Advertisment

விநாயகரின் ஷோடச நாமங்கள் - வனிதா சரஸ்வதி

vinayagar

 

னிதனாக பிறந்தவர்கள் வாழ்வில் போராட்டம் என்பது தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. இதையும்விட வாழ்வே போராட்டமாகத்தான் இருக்கிறது என்று கூறுபவர்கள்தான் அதிகம். எந்த ஒரு செயலை எடுத்தாலும், எளிதாக முடித்தபடி இருக்கவேண்டும். ஆனால் எல்லா விஷயத்திலும் இடையூறு ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. இந்த இடையூறு எனும் விக்னம் ஏற்படாமலிருக்க, முதல் பெரும் தெய்வம் விக்னேஸ்வரரை வணங்கவேண்டும்.

Advertisment

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டும் என்பார்கள். அதுபோல் விநாயகப் பெருமானுக்கு பதினாறு நாமாக்கள் உள்ளது. இதனை சோடஷ நாமாக்கள் என்பர்.

ஷோடச நாமாக்கள்

ஸுமுகர், ஏகதந்தர், கபிலர், கஜ
கர்ணர், லம்போதரர், விகடர், விக்ந
ராஜா, விநாயகர், தூமகேது, கணத்ய
க்ஷர், பாலசந்தர், கஜானனர், வக்ர
துண்டர், சூர்ப்பகர்ணர், ஹேரம்பர், ஸ்கந்தபூர்வஜர்

என பதினாறு நாமாக்கள் ஷோடச நாமாக்கள் எனப்படும்.

1. ஸுமுகர்

சமூகத்தில் எல்லா, ஜனங்களும் ஸுமுகம் என்றால் நல்ல முகம், இன்முகம் என்று அர்த்தம். சுக்லாம் பரதரம் ச்லோகத்தில் ப்ரசன்ன வதனம் என வருவது இந்த ஸுமுகம்தான். விநாயகரின் ஆனைமுக அமைப்புக்கென்று ஒரு விசேஷம் உள்ளது. ஆணை முகத்துக்கு விசாலம், கம்பீரம், சாந்தம் என இன்னும் சொல்லத்தெரியாத பெருமைகள் உண்டு. இதனால் விநாயகர் ஸுமுகர் என்ற விசேஷ பெயர் கொண்டவர் ஆகிறார்.

விநாயகர், ஆனைமுகம் கொண்டது பற்றிய கதை

Advertisment

அம்பாள் தன்னுடைய அந்தப்புரத்திற்கு ஒரு காவலாள் சிருஷ்டிக்க வேண்டுமென நினைத்தாள். தன்னுடைய திவ்ய சரீரத்தை வழித்து, அதிலிருந்து மஞ்சள் பொடி, குங்குமம், வாசனைப்பொடி முதலானதை திரட்டி, பிசைந்து, ஒரு பாலகனாக ரூபம் பண்ணி, அதற்கு உயிரும் ஊட்டி, அவரை காவலுக்கு வைத்துவிட்டு ஸ்நானம் பண்ண சென்றுவிட்டாள். 

அப்போது அங்கு பரமேஸ்வரன் வந்தார். அங்கிருந்த பாலகனை பார்த்தார். கூடவே உலகத்திற்கு அமங்களம் உண்டாகும் படியாக ஒரு யானை வடக்கே தலைவைத்து படுத்துக்கொண்டிருந்தது.

பரமேஸ்வரன், அந்த பாலகனின் தலையை, சிரச்சேதம் செய்துவிட்டார். பின் அம்பாளின் கோபத்தை சாந்தப்படுத்த, வடக்கே தலைவைத்து படுத்திருந்த யானையின் தலையை வெட்டி, பாலகனின் தலையாக பொருத்திவிட்டார். 

