ஓலைச்சுவடிகளில் தேங்கிக் கிடந்த
பழந்தமிழ் இலக்கியங்களை தன்
அரும் முயற்சியால் தேடித்தேடி
தொகுத்து அளித்தவர் தமிழ்த் தாத்தா
என போற்றப்படும் உ.வே.சாமிநாதையர் அவர்கள். தமிழில் அவர் முதலில் தேடி, ஆராய்ந்து பதிப்பித்தது சீவகசிந்தாமணியைத்தான். அவர் தேடல் முயற்சி எப்படித் தொடங்கியது என்று அவரது "என் சரித்திரம்' நூலில் இருந்து வாசகர்களுக்கு வழங்கியிருக்கிறோம்.
Advertisment
காலேஜ் வேலையைப் பார்த்துக்கொண்டும் வீட்டுக்கு வரும் மாணாக்கர்களுக்கு ஒழிந்த நேரங்களில் பாடம் சொல்லிக்கொண்டும் பொழுது போக்கி வந்தேன். அச்சமயம் அரியிலூரிலிருந்து சேலம் இராமசுவாமி முதலியாரென்பவர் கும்பகோணத்துக்கு முன்சீபாக மாற்றப் பெற்றுவந்தார். அவரிடம் என் நல்லூழ் என்னைக்கொண்டுபோய்விட்டது. அவருடைய நட்பினால் என் வாழ்க்கையில் ஒரு புதுத்துறை தோன்றியது, தமிழிலக்கியத்தின் விரிவை அறிய முடிந்தது. அந்தாதி, கலம்பகம், பிள்ளைத்தமிழ், உலா, கோவை முதலிய பிரபந்தங்களிலும் புராணங்களிலும் தமிழின்பம் கண்டு மகிழ்வதோடு நில்லாமற் பழமையும் பெருமதிப்புமுடைய தண்டமிழ் நூல்களிற் பொதிந்து கிடக்கும் இன்றமிழியற்கையின்பத்தை மாந்தி நான் மகிழ்வதோடு, பிறரும் அறிந்து இன்புறச் செய்யும் பேறு எனக்கு வாய்த்தது.
Advertisment
சேலம் இராமசுவாமி முதலியார்
முதலியார் சேலத்தில் ஒரு பெரிய மிட்டா ஜமீன்தார் பரம்பரையினர். இளமையிலேயே பேரறிவு படைத்து விளங்கினார். தமிழிலும் சங்கீதத்திலும் வடமொழியிலும் பழக்கமுள்ளவர். கும்பகோணத்தில் வேலை பார்த்து வந்த காலத்தில் அவருடைய திறமை ஓரளவு வெளிப்பட்டு ஒளிர்ந்தமையால் அவரைத் தக்க கனவான்கள் சென்று பார்த்துப் பேசிவிட்டு வருவார்கள். கும்பகோணத்துக்கு நூதனமாக உத்தியோகஸ்தர்கள் வந்தால் அவர்களிடம் மனிதர்களை அனுப்பிப் பார்த்து வரச் செய்வதும், குருபூஜை முதலிய விசேஷ தினங்களில் மடத்திற்கு வரவேண்டுமென்று அழைக்கச் செய்வதும் திருவாவடுதுறை மடத்து வழக்கங்கள். சேலம் இராமசுவாமி முதலியாருடைய கல்வியறிவையும் பெருந்தன்மையையும் கேள்வியுற்ற ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் அவரைப் பார்த்து வரும்படி காறுபாறு தம்பிரானையும் அவருடன் வேறு சிலரையும் அனுப்பினார். தம்பிரான் பரிவாரங்களுடன் சென்று முதலியாரைக் கண்டு பேசிக்கொண்டிருந்தார்.
இராமசுவாமி முதலியார் திருவாவடுதுறை மடத்தின் பழம் பெருமையை நன்குணர்ந்தவராதலின், தம்பிரானுடன் சம்பாஷணை செய்து வரும்போது மடத்து நிர்வாகத்தைப் பற்றிப் பேசுவதோடு நில்லாமல், கல்வி சம்பந்தமாகவும் விசாரிக்க ஆரம்பித்தார். "மடத்தில் தமிழ்க் கல்வியபிவிருத்திக்கு என்ன செய்கிறார்கள்? வித்துவான்களாக யார் யார் இருக்கிறார்கள்? எத்தனை பேர்கள் படிக்கிறார்கள்?' என்பவை போன்ற கேள்விகளை அவர் கேட்டார்.
Advertisment
தம்பிரான் ஏற்ற விடை அளித்து வந்தார். தமிழ், வடமொழி, சங்கீதம் என்னும் மூன்றிலும் சிறந்த தேர்ச்சி யையுடைய வித்துவான்கள் அடிக்கடி மடத்துக்கு வந்து சன்மானம் பெற்றுச் செல்வார்களென்றும், ஆதீனத் தலைவரே சிறந்த கல்விமானென்றும், அவரிடத்திலும் சின்னப் பண்டார ஸந்நிதிகளிடத்திலும் பல மாணாக்கர்கள் தமிழ்ப்பாடம் கேட்டு வருகிறார் களென்றும் தெரிவித்தார்.
இவ்வாறு தெரிவித்துக்கொண்டு வரும்போது அக்காலத்து மடத்துக் காரியஸ்தராக இருந்தவரும், தம்பிரானுடன் வந்தவருமாகிய சிவசுப்பிரமணிய பிள்ளையென்பவர், "மடத்திலே படித்துக் கொண்டிருந்த மாணாக்கர்களுள் ஒருவராகிய சாமிநாதையர் என்பவரே இவ்வூர்க் கவர்ன்மெண்ட் காலேஜில் தமிழ்ப் பண்டிதராக இருக்கிறார்' என்று சொன்னார்.
கேட்ட முதலியார், "அப்படியா? நான் அவரைப் பார்த்ததில்லை' என்றார்.
பின்னும் சில நேரம் பேசியிருந்துவிட்டுத் தம்பிரான் முதலியோர் விடைபெற்றுச் சென்று ஸ்ரீசுப்பிரமணிய தேசிகரிடம் நிகழ்ந்தவற்றையெல்லாம் தெரிவித்தனர். உடனே ஆதீனத் தலைவர், "இப்போது அங்கே முன்ஸீபாக வந்திருக்கும் முதலியார் தமிழில் நல்ல பயிற்சி உடையவரென்று தோன்றுகிறது. அவரை நீங்கள் போய்ப் பார்த்து வரவேண்டும்' என்று எனக்குச் சொல்லியனுப்பினார்.
முதற் காட்சி
அவரைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் முதலில் என்னிடமில்லை; சுப்பிரமணிய தேசிகர் சொல்லியனுப்பினமையின் நான் சென்று பார்க்கலாமென்று ஒருநாள் புறப்பட்டேன். அன்று வியாழக்கிழமை (21-10-1880). அவர் இருந்த வீட்டை அடைந்து அவரைக் கண்டேன். நான் காலேஜில் இருப்பதையும் மடத்தில் படித்தவனென்பதையும் சொன்னேன். அவர் யாரோ அயலாரிடம் பராமுகமாகப் பேசுவது போலவே பேசினார். என்னோடு மிக்க விருப்பத்துடன் பேசுவதாகப் புலப்படவில்லை. "அதிகாரப் பதவியி னால் இப்படி இருக்கிறார்; தமிழ் படித்தவராக இருந்தால் இப்படியா நம்மிடம் பேசுவார்?' என்று நான் எண்ணலானேன்.
"நீங்கள் யாரிடம் பாடம் கேட்டீர்கள்?' என்று அவர் கேட்டார்.
"மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர் களிடம் பாடம் கேட்டேன்' என்றேன்.
பிள்ளையவர்கள் பெயரைக் கேட்டவுடன் அவரிடம் ஏதாவது கிளர்ச்சி உண்டாகுமென்று எதிர்பார்த்தேன். என்னுடைய உத்தியோகத்துக்காக என்னை மதிக்காவிட்டாலும், பிள்ளையவர்கள் மாணாக்கனென்ற முறையிலாவது என்னிடம் மனம் கலந்து பேசலாமே. அவர் அப்படிப் பேச முன்வரவில்லை. கணக்காகவே பேசினார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/13/uvesa1-2025-12-13-13-02-30.jpg)
"பிள்ளையவர்கள் பெயரைக் கேட்டுப் புடைபெயர்ச்சியே இல்லாத இவராவது, தமிழில் அபிமானம் உடையவராக இருப்பதாவது! எல்லாம் பொய்யாக இருக்கும்' என்று நான் தீர்மானம் செய்துகொண்டேன்.
அவர் கேள்வி கேட்பதை நிறுத்தவில்லை. என்ன என்ன பாடம் கேட்டிருக்கிறீர்கள்?' என்ற கேள்வி அடுத்தபடி அவரிடமிருந்து வந்தது. "இதற்கு நாம் பதில் சொல்லும் வகையில் இவரைப் பிரமிக்கும்படி செய்துவிடலாம்' என்ற நிச்சய புத்தியோடு நான் படித்த புஸ்தகங்களின் வரிசையை ஒப்பிக்கலானேன், "குடந்தை யந்தாதி, மறைசையந்தாதி, புகலூரந்தாதி, திருவரங்கத்தந்தாதி, அழகரந்தாதி, கம்பரந்தாதி, முல்லையந்தாதி, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ், அகிலாண்ட நாயகி பிள்ளைத்தமிழ், சேக்கிழார் பிள்ளைத்தமிழ், திருக் கோவையார், தஞ்சைவாணன் கோவை...' என்று சொல்லிக் கொண்டே போனேன். அந்தாதிகளில் இருபது, கலம்பகங்களில் இருபது, கோவைகளில் பதினைந்து, பிள்ளைத் தமிழ்களில் முப்பது, உலாக்களில் இருபது, தூதுகள் இப்படியே பிரபந்தங்களை அடுக்கினேன். அவர் முகத்தில் கடுகளவு வியப்புக்கூடத் தோன்றவில்லை.
அசையாத பேர்வழி
"இதெல்லாம் படித்து என்ன பிரயோசனம்?' என்று திடீரென்று அவர் இடைமறித்துக் கூறினார். நான் மிக்க ஏமாற்றம் அடைந்தேன். "இவர் இங்கிலீஷ் படித்து அதிலே மோகங்கொண்டவராக இருக்கலாம். அதனால்தான் இப்படிச் சொல்லுகிறார்' என்ற எண்ணம் எனக்கு உண்டாயிற்று. ஆனாலும் நான் விடவில்லை. புராண வரிசையைத் தொடங்கினேன்.
"திருவிளையாடற் புராணம், திருநாகைக்காரோணப் புராணம், மாயூரப் புராணம், கந்த புராணம், பெரிய புராணம், குற்றாலப் புராணம்...'
அவர் பழையபடியே கற்சிலைபோல இருந்தார்.
"நைடதம், பிரபுலிங்க லீலை. சிவஞான போதம், சிவஞான சித்தியார் உரை...' என்னும் நூல்களின் பெயர்களைச் சொன்னேன். இலக்கண நூல்களை எடுத்துக் கூறினேன். அப்பொழுதும் அவருக்குத் திருப்தி உண்டாகவில்லை. "அடடா! முக்கியமானவற்றையல்லவா மறந்துவிட்டோம்? அதை முதலிலேயே சொல்லியிருந்தால் இவரை வழிக்குக்கொண்டு வந்திருக்கலாமே!' என்ற உறுதியுடன், 'கம்பராமாயணம் முழுவதும் இரண்டு மூன்றுமுறை படித்திருக்கிறேன். பிள்ளையவர்களிட மும் சில காண்டங்களைப் பாடம் கேட்டிருக்கிறேன்' என்றேன்.
இராமசுவாமி முதலியார், "சரி, அவ்வளவுதானே?' என்று கேட்டார். எனக்கு மிகவும் அதிருப்தி ஏற்பட்டு விட்டது. கம்ப ராமாயணத்தில் கூடவா இவ்வளவு பாராமுகம்! இவ்வளவு அசட்டை!' என்ற நினைவே அதற்குக் காரணம். அதற்கு மேலே சொல்ல என்ன இருக்கிறது? ஆனால் அவர் என்னை விடுகிறவராக இல்லை. மேலும் கேள்வி கேட்கலானார்.
பழைய நூல்கள்
இந்தப் பிற்காலத்துப் புஸ்தகங்களெல்லாம் படித்தது சரிதான். பழைய நூல்களில் ஏதாவது படித்ததுண்டா?' எனக்கு அவர் எதைக் கருதிக் கேட்டாரென்று தெரியவில்லை. "பிள்ளையவர்கள் இயற்றிய நூல்களையே நான் படித்திருப்பதாக இவர் எண்ணிக் கொண்டாரோ? கந்தபுராணம், பெரியபுராணம் முதலியவைகளெல்லாம் பழைய நூல்களல்லவோ? கம்பராமாயணம் பழைய நூல்தானே? பழைய நூலென்று இவர் வேறு எதைக் கருதுகிறார்?' என்று யோசிக்கலானேன்.
"நான் சொன்னவற்றில் எவ்வளவோ பழைய நூல்கள் இருக்கின்றனவே!' என்று நான் கேட்டேன்.
"அவைகளுக்கெல்லாம் மூலமான நூல்களைப் படித்திருக்கிறீர்களா?' என்று அவர் கேட்டபோதுதான் அவரிடம் ஏதோ சரக்கு இருக்கிறதென்ற எண்ணம் எனக்கு உண்டாயிற்று.
"தாங்கள் எந்த நூல்களைச் சொல்லுகிறீர்களென்று தெரியவில்லையே?' என்றேன்.
'சீவக சிந்தாமணி படித்திருக்கிறீர்களா? மணி மேகலை படித்திருக்கிறீர்களா? சிலப்பதிகாரம் படித்திருக்கிறீர்களா?'
அவர் சொன்ன நூல்களை நான் படித்ததில்லை; என்னுடைய ஆசிரியரே படித்ததில்லை. புஸ்தகத்தைக் கூட நான் கண்ணால் பார்த்ததில்லை. ஆனாலும், "இவ்வளவு புஸ்தகங்களைப் படித்ததாகச் சொன்னதை பொருட்படுத்தாமல் எவையோ இரண்டு மூன்று நூல்களைப் படிக்கவில்லை என்பதைப் பிரமாதமாகச் சொல்லவந்து விட்டாரே!' என்ற நினைவோடு பெருமிதமும் சேர்ந்துகொண்டது. "புஸ்தகம் கிடைக்க வில்லை; கிடைத்தால் அவைகளையும் படிக்கும் தைரியமுண்டு' என்று கம்பீரமாகச் சொன்னேன்.
சாதாரணமாகப் பேசிக்கொண்டுவந்த முதலியார், நிமிர்ந்து என்னை நன்றாகப் பார்த்தார். "நான் புஸ்தகம் தருகிறேன்; தந்தால் படித்துப் பாடம் சொல்வீர்களா?' என்று கேட்டார்.
"அதிற் சிறிதும் சந்தேகமே இல்லை. நிச்சயமாகச் சொல்கிறேன்' என்று தைரியமாகச் சொன்னேன்.
அறிவுப் பலத்தையும் கல்வி கேள்விப் பலத்தையும் கொண்டு எப்படியாவது படித்து அறிந்து கொள்ளலாம் என்ற துணிவு எனக்கு உண்டாகிவிட்டது.
"சரி, சிந்தாமணியை நான் எடுத்து வைக்கிறேன். நீங்கள் படித்துப் பார்க்கலாம். அடிக்கடி இப்படியே வாருங்கள்' என்று அவர் சொன்னார். நான் விடை பெற்றுக்கொண்டு வந்தேன். பார்க்கச் சென்றபோது அவர் இருந்த நிலையையும் நான் விடைபெறும் போது அவர் கூறிய வார்த்தைகளையும் எண்ணி, அவர் சாமான்ய மனிதரல்லரென்றும், ஆழ்ந்த அறிவும் யோசனையும் உடையவர் என்றும் உணர்ந்தேன்.
இரண்டாவது சந்திப்பு
அடுத்த ஞாயிற்றுக்கிழமை இராமசாமி முதலியாரிடம் போனேன். அன்று அவர் மிகவும் அன்போடு என்னை வரவேற்றார். அவரைப் பார்ப்பதைவிட அவர் சொன்ன புஸ்தகத்தைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் கட்டுக்கடங்காமல் இருந்தது. அவர் தம்மிடம் இருந்த சீவகசிந்தாமணிக் கடிதப் பிரதியை என்னிடம் கொடுத்தார். "இதைப் படித்துப் பாருங்கள். பிறகு பாடம் ஆரம்பிக்கலாமா?' என்றார். "அப்படியே செய்யலாம்' என்று உடன்பட்டேன். பிறகு அவர் அந்தப் பிரதியைத் தாம் பெற்ற வரலாற்றைச் சொல்லத் தொடங்கினார்.
முதலியார் சிந்தாமணி பெற்ற வரலாறு
"எனக்குச் சிந்தாமணி முதலிய பழைய புஸ்தகங்களைப் படிக்க வேண்டுமென்ற ஆவல் மிகுதியாக இருந்தது. இந்தத் தேசத்தில் நான் சந்தித்த வித்துவான் களில் ஒருவராவது அவற்றைப் படித்ததாகவே தெரியவில்லை. ஏட்டுச் சுவடிகளும் கிடைக்கவில்லை. திருநெல்வேலிப் பக்கத்திலுள்ள கவிராயர்கள் வீட்டில் பிரதிகள் கிடைக்கலாமென்று எண்ணி ஸ்ரீவைகுண்டத்தில் முன்ஸீபாக இருந்த என் நண்பர் ஏ. இராமசந்திரையர் என்பவரிடம் விஷயத்தைச் சொல்லி வைத்திருந்தேன். அவர் யார் யாரையோ விசாரித்துப் பார்த்தார்; ஒன்றும் கிடைக்கவில்லை.
ஒரு சமயம் ஸ்ரீவைகுண்டத்துக்கு அருகிலுள்ள ஓர் ஊரில் பரம்பரை வித்துவான்களாக இருந்த கவிராயர் குடும்பமொன்றில் உதித்த ஒருவர் ஒரு வழக்கில் சாக்ஷியாக வந்தார். அவரை விசாரிக்கும்போது, அவர் கவிராயர் பரம்பரையைச் சேர்ந்தவரென்றும், அவரு டைய முன்னோர்கள் பல நூல்களை இயற்றியிருக்கி றார்கள் என்றும் என் நண்பருக்குத் தெரியவந்தது. விசாரணையெல்லாம் முடிந்த பிறகு முன்ஸீப் அந்தச் சாட்சியைத் தனியே அழைத்து அவர் வீட்டில் ஏட்டுச் சுவடிகள் இருக்கின்றனவா என்று விசாரித்தார்.
அவர், "இருக்கின்றன' என்று சொல்லவே, சிந்தாமணிப் பிரதி இருந்தால் தேடி எடுத்துத் தரவேண்டுமென்று கூறினார். அதிகாரப் பதவியிலிருந்தமையால் அவர் முயற்சி பலித்தது. அந்தக் கவிராயர் சீவகசிந்தாமணிப் பிரதியைக் கொண்டுவந்து கொடுத்தார். அதற்கு முப்பத்தைந்து ரூபாய் கொடுத்து வாங்கி எனக்கு அனுப்பினார். அதிலிருந்து காகிதத்திற் பிரதி பண்ணிய புஸ்தகம் இது.
'இவ்வளவு கஷ்டப்பட்டு இதனைப் பெற்றும் படிப்பதற்கு முடியவில்லை. நான் காலேஜில் படித்த போது இதன் முதற் பகுதியாகிய நாமகளிலம்பகம் மாத்திரம் பாடமாக இருந்தது. அதை ஒரு துரை அச்சிட்டிருந்தார். அதில் தமிழைக்காட்டிலும் இங்கிலீஷ் அதிகமாயிருந்தது. நூல் முற்றும் படித்துப் பார்க்க வேண்டுமென்ற ஆசையால் நான் போகும் இடங்களில் உள்ள வித்துவான்களை எல்லாம் விசாரித்துப் பார்க்கிறேன். எல்லோரும் அந்தாதி, பிள்ளைத் தமிழ், புராணங்கள் இவைகளோடு நிற்கிறார்களேயொழிய மேலே போகவில்லை. அதனால் நான் மிகவும் அலுத்துப் போய்விட்டேன்.'
"புஸ்தகம் மிகச் சிறந்த புஸ்தகம். கம்பராமாயணத்தின் காவ்ய கதிக்கெல்லாம் இந்தக் காவியமே வழிகாட்டி. இதைப் படித்துப் பொருள் செய்துகொண்டு பாடம் சொல்வீர்களானால் உங்களுக்கும் நல்லது; எனக்கும் இன்பம் உண்டாகும்.'
முதலியார் கூறியவற்றை மிக்க கவனத்தோடு கேட்டு வந்தேன். தமிழ் நூற் பரப்பையெல்லாம் உணர்ந்து விளங்கிய பிள்ளையவர்கள் கூடச் சிந்தாமணியைப் படித்ததில்லையென்பதை நினைத்தபோது, "நாம் இந்தப் புதிய நூலைப் படித்துப் பொருள் செய்வது சுலபமாக இருக்குமா?' என்ற அச்சம் சிறிது தோற்றினாலும், "தமிழ்நூல் மரபுக்குப் புறம்பாக இல்லாத நூல் ஏதாயிருந்தாலென்ன? ஸம்ஸ்கிருதமா, தெலுங்கா நூதனமாகப் பயிற்சி செய்துகொள்ள வேண்டுமென்பதற்கு? தமிழ் நூலை அறிவுகொண்டு ஆராய்ந்து படித்துப் பார்த்தால் விளங்காமலா போகிறது? எவ்வளவோ நூல்களைப் படித்ததாகச் சொல்லியும், "என்ன பிரயோசனம்?' என்று ஒரு கேள்வியில் தூக்கி எறியும்படி அந்தப் புஸ்தகத்தில் என்னதான் இருக்கிறது? பார்த்துவிடலாம்!' என்ற தைரியமே முன் நின்றது.
"பிற்பாடு வருகிறேன்; இதைப் படித்துப் பார்த்துக் கொண்டே வருகிறேன்' என்று உத்ஸாகத்தோடு சொல்லி இராமசுவாமி முதலியாரிடம் விடை பெற்றுக்கொண்டு புறப்பட்டேன்.
ஜைன நண்பர்கள்
சேலம் இராமசுவாமி முதலியார் கொடுத்த சீவகசிந்தாமணிப் பிரதியைப் படிக்க ஆரம்பித்தேன். அதில் நச்சினார்க்கினியர் உரையும் இருந்தது. அது சீவகனைப் பற்றிய காவியம் என்பது மட்டும் எனக்குத் தெரிந்ததேயன்றி இன்ன கதையை அது சொல்வது, இன்ன வகையில் அது சிறப்புடையது என்பவற்றை அறியேன். தமிழ் நூற்பரப்பை ஒருவாறு அறிந்துவிட்ட தாக ஒரு நினைப்பு அதற்குமுன் எனக்கு இருந்தது. நான் கண்ட நூற் பரப்புக்குப் புறம்பேயிருந்த சிந்தாமணி எனக்கு முதலில் பணிவை அறிவுறுத்தியது.
சிந்தாமணி ஆராய்ச்சி
புஸ்தகத்தை எடுத்துக் கொண்டு உட்கார்ந்தேன்.
"மூவா முதலா வுலகம்மொரு மூன்று மேத்தத்
தாவாத வின்பந் தலையாயது தன்னி னெய்தி
ஓவாது நின்ற குணத்தொண்ணிதிச் செல்வனென்ப
தேவாதி தேவ னவன்சேவடி சேர்து மன்றே'
என்பது சிந்தாமணியிலுள்ள முதற்பாட்டு. இதிலுள்ள சொற்களில் பொருள் விளங்காதது ஒன்றுமில்லை. ஆனால் ஒரு நூலின் காப்புச் செய்யுளாக இருக்கும் அதில் எனக்கு ஒரு புதுமை தோற்றியது. நான் படித்த நூல்களில் உள்ள விநாயக வணக்கமோ, சடகோபர் காப்போ அதில் இல்லை. ஜைன சமயக் காவியத்தில் அந்த வணக்கங்கள் இருக்க நியாயமில்லை; பொதுவான கடவுள் வணக்கமாக அது முதலில் எனக்குத் தோற்றியது. "மூவா முதலாவுலகம்' என்ற தொடருக்கு மாத்திரம் எனக்குப் பொருள் தெளிவாகவில்லை.
உரையைப் படிக்கலானேன். நச்சினார்க்கினியர் முதலில் காவிய இலக்கணத்தை விரிவாக எழுதி யிருக்கிறார். பிறகு சொல்லிலக்கணம் முதலியன வருகின்றன. அக்காலத்தில் தொல்காப்பியம் எழுத்த திகாரம் இளம்பூரணமும் நச்சினார்க்கினியமும் சொல்லதிகாரம் சேனாவரையமும் அச்சிடப் பெற்றிருந்தன. அவற்றை நான் படித்திருந்தமையால் சிந்தாமணி உரையிலுள்ள எழுத்திலக்கணச் சொல்லிலக்கணச் செய்திகள் எனக்கு விளங்கின. உரையில், "மூவா முதலா வுலகம்மொரு மூன்றும்' என்பதற்கு, 'அந்தமும் ஆதியுமில்லாத மூவுலகமும்' என்று எழுதியிருந்தது. உலகம் நிலையாமையையுடையதென்ற விஷயத்தையே மிகுதியாகக் கேட்டுப் பழகியிருந்த எனக்கு இக்கருத்து, புதியதாக இருந்தது. மேலே படித்துக்கொண்டு போனேன். அந்த ஒரு பிரதியை மாத்திரம் வைத்துப் படிப்பது சிரமமாகவே தோற்றியது.
ஏட்டுப் பிரதி
அந்த வாரம் சனிக்கிழமை வழக்கம் போலவே திருவாவடு துறைக்குப் போய் இராமசாமி முதலியாரைச் சந்தித்தது முதல் நிகழ்ந்தவற்றையெல்லாம் சுப்பிரமணிய தேசிகரிடம் தெரிவித்தேன். கேட்ட தேசிகர் மிகவும் மகிழ்ச்சியடைந்து. "தக்க அறிவுடைய கனவான்களது பழக்கம் ஏற்படுவது மிகவும் நல்லதுதான்;
அவருக்கு ஜாக்கிரதையாகப் பாடம் சொல்லவேண்டும்; பிள்ளையவர்கள் எழுதிவைத்த சிந்தாமணி ஏட்டுப் பிரதி ஒன்று மடத்தில் இருக்கிறது' என்று சொல்லி அப்பிரதியை வருவித்து அளித்தார். "முதலியாருக்குப் பாடம் சொல்லும்படியிருப்பதால் சனிக்கிழமை மட்டும் வந்து ஞாயிற்றுக்கிழமை திரும்பிவிடலாம்' என்று கூறி விடைகொடுத்தார்.
கும்பகோணம் வந்து பிள்ளையவர்கள் பிரதியையும் முதலியார் தந்த பிரதியையும் வைத்துக்கொண்டு சிந்தாமணி யைப் படித்தேன். முதலியார் பிரதியில் மூலமும் பொழிப் புரையுமே இருந்தன. முதலில் சில பாடல்களுக்கு மாத்திரம் விசேட உரை இருந்தது.
பிள்ளையவர்கள் பிரதியிலோ முழுவதற்கும் விசேட உரை இருந்தது. "விசேட உரையை விட்டுவிட்டுத் தனியே பொழிப்புரையை மாத்திரம் எழுதிக்கொள்வ தில் என்ன லாபம்? இரண்டும் வேறு வேறு உரைகளோ' என்ற சந்தேகம் உண்டாயிற்று. கவனித்துப் பார்க்கையில் இரண்டும் ஒருவரது உரையே என்று தெரிந்தது. ஆனாலும் "இருவேறு வகையாகப் பிரதிகள் இருப்பது ஏன்?' என்ற ஐயம் விளங்கவில்லை.
தெரியாத விஷயங்கள்
அடுத்த நாள் இராமசுவாமி முதலியாரிடம் சென்று பாடம் சொல்லத் தொடங்கினேன். நாமகள் இலம்பகம் 1870-ஆம் வருஷம் பி.ஏ. பரீட்சைக்குப் பாடமாக இருந்தது. அப்போது படித்த முதலியார் தாம் பாடம் கேட்டபோது அறிந்த விஷயங்களை இடையிடையே சொன்னார். நான் பாடம் சொன்னபோது இடையில், "கட்டியங்காரன்' பெயர் வந்தது.
நான் அதை ஒருவருடைய பெயரென்று தெரிந்து கொள்ள வில்லை. "கட்டியக்காரன்' என்று படித்தேன். அப்போது முதலியார், 'நாமகள் இலம்பகக் கதை மாத்திரம் எனக்குத் தெரியும்; கட்டியங்காரன் என்பதுதான் அந்தச் சொல்; சச்சந்தனுடைய மத்திரிகளுள் ஒருவன் பெயர் அது; அவன்தான் சச்சந்தனைக் கொன்றான்' என்றார். பிறகு, "கோவிந்தன்' (சீவக சிந்தாமணி, 187, உரை) என்று ஒரு பெயர் வந்தது. அது கண்ணபிரானைக் குறிப்பது என்பதைத் தவிர சிந்தாமணியிலே யாரைக் குறிப்பதென்பது தெரியவில்லை. முதலியாருக்கும் அது விளங்கவில்லை. இப்படியே வேறு சில விஷயங்களும் விளங்காமலிருந்தன. எனக்கு விளங்காத விஷயங்களை விளங்கவில்லையென்று சொல்லித் தக்கவர்களைக் கேட்க வேண்டுமென்பேன். விளங்காததையும் விளங்கியதாகச் சொல்லிக் குழப்பாததை அறிந்த முதலியார் அதைப் பாராட்டுவார். நாங்கள் சிந்தாமணியைப் படித்து வந்தபோது சில வித்துவான் களும் வந்திருந்து கேட்பதுண்டு. இப்படி ஐந்து மாதங்கள் சென்றன.
சிந்தாமணி ஜைன நூலாதலின் விளங்காத விஷயங்களை ஜைனர்கள் மூலமாகத் தெரிந்து கொள்ளலாமென்று எண்ணி என்னிடம் வீட்டிற் பாடம் கேட்டுவந்த ராமலிங்க பண்டாரம் என்பவரை நோக்கி, "இந்தப் பக்கத்தில் ஜைனர்கள் யாரேனும் இருக்கிறார்களா? படித்தவர்களாக யாரையாவது தெரியுமா?' என்று கேட்டேன்.
அவர். "இங்கே இராமசாமி கோவில் மேல் தெருவில் ஜைனர்கள் வீடுகள் உண்டு. எல்லோரும் செல்வர்களே. அவர்களுள் படித்தவர்களும் இருக்கிறார்கள்' என்று சொன்னதைக் கேட்டபோது உடனே போய் அவர்களைப் பார்க்கவேண்டுமென்று விரும்பினேன்.
சந்திரநாத செட்டியார்
மறுநாள் என் விருப்பத்தின்படி ராமலிங்க பண்டாரம் என்னை அழைத்துக்கொண்டு ஜைனர்கள் வசிக்கும் தெருவிற்குச் சென்றார். அங்கே தமக்குத் தெரிந்த சந்திரநாத செட்டியார் என்பவர் வீட்டினுள் என்னை அழைத்துப் போனார். அந்த வீட்டின் வாயிலில் மாக்கோலம் போடப்பட்டிருந்தது. நிலைகளில் மாவிலைத் தோரணம் கட்டி அலங்காரம் செய்திருந்தார்கள். "இன்றைக்கு ஏதோ விசேஷம் போலிருக்கிறது' என்று எண்ணி உள்ளே சென்றோம்.
அங்கே கூடத்தில் பலர் கூடியிருந்தனர். அக்கூட்டத்தி லிருந்த ஒரு கனவானைக் காட்டி, "இவர்களே சந்திரநாத செட்டியாரவர்கள்' என்று ராமலிங்க பண்டாரம் சொல்லி என்னையும் அவருக்குப் பழக்கம் பண்ணி வைத்தார்.
வாழை, தோரணம் இவையெல்லாம் கட்டி அலங்காரம். செய்திருக்கிறதே: ஏதாவது விசேஷ முண்டோ?' என்று கேட்டேன். "இன்றைக்குச் சிந்தாமணி பூர்த்தியாயிற்று; அந்த விசேஷத்தைக் கொண்டாடுகிறோம்' என்று அவர் சொன்னார்.
எனக்கு மிக்க ஆச்சரியமுண்டாயிற்று. "நாம் சிந்தாமணியைப் பற்றித்தான் கேட்க வந்திருக்கிறோம்.
சிந்தாமணி பூர்த்தியாயிற்று என்று இவர் சொல்லுகி றார்; சிந்தாமணியைப் பாராயணம் செய்வது இவர்கள் சம்பிரதாயம் போலிருக்கிறது' என்றெண்ணி, "சிந்தாமணியைப் படித்து வந்தீர்களா?' என்று கேட்டேன்.
"ஆமாம். நான் சிரவணம் செய்து வந்தேன். இவர்கள் பாடம் செய்து வந்தார்கள்' என்று சொல்லி எதிரே அமர்ந்திருந்த ஒருவரைச் சுட்டிக் காட்டி, "திண்டிவனம் தாலூகாவிலுள்ள வீடூர் என்பது இவர்கள் கிராமம். தமிழிலும், வடமொழியிலும், பிராகிருதத் திலும் உள்ள ஜைன கிரந்தங்களிலும் உரைகளிலும் மிகுதியான பழக்கமுள்ளவர்கள். இவர்களைப் போன்றவர்கள் யாருமில்லை. இவர்கள் திருநாமம் அப்பாசாமி நயினாரென்பது' என்று தெரிவித்தார். எனக்காகவே அவர் அங்கே வந்திருப்பதாகத் தோற்றியது.
"நாம் எந்த விஷயத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்புகிறோமோ அந்த விஷயத்தில் தேர்ச்சியுள்ள வர்களை எதிர்பாராமலே பார்க்கிறோம். அதே விஷய சம்பந்தமான உத்ஸவம் வேறு நடக்கிறது. இது தெய்வச் செயலே' என்று எண்ணிப் பூரிப்பை அடைந்தேன்.
எவ்வளவு காலமாக இவர்கள் இங்கே இருக்கிறார்கள்?' என்று கேட்டேன்.
"ஆறு மாதமாக இந்தப் பாடம் நடந்து வருகிறது.'
"இந்த ஆறு மாதங்களை நாம் வீண்போக்கி விட்டோமே!' என்ற வருத்தம் எனக்கு உண்டாயிற்று.
அந்தப் பெரியவர் மிக்க அடக்கமுடையவராகவும் மெல்ல வார்த்தை சொல்பவராகவும் இருந்தார்.
அவரிடம் நானும் சிந்தாமணியைப் படித்து வருவதைப் பற்றிச் சொன்னேன். " அதில் கோவிந்த னென்று வருகிறது; அது யாருடைய பெயர்?' என்று கேட்டேன்.
அவர் சாதாரணமாக, "விஜயையின் சகோதரன். விஜயை சச்சந்தனுடைய மனைவி' என்றார். வேறு சில ஐயங்களை வினவினேன். தெளிவாக பதில் கிடைத்தது. சிந்தாமணியைப் படிப்பதற்கு ஒரு தக்க துணை அகப்பட்டதென்ற நம்பிக்கை உண்டாயிற்று. சந்திரநாத செட்டியாரும் சில விஷயங்களை விளக்கினார். கதையையும் எடுத்துச் சொன்னார்.
விளங்கிய விஷயங்கள்
அன்று முதல் சந்திரநாத செட்டியார் எனக்கு நல்ல நண்பராகிவிட்டார். ஜைனர்கள் சீவகசிந்தாமணியைச் சிறந்த பாராயண நூலாகக் கருதுகிறார்களென்பதும், நம்மவர்கள் இராமாயணம் முதலியவற்றைப் பாராயணம் செய்து பட்டாபிஷேகம் செய்வதுபோல அவர்களும் அந்த நூல் நிறைவேறியவுடன் அந்த நிறைவேற்றத்தைக் கொண்டாடுவார்களென்பதும் எனக்குத் தெரியவந்தன. சம்பிரதாயமாகப் படித்தவர்களிடையே சிந்தாமணிக்கு ஓர் உரையாய் மூலமாக வழங்கி வந்தது. அதை அவர்கள் சொல்லு வார்கள். மணிப்பிரவாள நடையில் மத சம்பந்தமான பரிபாஷைகள் மிகுதியாகக் கலக்கப் பெற்று விளங்கு வது அவ்வுரை. அதன் பகுதிகளை அவ்வப்போது சந்திரநாத செட்டியார் சொல்ல நான் கேட்டு இன்புற்றேன்.
சிந்தாமணி உரையில் அங்கங்கே, நச்சினார்க்கினியர் அந்நூற் செய்யுட்பகுதிகளை மேற்கோளாகக் காட்டியிருக்கிறார். நூல் முழுவதும் நன்றாகப் படித்து மனனஞ் செய்தாலன்றி அச்செய்யுட்கள் இன்ன இடத்தில் இருக்கின்றனவென்பது விளங்காது. அந்தச் செய்யுட் பகுதிகளைச் சந்திரநாத செட்டியாரிடம் சொல்வேன்; அவர் பளிச்சுப் பளிச்சென்று இன்ன இடத்திலிருக்கின்றனவென்று சொல்லி முழுப் பாட்டையும் சொல்வார். சிந்தாமணி விஷயத்தில் அவர் ஓர் அகராதியாக இருந்தார்.
சிந்தாமணி சம்பூரண உத்ஸவம் முடிந்த பிறகும் அப்பாசாமி நயினார் சில காலம் கும்பகோணத் தில் தங்கியிருந்தார். பிறகு தம் ஊர் சென்றார். இடையிடையே கும்பகோணம் வந்து செல்வார்.
அவர் வந்த காலங்களிலெல்லாம் ஜைன சம்பிரதாயங் களையும் ஜைன சமயக் கருத்துக்களையும் விளக்க மாகத் தெரிந்துகொள்வேன்.
ஜைன அன்பர்களுடைய பழக்கத்தால் ஏட்டுப் பிரதிகள் இரண்டு வகையாக இருந்ததற்குக் காரணம் தெரிந்துகொண்டேன். நச்சினார்க்கினியர் முதலில் சிந்தாமணிக்கு ஓர் உரை எழுதினாராம். பிறகு அதை ஜைனர்களிடம் படித்துக் காட்டியபோது சம்பிரதாய விரோதமாகச் சில பகுதிகள் உள்ளனவென்று சொன்னார்களாம். அதனால் அவர் தம்மை ஒரு ஜைனராகச் சொல்லிக்கொண்டு சிற்றாம்பூர் என்னும் இடத்திலுள்ள ஜைன மடத்திற்கு வந்து சில காலம் தங்கி ஜைன நூல்களையும் ஜைன சம்பிரதாயங்களையும் சுற்றுச் சென்று மீட்டும் புதிய உரையை எழுதினாராம். விசேஷ உரையுடன் இருக்கும் பிரதியிலுள்ளது பின்பெழுதிய உரையென்று தெரியவந்தது.
இப்படி நூலாராய்ச்சியால் புலப்படாமல் கர்ண பரம்பரையாகக் கேட்டுத் தெரிந்த செய்திகளால் பல விஷயங்கள் எனக்கு விளங்கின. சிந்தாமணியின் நூலாசிரியராகிய திருத்தக்க தேவர் வரலாறு அவ்வாறுதான் எனக்குத் தெரிந்தது.
இராமசுவாமி முதலியார் பாடம் கேட்டு வந்தார்.
அங்கங்கே சிந்தாமணி நூலின் நயத்தையும் உரை நயத்தையும் அறிந்து அவர் பாராட்டுவார். கோவிந்தையாரிலம்பகத்தின் முதற் செய்யுளுரையில் "வீரன்றாணிழல் என்பதற்குச் சமவசரணம் என்று பொருள் எழுதப்பட்டிருந்தது. அந்தத் தொடர் எதைக் குறிக்கிறதென்று எனக்கு விளங்கவில்லை. விளங்காவிட்டால் விடுவேனா? சந்திரநாத செட்டியாரிடம் போய்க் கேட்டேன். சமவசரணமென்பது பெரிய ஜைனாலய மென்று தெரியவந்தது. அதற்குப் பல அங்கங்கள் உண்டென்று சந்திரநாத செட்டியார் சொல்லி, "என் வீட்டிற்கு எதிரே குணபால செட்டியார் என்பவர் வீடு இருக்கிறது. அவ்வீட்டில் சமவசரணத்தின் படம் உண்டு. அதைப் பார்த்தால் அதன் விஷயம் நன்றாகத் தெரியும்' என்று சொன்னார்.
பவ்ய ஜீவன்
அப்படியே அவ்வீடு சென்று குணபால செட்டியாரைக் கண்டு பேசினேன். அவர் சமவசரணத்தின் படத்தை எனக்குக் காட்டினார். அதிலிருந்து சமவசரணத்தின் உறுப்புக்கள் எனக்குத் தெளிவாகத் தெரியவந்தன. குணபால செட்டியார் ஜைன சம்பிரதாயம் தெரிந்தவர். அவரைவிட அதிகமாக அவர் மனைவியாருக்குத் தெரியும்.
நான் அவ்வீட்டுக்குப் போன அன்று சமவசரணப் படத்தைப் பார்த்ததோடு ஜைன சமய சம்பந்தமான சில விஷயங்களை விசாரித்தேன். அவர் தமக்குத் தெரிந்தவற்றைச் சொல்லிவிட்டு மற்ற விஷயங்களை விளக்குவதற்காகத் தம் மனைவியாரை அழைத்து வந்தார். அவர் ஜைன சமய விஷயங்களில் பெரிய நிபுணரான தரணி செட்டியார் என்பவருடைய சகோதரியார். அவர் மூலமாகச் சில விஷயங்களைத் தெரிந்துகொண்டேன். நான் கேட்கும் கேள்விகளிலிருந்து அப்பெண்மணியார் நான் ஜைன சமய நூல்களில் பயிற்சியுடையவனென்று எண்ணி, "இவர்கள் பவ்ய ஜீவன் போல் இருக்கிறதே' என்று தம் கணவரிடம் சொன்னார். பக்குவ ஆன்மாக்களைப் பவ்ய ஜீவனென்பது ஜைன சம்பிரதாயம். நச்சினார்க்கினியர் சிந்தாமணிக்கு ஜைனர்களுடைய சம்மதத் தைப் பெற்று உரை எழுதியபோது எவ்வளவு சந்தோஷத்தை அடைந்திருப்பாரோ அவ்வளவு சந்தோஷத்தை அப்போது நான் அடைந்தேன். "சிந்தாமணி ஆராய்ச்சிக்கு நீ தகுதியுடையவன்' என்ற யோக்கியதா பத்திரத்தை அந்த ஜைன விதுஷி அளித்ததாகவே நான் எண்ணினேன்.
