கூடாது. இவன் மனைவி, குழந்தைகள், தான் அனுபவிக்கவேண்டும் என்பது விதி. அதனால் தான் இவனுக்கு இந்த நிலை.

இவன் தாய்வழி பாட்டி இவனுக்காக தன் உறவில் ஒரு பெண்ணைப் பார்த்து மணம் பேசி வைத்துள்ளார். அவளை இவன் மணந்துகொள்ளட்டும்.  மனைவி இவன் வீட்டிற்கு வந்து, விளக்கேற்றி வாழத் தொடங்கிவிட்டாள். மனைவி யோகத்தால் செல்வம், செல்வாக்கு,  சிறப்பான வாழ்க்கை அமையும்.

திருமணத்திற்குப்பின்பு இவன் நடைமுறையில் வாழவேண்டிய வழிமுறைகளையும் கூறுகின்றேன். மனைவி வந்தவுடன் நிலம், சொத்து, பணம், வரவு- செலவு என அனைத்தையும், மனைவியின் நிர்வாகப் பொறுப்பில் கொடுத்துவிடவேண்டும். கணவன் உயர்ந்தவன், மனைவி அவன் சொல்படிதான் கேட்டு வாழ வேண்டும் என்று கௌரவம் பார்க்கக்கூடாது. அவள் சொல்வதைக் கேட்டு செயல்படவேண்டும். இவன் மனைவியை மதித்து வாழ வேண்டும்.  இவன் வாழ்வின் உயர்வு மனைவியின் அதிர்ஷ்டத்தினால் தான். இதற்குக் காரணத்தையும் கூறுகின்றேன்.

இவன் தந்தைக்கு முன்னோர்கள் சொத்து, பூமி, வீடு என எதுவும் கிடையாது. இப்போது இவன் அனுபவித்துவரும் சொத்துகள், வீடு என அனைத்தும் இவன் தாய் வீட்டு சொத்துகள். பெண்வழி சொத்துகள். இந்த சொத்துகளை ஆண்கள் நிர்வாகம் செய்தால், விருத்தியாகாது. மனையில் வாழவந்த பெண் மனைவி நிர்வாகம் செய்தால்தான் சொத்து அழியாமல் மேலும் மேலும் விருத்தியாகும்.  மனைவியின் யோகத்தால் மனை செழிப்பு அடையும்.

இவன் திருமணத்திற்குபின்பு, பிறருக்கு உதவி செய்வதை நிறுத்திக் கொள்ளவேண்டும். தனக்கு லாபம் இல்லாத பிறர் காரியத்தில் ஈடுபடக்கூடாது. பொதுக் காரியங்கள், கோவில் தெய்வப் பணிகளில் ஈடுபட்டு பொறுப்பு ஏற்றுக்கொள்ளக்கூடாது. இந்த பிறவியில் மனிதர்களாலும், தெய்வத்தாலும், உறவுகளாலும் எந்த உதவியும் கிடைக்காது. இவன் சம்பாதித்து சேமிக்கும் பணமும், இவன் மனைவியும் கடவுளாக இருந்து இவனைக் காப்பாற்ற முடியும் என்று கூறிவிட்டு ஓலையில் இருந்து மறைந்தார்.

அகத்தியர் கூறியபடியே என் பாட்டி கூறும் பெண்ணை மணந்து, அவள் சொல்படி வாழ்கின்றேன் என்று கூறி என்னிடம் விடை பெற்றுச் சென்றார்.

செல்வந்தர் குடும்பத்தில் பிறந்து, செல்வம், செல்வாக்குடன் வாழ்ந்தவர்கள் திருமணத்திற்குப்பின் அனைத்தையும் இழந்து வறுமை நிலையை அடைவதும், திருமணத்திற்குமுன்பு ஏழ்மை நிலையில் வாழ்ந்து திருமணத்திற்குபின்பு செல்வம், செல்வாக்கு, சொத்து என செல்வந்தராகி வாழ்வதற்கும், சூட்சுமமான ரகசிய காரணம் உள்ளது என்பதை நானும் அறிந்து கொண்டேன்.