ஆனால் இந்த நிகழ்வு ஒரு நுட்பமான விஷயத்தை உள்ளடக்கியது. அரக்கர் தலைவனான கஜமுகாசுரன், தன்னை வதம் செய்ய வேண்டுமென்றால், அவன் தன்னைப்போலவே யானை முகம் கொண்டவனாகவும், மேலும் ஸ்திரி- புருஷ சம்பந்தம் இல்லாதவனாகவும் இருக்கவேண்டும் என வரம் வாங்கி வைத்திருந்தான். எனவேதான் பார்வதியும், ஈசனும் இந்த திருவிளையாடலை நடத்தி, கஜமுகாசுரனை வதம் செய்யும்விதமாக விநாயகரை தோற்றுவித்தார்கள். இது உலக நன்மைக்காக செய்த ஒரு விசேஷமாகும். 

2. ஏகதந்தர்

இது விநாயகர் ஒற்றைக் கொம்புடையவர் என்பதாகும். ஆண் யானைக்கு இரண்டு கொம்பு இருக்கும். பெண் யானைக்கு கொம்பு கிடையாது. முதலில் இவருக்கு இரண்டு கொம்பு இருந்தது. இவரே ஒரு கொம்பை ஒடித்துக்கொண்டார். இதற்கு இரண்டு கதைகள் சொல்லப்படுகிறது.

ஒரு கதைப்படி, வியாசர் பாரதம் சொல்கிறபோது, உடனே எழுத, அதுவும் ஹிமாச்சல பாறைகளில் எழுத, எழுத்தாணிக்காக தேடி அலைய அவகாசம் இல்லாமல், உடனடியாக தன் தந்தத்தை ஒடித்து எழுத ஆரம்பித்துவிட்டாராம். இது அறிவு வளர்ச்சிக்காக, தன் அங்கத்தையே தியாகம் செய்த உத்தம குணத்தை காட்டுகிறது.

இன்னொரு கதைப்படி, அசுரனான கஜமுகாசுரனை, எந்த ஆயுதத்தாலும் வதம்செய்ய முடியாமையால், தன் தந்தத்தை ஒடித்து, அதன்மூலம் அந்த அரக்கனை வதம்செய்தார். இதன்மூலம் விநாயகரை வணங்கினால், அறிவு வளர்ச்சியும், தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பும் கிடைக்குமென்று உணரமுடிகிறது.

3. கபிலர் 

தேன்மாதிரி சிவப்பாக இருப்பவர் என்று அர்த்தம். அந்த நிறமுள்ள பசுவை கபிலை பசு என்பர். பகிரதன் தவம்செய்து, தனது பஸ்மமான, அறுபதினாயிரம் ஸகர புத்திரர்களை புண்ணிய லோகம் சேர்ப்பதற்காக, கங்கை நதியை பூமிக்கு கொண்டுவர முயற்சி செய்தபோது, கமண்டலத்திலிருந்து, நீரை கவிழ்த்துவிட்டது இந்த கபிலர்தான். எனவே தீர்வு கிடைக்காத பிரச்சினைகளில் மாட்டிக் கொண்டபோது, விநாயகரின் இந்த நாமத்தை உச்சரித்தால், பிரச்சினையை உடைத்து, கவிழ்த்து, தீர்வு தருவார். 

4. கஜகர்ணர்

யானைக்காது உள்ளவர் கஜகர்ணர் ஆவார். இதிலுள்ள விசேஷம், மற்ற சுவாமிகளுக்கெல்லாம், காதை, அதன் ஆபரணங்கள் கொண்டுதான் கண்டுபிடிக்க முடியும். விக்னேஸ்வரர் மட்டும்தான் இதற்கு விதிவிலக்கு. அவருடைய பெரிய முகத்துக்கு சமமாக, அவருடைய காதும் விரிந்து விசாலமாக உள்ளது. இதனால் நமது பிரார்த்தனைகள், அவர் நன்றாக கேட்டுக் கொள்வார் என்ற நம்பிக்கை நமக்கு ஏற்படுகிறது.

