ஐம்பது வருடங்களுக்கு முன்பு, டேராடூனின் வெளிப்பகுதியில் திருமணம் செய்து கொண்ட ஒரு ஜோடி சந்தோஷமாக வாழ்ந்தது.
ஒரு ஆங்கில ராணுவ அதிகாரியும் அவருடைய அழகான பாரசீக மனைவியும்...
அவர்கள் இருவரும் தோட்ட வேலையை மிகவும் ஆர்வத்துடன் செய்பவர்கள். அவர்களின் அழகான பங்களா, காகித மலர்களாலும் குல்மோகர் மலர்களாலும் சூழப்பட்டிருக்கும்.
தோட்டத்தில் ரோஜா மலரின் வாசனை, மல்லிகை மலரின் இனிய நறுமணத்திற்கு சவால் விட்டுக்கொண்டிருக்கும்.
அவர்கள் இருவரும் பல வருடங்களாக சேர்ந்து வாழ்ந்து கொண்டிருக்க, மனைவிக்கு திடீரென உடல் நல பாதிப்பு உண்டானது.
அவளுக்காக செய்வதற்கு எதுவுமில்லை.
மரணப் படுக்கையில் கிடக்கும்போது, அவள் தன் பணியாட்களிடம் தான் மிகவும் விரும்பக்கூடிய தோட்டத்திற்கு ஒரு வெண்புறா வடிவத்தில் தான் திரும்பி வரப்போவதாகக் கூறினாள். அதன் மூலம் தன் கணவருக்கு அருகில் இருக்க முடியும் எனவும், மிகவும் நெருக்கமாக தான் உணரக்கூடிய அந்த இடத்தில்தான் இருக்கலாம் எனவும் அவள் கூறினாள்.
அந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. தன் மனைவி இறந்து பல வருடங்கள் கடந்தோடிய பிறகு, தன் வாழ்க்கை தனிமை நிறைந்ததாக இருப்பதாக நினைத்தார் ராணுவ அதிகாரி. தன்னைவிட சில வருடங்கள் வயதில் இளையவளாக இருந்த ஒரு ஈர்ப்பு சக்தி கொண்ட ஆங்கிலேய விதவைப் பெண்ணை அவர் சந்திக்க நேர்ந்ததும், அவளைத் திருமணம் செய்து, தன் அழகான வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்தார். தன் புதிய மனைவியுடன் அவர் வீட்டின் கூடத்தில் நடக்கும்போதும், வாசற்படியில் நடக்கும்போதும் ஒரு வெண்புறா சிறகடித்துப் பறந்து தோட்டத்திற்குள் வந்து ஒரு ரோஜா செடியில் அமர்ந்திருக்கும்.
அங்கேயே நீண்ட நேரம் அமர்ந்து ஓசை உண்டாக்கும்...
மிகவும் மெதுவாக கவலை ததும்ப முணுமுணுக்கும்.
ஒவ்வொரு நாளும் அது தோட்டத்திற்குள் வந்து ரோஜா செடியில் அமர்ந்து தொடர்ந்து சோகம் நிறைந்த ஓசையை உண்டாக்கிக் கொண்டிருக்கும்.
பணியாட்கள் அதிர்ச்சியடைந்து விட்டார் கள்... பயந்துகூட விட்டார்கள்.
தங்களின் பழைய எஜமானி இறக்கும்போது கூறிய வார்த்தைகளை அவர்கள் நினைத்துப் பார்த்தார்கள்.
அவளுடைய ஆவி அந்த வெண்புறாவிற்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்ற முடிவிற்கு அவர்கள் வந்தார்கள்.
ராணுவ அதிகாரியின் புதிய மனைவி இந்த கதையைக் கேட்டதும், இயல்பாகவே அதிர்ந்து விட்டாள். இந்த கதைக்கு அவளின் கணவர் எந்தவித முக்கியத்துவமும் தரவில்லை. ஆனால், தன் மனைவி எந்த அளவிற்கு பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படுகிறாள் என்பதைப் பார்த்ததும், ஏதாவது செய்ய வேண்டுமென தீர்மானித்தார்.
ஒருநாள் புறா தோன்றியபோது, அவர் தன் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வெளியேவந்தார். வாசலின் படிகளில் மெதுவாக இறங்கினார். ரோஜா செடியின் மீது புறாவைப் பார்த்ததும், அவர் தன் துப்பாக்கியை எடுத்து உயர்த்தி, குறி பார்த்து, சுட்டார்.
ஒரு பெண்ணின் உரத்த அழுகைச் சத்தம் கேட்டது. தொடர்ந்து அந்த புறா அங்கிருந்து ஆடியவாறு பறந்தது. அதன் வெண்ணிற மார்புப் பகுதி ரத்தம் கசிந்து காணப்பட்டது. அது எங்கு விழுந்தது என்று யாருக்குமே தெரியாது.
அதே இரவில் ராணுவ அதிகாரி தன் தூக்கத்திலேயே இறந்துவிட்டார். அது இதயத் துடிப்பு நின்றுவிட்டதால் நேர்ந்தது என்று டாக்டர் கூறினார். அது உண்மையும் கூட... ஆனால், அவர் எப்போதும் நல்ல உடல் நிலையுடன் இருந்ததாக பணியாட்கள் கூறினார்கள்.
வெண்புறா கொல்லப்பட்ட செயலுக்கும் அவருடைய மரணத்திற்கும் இடையே சம்பந்தம் இருக்கிறது என்று அவர்கள் உறுதியான குரலில் கூறினார்கள்.
ராணுவ அதிகாரியின் விதவை மனைவி டேராடூனுக்குக் கிளம்பிச் சென்று விட்டாள். அந்த அழகான பங்களா சேதமடைய ஆரம்பித்தது.
தோட்டம் ஒரு காடாக ஆனது.
சிதிலமடைந்த அறைகளுக்குள் நரிகள் கடந்து சென்றன. ராணுவ அதிகாரி தன் எஸ்டேட்டின் மண்ணுக்குள் புதைக்கப்பட்டார்.
அவரின் கல்லறையை இப்போதும் பார்க்கலாம். ஆனால், அதிலிருந்த எழுத்துக்கள் எப்போதோ அழிந்துவிட்டன.
அந்த வழியாக சில மனிதர்கள் செல்வார்கள்.'
ஆனால், அவ்வாறு செல்பவர்கள், அந்த கல்லறையின்மீது அமர்ந்திருக்கக் கூடிய ஒரு வெண்புறாவை அவ்வப்போது பார்ப்பதாகக் கூறுவார்கள். தன் மார்புப் பகுதியில் கருஞ்சிவப்பு நிற கறை படிந்த ஒரு வெண்புறாவை...
_________________
மொழி பெயர்ப்பாளரின் உரை
வணக்கம்.
இந்த மாத 'இனிய உதய'த்திற்காக 3 சிறந்த கதைகளை நான் மொழி பெயர்த்திருக்கிறேன்
"நீதிபதி' என்ற கதையை எழுதியவர்... தேசிய சாகித்ய அகாடெமி விருது பெற்ற மலையாள எழுத்தாளரும், கேரள அரசாங்கத்தின் பிரதான செயலாளராக பணியாற்றிய ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான மலயாற்றூர் ராமகிருஷ்ணன்.
நாளை உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்க இருக்கும் ஒரு மனிதரை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை.
அவரின் வாழ்க்கையில் விடிவெள்ளி யாக அமைந்த மாஜிஸ்ட்ரேட் பனவேலி....
எப்படிப்பட்ட உயர்ந்த கதாபாத்திரம் அது!
பனவேலியைப் போன்ற ஒரு மனிதரின் உதவி கிடைத்தால், யார்தான் வாழ்க்கையில் முன்னுக்கு வர முடியாது?
கதையின் இறுதிப் பகுதி நம் மனதை நெகிழ வைக்கும்.
"குற்றவாளி யாரென தெரிய
வில்லை' என்ற கதையை எழுதியவர்...
கேரள சாகித்ய அகாடெமி விருதுபெற்ற நட்சத்திர
மலையாள எழுத்தாளரான உண்ணிகிருஷ்ணன் புதூர்.
புதுமையான கண்ணோட்டத்தில் எழுதப்பட்டிருக்கும் கதை. பின் நவீனத்துவ பாணியில் அமைந்த ஒரு கதை என்று கூட இதைக் கூறலாம்.
ஒரு மனிதரையும் வீட்டில் அவர் அன்புடன் வளர்க்கும் பிராணிகளையும் வைத்து இப்படியொரு மாறுபட்ட கதையை எழுதிய உண்ணிகிருஷ்ணன் புதூரை நான் முழுமனதுடன் பாராட்டுகிறேன்.
"திரும்பி வந்த வெண்புறா' என்ற கதையை எழுதியவர்...
இந்தியாவைச் சேர்ந்த வரும், உலக புகழ் பெற்ற ஆங்கில எழுத்தாளருமான ரஸ்கின் பாண்ட்.
தன் அருமையான ஆங்கில படைப்பிற்காக 1992 ஆம் ஆண்டில் தேசிய சாகித்ய அகாடெமி விருது பெற்றவர் இவர். 1999 ஆம் வருடத்தில் இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
ரஸ்கின் பாண்ட் எழுதிய இந்த கதையை மொழி பெயர்ப்பு செய்வதற்காக நான் பெருமைப்படுகிறேன்.
ஒரு சிறிய கதையின் மூலம், இதை வாசிப்பவர்களின் உள்ளங்களின் ஒரு இனம் புரியாத உணர்வை உண்டாக்க முடியுமா? கட்டாயம் முடியும் என்பதற்கு இந்த கதையே சான்று.
அதனால்தான் ரஸ்கின் பாண்ட் உலக புகழ் பெற்ற எழுத்தாளராக இருக்கிறார். அவரையும் மறக்க முடியாது. கதையில் அவர் படைத்து உலாவ விட்டிருக்கும் வெண்புறாவையும் நம்மால் மறக்கமுடியாது.
இந்த மூன்று கதைகளும் உங்களுக்கு மாறுபட்ட இலக்கிய அனுபவங்களைத் தரும் என்பது உறுதி.
"இனிய உதயம்' மூலம் நான் மொழிபெயர்க்கும் அருமையான இலக்கிய ஆக்கங்களை ஆர்வத்துடன் வாசிக்கும் உயர்ந்த உள்ளங்களுக்கு என் இதய நன்றி.
அன்புடன்,