வேத ஜோதிடத்தில் ஏழு கிரகங்களான சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் மற்றும் சனி ஆகியோரின் நிலை மற்றும் காரக குணங்களே மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இவற்றை தவிர, நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேதுவின் காரகங்கள் முக்கியமானவையே. ஒருவரின் ஜாதகத்திலுள்ள இந்த கிரகங்களின் நிலைகளை பொறுத்து, அதன் மாறுபட்ட காரக குணங்களால் அவை ஒருவரை ஆள்கின்றன. சூரியன் கடவுளை குறிக்கிறது. நமக்குள் இருக்கும் ஆன்மாவை குறிக்கிறது. சூரியன் நமது அகங்காரம், தான் என்னும் மமதையை, புகழ் ஆகியவற்றை குறிக்கின்றன. ஆசைகளை அடக்குவது மற்றும் ஆசைகளில் மூழ்கவும் சூரியனே காரணமாகிறான்.
சந்திரன் மனதின், உள்ளக் கிளர்ச்சி மற்றும் உணர்ச்சிகளுக்கும் காரணமாகிறான்.
ஒருவரின் பலத்தையும், எதையும் தீர்மானிக்கக் கூடிய திறனையும், பயமின்மையையும் செவ்வாய் குறிக்கிறான். பேச்சு, தகவல் தொடர்பு, பயணம் ஆகியவற்றை புதனும், விந்து, காமம், காம வாழ்வு, கலைகள் ஆகியவற்றை சுக்கிரனும் குறிக்கிறார்கள். சுக்கிரனே அழகுக்கும், சந்தோஷ அனுபவங் களுக்கும் காரணமாகிறான்.
குருவானவர் செல்வத்திற்கும், பாண்டித் யம், சந்தோஷம் மற்றும் குழந்தை செல்வங்களை யும் கொடுப்பவன் ஆகி றான். சனி வழக்கமாக கஷ்டங்களையும், வலிகளையும், துக்கங்களையும், இழப்புகளை யும் கொடுத்து, முதுமை வாழ்க்கையையும் கொடுக்கிறார். சுப கிரகங்களில் சிறந்த குருவுடன் ஒப்பிடும்போது சனி மிகவும் அசுப தன்மை உடையவராகிறார். பாவ கர்மாக்கள் ராகுவால் குறிப்பிடப்படுகிறது. மேலும், நோய்களை பரப்புவது, பாவம், விஷம், மாயை அல்லது பொய்யான தோற்றத்தையும் குறிக்கிறது. ராகுவுக்கு இணையான கேது- மோட்சத்தையும், விடுதலையையும், ஞானத்தையும், உறவுகளை பிரிதலையும் அதன்காரணமாக மன வலியும் உண்டாக காரணமாகிறது.
உலகில் வாழாத மற்றும் வாழ்வதுபோல் இருக்கும் அனைத்து பொருட்களையும் கிரகங்கள் குறிப்பதால், "காரகர்' என்ற சொல் அவர்களுக்கு வழங்கப்பட்டது. சில செய்கைகளை செய்பவர் "காரகர்' என அழைக்கப்படுகிறார்.
நமது வாழ்க்கையில், வாழாத மற்றும் வாழ்வதுபோல் இருக்கும் வெவ்வேறு பொருட்களின் தாக்கத்தை குறிப்பவரே "காரகர்கள்' என பொருள் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த காரகர்கள் நமக்குள்ளே வியாபித்துள்ள மூன்று குணங்களான சத்துவ, ராஜச மற்றும் தாமச குணங்களின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. அவை இயற்கை காரக குணங்களை உயர்வாகக்கொண்ட ராஜச குணத்தையும், சத்துவ குணத்தை உயர்வாகக்கொண்ட சர காரகமும், தாமச குணத்தை உயர்வாகக் கொண்ட ஸ்திர காரகம் என பிரிக்கப்பட்டுள்ளது.
இந்த காரகர்களின் உபயோகத்தை அவர்களின் குணம் என்னும் நிலைப் புள்ளியில் இருந்து நாம் புரிந்துகொள்ளமுடியும். இவற்றின் அடிப்படையில், இந்த கிரக காரகங்களைகொண்டு ஒருவரின் குணங்களை எடை போடமுடியும்.
இந்திய வேத புராணங்களில், சிவ பெருமானால் ஆளப்படுகிற ஸ்திர காரகர்கள் எழுவர் ஆவர். அவர்கள் நம்மை சுற்றி வாழ்வது போல் இருக்கும் பொருட்களின் இறப்பை குறிக்கின்றன. (நிழல் கிரகங்களான ராகு- கேது இறக்க முடியாததால், இந்த எழுவரிடம் இருந்தும் விலக்கி வைக்கப்பட்டு உள்ளனர்).
