"துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்.'
-திருவள்ளுவர்
எல்லை கடந்து நடந்து கொள்பவர்களின் கொடிய செயல்களை, கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்கள் தூய்மையான துறவிகளைப் போன்றவர்கள் ஆவர்.
சீடர்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்தார் துறவி ஒருவர். காட்டுக்குள் விறகு மற்றும் பழங்கள் சேகரிக்க வந்த கிராமத்து மனிதர்கள் இருவர் ஆசிரமத்தின் வெளிப்பக்கமாக நின்று துறவியின் போதனைகளை கேட்டுக்கொண்டிருந்தனர்.
அவர் சொல்லும் அத்தனை பாடங்களும் தங்கள் வாழ்க்கைக்கு உதவும் என்பது அவர்களுக்கு புரிந்தது.
துறவி பாடம் நடத்தி முடித்தபின் ஆசிரமத்திற்குள் நுழைந்த அவர்கள் துறவியைப் பணிந்து வணங்கினர். அவரிடம் சீடர்களாக சேர விருப்பம் தெரிவித்தனர். அவர்களின் குடும்பம் குறித்து விசாரித்தார் துறவி.
இருவருமே திருமணமாகி குடும்பம், குழந்தை என பொறுப்புகள் உள்ளவர்கள் என்பது தெரிந்தது. இப்படிப்பட்ட சூழலில் இருந்து ஆசிரமத்திற்கு வந்து இணைவது அவர்களின் குடும்பங்களை சிரமத்தில் தள்ளிவிடும் என்பதைப் புரிந்துகொண்டார்.
எனவே "என்னிடம் போதனை பெறுவதற்குமுன், உங்களுக்கு சிறிய சோதனை வைக்க விரும்புகிறேன்...' என்ற துறவி, இருவருக்கும் சில விதைகளைக் கொடுத்தார்.
இவற்றை விதைத்து வளர்த்து வாருங்கள், "ஆறு மாதங்களுக்குப் பின் இதில் பூத்த பூக்களை கொண்டுவந்து என்னைப் பாருங்கள்...' என அனுப்பினார்.
ஆறு மாதங்களுக்குப்பின் இருவரும் தாங்கள் வளர்த்த செடிகள் தந்த பூக்களுடன் ஆசிரமத்திற்கு வந்தனர். முதலாமவன் கையில் மூன்று பூக்கள் மட்டுமே இருந்தன. "இவ்வளவுதானா உன் செடிகளில் பூத்தன?' என ஏமாற்றத்துடன் கேட்டார் துறவி.
"ஆம் சுவாமி! நீங்கள் தந்த விதைகளை தோட்டத்து மண்ணில் ஊன்றி வைத்தேன். எறும்புகள் அவற்றில் பாதியைத் தின்றுவிட்டன. மழையும் பெய்யவில்லை. அரும்புவிடும் சமயத்தில் செடிகளைப் பூச்சி அரித்துவிட்டது. அதனால் என் செடியில் மூன்று பூக்கள் மட்டுமே பூத்தன'' என்றான்.
ஒரு கூடை நிறைய பூக்களுடன் வந்திருந்தான் அடுத்தவன். "உன் செடிகளில் மட்டும் இவ்வளவு பூக்கள் எப்படி பூத்தன?' என்றார் துறவி.
"ஐயனே! நீங்கள் தந்த விதைகளை நான் நெஞ்சார நேசித்தேன். அன்புடன் விதைத்தேன். வாஞ்சையோடு தண்ணீர் விட்டேன். செடிகள் வளர வளர வாழ்த்தி மகிழ்ந்தேன். அரும்புவிட்டதும் செடிகளுக்கு நன்றி சொன்னேன்.
"முதல் பூ பூத்ததும் அதன் மணத்தில் மயங்கி நின்றேன். மகிழ்ச்சியடைந்த செடி ஏராளமாக பூத்து சிரித்தது. அதனால்தான் இவ்வளவு பூக்களை எடுத்து வரமுடிந்தது' என்றான்.
"உயிருள்ள, உயிரற்ற அனைத்தையும் நேசிக்கும் நெஞ்ச முடையவர்கள் எங்கும் எதிலும் இன்பமே காண்பர். கிடைத்ததை மனப்பூர்வமாக வாழ்த்த வேண்டும். நம்பிக்கை யோடு வாழ்க்கையை நேசிக்கவேண்டும்.
