நீங்கள் பிறந்த ஊரான துவரங்குறிச்சியில் வாழ்ந்த சிறுவயது நினைவுகள் குறித்து...
பொதுவாக என் ஊரில் என் இளமைக் காலம் குறித்து அதிகம் பேசியதுமில்லை எழுதியதுமில்லை. அது ஒரு வலி நிறைந்த கனவு. என் ஊரின் தெருக்களைத் தெரியாது. ஆறுகளையோ, குளங்களையோ தெரியாது. பாலியத்தின் விளையாட்டுகள் எதிலும் நான் ஈடுபட நேர்ந்ததில்லை. மூன்று வயதில் நடக்கமுடியாமல் போன ஒரு குழந்தையின் வாழ்வில் என்ன மிஞ்சியிருக்குமோ அதுதான் என் வாழ்விலும் இருந்தது. எங்கள் வீடு வறுமையில் நிறைந்திருந்தது. இவற்றின் ஊடாகத்தான் என் பால்யம் குறித்த நினைவுகள் மங்கலான கோட்டுச்சித்திரங்களாக இருக்கின்றன.
என் ஊரோடு எனக்கு எப்போதும் வேர்களே இருந்ததில்லை. நான் ஒரு அந்நியனாக பிறந்து ஒரு அந்நியனாகவே அங்கிருந்து வெளியேறினேன். எழுத்தாளர்கள் தங்கள் சொந்த ஊர் குறித்தோ, இளமைக்காலம் குறித்தோ ரொமான்டிசைஸ் செய்து எழுதும்போது அது எனக்கு விநோதமாக இருக்கும். உண்மையில் நான் என் மண்ணிலிருந்து வரவில்லை, காற்றிலிருந்து பிறந்து வந்தேன் என்று சொல்லவேண்டும். இவ்வாறாகத்தான் எனது வேரற்ற மனம் உருவானது.
அப்துல் ஹமீதுக்குள் இருந்த மனுஷ்ய புத்திரனை எப்போது அடையாளம் கண்டு கொண்டீர்கள்?
நான் தானாக உருவாகி வரவில்லை, நானாகத்தான் என்னை உருவாக்கிக்கொண்டேன். நாங்கள் மிகப்பெரிய குடும்பம். என் தாத்தா வெளிநாடுகளில் வணிகம் செய்து பொருளீட்டி ஊரில் நிலவுடைமையாளராக இருந்தார். என் தந்தையோடு சேர்த்து பத்துப் பிள்ளைகள். எல்லோருக்கும் நிலங்களையும் சொத்துக்களையும் பிரித்துக்கொடுத்தார். என் தந்தையின் மற்ற சகோதரர்கள் வணிகத்தில் ஈடுபட்டு பெரும் பொருளீட்டினார்கள். என் தந்தை மட்டும் விவசாயத்தைத் தேர்ந்தெடுத்தார். அதனாலேயே எங்கள் குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கியது.
என் தந்தை புத்தகங்கள் படிக்கும் பழக்கம் கொண்டவராக இருந்தார். லௌகீக வாழ்வில் தோல்வியடையும் மனிதர்கள் இயல்பாக வந்தடையும் இடம் அதுதானே. அவ்வாறே அவர் என்னையும் வாசிப்பதற்கு மிகவும் இளம்வயதிலேயே பழக்கப்படுத்தினார். எனக்கு எட்டு வயதாகும்போதே மொழியின் ருசி நாவில் படரத் தொடங்கியது. வீட்டில் பத்திரிகைகள் செய்தித்தாள்கள் வாங்குவோம். வரிவரியாய் படிப்பேன். தொடர்கதைகளைக் கிழித்து, பைண்ட் செய்து வைத்துக்கொள்வேன். எனக்கு விளையாட்டுகள் இல்லாததால் நான் படித்த கதைகளை மற்ற குழந்தைகளுக்குச் சொல்வேன். மாலை வேளையில் பதினைந்து இருபது சமவயதினர் என்னிடம் கதை கேட்பார்கள்.