மற்ற எல்லா பிராணிகளுக்கும் காது குழிவாக கிண்ணம்போல் இருக்கிறது. 

ஆனால் யானைக்கு மட்டும் விசிறி மாதிரி உள்ளது. யானைக்கு கூர்மையான கேட்கும் ஆற்றல் உள்ளதால், அவர் நமது வேண்டுதல் களை நன்றாக கேட்டுக்கொள்வார். எனவே இந்த நாமாவை உச்சரித்தால், விநாயகர் நமது பிரார்த்தனைகளை நன்கு கேட்டு பலித மாக்குவார்.

5. லம்போதரர்

விநாயகர் அகவலில் பேழை வயிறும் என்று வரும். லம்போதரர் என்றால் தொங்குகிற வயிற்றுக்காரர் என்று அர்த்தம். 

லம்பம் என்றால் தொங்குவது. உதரம் என்றால் வயிறு. அவரின் உள்ளே அனைத்து அண்டங்களும் உள்ளது. அது அவர் பூர்ணமானவர் என்பதை உணர்த்தவே பெரிய தொந்தியும் தொப்பையுமாக இருக்கிறார். ப்ரம்மத்துக்கு ஆரம்பம், முடிவு எனக் கூறமுடியாது. உருண்டையாக இருக்கும். இதனாலும் உருண்டையான தொப்பை வயிற்றோடு இருக்கிறார். 

பொதுவாக தொந்தியும், தொப்பையுமாக இருப்பவர்களை பார்த்தால், ஒருவித சந்தோஷம், அடக்க முடியாத சிரிப்பு ஏற்பட்டு, மனம் மகிழ்வடையும். ஒருவேளை, விநாயகரும், இந்த மனுஷப்பயல்கள், நிறைய கஷ்டத்தில் மாட்டிக்கொண்டு திண்டாடுகிறார்கள். அட நம்மை பார்த்தவுடன் சந்தோஷமாக இருக்கட்டுமே என இவ்வாறு உள்ளார் போலும். 

புரந்தரதாசர், தனது பாடலில் லம்போதர லகுமிகரா என்று கூறியுள்ளார். லகுமிகரா என்றால் லக்ஷ்மிகரா, சகல சௌபாக்கியங்களை உண்டாக்குபவர் என்று அர்த்தம். எனவே இந்த நாமாவை உச்சரித்தால் மகிழ்ச்சியும், லக்ஷ்மிகரமும் கிடைக்கும்.

6. விகடர்

விகடம் என்றால் ஹாஸ்யம் தமாஷ் என்று அர்த்தமாகும். விக்னேச்வரர் நிறைய விளையாட்டுத்தனம், வேடிக்கை செய்வார். ஈசனும், பார்வதியும் ஊடல் செய்யும்போது, விநாயகர் ஏதாவது குறும்பு செய்து, அவர்களை ஒன்று சேர்த்துவிடுவார். காகமாக சென்று, அகத்தியரை ஏமாற்றி, காவேரி நதி கிடைக்கும்படி செய்துவிட்டார். விபிஷனரை ஏமாற்றி காவேரி தீர்த்தத்தில், ஸ்ரீரங்கநாதரை பிரதிஷ்டை பண்ணச் செய்தார். கோகர்ண க்ஷேத்திரத்தில் இராவணனை ஏமாற்றி சிவலிங்கம் பிரதிஷ்டை பண்ணச் செய்தார். இதெல்லாம் விநாயகர், விளையாட்டாக செய்த குறும்புகள். உலகம் முழுவதற்கும் நிறைய பிரயோஜனம் தரும் விதத்தில் அமைந்துவிட்டது. இவரை வழிபடுவதும் கொஞ்சம் விளையாட்டாகத்தான் இருக்கிறது. தலையில் குட்டிக்கொள்வதும், சிதறு தேங்காயை பொறுக்குவதும் சற்று வேடிக்கை அம்சம் உள்ளது. இந்த நாமாவை உச்சரித்தால், நமது எத்தனை பெரிய வினையையும், விளையாட்டாக விரட்டி விடுவார்..