அடுத்து, மகா விஷ்ணுவால் ஆளப்படுகிறவர்கள் எட்டு சர காரகர்கள் ஆவர். இவர்கள் நமது ஆன்மாவின்மேல் தாக்கத்தை ஏற்படுத்தி, உலகில் நமது நிலையான சமூக வாழ்க்கைக்கும் மற்றும் பக்தி மார்க்க வளர்ச்சிக்கு காரகர்கள் ஆகின்றனர். நைசர்கிக காரகர்களான ஒன்பது காரகர்கள் பிரம்மாவால் ஆளப்படுகின்றனர்.
சர காரகர்கள்
ஆத்மகாரகன்: ஒருவரின் ஜாதகத்தில் மிக அதிகமான, உயர்வான தீர்க்க ரேகையை கொண்டுள்ள கிரகமே "ஆத்ம காரகன்' ஆவார்.
அவன் ஆன்மாவை குறிகாட்டுபவன். சாதகத்தின் அரசன் அவனே ஆவான். வாழ்க்கையின் பந்தங்களில் இருந்து இறப்பின்மூலம் விடுதலை அளிக்க வழிகாட்டும். சாதகரின் இஷ்ட தெய்வத்தை நவாம்சத்தில், ஆத்ம காரகனில் இருந்து, 12-ஆம் வீட்டை, விடுதலை அளிக்கும் இடத்தை பார்த்து கண்டுகொள்ளவேண்டும். ஏனெனில், ஆத்ம காரகனே நமது ஆன்மாவின் குறிகாட்டி ஆகும். ஆத்ம காரகன், நவாம்சத்தில் நிற்கின்ற அம்சமே "காரகாம்சம்' ஆகும்.
அமத்ய காரகன்
இரண்டாவதாக, அதிகமான தீர்க்க ரேகைகொண்ட கிரகம் "அமத்ய காரகன்' ஆவார். அவர் அரசருக்கு வழிகாட்டும் அமைச்சர் பாத்திரத்தை ஏற்கிறார். இந்த அமத்ய காரகன், ஒருவரின் ஆத்மாவின் ஆசைகளை நிறைவேற்றி, அவரின் விதிப்படி நடக்க வழிகாட்டுவார். அவர் ஆத்மாவை காப்பவர் ஆவதால், நவாம்சத்தில் அவர் நிற்கும் இடத்தில் இருந்து, ஆறாம் இடம்மூலம் ஒருவரின் தேவதையை காணலாம்.
ப்ராத்ரு காரகன்
மூன்றாவது அதிகமான தீர்க்க ரேகைகொண்ட கிரகமே "ப்ராத்ரு காரகர்' ஆவார். இவர் ஒருவரின் கொடுமையான, கஷ்ட காலங்க ளில் அவருக்கு உண்மையிலேயே துணைநிற்பார் என எதிர்பார்க்கும் சிறந்த சகோதர- சகோதரிகளைக் குறிகாட்டு வார். மனதிற்கு அடுத்தபடியாக ஆத்மாவை, அவரின் வழி காட்டுதல் மூலம், கடவுளிடம், அதன் ஆசைகளுக்கு இலக்கை அடைய வழிகாட்டுபவரு மான குரு அல்லது ஆசானுக்கும் காரகன் இவரே ஆகும். இந்த குரு மற்றும் அவர் வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கமும், அதன் காரணமும், ப்ராத்ரு காரகனில் இருந்து ராசியிலும், நவாம்சத்திலும் காணலாம். நவாம்சம்மூலம் குரு எவ்வாறு நமது வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தி உறுதி செய்கிறார் என்பதையும், ராசியில், ப்ராத்ரு காரகனில் இருந்து எவ்வாறு அவரின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுகின்றன என்பதையும் அறியலாம்.
மாத்ரு காரகன்
நான்காவது அதிக தீர்க்க ரேகைகொண்ட கிரகம் மாத்ரு காரகர் அல்லது தாய் காரகர் ஆவார். இதுவரை பார்த்த நான்கு காரகர்களில் மிகவும் முக்கியமான காரகர் தாய் காரகர் ஆவார். ஆத்மாவை உயிருர செய்து, இந்த பூவுலகில் நிலைத்து நிற்க செய்பவளே தாய். அவளுக்கு, இந்த உலகில் தன் குழந்தையின் மேலான பாத்தியதை முதன்மையானது. அவள் குழந்தையின், வாழ்க்கையில் எல்லா நிலைகளிலும், வழிகாட்டியாக இருக்க உரிமை பெற்ற உயரியவள் ஆகிறாள். இதன்காரணமாக அவன் புகழையும், கடவுளையும் அடைய முடிகிறது. ஒரு ஜாதகரின் வாழ்க்கையின் மீதான தாயின் தாக்கத்தை இந்த சர காரகர்கள்மூலம் அறியவேண்டும்.