என் தந்தை மதுரையிலிருந்து பழைய புத்தகக்கடைகளிலிருந்து கட்டுக்கட்டாக வாங்கிவரும் நாவல்கள், காமிக்ஸ்கள், மாயாஜால கதைகள், அம்புலிமாமா பழைய இதழ்கள், திரைப்பட வசனப் புத்தகங்கள் என எல்லாவற்றையும் படித்து அவர்களுக்கு கதைகளாகச் சொல்வேன். போகப்போகப் படித்த கதைகளுக்குப் பதில் நானே கதைகளை உருவாக்கிச் சொல்ல ஆரம்பித்தேன். இப்படித்தான் என் படைப்பாக்கத்தின் முதல் நிலைகள் உருவாகின.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/08/manuciya1-2025-11-08-16-07-35.jpg)
தங்களின் ஆரம்பக்கால கவிதை வாசிப்பு யாரிடமிருந்து தொடங்கியது..?
வெகுஜன இதழ்களில் வெளிவந்த வைரமுத்து, மு.மேத்தா போன்றவர்களின் கவிதைகள், கவிதைகளின் மீதான முதல் ஈடுபாட்டை உருவாக்கின. வைரமுத்துவின் ‘திருத்தி எழுதிய தீர்ப்புகள்’ கவிதைத் தொகுப்பு மற்றும் அவர் குங்குமத்தில் பாரதியின் வரலாற்றைக் கவிதை நடையில் எழுதிய ‘கவிராஜன் கதை’ போன்றவை எனக்குப் பெரிதும் உத்வேகம் அளித்தன. நா.காமராசன், மீரா, அப்துல் ரகுமான் போன்றோரும் என் இளமைக்காலக் கவிமனதை உருவாக்கினார்கள்.
1983-இல் வெளியான தங்களது முதல் கவிதை நூலான ‘மனுஷ்ய புத்திரன் கவிதைகள்’ நூலுக்கான வரவேற்பு எப்படி இருந்தது?
அந்த நூல் வெளிவந்தது என் வாழ்வில் எதிர்பாராத, தற்செயலான, மிக முக்கியமான சந்தர்ப்பம். நான் என்னுடைய பத்து வயதிலிருந்து வார பத்திரிகைகளுக்கு கடிதம் எழுதும் பழக்கம் கொண்டிருந்தேன். அச்சில் பெயர் பார்க்கும்போது வாழ்வில் எதையோ சாதித்த உணர்வு. ஏராளமான கடிதங்கள் அவ்வாறு பிரசுரமாயின. அக்கடிதங்கள் கவித்துவமாக அமைந்திருப்பதைக் கண்டு, கல்கண்டு இதழின் ஆசிரியர் லேனா தமிழ்வாணன் என்னைக் கவிதை எழுதும்படி தூண்டினார்.
எனது பதினாறு வயதில் எனது முதல் கவிதைத் தொகுப்பு ‘மனுஷ்யபுத்திரனின் கவிதைகள்’ மணிமேகலை பிரசுர வெளியீடாக வெளிவந்து பெரும்

எனது பதினாறு வயதில் எனது முதல் கவிதைத் தொகுப்பு ‘மனுஷ்யபுத்திரனின் கவிதைகள்’ மணிமேகலை பிரசுர வெளியீடாக வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்றது. சுமார் நானூறு கடிதங்கள் அந்தத் தொகுப்பைப் படித்தவர்களிடமிருந்து வந்தன. உண்மையில் என் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. வீட்டைவிட்டு வெளியே செல்லமுடியாமல் ஒரு சிறிய வட்டத்தில் உழன்றுகொண்டிருந்த எனக்கு அந்தப் புத்தகம் உலகை நோக்கிய கதவுகளைத் திறந்துவிட்டது. அக்கம்பக்கத்து பதினெட்டுபட்டி கிராமங்களில் என்னைப்போலவே ஆங்காங்கே இலக்கிய அனாதைகளாக இருந்த பலருக்கும் நான் அறியப்பட்ட கவிஞனானேன். அவர்கள் தேடிவந்து நண்பர்களானார்கள். அவர்களை ஊன்றுகோலாக்கி நான் என் அகவெளியிலும் புறவெளியிலும் எழுந்து நடக்கத்தொடங்கினேன்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/08/manuciya2-2025-11-08-16-07-49.jpg)
கோவை ஞானி நடத்திய "நிகழ்' இதழில் வெளியான தங்களின் "கால்களின் ஆல்பம்' கவிதை பெரிய அளவில் கவனம் பெற்ற போது, தங்களின் மனநிலை எப்படி இருந்தது?
83இல் என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்த பிறகு முதலில் பெரியாரியமும் பிறகு மார்க்சியமும் என் மனதில் வெகுவாகச் செல்வாக்கு செலுத்தின. தீவிர இடதுசாரி இதழ்களான புதிய கலாச்சாரம், மனஓசை ஆகிய இதழ்களில் மிகத் தீவிரமான புரட்சிகர கவிதைகள் எழுதினேன். இந்தியாவில் புரட்சி வரும் என்று அப்பாவியாக நம்பிய இளைஞர்களில் நானும் ஒருவனாக இருந்தேன். அந்த காலம் மன எழுச்சிமிக்க ஒரு அற்புதமான காலம். இரண்டு நிகழ்வுகள் பின்னர் என் கனவுகளையும் நம்பிக்கைகளையும் உடையச் செய்தன.
1987இல் என் அம்மாவின் எதிர்பாராத மரணம். நாங்கள் அப்போது அனாதைத்தனம் என்றால் என்னவென்பதை உணர்ந்தோம். அடுத்ததாக ரஷ்யாவில் கோர்பச்சேவ் கொண்டுவந்த பெரெஸ்ட்ரோயிகா சீர்திருத்த நடவடிக்கையின் விளைவாக ரஷ்யப்புரட்சியின் கொடுமையான பின்விளைவுகள் குறித்த செய்திகள் வெளிச்சத்திற்கு வந்தபோது, புரட்சி குறித்த எனது கனவுகள் சுக்கல் சுக்கலாக உடைந்தன. ‘நரகத்திற்கான பாதை நல்லெண்ணங்களால் ஆனது’ என்ற கார்ல் மார்க்ஸின் வரி என் முகத்தில் அறைந்தது. எஸ்.வி.ராஜதுரையின் ‘ரஷ்யப்புரட்சி ஒரு இலக்கிய சாட்சியம் என்ற நூல் புரட்சிக்குப்பின் கலைஞர்கள் எழுத்தாளர்கள் மேல் இழைக்கப்பட்ட கொடுமை கள் குறித்த சான்றுகளை அளித்தன. நான் ஆழமாக ஏமாற்றப்பட்ட ஓர் உணர்வு. என் மனம் முற்றிலும் அந்நியமாகி தனிமையின் இருளுக்குள் சரிந்தது.
அப்போது எழுதப்பட்ட கவிதைகளில் ஒன்றுதான் ‘கால்களின் ஆல்பம்’. கோவை ஞானி நடத்திய ‘நிகழ்’ இதழில் அக்கவிதை வெளியானது.
ஒரு பயிலரங்கில் சுஜாதா அதை வாசித்து, அதற்கு கிடைத்த நெகிழ்ச்சியூட்டும் மறுமொழியை வியந்து வியந்து எழுதினார். அதன்பிறகு என்னை என் கவிதைகளைத் தொடர்ச்சியாக அவர் வெகுசன தளத்தில் பல்வேறு தருணங்களில் எடுத்து இயம்பினார். அது என்னை வெகுசீக்கிரமே தமிழகமெங்கும் பரவலாக அறியப்பட்ட ஒரு கவிஞனாக மாற்றியது. சுஜாதா தந்த அந்த வெளிச்சம்தான் இன்றைக்கு வரைக்கும் என்னோடு வந்து கொண்டிருக்கிறது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/08/manuciya3-2025-11-08-16-08-06.jpg)
கவிதையின் கருப்பொருள், சொல்முறை இரண்டிலுமே புதுமை படைத்த ‘என் படுக்கை யறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்’ கவிதை நூல் தமிழ்ச் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம் குறித்து...
நவீன கவிதையில் பிரதானமாக இரண்டு போக்குகள் தமிழில் இருந்தன. ஒன்று ‘எழுத்து’ மரபைச் சேர்ந்த கவிஞர்களின் இறுக்கமும் இருமையும் கொண்ட மொழியில் அமைந்த நுட்பமான கவிதை மொழி. மற்றொன்று ‘வானம்பாடி’ கவிஞர்கள் உருவாக்கிய எளிமையான ஜனநாயகப்படுத்தப்பட்ட உரத்த குரலில் பேசும் கவிதைமொழி.
வானம்பாடி மரபைச் சேர்ந்த கவிஞர்களிடமிருந்து நான் வெகுசீக்கிரம் தீவிர நவீன கவிதை மொழியை முன்னெடுத்த ஆத்மாநாம், சுகுமாரன், கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக்கூத்தன் போன்றவர்களிடம் வந்தடைந்தேன். வானம்பாடிகளின் எளிமையையும் நவீனக் கவிஞர்களின் சொற்செறிவையும் நான் எடுத்துக்கொண்டேன். இதன் விளைவாக உருவானதுதான் ‘என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்’ தொகுப்பில் வெளிப்பட்ட கவிதைமொழி. அது பலருக்கும் ஒரு புதிய உணர்வையும் வியப்பையும் ஏற்படுத்தியது.
துவரங்குறிச்சியை விட்டு சென்னைக்குக் குடியேறுகிற முடிவை எதனால் எடுத்தீர்கள்?
நான் எந்த முடிவையும் நானாக எடுப்பதில்லை. வாழ்வின் நீரோட்டத்தின் திசைவழியே செல்வதுதான் என் வாழ்க்கை. நான் துவரங்குறிச்சியிலிருந்து நேராக சென்னை வரவில்லை. இடையில் எட்டு ஆண்டுகள் 1992 முதல் 2000 வரை திருநெல்வேலியில் இருந்தேன். அந்த ஊரே என்னை தன்னம்பிக்கையும் சுதந்திரமும் உடையவனாக மாற்றியது. அங்கு என்னை நானே அடுத்தகட்டத்தில் வார்த்துக்கொண்டேன் என்று சொல்லலாம். அங்கு என் பல்கலைக்கழகப் படிப்பை முடித்தபோது, மேற்கொண்டு என்ன செய்வதென்று தெரியவில்லை.
2000-ஆம் ஆண்டு எந்த திட்டமும் இல்லாமல் தான் சென்னைக்கு வந்தேன். ஆனால் வாழ்க்கைக்கு என்னைப்பற்றி வேறொரு திட்டம் இருந்தது. இந்த நகரம் எனக்கு எல்லாவற்றையும் தந்தது. மகிழ்ச்சிகள், துயரங்களும் அதீத எல்லைகளை இந்த இருபத்தைந்து வருடங்களில் பார்த்துவிட்டேன். உண்மையில் எனது சொந்த ஊராக உணர்வது சென்னையைத்தான். இந்த நகரத்திற்கு பல முகங்கள் இருப்பது போலவே எனக்குள்ளும் பல முகங்களை உருவாக்கியது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/08/manuciya4-2025-11-08-16-08-17.jpg)
உங்களுக்கும் எழுத்தாளர் சுஜாதாவுக்கு மிடையேயான நட்பு குறித்து...
அது நட்பு என்பதைக் காட்டிலும் அதைவிட மேலான ஒன்று. அன்பைவிடவும் சிறந்த உணர்ச்சி அது. நான் வெறும் கைகளோடு இந்த நகரத்திற்கு வந்தேன். அவர் ஒரு தந்தையைப் போன்றும் ஆசிரியனைப் போன்றும் என்னை வழிநடத்தினார். முதலில் அவர் என்னை மிக முக்கியமான கவிஞனாக வாசகர்களிடையே நிலைநிறுத்தினார்.
பின்னர் நான் வாழ்வில் என்ன செய்வதென்று தடுமாறிக்கொண்டிருந்த மிக மோசமான ஒரு காலகட்டத்தில் தனது நூல்களைத் தந்து உயிர்மை பதிப்பகத்தை ஆரம்பிக்கச் செய்தார். அவர் என்னுடன் நின்றதால் நான் தொட்டதெல்லாம் பொன்னாயிற்று. மிகக் குறுகிய காலத்தில் உயிர்மை முதன்மையான பதிப்பகங்களில் ஒன்றாக மாறியதெனில் சுஜாதாதான் அதற்கு காரணம். அவர் மறைந்தபோது என் தன்னம்பிக்கையின் ஒரு பகுதியை இழந்தேன். சில சமயம் ஒரு கரத்தையே இழந்ததுபோலவும் தோன்றியிருக்கிறது.
தமிழ்ச் சிறுபத்திரிகைகளுக்கும் உங்களுக்கு மான உறவு எப்படிப்பட்டது..?