7. விக்நராஜர்

விநாயகர் என்றால் தலைவன் இல்லாதவன் என்று அர்த்தம். எல்லாருக்கும் அவர்தான் தலைவர். பிள்ளையாருக்கு இருக்கப்பட்ட ப்ரத்யேகமான அதிகாரத்தை காட்டுவது விக்நராஜா என்கிற நாமம். ப்ரம்மா- ஸ்ருஷ்டிக்கு, விஷ்ணு- ஸ்திதிக்கு, ருத்ரன்- லயத்துக்கு, துர்க்கை- வெற்றிக்கு என இவ்விதம் ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொருவித சிறப்பு இருக்கும்போது பிள்ளையாருக்கு, உரிய சிறப்பு விக்னங்களை போக்குவது, நாம் எந்தக் காரியம் ஆரம்பித்தாலும், அதில் எந்த தடையும் இல்லாமல் செயலாற்ற, முதலில் விக்னேஸ்வரரை வேண்டிக் கொள்கிறோம். விக்னங்களை அடக்கி அழிப்பதற்காக விக்னராஜாவாக இருக்கிறார். 

ஒரு ராஜாவுக்கு முக்கியமான வேலை, சத்ருக்களை அடக்குவது, எனவே நமது காரியம் பூர்த்தியாக இவரை வணங்க வேண்டும். இந்த விக்னராஜா என்ற நாமத்தை உச்சரித்தால், நமது விக்னங்கள் விலகிவிடும். 

8. விநாயகர்

இது பிள்ளையாரின் பேர்களில் பிரசித்தமான ஒன்றாகும். ஸித்தி விநாயகர். வரஸித்தி விநாயகர், செல்வ விநாயகர், ச்வேத விநாயகர் என பெரும்பாலும் விநாயக சப்தம் சேர்த்தே பெயர் சூட்டியுள்ளது. ஔவையின் பிள்ளையார் ஸ்தோத்திரம், விநாயகர் அகவல் என்றே உள்ளது. தமக்கு மேலே நாயகன் இல்லாதவர். மற்றும் தாமே மிக மேலான நாயகராக இருப்பதாலும் விநாயகர் ஆகிறார். இந்த விநாயகர் என்கிற நாமாவை உச்சரித்தால், நம்மை எல்லாரிலும் முதன்மை ஸ்தானத்தில், எல்லாரையும் கட்டுப்படுத்தும் அந்தஸ்த்தில் நம்மை அனுக்கிரகம் செய்வார் என்ற பலன் கிடைக்கும்.

9. தூமகேது

தூமம் என்றால் கரிப்புகை எனப்படும். நல்ல வாசனையுடன் கூடிய சாம்பிராணி புகை தூபம் எனப்படும். தூமம்- புகை. கேது- கொடி என்பர். புகையை கொடியாக உடையவர் தூமகேது ஆவார்.

முன்பு தூமசுரன் என்ற அசுரன் இருந்தான். அப்போதுள்ள அரசனுக்கு மகாவிஷ்ணு அம்சமாக குழந்தை பிறந்து, இவனை வதம்  செய்யும் என்ற விவரம் தூமசுரனுக்கு தெரியவந்தது. அதனால் அந்த அரசனையும், அரசியையும். கொல்வதற்காக, தனது சேனாதிபதியை அனுப்ப, அவனுக்கு இவர்களை கொல்ல மனம் வரவில்லை. எனவே அவர்களை கட்டிலோடு தூக்கி கொண்டுபோய் வனத்தில் போட்டுவிட்டான். இதனை அறிந்த அசுரன் அவர்களை கொல்ல காட்டிற்கு சென்றான். அங்கோ அரசர், அரசிக்கு ஒரு குழந்தை பிறந்து, மடியில் இருந்தது. அவர்கள் விநாயகர் பக்தர்கள். எனவே பிள்ளையாரே, விஷ்ணுவின் அம்சமாக, அவர்களுக்கு குழந்தையாக பிறந்துவிட்டார். இந்த அசுரன் சரமாரியாக தூமஸ்திரம் என்ற விஷப்புகையை வெளியிட, விநாயகரான அந்தக் குழந்தை, அத்தனையையும் விழுங்கிவிட்டது. 