பித்ருகாரகன்
தந்தை காரகர் 5-ஆவதாக அதிக தீர்க்க ரேகைகொண்டு நிற்பவர் பித்ரு காரகர் ஆவார். தந்தைக்கு குறிகாட்டி ஆவார். தாயாரின் கர்ப்ப பைக்குள், சாதகரின் ஆன்மாவை கொண்டுசென்று, பரிமாற்றம் செய்து அவரின் பிறப்புக்கு காரணகர்த்தா தந்தையாவார். எனவே, அவர், தாய்க்கு அடுத்து நமக்கு, அடுத்த பிரதான குரு ஆகிறார்.
சாதகரின் வாழ்க்கையில் தந்தையின் தாக்கம் பற்றி அறிய இந்த சர காரகரை அணுகவேண்டும்.
புத்திரகாரகன்
ஆறாவது அதிக தீர்க்க ரேகைகொண்ட இவர் புத்திர காரகர் ஆவார். குழந்தைகளைக் குறிகாட்டுபவர். ஒருவரின் எதிர்காலத்தை நிச்சயப்பது குழந்தைகளே. ஒருவரின் கடைசிகால கர்மாக்களை நிறைவேற்றுபவன், நிறைவேற்றும் உரிமை பெற்றவர் அவரின் மகனே ஆவான். எனவே, ஒருவரின் உறவு முறைகளில் ஆறாவது முக்கியத்துவத்தை பெறுவது மகனே ஆவார். புத்திரர்களின் தாக்கம் இந்த சரகாரகர்மூலம் அறியப்பட வேண்டும்.
ஞாதி காரகர்
உறவுக்கான காரகர். ஏழாவது அதிக பாகைகொண்டு உறவுகளைக் குறிகாட்டுபவர். இன்பம் வரும்போதும், துன்பம் வரும் போதும் ஒருவரின் அருகில் எப்போதும் எதிர்பார்க்கப்படுபவரே உண்மையான உறவுக்காரர் ஆவார். இந்த சரகாரகரின்மூலம் சாதகரின் உறவு முறைகளின் தாக்கத்தை அறிந்துகொள்ளலாம்.
தாரகாரகன்
எட்டாவது அதிக தீர்க்க ரேகைகொண்ட கிரகமே தாரகாரகன். களத்திர காரகர் மனைவிக்கான- கணவருக்கான காரகர். இல்வாழ்க்கைத் துணை என்பது அவரில் பாதி என பொருள்படும் "அர்த்தாங்கனி' என அழைக்கப்படுவள். எனவே, ஒருவரின் இன்பத்திலும், துன்பத்திலும் உடனிருந்து பங்கேற்று, என்ன நேர்ந்தாலும் ஒன்றாக இணைந்து செயல்படும் இல்வாழ்க்கை துணையாகும். தன்னுடையது என்பதால் அதை கடைசியாக எட்டாம் இடத்தில் வைத்துள்ளனர்.
இந்த சர காரகர்கள்மூலம், ஜாதகருக்கு ஏற்படும் தாக்கத்தை அறிந்துகொள்ளலாம். ஒருவரின் ஜாதகத்தில் ஆத்மகாரகன் மிகவும் முக்கியமான கதாபாத்திரம் ஏற்கிறார். இந்த ஆன்மா எதற்காக இந்த பூமிக்கு வந்தது? எந்த இலக்கை, எண்ணத்தை அதன்மூலமாக அமைந்த இலக்கினை, முடிவை அடையவந்தது? என்பதை குறிகாட்டுகிறது. ஒரு ஜாதகத்தில் ஆத்மகாரகன் அரசன் என பார்த்தோம். எனவே, அரசன் கட்டளைப்படியே அனைவரும் நடக்க இயலும். ஆத்ம காரகன் குறி காட்டாமல் ஜாதகத்திலுள்ள எந்த ஒரு கிரகமும், நல்லதோ அல்லது கெட்டதோ எதையும் சாதகருக்கு தன்னிச்சையாக கொடுக்க முடியாது.
வாழ்க்கையில் சரியான பாதையில் இருந்து அல்லது ஆத்ம இலக்கில் இருந்து விலகும்போது, அந்த தவறான வழியை அது நீக்குகிறது. ஒருவரின் வாழ்க்கையில் ஏற்படும் வளர்ச்சியின் திசையை கண்காணிப்பதைத் தவிர, அந்த மனிதனின் வாழ்க்கையில் வேறு எந்தவிதமான பங்கையும், ஆத்மா உண்மையில் ஏற்பதில்லை. அவன் தவறான வழியில் செல்கையில், அதை பொறுத்துக் கொள்ள முடியாத ஆத்மா, கடைசியாக இறப்பின்மூலம், அவர் உடலைப் பாலைவனமாக்கி விட்டுச் சென்றுவிடுகிறது. ஆத்மாவின் ஆசைகள், அபிலாஷைகளை நிறைவேற்றாது, வீணான வாழ்க்கை வாழ்ந்த அந்த வெற்று உடலைவிட்டு அது நீங்கிவிடுகிறது.
