"தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.'
-என்பது வள்ளுவரின் வாக்கு.

புதருக்குள் மறைந்து  நின்றுகொண்டு வேடன் ஒருவன் பறவைகளைக் "கண்ணி வைத்துப்' பிடிப்பதற்கும், ஆன்மீக தவக்கோலத்தில் இருப்பவர்கள் அடாத செயல்களில் ஈடுபட்டு பலரையும் ஈர்ப்பதற்கும் பெரிய வேறுபாடு இல்லை என்பதே இதன் பொருளாகும்.

இந்தக் குறள் எச்சரிப்பது போலவே, ஆன்மீக கோலத்தில் மறைந்துகொண்டு வீரேந்திர ஹெக்டே என்கிற பா.ஜ.க. எம்.பி.யும், அவர் தரப் பினரும் நூற்றுக்கணக்கான இளம்பெண்களை கதறக்கதற கொடூரமாக வேட்டையாடியதோடு, அவர்களை சித்ரவதை செய்து கொன்று புதைத் திருக்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு, கர்நாடக மாநிலத்தையே புரட்டிப் போட்டு வருகிறது. 

Advertisment

இந்த வீரேந்திர ஹெக்டேவின் பின்னணியை விசாரிக்கும்போதே அவர் எவ்வளவு பெரிய க்ரைம் தாதா என்பது தெரியவருகிறது. கர்நாடக மாநிலம் தெற்கு கன்னடா மாவட்டத்தில், தர்மஸ்தலா என்கிற மஞ்சுநாதர் கோவில் இருக்கிறது. இது, ஏறத்தாழ 800 ஆண்டுகாலப் பழமையான கோவில் என்கிறார்கள். இது சமணக் கோவிலாம்.

அகிம்சையை வலியுறுத்தும் இந்த சமண மதக்கோவிலை, 77 வயதாகும் வீரேந்திர ஹெக்டே, கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். மேலும் மஞ்சுநாதர் கோவில் இருக்கும் பெல்தங்கடி பகுதியில், இவர் வைத்ததுதான் சட்டமாம். அங்கே இருக்கும் ஒவ்வொரு வீட்டிலும் இந்த ஹெக்டேவின் படம் மாட்டப்பட்டிருக்க வேண்டும். அப்பகுதி மக்களின் சொத்து விவகாரம் தொடங்கி, குடும்ப விவகாரம் வரை, தன் விருப்பம்போல் விசாரித்து, தீர்ப்பு சொல்வது இந்த ஹெக்டே தானாம். எனவே மஞ்சுநாதர் கோவிலையே கட்டப்பஞ்சாயத்து கேந்திரமாக அந்த ஹெக்டே நடத்திவந்திருக்கிறார்.

manjnathar1

Advertisment

வீரேந்திர ஹெக்டேவுக்கும், ஆர்.எஸ்.எஸ், விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் மற்றும் பா.ஜ.க. ஆகியவற்றில் இருக்கும் பெரும்புள்ளிகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டாம். அங்கே உள்ள அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்களையும், சாதித் தலைவர்களையும்கூட அவர் தன் பிடியில் வைத்திருக்கிறார். பிரதமர் மோடியே இவரைத் தேடிவந்து சந்திப்பாராம். மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி வந்த பிறகு, 2015லிலில் இந்த வீரேந்திர ஹெக்டேவுக்கு நாட்டின் உயர்ந்த விருதுகளில் ஒன்றான "பத்மபூஷண்' விருதும் வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல் இவருக்கு கர்நாடக மாநிலத்தின் பெரும் விருதான "கர்நாடக ரத்னா' விருதும் தரப்பட்டிருக்கிறது. 

கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள் என ஏராளமான நிறுவனங்களைக் கட்டியாள்கிற ஹெக்டே, இவ்வளவு செல்வாக்கையும் வைத்துக்கொண்டு ஒரு பெரிய க்ரைம் சாம்ராஜ்யத்தையே நடத்தி வந்திருக்கிறார் என்கிற புகார்கள் அங்கே பலமாக எழுந்துள்ளது. அது தொடர்பாகக் கிடைக்கிற தகவல்கள் எல்லாம் ஒட்டுமொத்த இந்தியாவையும் பதற வைப்பதாக இருக்கின்றன.

இந்த விவகாரம் அந்த மஞ்சுநாதர் கோவிலில் துப்புரவு வேலை செய்த பீமா என்ற முன்னாள் பணியாளர் மூலம்தான் வெளியே வந்திருக்கிறது.

கடந்த மாதம் 4 ஆம் தேதி, ராம்புரா பகுதியைச் சேர்ந்த அந்த பீமா, பெல்தங்கடி நீதிமன்றத்தில் பகீர் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். 

அப்போது, அவர் "இந்த மஞ்சுநாதர் கோவிலில் நூற்றுக்கணக்கான இளம்பெண்களின் சடலங்கள் புதைக்கப்பட்டிருக்கின்றன. நான் அங்கு 1995-ல் இருந்து 2014 வரை வேலை பார்த்தேன். அந்தக் காலகட்டத்தில் கொடூரமாக வல்லுறவு செய்து கொல்லப்பட்ட பெண்களின் உடலை, அவர்களின் மிரட்டலுக்கு பயந்து நானே புதைத்தும் எரித்தும் இருக்கிறேன். ஒரு நாள் என் உறவுக்காரப் பெண்ணின் உடலையும் அவர்கள் இப்படிப் புதைக்கச் சொன்ன போதுதான், இனியும் அங்கே இருக்கக்கூடாது என்று, என் குடும்பத்தோடு அங்கிருந்து தப்பித்துச்சென்றேன். மஞ்சுநாதர் கோவில் 

பகுதியைத் தோண்டினால் நிறைய சடலங்களைப் பார்க்கலாம்' என்ற ரீதியில் வாக்கு மூலம் கொடுத்து, அனைவரையும் பதற வைத்திருக்கிறார். 

manjnathar2

இது அங்கே  பதட்டச் சூறா வளியை ஏற்படுத்தியதால், வேறு வழியின்றி இந்த விவகாரத்தை விசாரிக்க, கர்நாடக அரசு, டி.ஜி.பி. அந்தஸ்துடைய பிரணாப் மொஹந்தி தலைமையில், சிறப்புப் புலனாய்வுக்குழுவை அமைத்திருக்கிறது. இந்தக் குழுவின் அடுத்தடுத்த விசாரணைகளின்போது, மஞ்சுநாதர் கோவிலின் முழு மர்மங்களும் வெளியே வரும் என்கிற எதிர்பார்ப்பு பரவலாக எழுந்திருக்கிறது. 

இந்த விவகாரத்தை நேரில் சென்று விசாரிக்கும் படி நமது நக்கீரன் நிருபர் தம்பி அரவிந்தை, கர்நாடகாவுக்கே அனுப்பினேன். அவர் அங்கே விசாரணையில் இறங்கி, பல தகவல்களையும் திரட்டிவந்திருக்கிறார்.

மஞ்சுநாதர் கோவிலில் வேலை பார்த்துவந்த தனது அண்ணன்மூலம், பீமா அங்கே துப்புரவுத் தொழிலாளியாக சேர்ந்ததையும், கோவில் அருகேயுள்ள நேத்ராவதி ஆற்றங்கரையில் குவியும் குப்பைகளைச் சுத்தம் செய்யும் வேலை அவருக்குத் தரப்பட்டது என்றும், அப்போதுதான், இரவு நேரங்களில் இளம்பெண்களின் சடலங்களைப் புதைக்கும் படி அவர் மிரட்டப்பட்டார் என்றும், அவர் மூலமே ஏராளமான சடலங்கள் எரிக்கப்பட்டும் புதைக்கப்பட்டும் டிஸ்போஸ் செய்யப் பட்டிருக்கின்றன என்றும், பல்வேறு  தகவலையும் களத்திலிருந்தே அவர் திரட்டியிருக்கிறார். மேலும் கொலையுண்டவர் களின் குடும்பங்களையும் அவர் சந்தித்திருக்கிறார். 

1979-லேயே அந்த ஹெக்டே குடும்ப நிர்வாகத்தில் இருந்த பள்ளி யொன்றில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்த வேதவள்ளி என்கிற ஆசிரியை, அந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக அமர முற்பட்டிருக்கிறார். 

பள்ளி நிர்வாக மோ வேறொருவரை அந்தப் பணியில் அமர்த்த முனைந்திருக்கிறது. வேத வள்ளி  நீதி மன்றத்தை நாடி யிருக்கிறார். 

அப்போது அவருக்கு ஆதரவாக தீர்ப்பு வந்திருக்கிறது. 

இதனால் கொதித்துப் போயி ருக்கிறது ஹெக்டே தரப்பு. இந்த நிலையில் ஆசிரியை வேதவள்ளியை வல்லுறவுக்கு ஆட்படுத்தி, அவர் வீட்டுக் குளியலறையிலேயே அவரை எரித்துக் கொன்றுவிட்டார்களாம்.

அதேபோல், காம்ரேட் ஒருவர் ஹெக்டே குடும்பத்தை மீறி தேர்தலில் நின்றாராம். அவரைப் பழிவாங்க, அவர் மகள் பத்ம லதாவைக் கடத்திச் சென்றுவிட்டார்களாம். 56 நாட்களுக்குப் பிறகு, சிதைக்கப்பட்ட நிலையில் அவர் உடல் கண்டெடுக்கப்பட்டதாம்.

மஞ்சுநாதர் கோவில் தரப்புக்கு சொந்தமான பள்ளியொன்றில் பி.யு.சி. படித்து வந்த மாணவி சௌஜன்யாஎன்பவர், 2012-ல் பள்ளிவிட்டு வீட்டிற்குச் செல்லும்போது  மாயமாக்கப்பட்டிருக்கிறார். 

அவரது சடலம் மறுநாள் அங்குள்ள ஆற்றங்கரைப் பகுதியில் கிடந்திருக்கிறது. அது அவர் குடும்பத்தையும் அப்பகுதி மக்களையும் பதறவைத்திருக்கிறது. அந்த மாணவி எரிக்கப்பட்ட இடத்தில் அவருக்காக சிறிய கோவிலை ஏற்படுத்தி அப்பகுதி மக்கள் வழிபட்டு வருகிறார்கள். அதோடு, அவர் மரணத்துக்கு நீதிகேட்டு ஒரு டீம் இப்போதும் இயங்கிவருகிறதாம். 

manjnathar3

இந்த மாணவி சௌஜன்யாவின் குடும்பத்தையும் நம் நிருபர் தம்பி சந்தித்திருக்கிறார். அப்போது மாணவியின் அம்மா குஸ்மவதி "எங்கள் மகள் நன்றாகப் பாடுவாள். ஆடுவாள். கலைகளின் மீது அவளுக்கு அதிக ஆர்வம் உண்டு. அவள் படித்து, டாக்டராக வேண்டும் என்று கனவு கண்டாள். அவளைப் படுபாவிகள் இப்படிப் பண்ணிவிட்டார்கள்' என்று கலங்கியிருக்கிறார். அந்த மாணவியின் தாத்தா பாபு கவுடாவும், தன் வருத்தத்தைப் பகிர்ந்திருக்கிறார்.  

இப்படிப்பட்ட துயரத்தில் ஊறிய கண்ணீர்க் கதைகளையே அங்கு கேட்கமுடிகிறது.

போலி ஆன்மீகவாதி வீரேந்திர ஹெக்டேவை  நீதியின் முன் நிறுத்தி தண்டிக்கவேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு எதிர்பார்க்கிறது. ஹெக்டேவுக்கு பத்மபூஷண் விருது வழங்கிய பா.ஜ.க. அரசில், இதெல்லாம் நடக்குமா? என்பது சந்தேகம்தான். 

நாம் எப்படிப்பட்ட தேசத்தில் வாழ்கிறோம் என்கிற அச்சத்தை ஏற்படுத்துகிறது திகில் நிறைந்த தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவில்.

-மிகுந்த கவலையோடு,

நக்கீரன்கோபால்