அசுரன் களைத்துப்போய் நிற்கும்போது, விநாயகர் தான் இதுவரை விழுங்கிய நச்சுப்புகையை அவன்மீது வெளியிட்டு அழித்துவிட்டது.

தூமத்தை அஸ்தரமாகக்கொண்டு வெற்றிக்கொடி நாட்டியதால், விநாயகருக்கு தூம கேது என்கிற நாமம் உண்டானது.

இந்த நாமத்தை உச்சரித்தால், நம்மை பிடித்த பீடைகள் அகன்று விடும்.

10. கணாத்யக்ஷர்

சோடஷ நாமங்களில் அடுத்துவருவது கணாத்யக்ஷர் ஆகும். அத்யக்ஷர் என்றால் மேற்பார்வை பார்ப்பவர் என்றாகும். பரமேஸ்வரன் தம்முடைய பூத கணங்களுக்கு அதிபதியாக கணபதியையும், தேவ கணங்களுக்கு அதிபதியாக சுப்ரமணியரையும் நியமித்தார். பூதங்களைக் கட்டி மேய்த்து, அடக்கி ஆளும் வேலையை மூத்த பிள்ளை ஆனந்தமாக ஆற்றிக்கொண்டுள்ளார். கணாத்யக்ஷர் எனும் நாமத் தை உச்சரித்தால், தலைமை பண்பு வளரும்.

11. பாலசந்திரர்

பாலம் என்றால் கேசத்தின் முன்பக்கத்தில் சந்திரனை உடையவர் என்று அர்த்தம்.இதற்கு ஒரு கதையுண்டு. ஒரு முறை சந்திரன் விநாயகரை பார்த்து, அழகு பற்றி பரிகசிக்க, கோபம்கொண்ட விநாயகர், சந்திரனை பார்த்தால், எல்லாரும் வீண்பழிக்கு ஆளாவார்கள் என்று சபித்துவிட்டார். உடனே ஜனங்கள் சந்திரனை கரித்துகொட்ட ஆரம்பித்துவிட்டார்கள். இதனால் சந்திரன் அவமானப்பட்டு, கடலில் போய் ஒளிந்துகொண்டார். சந்திரன் மறைந்ததால், அமாவாசை, பௌர்ணமிகளில் சமுத்திரம் பொங்கி, காற்று மழை உண்டாவதும் மூலிகைகள் வளர்வதும் தடைபட்டது. ஜனங்கள் நோய் நொடிவந்து மிக கஷ்டப்பட்டனர். தேவர்களும், ரிஷிகளும். சந்திரனிடம் சென்று, விக்னேஸ்வரரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள் என்றனர். சந்திரனுக்கும் புத்தி வந்து, மன்னிப்பு கேட்க, அவரும் மன்னித்து, தனது முன்னந்தலையில் தூக்கி வைத்துக்கொண்டார். பாலசந்திரர் எனும் நாமம் உச்சரிக்க, விநாயகரின் கருணையும், சந்திரனின் அனுக்கிரகமும் சேர்ந்தே கிடைக்கும்.

12. கஜானனர்

ஆனை முகம் படைத்தவர். ப்ரணவ அமைப்பை அடிப்படையாக, வலது பக்கமாக சுழித்த தும்பிக்கையுடன்கூடிய யானையின் முகத்தை கொண்டவர். கஜானனர். இந்த நாமத்தை உச்சரித்தால் எந்தச் செயலும் வெற்றி அடையும். 