நமது ஆத்மா ஒரு ஜீவாத்மா. இந்த ஆன்மாவின் கடைசி இலக்கு, பரமாத்மாவோடு இணைவதே ஆகும். இந்த இலக்கை அடைய, ஆத்மா, மனித உடலின் உருவத்தை எடுத்துக்கொண்டு அவனுடைய நடவடிக்கைகளில், சாத்வீக வழி முறைகளைக் கடைபிடிக்க செய்து, அதன்மூலம் ஆத்ம சுத்திகரிப்பு செய்து, கடவுளை அடைய வழி வகுப்பது இந்த சாத்வீக குணம் மட்டுமே. அதன்மூலம் ஆன்மாவை நிலை நிறுத்தி, கடவுளை அடைய வழிவகுக்க முடியும்.
ஆத்ம காரகன் என்ற முறையில், அவருக்கென்று ஓர் இலக்கு வைத்து, அதற்காக பிறப்பெடுக்கும் அவன், அந்த இலக்கின் திசையில் சென்று, அதை அடையும் திறனையும் அவன் பெற்று இருக்கிறான். ஆத்மாவின் அபிலாஷைகள் என்ன? அதன் இலக்கை அடையக்கூடிய சக்தி அதற்கு உண்டா? ஆன்மாவின் திறமை அதற்கு உண்டா? ஆன்மாவின் திறமை மற்றும் அதன் சக்தியை சரியான முறையில் பயன்படுத்த முடியுமா?
அந்த ஆன்மாவின் பிறப்புக்கு காரணம் நிறைவேறுமா அல்லது நிறைவேறாதா?
இவையனைத்துக் காரணிகளும், நவாம்சத்தில் பார்க்கப்படவேண்டும். எனவேதான் நவாம்சம், வேத ஜோதிடத்தின் முக்கிய அங்கமாகத் திகழ்கிறது.
நவாம்ச சக்கரத்தில், ஆத்மகாரகன் இடம்பெறும் இடமே காரகாம்சம் ஆகும். நவாம்ச லக்னம், லக்னாம்சமும் என்று அழைக்கப்படுகிறது. லக்னாம்சமும், காரகாம்சமும் இணைந்து சுவாம்சம் ஆகிறது. இவ்வாறு இருக்கும்போது ஆத்மகாரகன் ஆசைகள் மற்றும் திறமைகள் நிறைவேறுகின்றன. ஓர் இலக்கையும் அடைகிறது. இந்த வழிகளில், அந்த திசையில் செல்கையில், பல்வேறுபட்ட காரணிகளினால், மெதுவாக செல்ல நேரிடலாம் அல்லது தடங்கல்கள் ஏற்படலாம். இஷ்ட தெய்வத்தை இடைவிடாது தொழுவதன்மூலம், குரு காரகன் உதவியுடனும் அந்த ஆத்மா விரைவாக தான் விரும்பிய இலக்கை அடைய வழிவகுக்கிறது.
இந்த ஆன்மாவின் ஆசையை நிறைவேற்ற காரகாம்சம் உதவுகிறது. காரகாம்சத்தின் திரிகோண நிலைகள் ஆத்மாவின் உண்மையான ஆசைகளை வெளிக்காட்டுகின்றன. எனவே, ஒருவர் பக்தி மிக்கவரா இல்லையா? என்பதை இந்த திரிகோண ராசிகளை வைத்து தீர்மானிக்கலாம். எனவே, இந்த ராசிகள் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன. காரகாம்சத்தில் இருந்து 1, 5 மற்றும் 9-ஆம் வீட்டில் உள்ள கிரகங்கள், ஜாதகரை பக்தி மார்க்கத்திற்கு வழிகாட்டி, நல்லவர்களாக்கி, ஆன்ம மோட்சத்திற்கான வழியையும் காட்டுகிறது.
ஒருவருடைய ஜாதகத்தில், நவாம்சத்தில் குரு முக்கிய பங்கு வகிக்கிறார். 9-ஆம் வீட்டிற்கு குரு நைசர்கிக காரகர் ஆகிறார். ஜீவாத்மாவை நிலைக்கச் செய்யும் குருவும், வாழ்க்கையை அளிக்கும் சூரியனும் ஒருவரின் தர்ம பாவத்தை ஆட்சி செய்கின்றனர்.
எனவே, நண்பர்களே! ஆத்மகாரகன் முதல் தாரகாரகன் வரையிலான எட்டு சர காரகர்கள் குணயியல்புகள் பற்றி அறிந்து கொண்டது பயனுள்ளதாக இருந்திருக்கும்.
செல்: 97891 01742