என் படைப்பு மொழி சிற்றிதழின் வழியாக செழுமைபெற்ற மொழி. இளம் வயதிலேயே சுந்தர ராமசாமியால் தொடங்கப்பட்ட காலச்சுவடு இதழில், பின்னர் அதன் ஆசிரியர் குழுவில் பங்கேற்று எட்டாண்டுகள் பணியாற்றினேன். அதற்குப் பிறகு உயிர்மையை 24 வருடங்களாக நடத்திக்கொண்டிருக் கிறேன். நவீன தமிழ் இலக்கியத்தின் ஆகச்சிறந்த படைப்பாக்கங்களில் பெரும்பகுதி சிற்றிதழ்கள் வழியாகவே உருவானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மொழிபெயர்ப்புகள் முக்கியமாகச் சிற்றிதழ்கள் வழியே அறிமுகமான பிற மொழி படைப்பாளர்கள் குறித்த அறிமுகம் என் படைப்புலகைப் பெரிதும் விரிவாக்கியது. 35 வருடங்களாகப் பத்திரிகையாள னாகவும் எழுத்தாளனாகவும் தமிழ் சிற்றிதழ் இயக்கத்தோடு மிக நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருக்கிறேன்.
"உயிர்மை' இதழைத் தொடங்குவதற்கான காரணமென்ன..?
காலச்சுவடு இதழிலிருந்து மிகுந்த கசப்பு களோடு வெளியே வந்தேன். பிறகு தனிப்பட்ட சில மனமுறிவுகளால் கடும் மன அழுத்தத்திற்கு ஆட்பட்டு அது உளவியல் சிகிச்சை வரை சென்றது. எனக்கு உயிர்த்தெழ ஒரு காரணம் தேவையாக இருந்தது. அப்போதுதான் உயிர்மையை தொடங்க முடிவுசெய்தேன். எனது நீண்ட நாள் நண்பர் சுதீர் செந்தில் (உயிரெழுத்து ஆசிரியர்) அதில் உதவினார்.
சிறிது காலம் ஆசிரியர் குழுவிலும் இருந்தார். உயிர்மை எல்லா தரப்பு எழுத்தாளர்களையும் ஒரு குடையில் இணைத்து எழுதவைத்தது அதன் தனித்துவமான அடையாளமாக மாறியது. சுஜாதா, ஜெயமோகன், சாரு நிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன் என பலரும் ஒரே நேரத்தில் எழுதினார்கள். ஷாஜி, பாரதி மணி, சுகுமாரன், ச.தமிழ்செல்வன் என பலரது புகழ்பெற்ற பத்திகள் வெளிவந்து பெரும் கவனம்பெற்றன. உயிர்மை பன்முக வாசிப்பிற்கான ஒரு சமூக பண்பாட்டு ஏடு என்ற அடையாளத்தை 23 ஆண்டுகளாகத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது.
கவிஞராக, இதழாளராக அறியப்பட்ட நீங்கள், தி.மு.க.வில் இணைந்தமைக்கான பின்னணி என்ன..?
அரசியல் எனக்குப் புதிதல்ல. நான் பெரியாரிஸ்டாகவும் பிறகு தீவிர இடதுசாரியாக இருந்ததை ஏற்கெனவே குறிப்பிட்டேன். 2011இல் தி.மு.க. அடைந்த தோல்வி என்னைப் பெரிதும் வருந்தச் செய்தது. அந்தத் தேர்தலில் ஜெயலலிதா வின் வெற்றி ஒரு பேரழிவு காலத்தின் தொடக்கம் என்று உணர்ந்தேன். காலம் அதை உண்மை என்று நிரூபித்தது. அந்த சமயத்தில்தான் மோடியின் எழுச்சி நிகழ்ந்துகொண்டிருந்தது.
அப்போது நான் ஊடகங்களில் அரசியல் விமர்சகராகப் பிரபலமாக இருந்த நேரம். தி.மு.க.வின் பக்கம் நான் உறுதியாக நின்று பாசிச சக்திகளை எதிர்க்கவேண்டும் என்று விரும்பினேன். அந்த சமயத்தில்தான் நக்கீரன் இதழில் "எதிர்க்குரல்' பத்தி எழுதும் பெரிய வாய்ப்பு கிடைத்தது. என்னை ஒரு அரசியல் சிந்தனையாளனாக அடையாளப்படுத்திய வாய்ப்பு அது. கலைஞர் அந்த பத்தியை விரும்பி வாசித்தார் என்பதை அறிந்தேன். 2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது முறையாக என்னை தி.மு.க.வில் இணைத்துக்கொண்டு, தமிழ்நாடு முழுக்க பிரச்சாரத்திற்குச் சென்றேன். இன்றுவரை அப்பயணம் தொடர்கிறது.
தொலைக்காட்சி ஊடக விவாத அரங்கு களிலும் தொடர்ந்து பங்கேற்று வருகிறீர்கள். அவற்றில் நம் கருத்தைச் சுதந்திரமாகச் சொல்ல முடிகிறது என்று நம்புகிறீர்களா..?
சுதந்திரம் என்பது எல்லா ஊடகங்களிலுமே வரையறைக்கு உட்பட்டது. முழுமையான சுதந்திரம் என்பது எப்போதும் அடையமுடியாத ஒரு கனவு. தொலைக்காட்சி விவாதங்களின் தாக்கம் மிக அதிகம்.
நமக்கு கிடைக்கும் மூன்று நிமிடங்களில் நமது தரப்பு வாதத்தை முழுமையாக எடுத்துவைக்கும் திறன் இருக்கவேண்டும். மாற்றுத்தரப்பினர் நமக்கு எதிராக பொய் சொல்லும்போது உடனுக்குடன் ஆதாரத்துடன் மறுதலிக்கும் திறன் இருக்கவேண்டும். அபாரமான நினைவாற்றல், விட்டுக்கொடுக்காமல் போராடும் குணம், தன் இயக்கத்தின் மீதும் தலைவர்கள் மீதும் கடும் பற்றுறுதி இருந்தால் மட்டுமே விவாதங்களில் சிறப்பாகச் செயல்பட முடியும். முக்கியமாக தொடர்ச்சியான படிப்பும் சமகால நிகழ்வுகள் குறித்த அறிதலும் புரிதலும் மிக முக்கியம்.
கடந்த சில வருடங்களாக தொலைக்காட்சி விவாதங்களின் தரம் வெகுவாகத் தாழ்ந்துவருகிறது. விவாதங்களை நடத்தும் பல ஊடகங்களுக்குப் பக்கச்சார்பான நிலைப்பாடுகள் இருக்கின்றன. விவாதங்களில் தரம் தாழ்ந்து நடப்பவர்களால் மக்கள் சலிப்படையத் தொடங்கியுள்ளனர்.
ஒரே ஆண்டில் பல கவிதை நூல்கள்; அதுவும் பல நூறு பக்கங்களில் வெளியிடுகிறீர்கள் நிறைய எழுதுவதினால் கவிதை நீர்த்துப்போகுமென்று பொதுவாகச் சொல்லப்படுகிறதே..!
மிக உயரமாகப் பறக்க முடிந்த பறவைகள் உயரமாகப் பறக்கின்றன. வெகுதூரம் பறக்க முடிந்த பறவைகள் கண்டம்விட்டு கண்டம் செல்கின்றன. அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிக்கும் புறாக்கள் ஒரு தளத்திலிருந்து இன்னொரு தளத்திற்கு மாறிமாறி உட்கார்ந்து கொண்டிருக்கின்றன.
எழுத்து என்பது என் வாழ்க்கை முறை, என் சிந்தனாமுறை, என் பசி, என் காமம், நெஞ்சில் இடையறாது எரியும் கனல். நான் எல்லாவற்றையும் கவிதையாக்குவேன். என் கவித்துவ மனம் வேட்டை மிருகம் போன்றது. அது தன்னைச் சுற்றி நிகழும் சிறு அசைவைக்கூட தன் புலன்களால் அறிகிறது. அதிகம் எழுதினால் நீர்த்துப்போகும் என்பது மூடநம்பிக்கை. குறைவாக எழுதப்பட்ட குப்பைகளை நாமறிவோம். எழுத்தின் தீவிரத்தை உணர்த்துவது எழுதுபவனின் மனமே தவிர அதன் எண்ணிக்கையல்ல.
உங்கள் கவிதைக்கென்று தனி வாசகர் வட்டமே இருக்கிறது. உங்களின் மிகச் சிறந்த வாசகர் என்று யாரையேனும் குறிப்பிட விரும்புகிறீர்களா..?
எனது விநோதமான வாசகர் களைப் பற்றியே நான் பல கவிதைகளை எழுதியிருக்கிறேன். அவர்கள் என் சொற்களின் மர்ம உலகங்களில் வாழ்பவர்கள். அவர்கள் வாழ்வின் ஒரு ரகசிய மொழியாக நான் இருக்கிறேன் அந்தரங்க உரையாடலாக இருக்கிறேன். தமிழ்நாடு முழுக்க ஊர் ஊராகச் சென்று என் வாசகர்களைச் சந்திக்கிறேன். ஒரு சொல்லின் மகத்துவம் என்ன என்பதை அவர்கள் எனக்குக் காட்டித்தருகிறார்கள்.
ஒரு படைப்பாளியாக தி.மு.க.வில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைத்திருப்பதாக நினைக்கிறீர்களா..?
நிச்சயமாக. தி.மு.க. எனக்கான இடத்தையும் கௌரவத்தையும் குறைவின்றி வழங்கியிருக்கிறது. இன்னும் பெரிய அளவில் என் பணிகளைக் கழகத்திற்காகச் செய்வதற்கான வாய்ப்பிற்காகவும் காலத்திற்காகவும் காத்திருக்கிறேன்.
மத்தியில் ஆட்சி செய்யும் பி.ஜே.பி. யின் செயல்திட்டங்கள் நாட்டின் மதச்சார்பின்மைக் கான அச்சுறுத்தலைத் தருவதாகச் சொல்லப் படுவதை நீங்கள் ஏற்கிறீர்களா..?
மதச்சார்பின்மைக்கு மட்டுமல்ல ஜனநாயகத்திற்கே ஆபத்தான அரசு இது. ஓட்டுத்திருட்டு ஒரு சிறந்த உதாரணம். இந்த ஆட்சி கார்ப்பரேட்களாலும் மதவெறி கொண்ட சதிகார அமைப்புகளாலும் பின்னிருந்து இயக்கப்படுகிறது. இந்த நாடு வரலாற்றின் மிக மிக ஆபத்தான காலகட்டத்தில் இருக்கிறது.
திராவிட மாடல் ஆட்சியின் மகத்தான சாதனை என்று எதைச் சொல்வீர்கள்..?
கல்வியிலும் பொருளாதாரத்திலும் ஏற்பட்டிருக்கும் பெரும் வளர்ச்சி இது. இந்தியாவின் எந்த மாநிலத்திலும் நிகழ்ந்திடாத ஒன்று. அதேபோல பெண்கள் முன்னேற்றத்திற்காக மேற்கொள்ளப் பட்ட திட்டங்கள், இளைஞர்களின் திறன் மேம்பாட்டு திட்டங்கள் மிகவும் முன்னோடியானது. நாட்டின் எதிர்காலத்திற்கான மிகச்சிறந்த மனிதவளத்தை தமிழ்நாடு உருவாக்கி வருகிறது.
சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழு தலைவராக நீங்கள் என்னென்ன செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறீர்கள்..?
இதற்குமுன் நடந்திடாத மிக முக்கியமான செயல்பாடுகளை மேற்கொண்டோம். நூலக அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தினோம். இளைஞர்களுக்கும் நூலகங்களுக்கும் இடையே பிணைப்பு ஏற்படும் வகையில் தமிழ்நாட்டின் பல்வேறு துறைசார்ந்த ஆளுமைகளைக் கொண்டு தொடர்ந்து பயிலரங்குகளையும் கருத்தரங்குகளையும் நடத்திவந்திருக்கிறோம். நூலகங்களை எப்படி பண்பாட்டு மையங்களாக மாற்றுவது என்பதை செயல்படுத்திக் காட்டியிருக்கிறோம்.
"நக்கீரன்' இதழில் நீங்கள் எழுதிய "எதிர்க்குரல்" கட்டுரைத் தொடர் பரவலாகக் கவனம் பெற்றதோடு, நிறைய விவாதங்களையும் தூண்டியது குறித்து...
நக்கீரன் இதழின் ஆசிரியர் அண்ணன் கோபால் எனக்கு எல்லையற்ற சுதந்திரத்தை அளித்தார்.
எனது ஒரு வார்த்தைகூட நீக்கப்பட்டதில்லை. எனது பல கட்டுரைகள் கவர் ஸ்டோரியாக வெளியிடப் பட்டன. ஒருவிதத்தில் நான் நேரடி அரசியலுக்கு வருவதற்கான பாதைகளை உருவாக்கியதே நக்கீரனில் வெளிவந்த எதிர்க்குரல்தான். அவை பரவலாகப் பேசப்பட்டன. வழக்குகளும்கூட வந்தன. மிரட்டல்களுக்கும் பஞ்சமில்லை. ஆனால் நக்கீரனுடன் இருக்கும்போது எவருக்கும் அஞ்சவேண்டியதில்லை. நாங்கள் உண்மையான எதிர்க் குரலாக இருந்தோம்.
உங்கள் படைப்புகளுக்காகப் பெற்ற விருதுகளிலேயே நீங்கள் பெரிதும் விரும்பி ஏற்றுக்கொண்ட விருது எது..?
எல்லா விருதுகளுமே மதிப்பிற்குரியவைதான். அவை சிறியதோ பெரியதோ நம் மீதான அன்பின் நிமித்தமாக தரப்படுபவை. நாம் மனச் சோர்வுற்றிருக் கும் காலங்களில் நமக்கு கிடைக்கும் ஒரு சிறிய உற்சாகம்.
தமிழக அரசின் சார்பில் மாவட்டம்தோறும் நடைபெறும் புத்தகத் திருவிழாவையொட்டிய சர்ச்சைகளும் இன்னும் தொடர்கிறதே. அது பற்றி...
நாம் புதிதாக ஒன்றைப் பெரிய அளவில் நடத்தும்போது சிறுசிறு பிரச்சினைகள் இருக்கும். மாவட்டம்தோறும் புத்தகக் கண்காட்சி என்பது எந்த மாநிலத்திலும் நடந்திடாத மிகப்பெரிய சாதனை. அரசு இதற்கு கணிசமான நிதி ஒதுக்கிவருகிறது. மாவட்ட நிர்வாகம், பொது நூலகத்துறை, பபாசி, பல உள்ளூர் இலக்கிய அமைப்புகள் இணைந்து இம்முயற்சியை முன்னெடுக்கின்றன.
அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களின் ஆர்வம் மற்றும் இணைந்து செயல்படும் அமைப்புகளின் அக்கறைக்கு ஏற்ப சில மாவட்டங்களில் மிகச் சிறப்பாகவும் சில மாவட்டங்களில் தளர்ச்சியுடனும் நடக்கின்றன. குழந்தைகள் இக்கண்காட்சிகளுக்குப் பெருமளவு வருகிறார்கள். அரசு ஒதுக்கும் நிதியை எல்லா பதிப்பாளர்களும் பயன்பெறத்தக்க வகையில் எல்லோரிடமும் முறையாகப் புத்தகம் வாங்குவது தொடர்பான சில வெளிப்படைத்தன்மையுள்ள ஏற்பாடுகள் தேவை. சிறப்பு பேச்சாளர்களை அழைப்பதிலும் பன்முகத்தன்மை கொண்ட அணுகுமுறை தேவை. மற்றபடி இது ஒரு மாபெரும் அறிவுத் திருவிழா. சிலர் சிறு பிரச்சினைகளைப் பெரிதாக்கி அதீதமான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். அது ஏற்புடையதல்ல.
திரைப்படத்தில் பாடல் எழுதியிருக்கிறீர்கள். ஓரிரு படங்களிலும் தலைகாட்டி இருக்கிறீர்கள். அந்த அனுபவம் குறித்து...
அவை என் சோர்வூட்டும் வாழ்வைக் கொஞ்சம் வண்ணமயமாக்கிக்கொள்ளும் அவ்வப்போதைய வாணவேடிக்கைகள். நான் தமிழில் 12,000 கவிதைகள் எழுதியிருக்கிறேன். ஆனால் சூப்பர் டீலக்ஸ் படம் வெளிவந்து எட்டாண்டுகளுக்குப் பிறகும் நேற்று கடற்கரையில் சந்தித்த ஒரு இளைஞர், "சார் சூப்பர் டீலக்ஸ் உங்கள் கேரக்டர் சூப்பர்" என்றார். இத்தனைக்கும் நான் அதில் செய்தது சிறிய "கேமியோ' ரோல். நாம் என்னவெல்லாமோ செய்து மனிதர்களின் நினைவுகளில் தங்கவேண்டியிருக்கிறது.
"இனிய உதயம்' இதழைப் பற்றி உங்களின் கருத்து...
"இனிய உதயம்' வெளிவரத் தொடங்கிய காலத்தில் வேறு பல ஊடக நிறுவனங்கள்கூட இலக்கிய இதழ்களைத் தொடங்கின. பிறகு அவை நிறுத்தப்பட்டுவிட்டன. ஆனால் லாபநட்ட கணக்குகளைப் பற்றி பயப்படாமல் இனிய உதயத்தை நக்கீரன் குழுமம் தொடர்ந்து நடத்தி வருகிறது. காலந்தோறும் புதிய படைப்பாளிகள் உருவாகிவர இனிய உதயம் போன்ற இதழ்கள் தொடர்ந்து வெளிவருவது மிக முக்கியமானது.
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us