13. வக்ர துண்டர்

வக்ரம் என்றால் வளைச்சல், கோணல் என்று அர்த்தம். துண்டம் என்றால் மூக்கு என்றாகும். விநாயகரின், அதாவது யானையின் மூக்கு தும்பிக்கைதான். விக்னேஸ்வரர் வளைந்துள்ள தும்பிக்கையை கொண்டுள்ளார் என்று அர்த்தம். வக்ர துண்டர் என்ற நாமாவை உச்சரித்தால் நம்முடைய புத்தியை வக்ரங்கள் அகற்றப்பட்டு, நேர் வழி சிந்தனைகள் அதிகமாகும்.

14. சூர்ப்பகர்ணர்

சூர்ப்பம் என்றால் முறம். கர்ணம் என்றால் காது. முறம் போன்ற காதை உடையவர் சூர்ப்பகர்ணர். முறத்தின் வேலை என்ன நல்லதை நிறுத்திவிட்டு, தான்யங்களிலுள்ள உமி, தூசி, கல்லு முதலியவற்றை தள்ளிவிடுகிறது. இதுபோல் நாம் அனேக ப்ராத்தனைகளை விநாயகர்முன் வைக்கிறோம். அவர் அது சரியான வேண்டுதல், எது சரியில்லாத வேண்டுதல் என சீர்தூக்கி பார்த்து, நல்லதை மட்டும் காதில் வாங்கிகொண்டு மற்றதை தள்ளிவிடுகிறார் என்று அர்த்தம். எனவே, இந்த சூர்ப்பகர்ணர் எனும் நாமாவை உச்சரித்தால், நமது சரியான, பயனுள்ள வேண்டுதல்கள் சீக்கிரமாக பலிக்கும்.

15. ஹேரம்பர்

ஹேரம்பரின் உருவம் விசேஷமானது. இவருக்கு ஐந்து முகங்கள். இந்த ஐந்தும் யானை முகங்கள்தான். ஹேரம்பர் உருவம் அற்புதமானது. ஐந்து யானை தலைகள் பத்து கைகள். சிம்ம வாகனம். இவர் சிம்ம வாகனத்தில் இருப்பது ரொம்ப கீர்த்தியானது. ஏனெனில் யானைக்கு, கனவில் சிங்கம் வந்தாலும், பயந்து உயிரை விட்டுவிடுமாம். இதைத்தான் சிம்ம சொப்பனம் என்பர். இந்தமாதிரி குணமுள்ள, யானை முகத்தேன் சிம்ம வாகனத்தில் இருப்பது ரொம்ப சிறப்பானதாகும். ஹேரம்பர் எனும் இந்த நாமாவை உச்சரித்தால், நம்மைவிட பலமுள்ள எதிரியும் விலகிவிடுவான். 

16. ஸ்கந்த பூர்வஜர்

இது விநாயகரின் 16, சோடச நாமாவின் கடைசிப் பெயராகும். பூர்வஜர் என்றால் முன்னால் பிறந்தவர் என்று அர்த்தம். ஸ்கந்த பூர்வஜர் என்றால், ஸ்கந்தனுக்கு, அதாவது முருகனுக்கு முன்னால் பிறந்தவர் என்று அர்த்தம்.

இந்த ஸ்கந்த பூர்வஜர் எனும் நாமாவை உச்சரித்தால், சகோதர ஒற்றுமை அதிகரிக்கும்.

2025 ஆவணி மாதம் 11-ஆம் தேதி, ஆகஸ்ட் 27 அன்று ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. அன்று விநாயகருக்கு கொழுக்கட்டை, சுண்டல் மற்றும் அருகம்புல் போன்ற அனைத்து  மலர்களையும் படைத்து, மேற்கண்ட 16 வித பெயரான சோடச நாமங்களை கூறி வழிபட்டால், நமக்கு அனைத்து நன்மைகளும் கிடைக்கும் என்பது உறுதி அல்லவா!

 

om010925
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe