ஓவியர், எழுத்தாளர், மொழி பெயர்ப்பாளர், இலக்கியச் செயற்பாட்டாளர் எனப் பன்முகத்தன்மை கொண்ட கவிஞர் இந்திரன், தனது இளைய மகளைக் காண்பதற்காக அயர்லாந்து தேசத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில், தமிழ்மொழி மீதும், இலக்கியத்தின் மீதும் பற்றுக்கொண்ட கவிஞர் இந்திரன், அயர்லாந்தின் தலைநகரான டப்ளின் நகரிலுள்ள இந்தியத் தூதரகத்தில் 'தமிழ் மொழியின் தனித்தன்மை மற்றும் இலக்கியச் செழுமை' என்ற தலைப்பில், சிறப் பாக உரையாற்றியுள்ளார்.
டப்ளினில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தின் முதன்மைச் செயலாளராக பொறுப்பு வகிக்கும் முருகராஜ் தாமோதரன் தமிழ் இலக்கியத்தில் மிகுந்த ஆர்வமுள்ளவர். திருவள்ளுவரின் பெருமையைப் போற்றும்விதமாக நூல் எழுதியுள்ளார். அதேபோல், ஐ.எஃப்.எஸ். படிக்க விரும்புவோருக்காக "வாகை சூடுவீர்' என்ற நூலையும் எழுதியுள்ளார். இவர், கவிஞர் இந்திரனைத் தொடர்புகொண்டு, அயர்லாந்து - இந்தியாவுக்குமான நட்புறவு குறித்த நிகழ்ச்சியில் தமிழ் மொழியின் தனித்தன்மை குறித்து உரையாற்ற அழைத்தார். டப்ளின் தூதரகத்தின் இந்தியத் தூதுவரான அகிலேஷ் மிஷ்ரா, சமஸ்கிருதம், நேபாளி, இத்தாலி, இந்தி உள்ளிட்ட மொழிகளில் புலமைமிக்கவர். அயர்லாந்தில் 2022ஆம் ஆண்டு முதல் பணியாற்றிவருகிறார்.
நிகழ்ச்சியில் பங்கெடுத்துப் பேசிய கவிஞர் இந்திரன், "தமிழ் மொழி, உலகில் மிக மிக முக்கியமான மொழி என்று தமிழின் தொன்மை குறித்து குறிப்பிட்டவர், வெறுமனே தமிழின் தொன்மையை வைத்து மட்டுமே நாம் பெருமைப்பட்டுக்கொள்வதில்
அர்த்தமில்லை. தமிழின் தற்காலத் தன்மையை பார்க்கவேண்டும். தமிழ் மொழி ஒன்று மட்டுமே, 2000 ஆண்டுகளைக் கடந்தும், இன்றைய இணைய உலகிலும் தனித்தன்மையுடன், பல்வேறு எழுத்துருக்களைக் கொண்டிருக்கிறது. தனக்கென உலகளாவிய அளவில் ஒருங்குறி என்ற எழுத்துருவின் மூலம் உலகத் தமிழர்களால் இணையத்திலும், வாட்சப், முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களிலும் பயன்பாட்டில் இருந்துவருகிறது.
2000 ஆண்டுகளுக்கு முன்பே, 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்றுரைத்தார் கணியன் பூங்குன்றனார். பிறப்பால் அனைவரும் வேறுபட்டவர்கள் என்று சொன்னதற்கு எதிராக, மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வு இல்லாத நிலையை சங்கப் புலவர் 2000 ஆண்டுகளுக்கு முன்னாலேயே பேசியிருக்கிறார். இதன்மூலம் உலகுக்கு மனிதநேயத்தையும், அன்பையும் அப்போதே கற்றுக்கொடுத்திருப்பது தமிழ் மொழியின் சிறப்பல்லவா?
அயர்லாந்து தேசத்துக்கும் தமிழ் மொழிக்கும், தமிழ்நாட்டுக்கும் வரலாற்றுத்தொடர்பு இருக்கிறது.
அயர்லாந்திலுள்ள கிளாடி என்ற கிராமத்தில் பிறந்த ராபர்ட் கால்டுவெல் என்ற கிறிஸ்தவ மதபோதகர், கட்டட வரைகலையில் நிபுணர். கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் மொழியியல் படித்துவிட்டு, தனது 22-ஆவது வயதில் இந்தியாவுக்கு வந்தார். இந்தியாவுக்கு கப்பலில் வரும்வழியில், கடலில் கப்பல் விபத்துக்குள்ளாகி உடைந்ததில், அதில் பயணித்த 6 பேர் மட்டுமே உயிர்தப்பினார்கள். அவர்களில் ஒருவர் கால்டுவெல். சென்னைக்கு வந்தவர், சென்னையிலிருந்து நடந்தே தென்தமிழ்நாட்டிலுள்ள இளையான்குடிக்கு வந்தார். இங்கே மதபோத கராகத் தங்கியிருந்த காலத்தில், தமிழ், தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம் போன்ற மொழிகளைக் கற்கிறார். இதுகுறித்து ஆய்வுசெய்ததில், தமிழ் மொழியானது, சமஸ்கிருதத்தோடு தொடர்பின்றி தனித்து இயங்கும் தன்மைகொண்டது என்பதை கண்டறிந்து உலகிற்கு சொல்கிறார்.