சமுத்திர விஜயம் செட்டியார்
இந்த ஜைன நண்பர்களோடு அதே தெருவில் இருந்தவரும் மிக்க செல்வரும், தரணி செட்டியாரு டைய மருகருமாகிய சமுத்திர விஜயம் செட்டியாரு டைய பழக்கமும் எனக்கு உண்டாயிற்று. அவருடைய துணையினால் எனக்குச் சில ஜைன நூல்கள் இரவலாகக் கிடைத்தன.
நச்சினார்க்கினியர் உரை
இவ்வாறு ஜைனர்களுடனும் ஜைன நூல்களுடனும் இடைவிடாது பழகியபோது சிந்தாமணியின் அருமை வர வர எனக்கு நன்கு புலப்படலாயிற்று. செந்தமிழ்க் காவியங்களுக்கெல்லாம் அதுவே உரையாணி என்பதை அறிந்துகொண்டேன். அதனுடைய போக்கிலே உள்ள கம்பீரமும் சொல்லாட்சிச் சிறப்பும் என் மனத்தைக் கவந்தன.
நச்சினார்க்கினியர் உரையினால் புதிய புதிய விஷயங்களை உணர்ந்தேன். இரண்டு விஷயங்களில் அவரிடம் சிறிது வருத்தம் உண்டாற்று பல இடங் களில் மாறிக் கூட்டிப் பொருள் விளக்குகிறார். ஓரிடத்திலுள்ள பாட்டிலிருக்கும் சொல்லைப் பல பாட்டுக்கு முன்னே மற்றோரிடத்திலுள்ளதோடு இணைத்து மாட்டெறிகின்றார். அத்தகைய இடங்களில் அவர் உரையில் சிறிது வெறுப்புத் தட்டியது. ஒரு விஷயத்துக்கோ சொற்பிரயோகத்துக்கோ ஒரு நூற் செய்யுட் பகுதியை மேற்கோள் காட்டுமிடத்தில் அந்த நூற் பெயரைச் சொல்வதில்லை. "என்றார் பிறரும்' என்று எழுதிவிட்டுவிடுகிறார். சிந்தாமணிப் பாட்டாக இருந்தால் சந்திரநாத செட்டியார் இருக்கிறார்.
வேறு நூலாக இருந்தால் என்ன செய்வது! அவர் மேற்கோளாகக் காட்டும் உதாரணங்களோ நான் படித்த நூல்களிலே இல்லாதன. அவர் உதாரணங்கள் காட்டும் அந்த நூல்களின் தொகுதியே ஒரு தனி உலகமாக இருக்குமோ என்ற மலைப்பு எனக்குத் தோற்றியது. "நூற்பெயரையாவது இந்த மனிதர் சொல்லித் தொலைக்கக் கூடாதா?' என்று அடிக்கடி வருத்தம் உண்டாகும். ஆனாலும் அந்த மகோபகாரியின் அரிய உரைத்திறத்தின் பெருமையை நான் மறக்க வில்லை. சுருக்கமாக விஷயத்தை விளக்கிவிட்டு எது நுணுக்கமான விஷயமோ அதற்கு அழகாகக் குறிப்பு எழுதுகிறார். அவர் எழுதும் பதசாரங்கள் மிக்க சுவையுடையன. அவர் அறிந்த நூல்களின் பரப்பு ஒரு பெருங்கடலென்றே சொல்லவேண்டும். இவ்வளவு சிறப்புக்களுக்கிடையே முன்சொன்ன இரண்டு குறைபாடுகளும் மறைந்து விடுகின்றன.
சிந்தாமணி நயம்
இராமசுவாமி முதலியாருக்குப் பாடம் சொல்லுவதாக ஆரம்பித்த சிந்தாமணி ஆராய்ச்சி வரவர எனக்கு இன்பந்தரும் ஒரு பொழுது போக்காகி விட்டது. காலேஜிலும் வீட்டிலும் பாடம் சொல்லும் நேரம் போகச் சிந்தாமணியைப் படிப்பதிலே ஆழ்ந்திருந்தேன். அனபாய சோழ மகாராஜா சீவகசிந்தாமணியைப் படித்து அதன் நயத்திலே ஈடுபட்டி ருந்தாரென்றும் அப்போது சேக்கிழார் ஜைனர்கள் கட்டிய கதை அந்நூல் என்று சொன்னாரென்றும், நான் வாசித்திருந்தேன். அந்தச் சோழ சக்கரவர்த்தியின் உள்ளத்தைப் பிணிக்கும் காவியரஸம் அந்த அரிய நூலில் இருப்பது உண்மையென்றே நான் உணர்ந் தேன். அது "பொய்யே கட்டி நடத்திய சிந்தாமணி'யானால் நமக்கென்ன? நாம் வேண்டுவன சொற்சுவையும் பொருட்சுவையும் தமிழ் நயமுமே; அவை நிரம்பக் கிடைக்கும் காவியமாக இருக்கும்போது அதைப் படித்து இன்புறுவதில் என்ன தடை?
நான் கொடுத்த வாக்கு சிந்தாமணிப் பாடத்தில் காந்தருவ தத்தையாரிலம் பகத்தில் பாதி நடந்திருந்தது. அக்காலத்தில் முதலியார் தம் வேலையை ராஜினாமாச் செய்துவிட்டு ஒரு கட்டுப்பாடுமின்றி வாழவேண்டுமென்றும் சென்னைக்குச் சென்று வக்கீலாக இருக்கலாமென்றும் எண்ணிக் குடும்பத்துடன் புறப்பட்டார். புறப்படுங்காலத்தில் என் வீட்டுக்கு வந்தார்; "சிந்தாமணியின் பெருமையை நீங்கள் இப்போது நன்றாக உணர்ந்திருக்கிறீர்கள். இந்த அருமையான காவியம் படிப்பாரற்று வீணாகப் போகாமல் நீங்கள் பாதுகாக்கவேண்டும். இன்னும் சில பிரதிகள் சம்பாதித்து நீங்களே அச்சிட்டு வெளிப்படுத்தவேண்டும். அதைப் போன்ற உபகாரம் வேறு ஒன்றும் இல்லை' என்று சொன்னார். நான், "என்னால் இயன்ற அளவு முயன்று அப்படியே செய்கிறேன்' என்று வாக்களித்தேன். அவர் விடை பெற்றுச் சென்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/13/uvesa-2025-12-13-13-01-46.jpg)