இதுவே உங்களுக்கு நான் தரும் பாடம். இந்த பாடத்தை கற்றுக்கொள்ள, ஆசிரமத்திற்கு வரவேண்டும் என்பதில்லை. உங்கள் குடும்பத்தை மனப்பூர்வமாக நேசித்து அவர்களுக்காக உழைத்தபடி இதைச் செய்யுங்கள்' என சொல்லி அனுப்பினார் துறவி.
சில நூற்றாண்டுகளுக்குமுன் சோழ நாட்டில் காவிரிக் கரையோரம் பத்ரி என்ற அடியவர் வாழ்ந்துவந்தார். அவர் சிரபுரத்திலுள்ள ஈசனை நாள் முழுவதும் போற்றிப் பணிவதும், பாக்கள் இயற்றுவதும், ஆன்மிக பக்தர்களுக்கு ஈசனைப்பற்றிய உயர்வான கருத்துக்களை மனமுவந்து சொல்வதும் அவருடைய வழக்கம். அதனால் அந்த அடியவரைப் போற்றி வணங்குவதோடு, அவரது கொள்கைகளையும் கடைப்பிடித்து வாழ்ந்தனர் பக்தர்கள் பலர்.
இன்பம் என்றால் துன்பமும் உண்டு. நன்மை என்றால் தீமையும் உண்டு. இது உலக இயல்புதான். பத்ரியின் (அடியவரின்) பெருமை காரணமாக அவரை நாடிச்செல்லும் மக்கள்மீதும் பொறாமை கொண்டனர் ஒருசிலர். அது மட்டுமல்ல. அடியவருக்கு சிறிதளவுகூட கோபம் வராது என்பதையும் அறிந்தனர்.
எப்படியாவது அவரை கோபப்படுத்தி அவமானப்படுத்த திட்டம் தீட்டினர்.
ஒருநாள் மாலை காவிரி ஆற்றில் குளித்து இறைவனை வணங்கி கரை ஏறி வந்துகொண்டிருந்தார் அடியவர் பத்ரி. அருகில் வந்த அவர்மீது காரி உமிழ்ந்தனர் பொறாமை பிடித்த நால்வர். எவ்வித சலனமு மின்றி மீண்டும் காவிரியில் குளித்துவிட்டு திரும்பிவந்தார் அடியவர் பத்ரி.
மீண்டும் அவர்மீது எச்சிலைத் துப்பினர். மீண்டும் குளித்துவந்தார். இவ்வாறு அவருக்கு கோபம் வரும்படியாக ஒவ்வொருவரும் 27 முறை எச்சிலைத் துப்பினர். பொறுமையின் சின்னமாக மீண்டும் மீண்டும் குளித்து கரை ஏறிவந்தார் அடியவர் பத்ரி.
சலித்துப் போய் நாங்கள் நால்வரும் உம்மீது மொத்தம் 108 முறை எச்சிலைத் துப்பியும் சிறிதும் கோபம் கொள்ளாது காவிரியில் குளித்து வந்தீர்களே... உங்களால் எப்படி இது முடிந்தது? என கேட்டனர்.
"எனக்கு நீங்கள் மிக உயர்ந்த நன்மை
அல்லவா செய்தீர்கள்? நான் தினமும்
இருமுறை மட்டுமே காவிரியில் குளித்து வருவேன். உங்களின் பேருதவியால் இன்று 108 முறை காவிரியில் குளித்து 108 முறை வழிபடச் செய்த மகான்கள் அல்லவா நீங்கள்...' என சிரித்தபடி கூறினார் அடியவர் பத்ரி. பொறாமை கொண்ட நால்வரும் மனம் மாறி அவர் காலில் பணிந்து, தங்கள் தவறை மன்னிக்கக் கோரினர். தவிர அன்றுமுதல் அவரது சீடர்களாகவும் மாறினர்.
கோபம், பொறாமை, புறம்கூறாமை, கர்வம் கொள்ளாமை, பொய் மற்றும் களவு செய்யாமை ஆகியவற்றை கடைபிடித்து நல்லவற்றை நாளும் எண்ணிச் செயல்பட்டு, இறைவனையே எண்ணி அன்பைப் பகிர்ந்து அரவணைத்து யாவரையும் சமமாக மதித்து தெய்வத் துணையை நாடினால் இன்பம் தானே வந்துசேரும். துன்பம் தூர விலகிப்போகும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் விளங்குகின்றதொரு உன்னதமான திருத்தலம்தான் சிரபுரம் என்கிற சீர்காழி வட்டத்தில் செம்மங்குடி கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீநாகநாத சுவாமி திருக்கோவில்.
இறைவன்: ஸ்ரீ நாகநாத சுவாமி, ஸ்ரீ ருத்ர கோடீஸ்வரர், ஸ்ரீ கேதீஸ்வரர்.
இறைவி: அருள்மிகு கற்பூரவல்லி
அம்பாள், அருள்மிகு திரிபுரசுந்தரி.
புராணப் பெயர்: செம்பாம்பினன்குடி, செம்பங்குடி.
பதிகம்: அப்பர் (6-71-3).
தலவிருட்சம்: வில்வமரம், புன்னை மரம்.
தீர்த்தம்: கோமுக்தி தீர்த்தம், நாக தீர்த்தம்.
ஊர்: செம்மங்குடி.
வட்டம்: சீர்காழி.
மாவட்டம்: மயிலாடுதுறை.
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட இவ்வாலயம் சுமார் 1,100 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. தேவாரப் பாடல்பெற்ற சிவஸ்தலங்களில் அப்பரின் 6-ஆம் திருமுறையில் 71-ஆவது பதிகத்தில் 3-ஆவது பாடலில் வைப்புத்தலமாகப் போற்றப் பட்டுள்ள திருத்தலம்.
"நற்கொடிமேல் விடையுயர்த்த நம்பன் செம்பங்
குடி நல்லக்குடி நளிநாட் டியத்தான் குடி
கற்குடி தென்களக்குடி செங்காட்டங்குடி
கருந்திட்டைக்குடி கடையக்குடி காணுங்கால்
விற்குடி வேள்விக்குடி நல் வேட்டக்குடி
வேதிகுடி மாணிகுடி விடைவாய்க்குடி
புற்குடி மாகுடி தேவன்குடி நீலக்குடி
புதுக்குடியும் போற்ற இடர்போகுமன்றே...''
நல்ல இடபக்கொடியை மேலே உயரத் தூக்கியவனும், நம்புதற்குரியவனுமாகிய சிவபெருமானுடைய செம்பங்குடி, நல்லக்குடி, பெருமைமிக்க நாட்டியத்தான் குடி, கற்குடி, இனிய களக்குடி, செங்காட் டங்குடி, கருந்திட்டைக்குடி, கடையக்குடி ஆகியவற்றோடு ஆராயுங்கால் குடியில் முடியும் ஊர்களாகிய விற்குடி, வேள்விக்குடி, நன்மைமிகு வேட்டக்குடி, வேதிகுடி, மாணிகுடி, விடைவாய்க்குடி, புற்குடி, மாகுடி, தேவன்குடி, நீலக்குடி, புதுக்குடி என்பனவற்றையும் புகழ்ந்து கூறத் துன்பம் நீங்கும் என்பது இதன் பொருள்.
கேதுபுரம் என்ற சிறப்புப் பெயருடன் விளங்குகின்ற செம்மங்குடி சிவபெருமானை விஷ்ணு, பேரரசர் நளன் மற்றும் கேது வழிபட்ட பெருமையுடன் மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் முப்பெரும் சிறப்புக்களுடன் இன்னும் பல்வேறு சிறப்புக்களைப் பெற்றதொரு திருத்தலம்தான் செம்மங்குடி நாகநாதர் ஆலயம்.
தல வரலாறு
பாற்கடலைக் கடைந்தபோது அமிர்தம் வெளிப்பட்டது. நடை, திரை, பிணி, மூப்பு, சாக்காடு முதலியவற்றை நீக்கும் மருந்தாக அழியாமையின் சொர்க்க அமிர்தமாய் விளங்கியது. அந்த அமிர்தத்தை தேவர்களும் அசுரர்களும் உண்ண போட்டியிட்டனர்.
அசுரர் அமிர்தத்தை உண்டால் அவர்களுக்கு அழிவு இருக்காது. ஆகையால் அமிர்தத்தை தேவர்களுக்கு மட்டுமே கொடுக்க மகாவிஷ்ணு முடிவெடுத்தார்.
தேவர்களுக்கும் அசுரர்களுக்குமிடையே கடுமையான போர் நடந்தது. அசுரர்களிடமிருந்து அதைப் பாதுகாக்க, கருடன் அந்தப் பானையை எடுத்துக்கொண்டு போர்க்களத்திலிருந்து பறந்து சென்றார். தேவர்கள் விஷ்ணுவிடம் முறையிட்டனர். அவர் மோகினி வடிவத்தை எடுத்து ஒரு அழகான மற்றும் மயக்கும் பெண்ணாக அசுரர்களை திசைதிருப்பினார். பின்னர் அவள் அமிர்தத்தை எடுத்து தேவர்களுக்கு விநியோகித்தாள். அவர்கள் அதைக் குடித்தார்கள். ராகு- கேது என்ற அசுரன் ஒரு தேவராக மாறு வேடமிட்டு சிறிது அமிர்தத்தைக் குடித்தான். அவர்களின் ஒளிரும் தன்மையால் சூரியனும் சந்திரனும் இந்த மாறுவேடத்தைக் கவனித்தனர்.
அவர்கள் மோகினியிடம் தகவல் தெரிவித்த னர். அமுதம் அசுரனின் தொண்டையைக் கடப்பதற்குமுன் அவள் தனது சக்கரமான சுதர்சன சக்கரத்தால் அவனது தலையை வெட்டினாள். அடித்த வேகத்தில் அசுரனின் கழுத்து துண்டிக்கப்பட்டு தலை சிரபுரம் என்ற தற்போதைய சீர்காழியிலும், உடல் செம்பங்குடியிலும் விழுந்தது. தேவாமிர்தம் உண்டதால் அந்த அசுரனது இரண்டு உடல் பாகங்களும் இரண்டு பாம்புகளாக மாறியது. இந்த அரவங்கள் சிவபெருமானைத் தியானித்து காற்றை மட்டும் உணவாகக்கொண்டு கடும் தவம்புரிய இறைவன் பார்வதி சமேதராய் இடப வாகனத்தில் எழுந்தருளினார்.
அப்போது அந்த அரவங்கள் சிவபெருமானிடம் தங்களைக் காட்டிக்கொடுத்த சூரிய, சந்திரனை விழுங்கும் சக்தியையும், அகில உலகையும் ஆட்டிப்படைக்கும் வலிமையையும் தங்களுக்கும் அருளுமாறு வேண்டின. சிவபெருமான் சூரியன், சந்திரன் இருவரும் உலக உயிர்களுக்கு இன்றியமையாதவர்கள் என்று கூறி, அவர்களை அமாவாசை, பௌர்ணமி கிரக நாட்களில் மட்டும் ஆதிக்கம் செலுத்த வரம் அளித்தார். மேலும் இறைவன் அருளால் மனிதத் தலையும் பாம்பு உடலும்கொண்டு ராகுவும், பாம்புத்தலையும் மனித உடலும்கொண்டு கேதுவும் தோன்றினார்கள். அத்துடன் அதுவரை இருந்த ஏழு கிரகங்களுடன் அவர்களையும் சேர்த்து ஒன்பது கிரகங்களாக (நவகிரகம்) விளங்கும்படி வரம் அளித்தார்.
அமிர்தம் உண்ட அசுரன் தலை மகாவிஷ்ணுவால் வெட்டப்பட்டு விழுந்த இடம் சீர்காழி. எனவே அத்தலம் சிரபுரம் என்றும், ஆதி ராகு தலம் என்றும், சீர்காழி நகரில் சுவாமி நாகேஸ்வரமுடையார், அம்மன் பொன் நாகவல்லி என்றும் ஆதி ராகு ஸ்தலமாக உள்ளது.
அமிர்தம் உண்ட அசுரன் உடல் மகாவிஷ்ணுவால் வெட்டப்பட்டு செம்பாம்பினன்குடி என்று ஆதிகாலத்தில் அழைக்கப்பட்டு நாளடைவில் தேவாரப் பாடல்பெற்ற காலத்தில் செம்பங்குடி என்றும், இந்நாளில் செம்மங்குடி என்றழைக்கப்படுகிறது. ஆதி கேது ஸ்தலமாக போற்றப்படும் இத்தலத்தில் சுவாமி ஸ்ரீ நாகநாதசுவாமி, ஸ்ரீ கேதீஸ்வரர் என்றும், அம்மன் அருள்மிகு கற்பூரவல்லி என்றும் உள்ளது. ஆதிராகு ஸ்தலம், ஆதிகேது ஸ்தலம் இவ்விரண்டும் தேவார வைப்புத்தலமாக போற்றப்பட்டு விளங்குகிறது.
சிறப்பம்சங்கள்
ப் இறைவனின் திருநாமம் ஸ்ரீநாகநாத சுவாமி. ருத்ரகோடீஸ்வரர், கேதீஸ்வரர் என்ற சிறப்புப் பெயர்களும் உண்டு. இறைவியின் திருநாமம் அருள்மிகு கற்பூரவல்லி அம்மன். திரிபுரசுந்தரி என்ற சிறப்புப் பெயரும் உண்டு.
ப் இத்தலத்தின் விசேஷமூர்த்தி கேதுபகவான் தனிச் சந்நிதி கொண்டு அருள்கிறார்.
ப் காவிரி வடகரை ஸ்தலங்களில் ஒன்றான வைப்புத் தலமாகவும், சீர்காழி வட்டத்திலுள்ள ஆதி நவகிரக ஸ்தலங்களில் ஒன்றாகவும் திகழ்கின்ற தலம்.
சீர்காழி வட்டத்திலுள்ள ஆதி நவகிரக ஸ்தலங்கள்
1. சூரியன்- திருக்கோலக்கா
2. சந்திரன்- தில்லைவிடங்கன்
3. செவ்வாய்- வைத்தீஸ்வரன் கோவில்
4. ராகு- நாகேஸ்வரமுடையார் கோவில், சீர்காழி நகர்.
5. குரு- மகேந்திரப்பள்ளி
6. சனி- நிம்மேலி
7. புதன்- திருவெண்காடு
8. கேது- செம்மங்குடி
9. சுக்கிரன்- சட்டைநாதர் (சீர்காழி).
இவற்றில் கேது ஸ்தலமாக செம்மங்குடி போற்றப்படுகிறது.
ப் நவகிரகங்களில் இரட்டையர்கள் என்று சொல்லக்கூடிய ராகுவிற்கும் கேதுவுக்கும் தனிப்பட்ட வீடும் கிடையாது. சுற்றுப் பாதையும் கிடையாது. ஆனாலும் மற்ற ஏழு கிரகங்களைவிட ராகுவும் கேதுவும் சக்திவாய்ந்தவர்களாக உள்ளார்கள். அதனால்தான் கனவுகளைப்பற்றி சொல்பவ ராக ராகு கருதப்படுகிறார். மனிதனின் ஆழ்மனம்தான் ராகு என்றும், ஆறாவது அறிவுதான் கேது என்றும் கூறுவர். சாதாரண மனிதர்களின் அறிவுக்கு எட்டாத விஷயங்களை கூறுவதே ஆறாவது அறிவு எனப்படும் ஞானம்.
இந்த ஞானத்தை வழங்குபவராக இத்தலத்தில் தனிச் சந்நிதியுடன் கேது அருள்புரிகிறார்.
ப் அஸ்வினி, மகம், மூலம் இம்மூன்றும் கேதுவின் நட்சத்திரங்கள் என்றும், 12 ராசிகளில் 6 ஆண் ராசி, 6 பெண் ராசிகளும் உள்ளன என்றும் ஜோதிடம் சொல்கிறது. அந்தவகையில் மேஷம், சிம்மம், தனுசு ராசிகளை ஆண் ராசியாகவும் கேதுவின் நட்சத்திர சாரமும் பெற்றுள்ளதால், உதாரணமாக இரண்டு அல்லது மூன்று பெண் பிள்ளைகளைப் பெற்று ஆண் வாரிசு இல்லாதவர்களில் இந்த மூன்று நட்சத்திரத்தில் ஏதேனும் ஒன்றில் பெண் பிறந்திருந்தால் பெற்றெடுத்த தாய் பின்னாளில் குடும்பத்திற்கு ஆண் வாரிசு இல்லாத குறையை தீர்த்து வைக்கிறாள் என்று கேதுவின் நட்சத்திரத்தில் பிறந்த பெண்மணியை புகழாரம் சூட்டுவர்.
அத்தகைய புகழுக்கும், நிர்வாகத் திறமைக்கும் காரணகர்த்தாவாக கேது விளங்குகிறார். கேது வழிபட்ட செம்மங்குடி தலத்திற்கு ஜென்ம நட்சத்திர நாளிலோ அல்லது கேதுவின் நட்சத்திர நாளிலோ வருகைதந்து எமகண்ட நேரத்தில் கேதுவிற்கு அபிஷேக, அர்ச்சனை செய்வதன்மூலம் மேன்மைமிகு வாழ்வமையும் என்கிறார் செயல் அலுவலர். மேலும் அவர் கூறுகையில்
ஞாயிற்றுக்கிழமை: பகல் 12.00 மணிமுதல் 1.30 மணி வரை;
திங்கட்கிழமை: காலை 10.30 மணிமுதல் 12.00 மணிவரை;
செவ்வாய்க்கிழமை: காலை 9.00 மணிமுதல் 10.30 மணிவரை;
புதன்கிழமை: காலை 7.30 மணிமுதல் 9.00 மணிவரை;
வியாழக்கிழமை: காலை 6.00 மணிமுதல் 7.30 மணிவரை;
வெள்ளிக்கிழமை: மாலை 3.00 மணிமுதல் 4.30 மணிவரை;
சனிக்கிழமை: பகல் 1.30 மணிமுதல் 3.00 மணிவரை.
மேற்கண்ட நாட் களில் குறிப்பிட்ட நேரம், கேதுவின் ஆதிக்க காலமான எமகண்ட நேரத்தில் ஆதியோக கேதுவாக வீற்றிருக்கும் செம்மங்குடி தலத்தில் வழிபாடுகளை மேற் கொண்டு வளம் பெறுங்கள் என்கிறார்.
ப் மூல நட்சத்திரம் என்றால் அர்த்தம் தெரியாதவர்கள் கூட பயப்படுகிறார்கள். "ஆண்மூலம் அரசாளும் பெண்மூலம் நிர்மூலம்' என்று அர்த்தத்தை அநர்த்தமாக எடுத்துக்கொள்கிறார்கள். உண்மையிலேயே கேதுவின் ஆதிக்கத்திலுள்ள மூலம் சாதனை படைக்கின்ற நட்சத்திரமாகத் திகழ்கிறது. சாஸ்திரங்களுக்கு முதன்மையானவராக இருக்கின்ற குருபகவானின் வீடாகிய தனுசு ராசியில் முதல் நட்சத்திரமாக இருப்பதுதான் மூல நட்சத்திரம். ராசி மண்டலத்தில் ஜாதகரீதியாக 9-ஆவது வீடான தனுசு பாக்கிய ஸ்தானம் என்கிற யோகங்களை தரக்கூடியதாகவும், பூர்வீக சொத்து தந்தைவழி மூதாதையர் என்னும் பிதுர் ஸ்தானத்தையும் குறிக்கிறது.
பரம்பரையின் தொடர்ச்சியையும் சொல்லக்கூடிய ஆணிவேர் எனும் மூலமாகத்தான் மூல நட்சத்திரம் உள்ளது. மூல நட்சத்திரத்தில் செய்கின்ற காரியங்கள் பல மடங்காக விருத்தியடையும் தன்மையுடையது. உதாரணமாக மூல நட்சத்திரத்தில் ஒரு தங்கக்காசு வாங்கினால் மூன்று தங்கக்காசு வாங்கும் யோகம் வரும் என்று அகத்திய நாடி கூறுகிறது.
அனுமன், இராமானுஜர், சரஸ்வதிதேவி ஆகியோர் மூலநட்சத்திரத்தில் பிறந்த வர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மூல நட்சத்திரத்தில் தொடங்கும் வியாபாரம், தொழில் முயற்சிகள் நன்கு வளர்ச்சிபெற்று சிறப்படையும். புதிய மருந்துகள், விஞ்ஞானி கண்டுபிடிப்புகள், ஆய்வறிக்கைகள் போன்றவை மூல நட்சத்திர தினத்தில் தொடங்குவது வெற்றியைக் கொடுக்கும். மூல நட்சத்திரத்தன்று மருந்துகளின் வீரிய சக்தி அதிகரிப்பதால் சில மருந்துகள் மூல நட்சத்திரத்தில் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன.
சதுரகிரி மலை, திருவண்ணாமலை, ஜவ்வாது மலை, சுருளி மலை, திருக்குற்றாலமலை போன்ற மலை களில் மட்டுமே வளரக்கூடிய மூலிகையான குத்துச்செடி என்றழைக்கப்படும் அற்புதமான மூலிகை மூல நட்சத்திரம் முடிந்ததும் பூமிக்கடியில் சென்று மறைந்துவிடும். நிலம் புரண்டி என்ற தெய்வீக மூலிகை செடியைத் தொட்டாலே சிவபெருமான் நேரில் தோன்றி அதைத் தொட்டவர் கண்முன்னே நிற்க வேண்டும் என்பது இறை நியதி.
அத்தகைய நிலம் புரண்டி மூலிகைச் செடிக்கு மூலமாக இருப்பதாலும் மூல நட்சத்திரத்தன்று மட்டுமே தோன்றுவதாலும் இந்த குத்துச்செடி மூலிகையை மூல நிலம் புரண்டி என்றும் கூறுவதுண்டு.
அத்தகைய செடியின் காற்று மனிதர்கள்மீது படும்போது குடும்பச் சண்டைகள், சொத்து தகராறுகள் போன்றவை நீங்கும். புற்றுநோய், ஆஸ்துமா, பக்கவாதம் போன்ற கடுமையான நோய்களின் பாதிப்பு படிப்படியாக விலகும் என்பதால் மூல நட்சத்திரநாளில் வழிபாடுகள் மேற்கொண்டால் கைமேல் பலன்.
ராகுபோல் கொடுப்பாரில்லை. கேதுபோல் கெடுப்பாரில்லை என்பது ஜோதிடப் பழமொழி. திருமணத்தடையா? கேது தசாபுக்தியால் கணவன்- மனைவி கருத்து வேறுபாடா? 5-ல் கேது நின்றதால் புத்திர பாக்கியம் இல்லையா? நாட்பட்ட வியாதியால் அவதியா? தவறு செய்யாவிட்டாலும் மற்றவர்களால் வழக்குகளைச் சந்தித்து நீதிமன்றம் செல்லவேண்டிய நிர்பந்தமா? இதுபோன்ற பல பிரச்சினைகளைச் சந்திப்பதன்மூலம் மன உளைச்சலா? இதுபோன்ற கெடுதல்களை கெடுக்கக்கூடியவர்தான் கேது. கெடுதல்களை கேதுபோல் கெடுப்பதற்கு யாருமில்லை என்பதுதான் அர்த்தம். அத்தகைய கெடுதல்களைக் கெடுக்கின்ற கேதுவின் ஆதிக்க நாளான மூல நட்சத்திரத்தன்று;
அதாவது தாங்கள் எந்த நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும் பரவாயில்லை, குறிப்பாக மூல நட்சத்திரத்தன்று கேதுவின் கதிர்வீச்சுகள் அதிகம் விழக்குடிய செம்மங்குடி ஸ்ரீ நாகநாத சுவாமி திருத்தலத்திற்கு மூல நட்சத்திர நாளில் வருகை தாருங்கள்.
மூல நட்சத்திரம் பௌர்ணமி தினமும் சேர்ந்துவந்த நாளில் நாகம் ஒன்று தல விருட்சத்தின் அருகில் சட்டையை உரித்துப் போட்டு ஆலயத்தை வலம்வந்தது செவிவழி செய்தி. இந்த ஆண்டு 10-7-2025 அன்றைய தினம் வருகிறது. தரிசித்துப் பலன்பெறலாம். வாழ்வில் வளம் பெறுவது உறுதி என்கிறார் ஆலய அர்ச்சகர். இன்னல்கள் நீக்கி இகபரசுகங்களுடன் செழுமைமிகு வாழ்வைத் தந்தருளும் செம்மங்குடி செஞ்சடையனாம் ஸ்ரீ நாகநாத சுவாமி உடனுறை அருள்மிகு கற்பூரவல்- அம்மன் மற்றும் கேது பகவானை கேதுவின் ஆதிக்க நாளான மூல நட்சத்திரத்தன்று தொழுவோம். தொடர் வெற்றிகளுடன் சாதனை படைப்போம் என்று பெருமிதத்துடன் கூறுகிறார் முத்துமணி சிவாச்சார்யார் (தலைமை அர்ச்சகர்).
திருக்கோவில் அமைப்பு
வயல்வெளிகள் நிறைந்த நீர்வளம் நிலவளமிக்க ரம்மியமான சூழலில் நாற்புறமும் அழகிய மதில்களால் சூழப்பெற்று கிழக்கு நோக்கிய முகப்பு வாயிலுக்கு வெளிப்புறம் கோமுக்தி தீர்த்தம், நாகதீர்த்தம் என்று சொல்லக்கூடிய தீர்த்தக்குளம் உள்ளது. முகப்பு வாயிலைக் கடந்தவுடன் நந்தி, பலிபீடம், மகாமண்டபம், அர்த்த மண்டபம் கடந்து சென்றால் கருவறையில் சிறிய திருமேனியுடன், பல ஜென்ம நாக தோஷங்களை நொடிப்பொழுதில் நீக்தி பக்தர்களுக்கு சுகத்தை அருளும். மூலவர் நாகநாத சுவாமி கிழக்கு நோக்கி அருள்கிறார்.
கோஷ்ட தெய்வங்கள் முறைப்படி தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை மற்றும் சண்டிகேஸ்வரர் உள்ளனர்.
நிருதிமூலையில் க்ஷேத்திர விநாயகர், மகாவிஷ்ணு, கடன் நிவர்த்தி லிங்கம், முருகன், வள்ளி- தெய்வானை, கஜலட்சுமி அடுத்தடுத்து உள்ளன. அம்மன் கற்பூரவல்- சந்நிதி கிழக்கு நோக்கி தனிச் சந்நிதியுடன் நின்றநிலையில் அருள்கிறாள். வாயு மூலையில் ஆதி கேதுவின் சந்நிதி தனியாக உள்ளது. மோட்சகாரகன் ஆதி கேது சிறந்த அறிவு, பேராற்றல் தரவல்லவராக அருள்கிறார்.
சூரியன், சந்திரன், பைரவர் திருமேனிகள் உள்ளன. தலவிருட்சம் புன்னை மரம், வில்வமரம் உள்ளது.
தினசரி இரண்டு கால பூஜைகள் நடைபெறுகிறது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்குகிறது.
நடை திறப்பு: காலை 7.00 மணிமுதல் 12.00 மணிவரையிலும்; மாலை 4.00 மணிமுதல் 6.30 மணிவரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.
ஆலயத் தொடர்புக்கு: செயல் அலுவலர், ஸ்ரீ நாகநாத சுவாமி திருக்கோவில், கேது கோவில், செம்மங்குடி அஞ்சல் செம்மங்குடி, சீர்காழி வட்டம். மயிலாடுதுறை மாவட்டம்- 609 104.
பூஜை விவரங்களுக்கு: முத்துமணி சிவாச்சார்யார்: செல்: 94453 53941, 94892 53941; மெய்க்காவலர் ராஜேந்திரன்: செல்: 91598 35172.
அமைவிடம்: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி பழைய பேருந்து நிலையத்திலிருந்து திருமுல்லைவாசல் செல்லும் சாலையில் மூன்று கிலோமீட்டர் தொலைவில் செம்மங் குடி உள்ளது. நகரப் பேருந்தில் செல்பவர்கள் கேது கோவில் நிறுத்தம் என்று கேட்டு இறங்கவேண்டும். சீர்காழியிலிருந்து ஆட்டோ, கார் மூலமும் செல்லலாம். பேருந்துகள் குறைவாக உள்ளது.
படங்கள்: போட்டோ கருணா