கால்டுவெல் தொடர்ந்து, ஆ ஈர்ம்ல்ஹழ்ஹற்ண்ஸ்ங் ஞ்ழ்ஹம்ம்ஹழ் ர்ச் ற்ட்ங் உழ்ஹஸ்ண்க்ண்ஹய் ப்ஹய்ஞ்ன்ஹஞ்ங்ள் அதாவது, திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை எழுதினார். தமிழ் மொழியானது, உலகப் புகழ்பெற்ற கிரேக்கம், லத்தீன், ஹீப்ரூ, சமஸ்கிருதம் போன்ற மொழிகளைப்போல் சமமாக, தனித்து நிற்கக்கூடிய உலக மொழி என்று அறிவித்தார். இந்தோலி ஆரிய மொழிகளில் பழமையானது சமஸ்கிருதம். அதோடு தொடர்பில்லாத திராவிட மொழிகளுக்கெல்லாம் தொன்மையானது தமிழ் எனக் குறிப்பிட்டார். எனவே தமிழுக்கு ஒரு புதிய உயிர் கொடுத்து வளர்த்தது, தமிழ் மொழியை செம்மொழி என்று முதன்முதலில் சொன்னவரே அயர்லாந்து நாட்டிலிருந்து வந்த ஒரு மொழியியல் அறிஞர்தான். இந்த வகையில், அயர்லாந்து நாட்டுக்கும் தமிழ் மொழிக்கும் நேரடியான தொடர்பு இருக்கிறது. அவர் நம்முடைய தமிழ் மொழி குறித்து ஆய்வுசெய்து, பெருமைசேர்த்துள்ளார்.
அடுத்ததாக, தமிழ் மொழியின் இலக்கியச் செழுமை குறித்து குறிப்பிடுவதானால், தமிழ் மொழி, சூழலியலை, இயற்கையோடு இணைந்த வாழ்வை மையமாகக் கொண்ட இலக்கணம் கொண்டது. தொல்காப்பியர் இயற்கையோடு இயைந்து இலக்கணத்தை எழுதியவர். அன்றைய காலத்திலேயே தொல்காப்பியர், தனது தொல்காப்பியத்தில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐவகை நிலங்களை வைத்து திணைக் கோட்பாடு என்பதை உருவாக்கினார். இயற்கையோடு இணைந்து தான் ஒரு இலக்கணத்தை தமிழ் மொழிக்கு உருவாக்கினார். உலகிலுள்ள எந்த இலக்கண அறிஞரும் இதுபோன்று எழுதியதில்லை.
அடுத்து, சங்க இலக்கியம் காட்டும் நற்றிணையில் வரக்கூடிய ஒரு கவிதையில், காதலனும், காதலியும் பேசும்போது, பக்கத்தில் நிற்கும் மரத்தை, 'என்னுடைய மூத்த சகோதரி இவள், இவள் எதிரில் காதல் பேச வேண்டாம்' என்று காதலி சொல்வதாக ஒரு காட்சி வருகிறது.
இயற்கையை தன்னுடைய சகோதரியாக நினைப்பது ஓர் ஆதிவாசி மனநிலை. 'கடவுளுக்கு முன் பிறந்தவர்கள்' என்ற புத்தகத்தின் மூலம் ஆதிவாசிக் கவிதைகளை முதன்முதலில் தமிழில் நான்தான் கொண்டுவந்தேன். அந்த ஒரு கவிதையில், காதலனும் காதலியும் எப்படி இயற்கையை நேசிக்கிறார்கள் என்பது காட்டப்பட்டிருக்கும்.
இந்த ஆதிவாசி மனநிலை,இவ்வுலகில் மனிதன் தான் தலைவன் என்பதில்லாமல், புழு, பூச்சி, வண்ணத்துப்பூச்சி, மான், யானை என அனைத்துமே நம் உடன்பிறந்த உயிர்கள்தான். உலகம் மனிதனுக்கு மட்டுமே உரியது அல்ல என்ற சூழலியல் தத்துவத்தை வெளிக்காட்டும். இதுதான் தமிழின் தனித்தன்மை.
'இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக இவ்உலகியற்றியான்' என்ற திருக்குறளானது, பிச்சை எடுத்துத்தான் உயிர்வாழ வேண்டும் என்ற நிலை இருந்தால், இந்த உலகைப் படைத்த கடவுளும் அதேபோல் சாகட்டும் என்று அதிதீவிரமான கருத்தை பேசுகிறது. இப்படியாக சொல்லக்கூடிய புலவர் திருவள்ளுவர் தமிழ் மொழியில் இருந்தது தமிழ் மொழிக்கு பெருமையல்லவா?
'செப்புமொழி பதினெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள்' எனும் கவிதையின் மூலமாக, தமிழ் மொழியானது, தேசிய ஒற்றுமையை வலியுறுத்துகிறது. இந்தியாவின் எல்லா மொழிகளுக்கும் முக்கியத்துவம் தரப்படவேண்டிய ஒரு மனநிலையை தமிழ் மொழி பேசுகிறது." என்று தமிழ் மொழியின் தொன்மை குறித்து விரிவாகப் பேசிய கவிஞர் இந்திரனின் உரை, டப்ளின் தூதரக இந்தியத் தூதரை வியக்கவைத்தது.
"உலகின் பழமையான மொழிகளில் ஒன்றாகத் திகழும் தமிழ் மொழியின் செழுமை குறித்தும், அதன் அளவிடமுடியாத அறிவுச் செல்வம் குறித்தும், இந்திய வரலாறு, பண்பாடு, உலகப்பார்வை குறித்த தமிழ் மொழியின் அறிவு குறித்து இந்தியர்கள் அனைவரும் பெருமை கொள்கின்றனர்". என்று அயர்லாந்து இந்தியத் தூதுவர் அகிலேஷ் மிஷ்ரா தனது உரையில் பாராட்டிப் பேசினார்!
தொகுப்பு: தெ.சு.கவுதமன்