சுமார் 65 வயதுடைய ஒருவர், 33 வயதுடைய தன் மகளுடன் நாடியில் பலன்கேட்க வந்திருந்தார். இருவரையும் அமரவைத்து "என்ன விஷயமாகப் பலனறிய வந்துள்ளீர்கள்' என்றேன்.
ஐயா, "இவர் எனது மகள். இதுவரை சரியான குடும்ப வாழ்க்கை அமைய வில்லை. இவளின் தலைவிதிதான் என்ன வென்று தெரிந்து கொள்ள வந்தோம்'' என்றார்.
ஜீவ நாடி ஓலையில் அகத்தியர் பலன் கூறத் தொடங்கினார்.
இவன் தன் மகளின் குடும்ப வாழ்க்கையைப் பற்றி கேட்டான். ஆனால் இதுவரை அவள் வாழ்வில் நடந்த நிகழ்வுகள் பற்றி எதையும் கூறவில்லை. இதுவரை நடந்ததைக் கூறிவிட்டு, அதற்குக் காரணத்தையும் கூறுகின்றேன். அதன்பின்பு, இனி நடக்க வேண்டியதைக் கூறுகின்றேன்.
இந்த மகள் படிக்கும்போதே ஒருவனை விரும்பிப் பழகினாள். அவனையே மணந்து கொள்ள வேண்டும் என்று இவனிடம் கூறினாள்.
ஆனால் இவன் மகளின் விருப்பத்திற்குச் சம்மதிக்கவில்லை. தந்தையை எதிர்த்து இவள் தான் விரும்பியவனுடன் வீட்டைவிட்டு ஓடிப்போனாள். சுமார் ஆறு மாதகாலம் அவனுடன் வாழ்ந்தாள். அந்த ஆறு மாதகால குடும்ப வாழ்விலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. காதலன்- காதலி என்ற உறவு நிலையில் ஒருவர்மீது ஒருவருக்கு இருந்த பாசம் கணவன்- மனைவி என்ற பந்தம் ஏற்பட்டவுடன் இருவருக்கும் பாசம் மாறியது. இருவருக்கும் ஒத்துப் போகவில்லை. கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவன் இவளை விட்டு விலகிப்போனான். பெற்றவர்கள் மனதைக் கலங்கவைத்து பிரியமானவனுடன் ஓடிப்போன இவள். மறுபடியும் பிறந்த வீட்டிற்கு திரும்பினாள்.
நான்கு வருடங்கள் பெற்றோருடன் வசித்தாள். இவளின் 27 வயதில் தன் இனத்திலேயே, பொருத்தம் பார்த்து, நல்ல முகூர்த்த நாளில் ஒருவனுக்கு திருமணம் செய்துவைத்தார்கள். திருமணம் முடிந்த ஒருவருட காலத்தில் கணவன்- மனைவி இருவரும் வாகனத்தில் சென்றபோது, விபத்து ஏற்பட்டு அதில் கணவன் இறந்துபோனான். ஆனால் இவள் பிழைத்துக்கொண்டாள். இவளாகவே விரும்பி அமைத்துக்கொண்ட வாழ்க்கையும் சரியாக அமையவில்லை, பெற்றவர்கள் செய்துவைத்த திருமண வாழ்வும் நிலைக்கவில்லை. கணவன் இறந்த பிறகு, அந்த வீட்டில் வாழ விருப்பம் இல்லாமல் தான் பிறந்த வீட்டிற்கே திரும்பவந்து, கடந்த ஆறு வருடமாக தாய்- தந்தையுடன் வசித்துவருகின்றாள்.
இந்த மகளுக்கு இரண்டு கணவன், இரண்டு குடும்ப வாழ்க்கை அமைந்து முடிந்துபோனது.
இப்போது அவளின் எதிர்கால வாழ்க்கை நிலைபற்றி அறிந்துகொள்ள என்னைத்தேடி வந்துள்ளான். இந்த பிறவியில் மகள் வாழ்வில் நடந்ததைக் கூறினேன். இந்த விதி நிலைக்கு காரணம் என்ன என்பதை இப்போது கூறுகின்றேன்.
இவள் தன் முன்பிறவியில் கணவனுக்குச் செய்த துரோகமும், பாவமும் இப்பிறவியில் ஒரு கணவனுடன் நிம்மதியான குடும்ப வாழ்க்கையை அனுபவித்து, வாழ முடியாமல் தடைசெய்து வருகின்றது.
முன்பிறவியில் இவள் ஒருவனை திருமணம் புரிந்தாள். அவன் அமைதியான குணம், எளிமையான வாழ்க்கையை விரும்பி வாழ்ந்தான். பொருளாதார வசதியும் அதிகமில்லை. தன்னிடம் இருப்பதைக்கொண்டு நிம்மதியாக வாழ்ந்தான். ஆனால் இவளோ, கணவனின் குணத்திற்கு நேர்மாறான குணம்கொண்டு இருந்தாள். முன்கோபம், ஆணவம், அகங்கார குணம் இருந்தது. அதே போன்று மற்றவர்கள் தன்னைப் பெரிய பொருளாதாரம் , அந்தஸ்து உள்ளவளாக காட்டிக்கொள்ளவும், ஆடம்பரமாக வாழ ஆசை கொண்டவளாக இருந்தாள்.
இவள் தான் விருப்பம்போல் செலவு செய்து, ஆடம்பரமாக வாழ்வதற்கு, பணம் இல்லை, கணவனும் அந்த அளவு பணம் சம்பாதித்து தர முடியாதவனாக இருக்கின்றான். அதனால் கணவன் மீது வெறுப்பு உண்டானது. கணவனை மதிக்க மாட்டாள். தரக்குறைவாக பேசுவாள். பிறர் தன்னை மதிக்கவேண்டும் என்பதற்காக கையில் இருந்த பணம், நகைகளையும் விற்று செலவு செய்தாள். அதன்பிறகு கணவனுக்கு சொந்தமாக இருந்த சிறிதளவு பூர்வீக நிலத்தையும் விற்றாள். இதனால் கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடு உண்டானது. குடும்ப அமைதி குறைந்தது.
பணம் தேவைக்காக எதையும் செய்யலாம் என்ற துணிவு உண்டானது. அதே ஊரில் , கொஞ்சம் வசதியுள்ளவன் ஒருவனுடன் பழக்கம் உண்டானது. அவனும் இவள் விரும்பியதையெல்லாம் செய்துகொடுத்து, சந்தோஷப்படுத்தினான். இருவரும் சேர்ந்து வாழ முடிவெடுத்து, அதற்கு தடையாக இருக்கும் கணவனைக் கொன்றார்கள். தகாத உறவால் தன் தாலியைத் தானே அறுத்துக் கொண்டாள்.
கணவனைக் கொன்றதால் இருவரும் தண்டனை அடைந்தார்கள். இவளின் கள்ளப் புருஷன், தண்டனையை அனுபவித்துக் கொண்டு இருக்கும்போதே இறந்தான். தண்டனை காலம் முடிந்து ஊருக்குள் வந்தபோது ஊராரும், உறவுகளும் ஒதுக்கினார்கள்.
பெற்றவர்களும், இவளை மகள் என்று ஏற்றுக் கொள்ளவில்லை. ஒருவர் உதவியும் கிடைக்காததால் அந்த ஊரைவிட்டு வாழ வேறு ஊர் சென்றாள்.
இவள் பிழைக்க சென்ற ஊரில் ஒரு வயதான தம்பதியினர், தங்கள் குழந்தைகள் வெளியூரில் வசிக்க இவர்கள் மட்டும் தனியாக வசித்தனர். இவளின் நிலை அறிந்து தங்களுக்கு உதவியாக, வேலைக்காரியாக வைத்துக்கொண்டார்கள். அவர்களுடனேயே அனாதைபோல் வாழ்ந்து இறந்தாள்.
முன்பிறவியில் கட்டிய கணவனுக்கு செய்த துரோகமும், கொலை பாவமும், இப்பிறவியில் குடும்ப வாழ்க்கையை தடை செய்கின்றது. முன்பிறவியில் முதலில் கணவனுடனும் பின் காதலனுடனும் வாழ்ந்தாள். இப்பிறவியில் முதலில் காதலனுடனும், பின் கணவனுடனும் வாழ்ந்தாள். ஆனால் கர்மவினை பாவ- சாபம் இரண்டையும் தடுத்தது.
இந்த பிறவியில் இவனுக்கு தடையாகும் தாலி பாக்கியம், தடை விலகி ஒரு குடும்ப வாழ்க்கை அமைய நான் கூறும் நிவர்த்தி களையும், பிரார்த்தனைகளையும் செய்யச் சொல். கணவனுடன் நல்ல குடும்ப வாழ்க்கை அமையும் என்று சில வழிமுறைகளை கூறி விட்டு ஓலையில் இருந்து மறைந்தார்.
அகத்தியர் கூறியபடியே அனைத்தையும் முழுமையாக செய்கின்றேன் என்று கூறி தந்தையும் மகளும் என்னிடம் விடை பெற்றுச் சென்றார்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/07/2026-02-07t115543118z-newsdesk-2026-02-07-17-25-38.jpg)
/nakkheeran/media/media_files/2026/02/27/agathiyar-2026-02-27-15-57-55.jpg)